முதற்பத்து ஏழாம் திருமொழி



சாராம்சம்

குழந்தைகள் நடக்க ஆரம்பிக்கும் பருவத்தில்
தட்டித் தடுமாறி நடப்பதை தளர்நடை என்பார்கள்.
கண்ணபிரான் இப்படி நடப்பதை ஆழ்வார்
அனுபவிக்க ஆசைப்படுகிறார். பெரியாழ்வார்
அருளிய இப்பாசுரங்களின் மூலம் நாமும்
கண்ணனின் தளர் நடையை அனுபவிக்கலாமே.
(1)
தொடர் சங்கிலி கைசலார்பிலாரென்னத் தூங்கு
பொன்மணி யொலிப்ப படுமும் மதப்புனல் சோர
வாரணம்பைய நின்றூர்வதுபோல் உடன் கூடிக்
கிண்கிணி யாரவாரிப்ப உடைமணி பறை கறங்க
தடந்தாளிணை கொண்டு சார்ங்கபாணி
தளர்நடை நடவானோ

பாசுர அனுபவம்

மதநீர் பெருக, இரும்புச்சங்கிலிகளின் உரசலால்
உண்டாகும் சப்தத்துடனும், தொங்கும் கயிற்றில்
கட்டப்பட்டிருக்கும் பொன் மணிகள் அசைவதினால்
ஏற்படும் ஓலியுடனும், யானை எப்படி மெல்ல
நடந்து செல்லுமோ, அதுபோல் திருக்கால்களில்
அணிந்திருக்கும் சதங்கைகளின் நாதத்துடனும்,
இடுப்பில் கட்டியிருக்கும் மணிகள் எழுப்பும்
சப்தத்துடனும் சார்ங்கமென்னும் வில்லேந்திய
எம்பெருமான், தன்னுடைய மிக உயர்ந்த
பாதக்கமலங்களைக்கொண்டு, தளர்நடையாக
நடந்து வர காத்திருக்கிறார் ஆழ்வார்.
(2)
செக்கரிடை நுனிக் கொம்பில் தோன்றும்
சிறுபிறை முளைப்போல் நக்க செந்துவர்வாய்த்
திண்ணைமீதே நளிர்வெண்பல் முளையிலக
அக்குவட முடுத்தாமைத் தாலிபூண்ட
அனந்தசயனன் தக்க மாமணி வண்ணன்
வாசுதேவன் தளர்நடை நடவானோ.

பாசுர அனுபவம்

கண்ணபிரான் தன்னுடைய பவள நிற வாயால்
தூய வெள்ளை நிறமுடைய சிறிதாக முளைத்த
பற்கள் தெரியும்படி சிரிக்கும்போது அந்தக்
காட்சி எப்படியிருந்ததென்றால் சிவந்த வானில்
உதித்த சிறிய பிறைச் சந்திரனை ஒரு மரக்
கிளையின் நுனி வழியாக பார்ப்பதுபோல்
இருந்ததாம். சங்கின் வடிவத்தில் அமைத்த
மணி வடத்தை இடுப்பில் அணிந்தவாரும்,
ஆமை வடிவில் அமைத்த கழுத்திலணிந்த
காப்புடனும், பாம்பை படுக்கையாகக்
கொண்டவனும், உயர்ந்த நீல ரத்தினம் போன்ற
நிறத்தையுடையவனும், வசுதேவரின்
புதல்வனுமான கண்ணன் தளர் நடையாக
நடந்து வர காத்து நிற்கிறார் ஆழ்வார்.
(3)
மின்னுக்கொடியுமோர் வெண் திங்களும்
சூழ்பரிவேடமுமாய்
பின்னல்துலங்கு மரசிலையும் பீதகச்
சிற்றாடையொடும்
மின்னல் பொலிந்ததோர் கார்முகில் போலக்
கழுத்தினிற் காறையொடும்
தன்னில் பொலிந்த விருடீகேசன்
தளர் நடை நடவானோ

பாசுர அனுபவம்

கண்ணன் இடுப்பில் அணிந்திருக்கும் வெள்ளி
மற்றும் பொன்னாலான ஆபரணங்களுடன்
கூடிய வஸ்த்திரம், கொடிபோல் தோன்றும்
மின்னலுடன் சேர்ந்த வெண்மையான
சந்திரனை வட்டம் சூழ்ந்தார்ப்போல் இருந்ததாம்.
கரு நிற திருமேனியின் கழுத்தில் சாத்திய பொன்
அட்டிகையோ மழை மேகத்தின் நடுவே மின்னல்
தோன்றுவது போலிருந்ததாம். தனக்கே
உரிய தெய்வீக அழகினால் விளங்கும்
ஹ்ருஷீகேசன் தளர் நடையாக நடந்து வருவானா
என ஏங்குகிறார் ஆழ்வார்.
(4)
கன்னற் குடம் திறந்தாலொத்தூறிக் கண
கண சிரித்துவந்து
முன்வந்து நின்று முத்தந்தரும் என் முகில்
வண்ணன் திருமார்வன்
தன்னை பெற்றேர்க்குத் தன் வாயமுதம் தந்து
என்னைத் தளிர்ப்பிக்கின்றான்
தன்னெற்று மாற்றலர் தலைகள் மீதே
தளர் நடை நடவானோ

பாசுர அனுபவம்

கண்ணன் மகிழ்ந்து வாய்விட்டு சப்தமாக
சிரிக்கும் போது, அவன் வாயிலிருந்து எச்சில்
நீர் வழிந்தது எப்படியிருந்ததென்றால்,
கருப்பஞ்சாறு வைத்திருக்கும் குடத்தின் ஒரு
துளைவழியாக கசியும் இனிய சாறுபோல்
இருந்ததாம். மேகம் போன்ற நிறமுடையவனும்,
திருமகளை தன் திருமார்பில் வைத்திருக்கும்
கண்ணன் என் முன்னால் வந்து நின்று,
இந்த வாயமுதுடன் எனக்கு முத்தம் கொடுத்து,
இவனைப் பெற்றதின் பாக்யத்தை எனக்கு
கொடுத்துவிடுவான், என யசோதை
பாவனையில் ஆழ்வார் அருளிச்செய்கிறார்.
தன்னை எதிர்க்கும் பகைவர்களின் தலைகள்
மேலே இவன் தளர் நடையாக நடந்து வருவானோ
என எதிர்பார்கிறார் ஆழ்வார்.
(5)
முன்னலோர் வெள்ளிப் பெருமலைக்குட்டன்
மொடு மொடு விரைந்தோட
பின்னைத் தொடர்ந்ததோர் கருமலைக் குட்டன்
பெயர்ந்தடி யிடுவது போல்
பன்னியுலகம் பரவியோவாப் புகழ்ப்பல
தேவனென்னும்
தன்னம்பியோடப்பின் கூடச்செல்வான்
தளர் நடை நடவானோ

பாசுர அனுபவம்

உலகங்களெல்லாம் அளவிடமுடியாதபடி
கீர்த்தியுள்ள தன்னுடைய அண்ணனான
பலராமன் தட தட வென்ற சப்தத்துடன்
மிக விரைவாக ஓட, அவனைப் பிடிக்க
கண்ணன் ஓடுகிறான். இது எப்படியென்றால்
ஒரு அழகான பெரிய வெள்ளி நிறமுடைய
மலையின் குட்டி (பாறை) முன்னால் இடம்
பெயர்ந்து உருண்டு ஓட அதைத் தொடர்ந்து
பின்னால் ஒரு நிகரில்லா கரு மலையின் குட்டி
(பாறை) உருண்டு ஓடுவதைப்போலுள்ளதாம்!
இப்படியாக ஓடும் கண்ணன் தளர் நடையாக
நடந்து வருவானோ என்று ஏங்குகிறார் ஆழ்வார்.
(6)
ஒருகாலிற் சங்கொருகாலிற் சக்கரம் உள்ளடி
பொறித் தமைந்த
இருகாலுங்கொண்டங் கங்கெழுதினாற்போல்
இலச்சினை பட நடந்து
பெருகா நின்ற வின்ப வெள்ளத்தின் மேல்
பின்னையும் பெய்து பெய்து
கருகார்க் கடல் வண்ணன் காமர்தாதை
தளர் நடை நடவானோ

பாசுர அனுபவம்

கண்ணனின் திருப்பாதங்களில் சங்கு சக்கர
ரேகைகள் பதிந்திருந்தபடியால், அவன்
இருகால்களாலும் அடிமேல் அடிவைத்து
நடக்கும் போது அந்தந்த இடங்களில்
வரைந்தாற்போல் அடையாளங்கள்
எற்பட்டிருந்தனவாம். கரு நிறக் கடல் போல்
நிறத்தை உடையவனும், காமதேவனின்
பிதாவுமான கண்ணன், பொங்கி வரும்
ஆனந்த சமுத்திரத்திற்கும் மேலான
ஆனந்தமுடையவனாய் தளர் நடை
நடந்து வருவானோ என ஆவலுடன்
காத்திருக்கிறார் ஆழ்வார்.
(7)
படர் பங்கயமலர் வாய் நெகிழப்
பனிபடு சிறுதுளிபோல்
இடங்கொண்ட செவ்வாயூறியூறி
இற்றிற்று வீழ நின்று
கடுஞ் சேக்கழுத்தின்மணிக்குரல்
போல் உடை மணி கணகணென
தடந்தாளிணைக் கொண்டு சார்ங்கபாணி
தளர் நடை நடவானோ

பாசுர அனுபவம்

மலர்ந்த தாமரைப்பூவிலிருந்து குளிர்ந்த
தேன் சிறு சிறு துளியாக ஒழுகுவதைப்போல்,
கண்ணனின் சிவந்த வாயிலிருந்து ஊரும்
ஜலமானது தொடர்ந்து கீழே முறிந்து விழ,
இடுப்பில் கட்டின மணியின் ஓசை கொடிய
ரிஷபத்தின் கழுத்தில் கட்டின மணியின்
ஓசையைப்போல கண கண என்றொலிக்க,
பெரிய கால்களையுடைய சார்ங்கபாணியான
கண்ணன் தளர் நடையிட்டு வருவானோ என
ஏங்குகிறார் ஆழ்வார்.
(8)
பக்கம் கருஞ் சிறுப் பாறைமீதே அருவிகள்
பகர்ந்த தனைய
அக்குவடமிழிந்தேறித்தாழஅணியல்குல்
புடை பெயர
மக்களுலகினில் பெய்தறியா
மணிக்குழவி யுருவின்
தக்க மாமணி வண்ணன் வாசுதேவன்
தளர் நடை நடவானோ

பாசுர அனுபவம்

கண்ணனின் கருநிற இடையில் அணிந்திருந்த
சங்கு மணி வடமானது தொடையில்
பிரகாசித்து அங்குமிங்குமாக அசைந்தது
எப்படியிருந்ததென்றால், கரும் பாறையிலிருந்து
பிரகாசமான நீரருவிகள் மேடு பள்ளங்களில்
விழுந்து ஓடி வருவதுபோலிருந்ததாம். கண்ணனின்
திருமேனியழகு இதுவரை மானிடம் கண்டிராதபடி
இருந்ததாம். உயர்ந்த நீல ரத்தினம் போன்ற
நிறத்தையுடையவனும், வசு தேவரின்
புதல்வனுமான கண்ணன் தளர் நடையாக
நடந்து வர காத்து நிற்கிறார் ஆழ்வார்.
(9)
வெண்புழுதிமேற் பெய்து கொண்டளைந்ததோர்
வேழத்தின்கருங்கன்றுபோல்
தெண் புழுதி யாடித் திரிவிக்கிரமன்
சிறுபுகர் படவியர்த்து
ஒண் போதலர் கமலச் சிறுக்காலுறைத்
தொன்றும்நோவாமே
தண்போது கொண்ட தவிசின் மீதே
தளர் நடை நடவானோ

பாசுர அனுபவம்

வெள்ளை நிறம் கொண்ட புழுதியை
யானைகுட்டி தன் மேல் போட்டுக் கொள்ளுவது
போல, கண்ணனும் தெளிந்த புழுதியை
தன்மேல் போட்டுக்கொண்டு, திருமேனியில்
அங்குமிங்குமாக வியர்த்தவனாய் நின்றான்.
திரிவிக்கிரமனாய் மூவுலங்கங்களையும்
தன் திருவடிகளால் அளந்தவனுமான கண்ணனின்
மலர்ந்த தாமரையை யொத்த திருப்பாதங்கள்
உறுத்தாமலும், நோகாமலும் இருக்க குளிர்ந்த
பூக்களாலான மெத்தையின் மேல் தளர் நடை
நடந்து வர கண்ணனை வேண்டி
நிற்கிறார் ஆழ்வார்.
(10)
திரை நீர் சந்திர மண்டலம் போல் செங்கண்
மால் கேசவன் தன்
திருநீர் முகத்துத் துலங்கு சுட்டி திகழ்ந்தெங்கும்
புடை பெயர
பெரு நீர்த் திரையெழு கங்கையிலும்
பெரியதோர் தீர்த்தபலம்
தருநீர் சிறுச் சண்ணம் துள்ளம் சோரத்
தளர் நடை நடவானோ

பாசுர அனுபவம்

சிவந்த கண்களையுடையவனும் கரு
நிறத்தவனுமான கேசவன் அணிந்திருக்கும்
பிரகாசமாக ஒளிவீசும் திருமுகத்துச்
சுட்டியானது அவன் நடக்கும் போது அசைவது
எப்படியுள்ளதென்றால் முழுச் சந்திர
மண்டலத்தின் பிரதிபிம்பம் கருநிறக்
கடலின் நடுவில் தோன்றி அலைகளால்
அசைவது போலுள்ளதாம். உயர்ந்த
அலை-திரளும்-கங்கை ஆற்றின் நீரைக்
காட்டிலும் புனிதமான கண்ணனின் மூத்திர
நீரானது துளித் துளியாக அவன்
குறியிலிருந்து சொட்டும்படியே தளர்
நடையாக அவன் நடந்து வர
காத்து நிற்கிறார் ஆழ்வார்.
(11)
ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன
வண்ணன் தன்னை
தாயர் மகிழ வொன்னார் தளரத்
தளர்நடை நடந்ததனை
வேயர் புகழ் விட்டுசித்தன் சீரால்
விரித்தனவுரைக்கவல்லார்
மாயன் மணி வண்ணன் தாள் பணியும்
மக்களைப்பெறுவர்களே

பாசுர அனுபவம்

எதிரிகளை ஒடுக்கவும், தாய்மார்களை
மகிழ்விக்கவும் இடையர் குலத்தில் உதித்த மை
போன்ற திருமேனியையுடைய எம்பெருமான்
கண்ணன் தளர் நடை நடந்ததை வேயர்
குலப் புகழோன் விஷ்ணுசித்தன் (பெரியாழ்வார்)
விவரித்துரைத்த இப்பாசுரங்களை கூற
வல்லவர்கள் மாயன்* மணிவண்ணனின்**
திருவடிகளை வணங்கவல்ல பிள்ளைகளைப்
பெற்று இன்புறுவர்கள். (குறிப்பு: *மாயன்:
ஆச்சர்யமான செயல்களைப் புரிபவன்,
திருமால் ** மணிவண்ணன்: நீல ரத்தினம்
போன்ற நிறமுடையவன்)




No comments:

Post a Comment

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.