முதற்பத்து இரண்டாம் திருமொழி (பாகம் 2)




(11)
நாள்களோர் நாலைந்து திங்க ளளவிலே
தாளை நிமிர்த்துச் சகடத்தைச் சாடிப்போய்
வாள்கொள் வளையெயிற்று ஆருயிர் வவ்வினான்
தோள்கள் இருந்தவாகாணீரே சுரிகுழலீர்வந்துகாணீரே.

பாசுர அனுபவம்

கண்ணன் பிறந்து நாலைந்து மாதங்களுக்கு
உள்ளாகவே தன் வயதிற்கு அப்பாற்பட்ட
வேலைகளை செய்யத்தொடங்கினான்.
ஒருசமயம் யசோதை குழந்தையை ஒரு
வண்டியின் கீழ், தொட்டிலில் தனியாக விட்டு
விட்டு யமுனைக்கு செல்கிறாள். அப்பொழுது
கம்சனால் ஏவப்பட்ட சகடாசுரன் என்ற
அசுரன் அந்த வண்டியில் ஆவேசித்து கண்ணன்
மேல் விழுந்து கண்ணனை கொல்லப்பார்த்தான்.
கண்ணனோ தன் சிறிய திருவடிகளைத் தூக்கி
வண்டியை ஒரு உதை விட்டதில் அந்த வண்டியும்
நொருங்கியது. அசுரனும் அழிந்தான்.
மற்றொரு சமயம் ஒளிகொண்ட உருவமாய்,
நிமிர்ந்த சரீரத்துடனும், கோரப்பற்களுடனும்
வந்த பூதனையின் உயிரை மாய்த்தான்.
இப்பேற்பட்ட கண்ணனின் தோள்களை வந்து
காணுமாறு அங்கிருந்த சுருண்ட கேசமுடைய
பெண்களை அழைக்கிறாள் யசோதை.

(12)
மைத்தடங் கண்ணி யசோதை வளர்க்கின்ற
செய்த்தலை நீல நிறத்துச் சிறுப்பிள்ளை
நெய்த்தலை நேமியும் சங்கும் நிலாவிய
கைத்தலங் கள்வந்து காணீரே கனங்குழை யீர்வந்து காணீரே

பாசுர அனுபவம்

மை இட்ட பெரிய அழகான கண்களையுடைய
யசோதை, கண்ணனை வைத்த கண் வாங்காமல்
பார்த்துப் பார்த்து வளர்ப்பாளாம் . அதனாலாயே
கண்ணனின் திருமேனி அவள் கண்விழி நிறம்
அல்லது மலர்ந்த கருங்குவளைப் பூவின் நிறம்போல்
ஆகிவிட்டதோ என முன்னோர்களின் ரசனையான
கருத்தும் கூட. கண்ணன் சில சமயங்களில்
யசோதைக்கு சங்கு சக்கரங்களை கைகளில்
ஏந்தியவாறு காட்சி தருவானாம். மேலும் அவன்
கைகளில் மஹாபுருஷ லக்ஷணங்களான சங்கு
சக்கர ரேகைகள் அமைந்திருந்ததாம். கூர்மையான
நுனிகளுடைய திருச்சக்கரமும், திருச்சங்கும்
ஏந்திய கண்ணனின் உள்ளங்கைகளை வந்து
காணுமாறு, பொன்னாலான காதணிகளை
அணிந்திருந்த பெண்களை அழைக்கிறாள் யசோதை.

(13)
வண்டமர் பூங்குழல் ஆய்ச்சி மகனாகக்
கொண்டு வளர்க்கின்ற கோவலக் குட்டற்கு
அண்டமும் நாடும் அடங்க விழுங்கிய
கண்டம் இருந்தவாகாணீரே காரிகையீர்வந்துகாணீரே.

பாசுர அனுபவம்

யசோதை வண்டுகள் படிந்திருக்கிற பூக்களை
(அப்பொழுதுதான் மலர்ந்த பூக்கள் என்று பொருள்
கொள்ளலாம்) தன்னுடைய கூந்தலில் சூட்டி
கண்ணனின் பார்வைக்கும், மனதுக்கும்
இனிமையானவளாக இருக்கிறாள். கண்ணன்
யசோதைக்கும் நந்தகோபருக்கும் வளர்ப்புப்
பிள்ளையாக நாளொரு மேனியும், பொழுதொரு
வண்ணமாக வளர்ந்து வருகிறான். பிரளய
காலத்தில் அகில அண்டங்களையும் அதனுள்
அடங்கிய எல்லாவற்றையும் விழுங்கிய கண்ணனின்
திருக்கழுத்தை காண அங்கிருந்த அழகிய
பெண்களை அழைக்கிறாள் யசோதை.

(14)
எந்தொண்டை வாய்ச்சிங்கம்
வாவென்றெடு த்துக்கொண்டு
அந்தொண்டை வாயமு தாதரித்து ஆய்ச்சியர்
தம்தொண்டை வாயால் தருக்கிப் பருகும்இச்
செந்தொண்டை வாய்வந்து காணீரே சேயிழை
யீர்வந்து காணீரே.

பாசுர அனுபவம்

இடைச்சிகள் கண்ணனின் வாயழகில் மயங்கி,
"சிங்கக்குட்டி, யானைக்குட்டி, எங்களிடம் வா"
என கொஞ்சி அவனை கையிலெடுத்து அவனின்
வாயோடு (உதடு என்றும் பொருள் கொள்ளலாம்)
தங்களின் கோவை பழம் (இலக்கிய தமிழில்
கொவ்வை பழம் ) போன்ற சிவந்த வாயை
வைத்து அவன் வாயில் ஊரும் அமுத நீரைப்
பருகுவார்களாம். அந்த மதுரமான கண்ணனின்
உதடுகளைக் காண, சிறந்த ஆபரணங்களை
அணிந்த பெண்களை அழைக்கிறாள் யசோதை.

(15)
நோக்கி யசோதை நுணுக்கிய மஞ்சளால்
நாக்கு வழித்துநீ ராட்டும்இந் நம்பிக்கு
வாக்கும் நயனமும் வாயும் முறுவலும்
மூக்கும் இருந்தவாகாணீரே மொய்குழலீர்வந்துகாணீரே

பாசுர அனுபவம்

கண்ணனின் திருமேனியின் சௌந்தர்யத்தை
இப்பாசுரம் வர்ணிக்கின்றது. மஞ்சக்காப்பால்
யசோதை கண்ணனின் நாக்கை வழித்து
குளிப்பாட்டுகிறாள். அவன் பேசுகிற மழலைச்
சொர்க்களையும், திவ்யமான திருக்கண்களையும்,
புன்சிருப்புடன் கூடிய வாயையும், பவழம்
போன்ற உதடுகளையும் காண, அடர்த்தியான
கூந்தலையுடைய பெண்களை
அழைக்கிறாள் யசோதை.

(16)
விண்கொளமரர்கள் வேதனை தீரமுன்
மண்கொள் வசுதேவர் தம்மக னாய்வந்து
திண்கொ ளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவாகாணீரே கனவளையீர்வந்துகாணீரே.

பாசுர அனுபவம்

தேவலோகங்களிலுள்ள தேவர்களின் கஷ்டங்களைப்
போக்க முன்பொருசமயம் பூமியில் வசுதேவருக்கு
மகனாகப் பிறந்து, வலிமைமிக்க அசுரர்களை
அழித்த பேராற்றலுடைய கண்ணனின்
திருக்கண்களை காண, பொன் வளையல்களை
அணிந்திருந்த பெண்களை
அழைக்கிறாள் யசோதை.

(17)
பருவம் நிரம்பாமே பாரெல்லாம் உய்ய
திருவின் வடிவொக்கும் தேவகி பெற்ற
உருவு கரிய ஒளிமணி வண்ணன்
புருவம் இருந்தவாகாணீரே பூண்முலையீர்வந்துகாணீரே

பாசுர அனுபவம்

கண்ணன் தன்னுடைய இளம் வயதிலேயே
கொடியவர்களை அழித்து உலகங்களெல்லாம்
உஜ்ஜீவிக்கும்படி செய்வதற்காக பிராட்டியின்
அம்சமான தேவகியின் வயிற்றில், ஜ்வலிக்கும்
மணி போன்ற கரிய திருமேனியுடன் பிறந்தான்.
அவனுடைய கூர்மையான புருவத்தின் அழகைக்
காண, ஆபரணங்களைப் பூண்ட முலையை
உடைய பெண்களை அழைக்கிறாள் யசோதை.

(18)
மண்ணும் மலையும் கடலும் உலகேழும்
உண்ணுந் திறத்து மகிழ்ந்துண்ணும் பிள்ளைக்கு
வண்ண மெழில்கொள் மகரக் குழையிவை
திண்ணம் இருந்தவாகாணீரே சேயிழையீர்வந்துகாணீரே.

பாசுர அனுபவம்

பிரளய காலத்தில் எம்பெருமான் பூமியையும்,
மலைகளையும், கடல்களையும், ஏழு
உலகங்களையும் தன் திரு வாயால்
மகிழ்ச்சியுடன் (காக்கும் திறமையால் மகிழ்ச்சி)
உண்டு தன் வயிற்றில் அடக்கி வைக்கிறான்.
அச்சிறந்த பண்புடைய கண்ணன் தன்
திருக்காதுகளில் மீன் வடிவு கொண்ட
காதணிகளை அணிந்துள்ளான், காண
வாருங்கள் என ஆபரணங்கள் பூண்ட
பெண்களை அழைக்கிறாள் யசோதை.

(19)
முற்றிலும் தூதையும் முன்கைம்மேல் பூவையும்
சிற்றி லிழைத்துத் திரிதரு வோர்களை
பற்றிப் பறித்துக்கொண்டு ஓடும் பரமன்தன்
நெற்றி இருந்தவாகாணீரே நேரிழையீர்வந்துகாணீரே.

பாசுர அனுபவம்

சிறு பெண்கள் தெருக்களில் கொட்டியிருக்கும்
மண், கல் ஆகியவையோடு முறம், பானைகள்
இவைகளையும் வைத்துக்கொண்டு வீடு கட்டி
விளையாடும்போது, கண்ணன் அவர்கள்
கைகளைப்பற்றி பலாத்காரமாக எல்லாவற்றையும்
அபகரித்துக் கொண்டு ஓடிவிடுவானாம்.
அப்படி ஓடும் போது அவன் நெற்றி வியர்த்து
அழாகயிருப்பதைக் காண, நேர்த்தியுடன்
ஆபரணங்கள் அணிந்த பெண்களை
அழைக்கிறாள் யசோதை.

(20)
அழகிய பைம்பொன்னின் கோல்அங்கைக் கொண்டு
கழல்கள் சதங்கை கலந்துஎங்கு மார்ப்ப
மழகன் றினங்கள் மறித்துத் திரிவான்
குழல்கள்இருந்தவாகாணீரே குவிமுலையீர்வந்துகாணீரே

பாசுர அனுபவம்

அழகான பசும் பொன்னால் செய்யப்பட்ட
கோலை தன் அழகிய கைகளில் பிடித்தவாறே
கண்ணன் திரியும் போது, அவனுடைய
காலணிகளும், சலங்கைகளும் எழுப்பிய
ஒலியால் இளம் கன்றுகள் வழி மாறாமல்
ஒரு கட்டுப்பாட்டிற்குள் சென்றதாம்.
அக்கண்ணனின் சுருண்ட கேசத்தைக்
காணுமாறு அங்கிருந்த குவிந்த முலையை
உடைய பெண்களை அழைக்கிறாள் யசோதை.
இப்பாசுரத்தின் வாயிலாக எம்பெருமானைப்
பாதத்திலிருந்து கேசம்வரை பாட திருவுள்ளம்
கொண்டார் ஆழ்வார் என்பதாக கருத்து.

(21)
சுருப்பார் குழலி யசோதை முன்சொன்ன
திருப்பாத கேசத்தைத் தென்புது வைப்பட்டன்
விருப்பா லுரைத்த இருபதோ டொன்றும்
உரைப்பார்போய் வைகுந்தத்தொன்றுவர் தாமே.

பாசுர அனுபவம்

வண்டுகள் அமர்ந்து ஆர்ப்பரிக்கும் கூந்தலை
உடையவளான யசோதை முன்பு சொன்ன,
கண்ணனின் பாதம் முதல் கேசம் வரை உள்ள
அவயங்களின் சௌந்தர்யத்தை, அழகிய
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த கவி பாடும்
பெரியாழ்வார், மிக்க ஆதாரத்துடன்
இருபத்தோரு பாசுரங்களாக அருளிச்செய்த
இவைகளை ஓதுபவர்கள், இவ்வுலகை
விட்டுப் போனபின் ஸ்ரீவைகுண்டத்தை அடைந்து
நித்யானந்தத்தை அனுபவிப்பார்கள்.

No comments:

Post a Comment

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.