முதற்பத்து ஆறாம் திருமொழி



சாராம்சம்

குழந்தைகள் இரு கைகளையும் சேர்த்து
கொட்டி விளையாடும் விளையாட்டை சப்பாணி
என்று அழைப்பார்கள். குழந்தைகளின்
அந்த வயதை சப்பாணிப் பருவம் என்றும்
அழைப்பது வழக்கம். கீழ்கண்ட பாசுரங்களில்
யசோதை பாவத்திலிருந்த ஆழ்வார், கண்ணனை
சப்பாணி கொட்டி விளையாட அழைக்கிறார்.

(1)
மாணிக்கக் கிண்கிணியார்ப்பமருங்கின் மேல்
ஆணிப்பொன்னாற்செய்த ஆய்பொன்னுடைமணி
பேணிப்பவள வாய் முத்திலங்க பண்டு
காணி கொண்ட கைகளால் சப்பாணி
கருங்குழற்குட்டனேசப்பாணி
>

பாசுர அனுபவம்

திருக்கால்களில் மாணிக்கக் கற்களை வைத்துக்
கட்டப்பட்ட சதங்கைகள் எழுப்பும் ஒலியுடனும்,
சுத்தமான, தேர்ந்தெடுத்த பொன்னால் செய்த
இடுப்பிலணிந்த பொன்மணிக்கோவையுடனும்,
பவழ வாயில் பற்கள் முத்துப் போல் தெரியும்
படியும், முன்பொருசமயம் மகாபலி சக்ரவர்த்தியிடம்
பூமியை பெற்றுக்கொண்ட அத்திருக் கைகளை
சேர்த்துக் கொட்ட வேண்டும். கரு நிற கூந்தலுடைய
பிள்ளாய் நீ கைகளைக் கொட்டி
விளையாட வேண்டும்!
(2)
பொன்னரை நாணொடு மாணிக்கக் கிண்கிணி
தன்னரையாடத் தனிச் சுட்டி தாழ்ந்தாட
என்னரைமேல் நின்றிழிந்து உங்களாயர்தம்
மன்னரைமேல் கொட்டாய் சப்பாணி
மாயவனே கொட்டாய் சப்பாணி

பாசுர அனுபவம்

இடுப்பில் அணிந்த பொன்னால் செய்யப்பட்ட
அரைநாண் கயிற்றோடும் , மாணிக்கங்கள்
வைத்துக் கட்டிய சதங்கைகள் அழகான
ஒலியெழுப்ப, நிகரற்ற நெற்றிச்சுட்டி கீழே
தொங்கியபடி அசைய, என் மடியில் இதுவரை
அமர்ந்திருந்த கண்ணனே எழுந்து போய்
ஆயர்களின் தலைவனான உன் தந்தை
நந்தகோபரின் மடியில் உட்கார்ந்து கொண்டு
கைகளைக் கொட்டு. திருமாலே !
நீ கைகளை கொட்டி விளையாட வேண்டும் !

குறிப்பு: கண்ணனின் அழகை முழுமையாக
அனுபவிப்பதின் பொருட்டே, தன் எதிரில்
நந்தகோபர் அமர்ந்திருப்பதாக பாவித்து,
கண்ணனை அவர் மடியில் அமரும்படி ஆழ்வார்
முறையிட்டதாக வியாக்யானம்.
(3)
பன்மணிமுத்தின் பவளம் பதித்தன்ன என்
மணிவண்ணன் இலங்கு பொற்றோட்டின்மேல்
நின்மணிவாய் முத்திலங்க நின்னம்மை தன்
அம்மணிமேல் கொட்டாய் சப்பாணி
ஆழியங்கயனே சப்பாணி

பாசுர அனுபவம்

விதவிதமான மணிகளும், முத்துக்களும்,
பவளங்களும் பொருத்திச் செய்யப்பட்ட நீ
அணிந்திருக்கும் பொன் காதணிகளின்
அழகையும் மிஞ்சும்படியாக இருக்கும்
முத்துக்கள் போல் பிரகாசிக்கும் உன்
பற்கள், உன் திருப்பவள வாய்ச்
சிரிப்பின்போது, தெரியும்படி உன் தாயின்
இடுப்பிலமர்ந்து கைகளைக் கொட்டு, என்
நீலமணி போன்ற நிறமுடையவனே! திருச்
சக்கரத்தை அழகிய கையில் ஏந்தியவனே!
அத்திருக் கைகளைக் கொட்டி
விளையாட வேண்டும்!
(4)
தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா வம்புலி சந்திரா வாவென்று
நீநிலா நின்புகழா நின்றவாயர்தம்
கோநிலாவக்கொட்டாய் சப்பாணி
குடந்தை கிடந்தானே சப்பாணி

பாசுர அனுபவம்

வெண்மையான நிலா காயும் முற்றத்தில்
இருந்துகொண்டு வானில் உலாவும் சந்திரனை
உன்னுடன் விளையாட அழைப்பதை
இடையர்களின் தலைவரான நந்தகோபர்
பெருமிதத்துடன் கவனித்துக் கொண்டிருக்கிறார்
கண்ணா! அவர் மனம் குளிரக் கைககளைக்
கொட்ட வேண்டும். திருக்குடந்தையில் பள்ளி
கொண்டவனே! கைகளைக் கொட்டவும்!
(5)
புட்டியிற்சேறும் புழுதியுங் கொண்டுவந்து
அட்டியமுக்கி அகம்புக்கறியாமே
சட்டித்தயிரும் தடாவினில் வெண்ணையும்முண்
பட்டிக்கன்றே கொட்டாய் சப்பாணி
பற்பநாபா கொட்டாய் சப்பாணி

பாசுர அனுபவம்

விளையாடுவதால் ஏற்பட்ட, உடம்பிலேறிய
சேறும், மண் புழுதியும் என்மேல் அப்பிவிட்டு,
எனக்குத் தெரியாமல் தப்பி உள்ளே சென்று
சட்டியிலுள்ள தயிரையும், பானையிலுள்ள
வெண்ணையையும் உண்டு மாட்டுத்
தொழுவத்தில் மேயும் கன்னுகுட்டியைப்
போன்றவனே, கைகளைக் கொட்டவும்.
தாமிரைப்பூவை நாபியிலுடையவனே (பற்பநாபா),
உன் திருக்கைகளைக் கொட்டவேண்டும்.
(6)
தாரித்து நூற்றுவர் தந்தை சொற்கொள்ளாது
போருய்த்துவந்து புகுந்தவர் மண்ணாள
பாரித்த மன்னர் படப் பஞ்சவர்க்கு அன்று
தேருய்த்தகைகளால் சப்பாணி
தேவகிசிங்கமே சப்பாணி

பாசுர அனுபவம்

தந்தையாகிய உன் சொல் கேளாமல்
ராஜ்யத்தை தாங்களே ஆளும் பேராசையினால்
பஞ்ச பாண்டவர்களின் மீது போர்தொடுத்து
வந்த நூற்றுக்கணக்கான துர்யோதன
மன்னர்களை மாய்த்து, இது விஷயமாக
பாரத யுத்தத்தில் பாண்டவர்களுக்காக தேரை
ஒட்டிய அத் திருக்கைகளால் சப்பாணி கொட்ட
வேண்டும். தேவகியிடமிருந்து தோன்றிய
சிங்கக் குட்டியைப் போன்றவனே,
நீ சப்பாணி கொட்ட வேண்டும்!
(7)
பரந்திட்டுநின்ற படுகடல் தன்னை
இரந்திட்ட கைம்மேல் எறிதிரைமோத
கரந்திட்டு நின்ற கடலை கலங்க
சரந்தொட்ட கைகளால் சப்பாணி
சார்ங்க விற்கையனே சப்பாணி

பாசுர அனுபவம்

அன்று, ராமாவதாரத்தின் போது, ராமனாக
அவதரித்திருந்த நீ, இலங்கை செல்வதற்காக
கடலை வழி ஏற்படுத்துமாறு கேட்க,
கடலோ அலட்சியமாக, கேட்ட உன் கைகளின்
மேல் அலையை மோதச்செய்ய, அதனால் நீ
மிகவும் கோபமடைந்தவனாய் அம்புகளை
தொடுத்து கடலின் மீது செலுத்திய அத்திருக்
கைகளால் சப்பாணி கொட்டவும்.
சார்ங்கமென்னும் தனுஸ்ஸை ஏந்தியவனே,
சப்பாணி கொட்டவேண்டும்!
(8)
குரக்கினத்தாலே குரைகடல் தன்னை
நெருங்கியணை கட்டி நீணீரிலங்கை
அரக்கரவிய அடுகணையாலே
நெருக்கிய கைகளால் சப்பாணி
நேமியங்கையனே சப்பாணி

பாசுர அனுபவம்

அலை மோதிய கடலை அடங்கவைத்து,
வானர சேனையைக் கொண்டு இலங்கை வரை
நீண்ட பாலம் அமைத்து, கடலால் சூழப்பட்ட
இலங்கையை அடைந்து அங்குள்ள
ராக்ஷஸர்களுடன் சரமாரியாக அம்புகளை எய்து
கடுமையாகப் போர்செய்து அவர்களை
அழித்த அந்த ஸாகஸக் கைகளாலே சப்பாணி
கொட்ட வேண்டும். சக்ராயுதம் ஏந்திய திருக்
கைகளாலே சப்பாணி கொட்டவேண்டும்!
(9)
அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே
வளர்ந்திட்டு வாளுகிர் சிங்கவுருவாய்
உளந்தொட்டிரணியன் ஒண்மார்வகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
பேய்முலை யுண்டானே சப்பாணி

பாசுர அனுபவம்

பகவான் இருக்கிறானா என பரிசோதிப்பதின்
பொருட்டு, ஹிரண்யகசிபு அவன் கட்டின
தூணையே தகர்க்க, அத்தூணிலிருந்து
பெரிய வடிவாய் கூரிய நகங்களுடன் சிங்க
வடிவில் திருவவதரித்து, அவன் மனம்
ஒருவேளை மாறுமோ என நிதானித்து,
அப்படி மாறாததால், ஒளிபொருந்திய அவனுடைய
அகன்ற மார்பை கிழித்த கைகளால் சப்பாணி
கொட்டவும்! பூதனையின் விஷப்பாலை
சுவைத்தவனே! சப்பாணி கொட்டவும்!
(10)
அடைந்திட்டமரர்கள் ஆழ்கடல் தன்னை
மிடைந்திட்டு மந்தரம் மத்தாக நாட்டி
வடஞ்சுற்றி வாசுகிவன் கயிறாக
கடைந்திட்ட கைககளால் சப்பாணி
கார்முகில் வண்ணனே சப்பாணி

பாசுர அனுபவம்

தேவர்கள் உன்னைச் சரணமடைந்ததை
உத்தேசித்து, ஆழமான க்ஷீராப்தி ஸாகரத்தை
நெருங்கி, மந்தார மலையை மத்தாக எடுத்து
நிறுத்தி, வாசுகியென்னும் பாம்பை கயிறாக
மத்தில் (மலையில்) கட்டி, பாற்கடல்
கடைந்த அத்திருக் கைகளால் சப்பாணி
கொட்டவும்! மேகம்போன்ற நிறமுடையவனே,
சப்பாணி கொட்டவும் !
(11)
ஆட்கொள்ளத் தோன்றிய ஆயர்தங்கோவினை
நாட்கமழம்பூம்பொழில் வில்லிபுத்தூர் பட்டன்
வேட்கையாற் சொன்ன சப்பாணி யீரைந்தும்
வேட்கையினால் சொல்லுவார் வினை போமே

பாசுர அனுபவம்

இடையர்களுக்குத் தலைவனும்,
அடியார்களுக்காக அவதரித்தவனுமான
திருக்கண்ணபிரான் சப்பாணி கொட்டி
அநுக்கிரகம் செய்ததை, நாள்தோறும்
மணம் கமழும் பூக்களால் திகழும்
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த பெரியாழ்வார்
ஆசையினால் அருளிச் செய்த இப்பத்து
சப்பாணி பாசுரங்களை அன்போடு
சொல்லுபர்வகளின் பாபங்கள் விலகும்.




No comments:

Post a Comment

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.