சாராம்சம்
குழந்தை கண்ணனின் அழகை யசோதையும்அனுபவித்து, அங்கிருந்த அவளுடைய
தோழிகளையும் வந்து காணுமாறு
அழைக்கும் அழகான பாசுரங்கள் தான் இவை.
(1)
சீதக் கடல்உள் ளமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவளவாயீர்வந்து காணீரே.
பாசுர அனுபவம்
குளிர்ந்த திருபாற்கடலில் உள்ளமுதாகப்பிறந்த பிராட்டிக்கு ஒப்பானவளான தேவகி,
ஒன்றுமறியா சிசுவை பூமாலைகளால்
அலங்கரிக்கப்பட்ட அழகிய கேசத்தை உடைய
யசோதை பிராட்டியிடம் அனுப்பிவைக்கிறாள்.
கண்ணனோ தன் திருப்பாத கமலங்களை தன்
திருவாயில் வைத்து சுவைத்துக்கொண்டிருக்கிறான்!
பவழத்தை ஒத்த உதடுகளை உடைய பெண்களே!
இந்த திவ்ய காட்சியை காண வாருங்கள்.
(குறிப்பு: எம்பெருமானுடைய திருவடியில் தேன்,
வெள்ளம்போல் இருக்கிறதாக வேதங்கள் கூறுகிறது
என்றும் அவனுடைய திருவயிற்றில் கிடக்கும்
உலககங்களெயெல்லாம் உஜ்ஜீவநமாக்கவே
இவ்வாறு செய்கிறான் எனபதும்
பெரியவர்களின் கருத்து).
(2)
முத்தும் மணியும் வயிரமும் நன்பொன்னும்
தத்திப் பதித்துத் தலைப்பெய்தாற் போல்எங்கும்
பத்து விரலும் மணிவண்ணன் பாதங்கள்
ஒத்திட்டிருந்தவாகாணீரே ஒண்ணுதலீர்வந்துகாணீரே.
பாசுர அனுபவம்
கண்ணனுடைய திருப்பாதங்களின் பத்துவிரல்களுக்கும் நவரத்தினங்கள் (முத்து,
மரகதம், வைரம், வைடூர்யம், கோமேதகம்,
நீலம், பவழம், புஷ்பராகம், மாணிக்கம்)
மற்றும் தங்க நிற வர்ணம் பூசி, ஜ்வலிக்கும்
இந்த வர்ணங்களோடு கூட அவனுடைய
திருமேனியின் மணிவர்ணமும் சேர்ந்து
மிகவும் ஒத்து இருக்கும் இக்காட்சியைக்
காண, ஆபரணங்களால் பிரகாசிக்கும்
நெற்றியை உடைய பெண்களே! வாருங்கள்!
(3)
பணைத்தோளிள வாய்ச்சி பால் பாய்ந்த கொங்கை
அணைத்தார உண்டு கிடந்தஇப் பிள்ளை
இணைக்காலில் வெள்ளித் தளை நின் றிலங்கும்
கணைக்கால் இருந்தவாகாணீரே காரிகையீர்வந்துகாணீரே.
பாசுர அனுபவம்
மூங்கில் போன்ற தோளுடைய யசோதையின்பால் நிரம்பிய முலையை தன் திருகரத்தினால்
நன்கு அணைத்தவாறே கண்ணன் பாலை வயிறார
பருகி விட்டுத் தூங்குகிறான். அழகிய பெண்களே!
கண்ணன் திருக்கால்களில் அணிந்திருக்கும்
வெள்ளித்தண்டுகளின் அழகை வந்து பாருங்கள்!
(4)
உழந்தாள் நறுநெய் ஒரோதடா வுண்ண
இழந்தா ளெரிவினா லீர்த்துஎழில் மத்தின்
பழந்தாம்பா லோச்சப் பயத்தால் தவழ்ந்தான்
முழந்தாள் இருந்தவாகாணீரே முகிழ்முலையீர்வந்து காணீரே
பாசுர அனுபவம்
கஷ்டப்பட்டுப் பாலை கறந்து, காய்ச்சி,தயிராகத்தோய்த்து, கடைந்து வெண்ணையாக்கி
பிறகு அதை நெய்யாக்கி தடாக்களில்
கொட்டிவைத்திருந்ததை, ஒரு தடாவைக்கூட
விட்டு வைக்காமல் எல்லாவற்றிலுமிருந்த நெய்யை
தின்று முடித்தான் கண்ணன். இதைக்கண்டதும்,
மிகுந்த பதட்டத்துடன் சின்ன குழந்தைக்கு
இவ்வளவு நெய் உண்டிருப்பதால் உடலுக்கு
தீங்கு வந்துவிடுமோ என்ற அச்சத்தினால்
கண்ணனை கோபித்து அடிக்க ஒரு பிரம்பை
கையிலெடுக்கையில், கண்ணன் பயந்து
முழங்கால்களில் தவழ்ந்தவாறே அங்கிருந்து
தப்பிக்கப் பார்க்கும் அழகை, நிறைவான
முலைகளையுடைய பெண்களே!
காண வாருங்கள்!
(5)
பிறங்கிய பேய்ச்சி முலைசுவைத் துண்டிட்டு
உறங்குவான் போலே கிடந்தஇப் பிள்ளை
மறங்கொ ளிரணியன் மார்பைமுன் கீண்டான்
குறங்குகளைவந்துகாணீரே குவிமுலையீர்வந்துகாணீரே
பாசுர அனுபவம்
முன்பொருகாலத்தில் நரசிம்மாவதாரத்தில்ஹிரண்யகசிபு என்ற த்வேஷங்கொண்ட
அசுரனை அவன் மார்பைப் பிளந்து கொன்றான்
கண்ணன். பிரகாசமாய், அழகிய பெண்
உருவமெடுத்து கம்சனால் ஏவப்பட்டவளாய் வந்த
ராட்சஶி பூதனையை, அவள் முலயைப்பற்றி
பால் உண்பதுபோல் அவளின் உயிரையே
உறிஞ்சி அவளைக்கொன்றான் கண்ணன்.
இத்தனை ஸாகசங்களையும் புரிந்துவிட்டு
ஒன்றுமறியாதவன் போல் உறங்கும் குழந்தை
கண்ணனின் திருத்தொடைகளைக் காண,
குவிந்த முலையுடைய பெண்களே! வாருங்கள்!
(6)
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தாநாள் தோன்றிய அச்சுதன்
முத்தமிருந்தவாகாணீரே முகிழ்நகையீர்வந்துகாணீரே.
பாசுர அனுபவம்
வஸுதேவர் யானைகளை கட்டி வாழ்பவர்.அவருடைய மனதுக்கு ஏற்றவளான தேவகியின்
வயிற்றில் ஹஸ்த நக்ஷத்திரத்தின் பத்தாநாள்
உதித்தான் அச்சுதன். குழைந்தைக்கே உரித்த
பிறந்தமேனியாக உள்ள திருக்கோலத்தைக் காண,
புன்சிருப்புடன் இருக்கும் பெண்களே! வாருங்கள்!
குறிப்பு: ஆழ்வார் இங்கு நேராக கண்ணனின்
பிறந்த நக்ஷத்திரத்தை குறிப்பிடாததற்கு காரணம்,
கம்சனை போன்ற துஷ்டர்கள் நக்ஷத்திரத்தை
வைத்து அதனை மந்திரங்களால் துஷ்பிரயோகித்து
குழந்தையை மரணமடையச் செய்யலாம் என்ற
பயம்தான் என்று பெரியவர்கள் வியாக்யானம்.
ஆழ்வார் கண்ணனின் அனுபவத்திலேயே
மூழ்கியிருந்ததால் அவர் மேற்கூறியவாறு
நினைத்திருக்கலாம் என்பதில் முரண்பாடு இல்லை.
(7)
இருங்கை மதகளிறு ஈர்க்கின் றவனை
பருங்கிப் பறித்துக்கொண்டு ஓடுபர மன்தன்
நெருங் குபவளமும் நேர்நாணும் முத்தும்
மருங்கும்இருந்தவாகாணீரே வாணுதலீர்வந்துகாணீரே
பாசுர அனுபவம்
பெரிய தும்பிக்கை கொண்ட குவலயாபீடம்என்ற மதயானை கம்சனால் ஏவப்பட்டு
கண்ணனைப்பார்த்து சீறி வர, அதனுடைய
தந்தங்களை சுலபமாக கைகளினால் முறித்து,
அவைகளாலேயே யானையையும் அதன்
பாகனையும் சேர்த்துக்கொன்றுவிட்டு,
கம்சனை நோக்கி ஓடுகிறான் கண்ணன்.
முத்தும் பவழமும் சேர்த்துக்கோத்த அழகிய
அரைநாண் கயிறுடன் கண்ணன் இருக்கும்
காட்சியைக் காண, ஒளி பொருந்திய
நெற்றியை உடைய பெண்களே! வாருங்கள்!
(8)
வந்த மதலைக் குழாத்தை வலிசெய்து
தந்தக் களிறுபோல் தானே விளையாடும்
நந்தன் மதலைக்கு நன்று மழகிய
உந்திஇருந்தவாகாணீரே ஒளியிழையீர்வந்துகாணீரே
பாசுர அனுபவம்
குழந்தை கண்ணன் விளையாடும் போது மற்றகுழந்தைகளோடு சேர்ந்து விளயாடாமல்,
இவனே ஒரு தனிக் கட்சியாகவும், மற்ற
எல்லா குழந்தைகளும் சேர்ந்து எதிர் கட்சியாக
இருக்குமாறு செய்துதான் விளையாடுவான்.
கண்ணன் விளையாடும்போது, தன் வல்லமையை
காட்டிக்கொண்டு கொம்பு முளைத்த குட்டி யானை
போல் தனக்கே முக்கியத்துவம் கொடுப்பான்.
நந்தகோபருடைய விதேய பிள்ளையான
கண்ணனின் தொப்புள் அழகை காண,
ஒளிவீசிய ஆபரணங்களை அணிந்த பெண்களே!
வாருங்கள்!
(9)
அதிரும் கடல்நிற வண்ணனை ஆய்ச்சி
மதுர முலையூட்டி வஞ்சித்து வைத்து
பதறப் படாமே பழந்தாம்பா லார்த்த
உதரம்இருந்தவாகாணீரே ஒளிவளையீர்வந்துகாணீரே.
பாசுர அனுபவம்
பெருத்த அலைகளின் சப்தங்களோடு கூடியகடலின் நிறம் கொண்ட கண்ணனை யசோதை
இனிய முலைப்பால் ஊட்டி, அப்படியே
அவனறியாதபடி ஏமாற்றி ஒரு தாம்புக்
கயிற்றை இடுப்பில் கட்டி
அவன் ஓடாதபடி உரலோடு பிணைத்து
விடுவாள். கயிறு கட்டினபடியே இருந்த
கண்ணனின் திருவயிற்றை காண,
ஒளிமிக்க வளைகளைக் கையில்
அணிந்திருக்கும் பெண்களே! வாருங்கள்!
குறிப்பு: கோகுலத்தில் உள்ள இடையர்களின்
வீடுகளில் வெண்ணை, பால், தயிர், நெய்
இவைகளைத் திருடித் தின்றகண்ணனின்
குறும்பு தாங்காமல் தான் யசோதை அவனை
இப்படி வஞ்சித்தாள் எனபது பிரசித்தமே.
(10)
பெருமா வுரலில் பிணிப்புண் டிருந்துஅங்கு
இருமா மருதம் இறுத்தஇப் பிள்ளை
குருமா மணிப்பூண் குலாவித் திகழும்
திருமார்பு இருந்தவா காணீரே சேயிழை யீர்வந்து காணீரே
பாசுர அனுபவம்
மிகப்பெரிய உரலோடு கட்டப்பட்டிருந்தகண்ணன் ஒருசமயம் அதைத் தன்னுடைய
வலிமையால் இரண்டு பெரிய மருதமரங்களுக்கு
நடுவில் இழுத்துச்சென்றதால் மரங்கள்
முறிந்து நளகூபரன், மணிக்ரீவன் என்னும்
குபேரபுத்திரர்கள் சாப விமோசனம் பெற்றார்கள்.
கண்ணபிரானுடைய திருமார்பில்
திவ்யாபரணமாக விளங்கும் கௌஸ்துப
மணியைக் காண, சிறந்த அணிகலன்களை
உடைய பெண்களே! வாருங்கள்!
No comments:
Post a Comment
Please feel free to leave your comments. I would love to see them. Thanks.