சாராம்சம்
கண்ணன் தன் சிறு கைகளால் சந்திரனை காட்டிஅழைத்தும் சந்திரன் வராததால், யசோதை சந்திரனை
பார்த்து கோபித்துக் கூறும் பாசுரங்கள் தான் இவை.
(1)
தன்முகத்துச்சுட்டி தூங்கத்தூங்கத்தவழ்ந்து போய்
பொன்முகக்கிண்கிணியார்ப்பப் புழுதியளைகின்றான்
என்மகன் கோவிந்தன்கூத்தினையிளமாமதீ
நின்முகங்கண்ணுளவாகில் நீயிங்கேநோக்கிப்போ
பாசுர அனுபவம்
கண்ணன் தவழ்ந்து விளையாடும் போது அவன் நெற்றியில்அணிந்திருக்கும் சுட்டியானது அழகாக இங்குமங்குமாக
அசைகிறது. தங்கக் கொலுசுகள் அழகான கிண்கிணி
சப்தத்தை எழுப்புகிறது. என் மகனான கண்ணன்
மண்ணைக்கிளறி புழுதியைக்கிளப்பி தவழ்ந்து
அட்டகாசமாய் விளையாடும் காட்சியை, இளமையாக
உள்ள சந்திரனே, உனக்கு கண் இருந்தால் (அல்லது கண்
பெற்றதின் பயனாக) பார்த்துவிட்டுப்போ
(2)
என்சிறுக்குட்டன் எனக்கோரின்னமுதெம்பிரான்
தன்சிறுக்கைகளால் காட்டிக்காட்டியழைக்கின்றான்
அஞ்சனவண்ணனோடு ஆடலாடவுறுதியேல்
மஞ்சில்மறையாதே மாமதீ மகிழ்ந்தோடிவா
பாசுர அனுபவம்
அமுதம் போல் இனிமையானவன், என் தலைவன், என்அருமைப்புதல்வன் கண்ணன் தன் சிறு கைகளால் உன்னை
காட்டி காட்டி அழைக்கிறான். மை போன்ற திருமேனியுடைய
கண்ணனோடு நீ விளையாட நினைத்தேயானால் மேகத்தில்
நுழைந்து மறையாமல் ஆவலுடன் ஓடி வா !
(3)
சுற்றுமொளிவட்டம் சூழ்ந்துசோதிபரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என்மகன் முகம்நேரொவ்வாய்
வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்புலீகடிதோடிவா
பாசுர அனுபவம்
சந்திரனே, எங்கும் பரந்து எல்லாத் திசைகளிலும்ஒளிவீசுபவனாய் எத்தனை அழகாக நீ இருக்க
முயன்றாலும் என்னுடைய மகனான கண்ணனின்
திருமுகமண்டலத்துக்கு ஈடாக முடியாது. ஆச்சர்யமான
திருவேங்கட மலையில் நிற்கின்ற-திருக்கோலத்துடன்
இருப்பவனான என் கண்ணபிரானின் திருக்கைகளில் வலி
ஏற்படும் முன்னமே (உன்னை கை நீட்டி அழைக்கிறபடியால்),
சந்திரனே விரைவில் ஓடி வா !
(4)
சக்கரக்கையன் தடங்கண்ணால் மலரவிழித்து
ஒக்கலைமேலிருந்து உன்னையே சுட்டிக்காட்டுங்காண்
தக்கதறிதியேல் சந்திராசலஞ்செய்யாதே
மக்கட்பெறாத மலடனல்லையேல்வாகண்டாய்
பாசுர அனுபவம்
சக்கராயுதத்தைக் கையில் ஏந்தியிருக்கும் கண்ணன் என்இடுப்பில் இருந்தவாறே தன்னுடைய விசாலமான கண்களால்
உன்னையே சுட்டிக்காட்டுகிறான். சந்திரனே ! நியாயமாக
நடந்துகொள்பவனேயாகில், குழந்தை இல்லாத
மலடனில்லையேனாகில், மோசம் பண்ணாமல் வந்து விடு !
(5)
அழகியவாயில் அமுதவூறல் தெளிவுறா
மழலை முற்றாத இளஞ்சொல்லால் லுன்னைக்கூவுகின்றான்
குழகன் சிரீதரன் கூவக்கூவ நீ போதியேல்
புழயிலவாகாதே நின்செவிபுகர்மாமதீ
பாசுர அனுபவம்
எல்லோரோடும் கூடியிருப்பவனான ஸ்ரீதரன், என் கண்ணன்தன் திருப்பவள வாயில் அம்ருதமாகிற உமிழூர, மழலை
பேசி, சந்திரனே ! உன்னை அழைக்கிறான். தேஜஸ்வியாயும் ,
புகழ் பொருந்தியவனுமான உனக்கு அது கேட்கவில்லையா ?
அப்படிக் கேளாதவன் போல் நீ அலட்சியம் பண்ணும்
பட்சத்தில் உன் காதுகள் துளை இல்லாதவைகளாகாதோ?
(6)
தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்துன் தடக்கையன்
கண்டுயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்டமுலைப் பாலறாகண்டாய் உறங்காவிடில்
விண்டனில்மன்னிய மாமதீ விரைந்தோடிவா
பாசுர அனுபவம்
கதை, சக்கரம், சார்ங்கமென்னும் வில் இவைகளைத் தன்விசாலமான திருக்கைகளில் ஏந்தியிருக்கிற கண்ணன்
தூங்குவதற்காகக் கொட்டாவி விடுகிறான். இப்பொழுது
இவன் தூங்கவில்லையெனில் இவன் உண்டிருக்கும்
முலைப்பால் ஜீரணிக்காது. ஆகையால், வானில்
உலாவும் புகழ்வாய்ந்த சந்திரனே ! சீக்கிரம் ஓடி வா !
(7)
பாலகனென்று பரிபவஞ்செய்யேல் பண்டொருநாள்
ஆலிநிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்
மேலெழப்பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மாமதீ மகிழ்ந்தோடிவா
பாசுர அனுபவம்
"இவன் ஒரு சிறுபிள்ளை, இவன் அழைக்க நாம் போவானேன்",என அலட்சியம் செய்யாதே. முன்பொருசமயம், பிரளயகாலத்தில்
உலகங்களைத் தன் வயிற்றிலடக்கி ஒரு ஆலின் இலைமேல்
துயில் கொண்ட பிள்ளைதான் இவன். அப்படிப்பட்ட இந்த
மஹா புருஷனை அவமதித்தால் அவன் கோபம்கொண்டு
உன்னை ஒரே தாவலில் பிடித்துக்கொள்வான்.
புகழ்படைத்த சந்திரனே ! ஆசையுடன் ஓடி வா !
(8)
சிறியனென்றென்னிளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய்
சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச்சென்றுகேள்
சிறுமைப் பிழை கொள்ளில் நீயுமுன் தேவைக்குரியைகாண்
நிறைமதி நெடுமால் விரைந்துன்னைக் கூவுகின்றான்
பாசுர அனுபவம்
என் சிங்கக்குட்டி கண்ணனை சிறியவன் (மற்றபிள்ளைகளைப்போல்) என்று நினைத்து அவமதிக்காதே.
இவனைச் சிறுவனாக முதலில் எண்ணி பிறகு தான்
செய்த அபசாரத்திற்காக வருந்திய மஹாபலியிடம்
போய்க் கேள் இவன் செய்கையை. இவ்வளவு அழைத்தும்
வராமல் அபசாரம் புரியும் நீயும் அத்தப்பை உணர்ந்தால்,
பகவானுக்கு அடிமை செய்ய யோக்யதை பெறுவாய்.
பூர்ண சந்திரனே ! சர்வேஸ்வரன் உன்னை அழைக்கிறான் !
(9)
தாழியில் வெண்ணைய் தடங்கையாரவிழுங்கிய
பேழை வயிற்றெம்பிரான் கண்டா உன்னைக் கூவிகின்றான்
ஆழிகொண்டுன்னை யெறியும் ஐயுறவில்லைகாண்
வாழ்வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா
பாசுர அனுபவம்
பானையிலிருந்து கைநிறைய வெண்ணையை எடுத்துஉண்டு வயிறு புடைத்திருக்கும் என் கண்ணபிரான் உன்னை
அழைக்கிறான். இப்படி அழைத்தும் நீ வராமல் போனால்
தன்னுடைய சக்கரத்தைப் பிரயோகித்து உன் தலையை
துண்டித்துவிடுவான். சந்தேகமேயில்லை. வாழ நினைத்தால்,
புகழுடைய சந்திரனே, ஆர்வத்துடன் ஓடி வா !
(10)
மைத்தடங்கண்ணி அசோதை தன் மகனுக்கு
இவையொத்தனசொல்லி உரைத்த மாற்றம் ஒளிபுத்தூர்
வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை
எத்தனையுஞ் சொல்லவல்லவர்க்கு இடரில்லையே
பாசுர அனுபவம்
மையுடன் கூடிய விசாலமான கண்களுடைய யசோதைதன் பிள்ளையான கண்ணனின் மனதிற்கு ஏற்றவாறு,
சந்திரனை நோக்கி சொன்ன இப்பாசுரங்களை,
ஒளிபொருந்திய ஸ்ரீ வில்லிபுத்தூர் வாழ் விஷ்ணுசித்தன்
(பெரியாழ்வார்) இங்கு விரிவாக எடுத்துரைக்கிறார்.
இப்பாசுரங்களை ஏதேனும் ஒரு வகையில்
சொல்லுபவர்களுக்குத் துன்பம் இல்லையாம்.
No comments:
Post a Comment
Please feel free to leave your comments. I would love to see them. Thanks.