முதற்பத்து ஐந்தாம் திருமொழி




சாராம்சம்

செங்கீரை எனபது குழந்தைகள் ஐந்து மாத
தவழும் பருவத்தில் கை கால்களை
அசைத்து ஆடும் ஒரு வகையான நடனம்.
கண்ணனை செங்கீரை நடனம் ஆடிக்காட்டுமாறு
யசோதை கேட்கும் பாசுரங்கள் தான் இவை.
(1)
உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா
ஊழிதோறூழிபலவாலினிலையதன்மேல்
பைய்யவுயோகுதுயில்கொண்ட பரம்பரனே
பங்கயநீணயனத்தஞ்ச்சனமேனியனே
செய்யவள்நின்னகலஞ்ச்சேமமெனக்கருதிச்
செல்வுபொலி மகரக்காதுதிகழ்ந்திலக
ஐயவெனக்கொருகாலாடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறேயாடுகவாடுகவே

பாசுர அனுபவம்

பரம்பொருளான எம்பெருமானே! உலகங்களை
படைத்தபின், பிரளய காலத்தில் அவைகளை
ரட்சிக்கும் பொருட்டு அவற்றையெல்லாம் உண்டு
வயிற்றிலடக்கி, பல கல்பங்கள் ஆலினிலையில்
யோக நித்திரையில் ஆழ்ந்திருந்தாய். அகன்ற
தாமரையையொத்த விழிகளையுடையவனும்,
மை போன்ற திருமேனியை உடையவனும்,
பசுக்களின் ரக்ஷகனும், இடையனுமான உன்னுடய
திருமார்பில் செந்தாமரையிலுதித்தவளான
திருமகள் வாசம் செய்வதால், மெதுவாக
செங்கீரை ஆடு, காதில் அணிந்திருக்கும்
அழகான குண்டலங்கள் அசையுமாறு ஆடு.
(2)
கோளரியின்னுருவங்கொண்டவுணனுடலம்
குருதிகுழம்பியெழக்கூருகிராற்குடைவாய்
மீளவவன்மகனைமெய்ம்மைகொளக்கருதி
மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர
காளநன்மேகமவைகல்லொடுகார்பொழியக்
கருதிவரைகுடையாக்காலிகள்காப்பவனே
ஆளவெனக்கொருகாலாடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறேயாடுகவாடுகவே

பாசுர அனுபவம்

மிருகங்களின் ராஜாவான சிங்கத்தின் வேஷம்
பூண்டு ஹிரண்யகசிபுவின் உடலைக்
கூர்மையான நகங்களினால் ரத்தம் பொங்கி
வர கிழித்துக் கொன்று அவனுடைய மகனான
ப்ரஹல்லாதனின் வாக்கை மெய்யாக்கின
பெருமாளே, அன்றொருநாள் தேவேந்திரன்
தனக்கு பூஜை அளிக்காததால் கோபித்து
கருத்த மேகங்களை அனுப்பி, கல் மழையை
ஓயாமல் பொழிய வைத்து இடையர்களை
துன்புருத்திய போது, கோவர்தன மலையை
திருக்கைகளால் தூக்கி ஒரு குடையாகப்
பிடித்து பசுக்களை ரக்ஷித்த ஆயர்களின்
காளையே, எனக்காக ஒருதரம்
செங்கீரை ஆடிவிடு!
(3)
நம்முடைநாயகனேநான்மறையின்பொருளே
நாபியுள் நற்கமலநான்முகனுக்கொருகால்
தம்மனையானவனே தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகுந்தடவியதன்புறமும்
விம்மவளர்ந்தவனேவேழமுமேழ்விடையும்
விரவியவேலைதனுள் வென்றுவருமவனே
அம்மவெனக்கொருகாலாடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறேயாடுகவாடுகவே

பாசுர அனுபவம்

எங்களுக்குத் தலைவனே, நான்கு
வேதங்களின் உட்பொருளே, உன்னுடைய
திருநாபிக்கமலத்திலிருந்து உதித்த பிரம்மா,
மது-கைடபர்களிடம் வேதங்களை இழந்து
பெருந்துயரத்தில் ஆழ்ந்திருந்தபோது,
வேதங்களை மீட்டு பிரம்மனிடமே ஒப்படைத்து
பிரமனுக்கு தாய் போல் அருளினவனே,
விண்ணுலகையும், நக்ஷத்திர லோகங்களையும்
அளந்து அதற்கும் அப்பாற்பட்டு த்ரிவிக்ரமனாய்
வளர்ந்தவனே, குவலயாபீடம் என்ற
யானையையும், ஏழு காளைகளையும்
போட்டியில் அடக்கி வென்றவனே, என்
செல்லமே, ஆயர்களின் காளையே, பசுக்களின்
ரக்ஷகனே, ஒருதரம் செங்கீரை ஆடிவிடு!
(4)
வானவர்தாம்மகிழவன் சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமுதுண்டவனே
கானகவல்விள காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியுங்கருநிறவென்கன்றே
தேனுகனும்முரனுந்திண்டிறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச் செருவதிரச் செல்லும் `
ஆனையெனக்கொரு காலாடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறேயாடுகவாடுகவே

பாசுர அனுபவம்

வானுலகத்தவர்கள் மகிழும்படி சகடாசுரனை
உருட்டி மாய்த்து, வஞ்சகியான பூதனையின்
விஷம் கலந்த முலைப்பாலை குடித்து,
காட்டிலிருந்த வலிமைமிக்க விளாமரத்தினுடைய
அசுரக் காய்களை, கன்று வடிவிலிருந்த
வத்ஸாசுரனைக் கொண்டு, அவனைத்
தூக்கி மரத்தின் மேலெறிந்து, விழச்செய்து,
இப்படியாக அசுரர்களை மாய்த்த என்
கரிய நிறக் கன்னுக்குட்டியே! தேனுகாசுரன்,
முராசுரன் மற்றும் நிரகாசுரன் போன்ற கொடிய
அரக்கர்களைக் கொன்று விண்ணோர்களையும்
வானோர்களையும் காப்பாற்றிய, எதிரிகளை
அதிரச் செய்யும் யானை போன்றவனே,
ஆயர்களின் காளையே, பசுக்களின் ரக்ஷகனே,
எனக்காக ஒரு செங்கீரை ஆடிவிடு!
(5)
மத்தளவுந்தயிரும் வார்குழல் நன்மடவார்
வைத்தன நெய்களவால் வாரிவிழுங்கி ஒருங்
கொத்தவிணை மருதமுன்னியவந்தவரை
ஊருகரத்திநொடு முந்தியவெந்திறலோய்
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
என் அத்தவெனக்கொரு காலாடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறேயாடுகவாடுகவே !

பாசுர அனுபவம்

நீண்ட கூந்தலுடைய இடைச்சிகள் சிரமப்பட்டு
மத்தால் கடைந்து வைத்த தயிறையும்,
நெய்யையும் திருட்டுத் தனமாய் கைகளினால்
அள்ளி உட்கொண்டவனும், உரலை
உருட்டிக்கொண்டு இருமருத மரங்களை
கைகளாலும் தொடைகளாலும் முறியச்செய்து
அதிலிருந்த அசுரர்களை மாய்த்த பலம்
பொருந்திய வீரனே, என் அப்பனே!
ஆயர்களின் காளையே, பசுக்களின் ரக்ஷகனே!
உன் முத்துப்போன்ற பற்கள் தெரிய
புன்சிரிப்புடன், சுருட்டையான அழகிய
முடி முகத்தில் விழுந்து அசையும்படி
ஒரு செங்கீரை ஆடிவிடு!
(6)
காயமலர்நிறவாக கருமுகில்போலுருவா
கானகமாமடுவிற்காளியனுச்சியிலே
தூயநடம்பயிலுஞ் சுந்தரவென்சிறுவா
துங்கமதக்கரியின் கொம்புபறித்தவனே
ஆயமறிந்து பொருவானெதிர்வந்தமல்லை
அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய்
ஆயவெனக்கொருகாலாடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறேயாடுகவாடுகவே

பாசுர அனுபவம்

காயாம்பூ நிறத்தையுடையவனே, கருத்த
மேகம் போலுள்ளவனே, காட்டில் ஒரு
பெரிய குன்றின் மேலிருந்த காளியன் என்ற
கொடிய பாம்பின் தலை உச்சியில் நின்று
நடனமாடிய அழகனே, என்னுடைய
அருமைப் புதல்வனே, குவலயாபீடமெனும்
மதயானையின் தந்தங்களை முறித்தவனே,
மல்யுத்தமறிந்த மல்லர்களை அழித்து
சாகசம் பண்ணிய திருவடிகளையுடையவனே,
ஆயர்களின் காளையே, பசுக்களின்
ரக்ஷகனே, ஒரு செங்கீரை ஆடிவிடு!
(7)
துப்புடையாயர்கள் தம்சொல்வழுவாதொருகால்
தூயகருங்குழல்நற்றோகைமயிலனைய
நப்பினை தன் திறமா நல்விடையேழவிய
நல்லதிறலுடைய நாதனுமானவனே
தப்பினபிள்ளைகளைத்தனமிகுசோதிபுகத்
தனியொரு தேர்கடவித்தாயொடுகூட்டிய என்
அப்பவெனக்கொரு காலாடுக செங்கீரை
ஆயர்கள்போரேறேயாடுகவாடுகவே

பாசுர அனுபவம்

கடும் நெஞ்சையுடைய இடையர்களின்
வார்த்தைக் கிணங்க மென்மையான
திருமேனியுடையவனும், ஆயர்களின்
தலைவனும், பராகிரமசாலியானவனுமான
நீ ஒருசமயம் ஏழு முரட்டுக் காளைகளையடக்கி
கருத்த கூந்தலுடையவளும், மயில்
தோகையைப் போன்றவளுமான நப்பின்னை
பிராட்டியை மணந்து கொண்டாய். பின்னர்,
ஒரு பிராமணனின் நான்கு இறந்த
பிள்ளைகளையும், தனியே ஒரு தேரில்
பரமபதம் போய், அங்கிருந்து அவர்களை
மீட்டு அவர்கள் தாயுடன் சேர்த்தாய்.
ஆயர்களின் காளையே, பசுக்களின்
ரக்ஷகனே, ஒரு செங்கீரை ஆடிவிடு!
(8)
உன்னையுமொக்கலையிற்கொண்டுதமில்
மருவி உன்நொடுதங்கள் கருத்தாயின செய்துவரும்
கன்னியரும் மகிழக்கண்டவர்கண்குளிரக்
கற்றவர் தெற்றி வரப்பெற்றவெனக்கருளி
மன்னுகுறுங்குடியாய் வெள்ளறையாய்மதிள்சூழ்
சோலைமலைக்கரசே கண்ணபுரத்தமுதே
என்னவலங்களை வாயாடுகசெங்கீரை
ஏழுலகுமுடையாயாடுகவாடுகவே

பாசுர அனுபவம்

அழியாதிருக்கும் திருக்குருங்குடியில்
எழுந்தருளியும், திருவெள்ளறையில் தங்கியும்,
மதிளால் சூழப்பட்ட திருமாலிருஞ்சோலைக்கு
அதிபதியாக இருந்தும், திருக்கண்ணபுரத்தில்
அமுதாக நின்றும் இருப்பவனே, என் துன்பத்தை
போக்குகிறவனே, உன்னை இளம்பெண்கள்
தங்கள் இடுப்பில் வைத்துக் கொண்டு வீடு
வீடாகச் சென்று கொஞ்சுவதால், அவர்களுக்குப்
பிடித்தாற்போலும், சாமான்யர்கள் கண்குளிரவும்,
கவிகளைப் பாடவைக்கும்படி செய்யும் நீ,
எனக்கும் கிருபை பண்ணி என் பிள்ளையாகிய
நீ செங்கீரை ஆடவேண்டும். ஏழு உலகங்களுக்கும்
நாயகனே, நீ செங்கீரை ஆடவேண்டும்!
(9)
பாலொடுநெய்தயிரொண் சாந்தொடுசெண்பகமும்
பங்கயநல்ல கருப்பூரமும் நாறிவர
கோலநறும்பவளச் செந்துவர் வாயினிடைக்
கோமளவெள்ளிமுளைபோல்சிலபல்லிலக
நீலநிறத்தழகாரைம்படையின் நடுவே
நின்கனிவாயமுதமிற்றுமுறிந்துவிழ
ஏலு மறைப்பொருளேயாடுகசெங்கீரை
ஏழுலகமுடையாயாடுகவாடுகவே

பாசுர அனுபவம்

நீ செங்கீரை ஆடும்போது, உன்னிடமிருந்து
பலவிதமான நறுமணங்கள் வீசுகிறதே! பால்,
தயிற், நெய், இவைகளை அடிக்கடி புசிப்பதால்
ஏற்படும் நறுமணம், சந்தனம், செண்பகம்
இவைகளை சாத்திக்கொள்வதால் ஏற்படும்
நறுமணம், திருவாயைத் திறந்து சிரிக்கும்
போதோ தாமரையின் நறுமணமும், கற்பூரத்தின்
பரிமளமும் வீசும். திருவாய் மலரும் போது,
சிவந்திருக்கும் பவள வாயின் நடுவே சில
பற்கள் வெள்ளி அரும்புபோல் பிரகாசிக்கும்.
நீல நிறத்தை உடையோனே! பஞ்சாயுதத்தின்
நடுவே அமைந்துள்ள உன்னுடைய கொவ்வை
பழம் போன்ற வாயிலிருந்து ஊரும்
அம்ருதமான நீர் கீழே விழும்படியாக
ஆடவேண்டும். ஏழு உலகங்களையும்
படைத்தாள்பவனே. நீ ஆடவேண்டும்!
(10)
செங்கமலக்கழலில் சிற்றிதழ்போல் விரவில்
சேர்திகழாழிகளும் கிண்கிணியும் அரையில்
தங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்
பூவொடு பொன்மணியும் மோதிரமுங்கிறியும்
மங்கலவைம்படையுந் தோள்வளையுங்குழையும்
மகரமும்வாளிகளுஞ் சுட்டியு மொத்திலக
எங்கள்குடிக்கரசேயாடுகசெங்கீரை
ஏழுலகமுடையாயாடுகவாடுகவே

பாசுர அனுபவம்

எங்கள் குல அரசே! செந்தாமரை போன்ற
உன் திருவடிகளின் விரல்கள் தாமரையின்
உள்ளிதழ்கள் போலிருக்கிறது. உன் திருவாழி
மோதிரங்கள், கால் சதங்கைகள்,
இடுப்பிலிருக்கும் பொன் நாண், பொன்னால்
செய்த மாதுளம்பூ-பொன்மணி சேர்த்துக்
கோத்த மாலை, திருக்கை மோதிரங்கள்,
மணிக்கட்டில் சாத்திய வடம், மங்களமான
பஞ்சாயுதம் பதித்த கழுத்து மாலை,
திருத்தோள்வளைகள், காதணிகள், மகர
குண்டலங்கள், நெற்றிச் சுட்டி இவை எல்லாம்
ஒன்று சேர்ந்தாற்போல் அழகாக அசைய
நீ செங்கீரை ஆடவேண்டும்! ஏழுலகமும்
ஆள்பவனே, நீ ஆடவேண்டும் !
(11)
அன்னமுமீனுருவுமாளரியுங்குறளும்
ஆமையுமானவனேயாயர்கள் நாயகனே
என்னவலங்களை வாயாடுக செங்கீரை
ஏழுலகுமுடையாயாடுகவாடுகவென்று
அன்ன நடை மடவாளசோதை யுகந்தபரிசு
ஆனபுகழ்ப்புதுவைப்பட்டனுரைத்த தமிழ்
இன்னிசைமாலைகளிப்பத்தும்வல்லார் உலகில்
எண்டிசையும் புகழ்மிக்கின்பமதெய்துவரே

பாசுர அனுபவம்

ஹம்ஸ,மத்ஸ்ய ,ந்ருஸிம்ஹ, வாமன போன்ற
அவதாரங்களை எடுத்தவனே, இடையர்களின்
தலைவனே, என் துன்பத்தை போக்கினவனே,
ஏழுலகங்களுக்கும் அதிபதியே, நீ செங்கீரை
ஆடவேணும், ஆடவேணும் என்று, ஹம்ஸ நடை
கொண்ட, களங்கமற்றவளான யசோதை பிராட்டி
உகந்து சொன்னவற்றை, புகழ்பொருந்திய
பெரியாழ்வார் இனிய இசையுடன் தமிழ்
மாலைகளாகத் தொகுத்துத் தந்த இப்பத்து
பாசுரங்களை ஓதவல்லவர்கள் இந்த உலகில்
எட்டு திசைகளிலும் கீர்த்தியையும்,
பரமானந்தத்தையும் அடைவர்கள்.

1 comment:

  1. Thank you. This website was very helpful.

    ReplyDelete

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.