முதற்பத்து மூன்றாம் திருமொழி



சாராம்சம்

கண்ணனே! தேவர்கள் பலரும் உனக்கு
கொடுப்பதற்காக பரிசுப் பொருட்களை கொண்டு
வந்து காத்து நிற்கிறார்கள்.நீ கண்ணுறங்கு
என்று கண்ணனை தொட்டிலில் இட்டு
யசோதை தாலாட்டுப் பாடும் அற்புதப்
பாசுரங்கள் தான் இவை பத்தும்.

(1)
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப்பொன் னால்செய்த
வண்ணச் சிறுத்தொட்டில்
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான்
மாணிக்குறளனே தாலேலோ!
வையமளந்தானேதாலேலோ!

பாசுர அனுபவம்

கண்ணனெம்பெருமானுக்கு சதுர்முகனான
பிரம்மா ஆசையோடு ஒரு மிகச்சிறந்த
தங்கத்தொட்டிலை ஸமர்ப்பிக்கிறான். அழகான
அத்தொட்டில் மாணிக்கங்களை வைத்தும்
நடு நடுவே வைரங்களைப்பதித்தும்
கட்டப்பட்டிருந்தது. திரிவிக்கிரம
அவதாரமெடுத்தவனே! நீ கண்ணுறங்கு,
உலங்கங்களை திருவடியால்
அளந்தவனே நீ கண்ணுறங்கு!

(2)
உடையார் கனமணியோடு ஒண்மா துளம்பூ
இடைவிரவிக் கோத்த எழில்தெழ்கி னோடு
விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்;
உடையாய் அழேல்அழேல் தாலேலோ!
உலகமளந்தானே தாலேலோ!

பாசுர அனுபவம்

ரிஷப வாகனத்தையுடையவனும், காபாலி*
என்ற பெயருடையவனும், அஷ்டைச்வர்யங்களை
உடையவனுமான** சிவன், பொன்மணிகளை
நடு நடுவே கலந்து கோக்கப்பட்ட இடுப்பில்
அணியக்கூடிய சரிகையும், மாதளம்பூக்கோவை
என்கிற அரைவட்டமும் கொடுத்தனுப்பியுள்ளான்.
கண்ணா ! அதைப்பெற்றுக்கொள். அழாதே,
அழாதே, கண்ணுறங்கு, உலங்கமளந்தவனே!
கண்ணுறங்கு. (* பிரம்மாவினுடைய ஐந்து
தலைகளில் ஒன்றை பறித்ததினால் சிவனுக்கு
காபாலி என்று பெயர். ** ஈசன் என்பதன்
ஒரு பொருள் அஷ்டைச்வர்யங்களை உடையவன்)

(3)
என்தம் பிரானார் எழில்திரு மார்வர்க்கு
சந்த மழகிய தாமரைத் தாளர்க்கு,
இந்திரன் தானும் எழிலுடைக் கிண்கிணி
தந்துஉவ னாய்நின்றான் தாலேலோ!
தாமரைக் கண்ணனே, தாலேலோ!

பாசுர அனுபவம்

தாமரையையொத்த திருவடிகளையுடையவனே,
அழகிய திருமார்பையுடையவனே, எம்முடைய
ஸ்வாமியே, உனக்கு தேவேந்திரன் அழகிய
கிலுகிலுப்பையை (கால்-சதங்கை என்றும்
பொருள் உண்டு) கொடுத்துவிட்டு அங்கு
தான் நிற்கிறான், கண்ணுறங்கு,
தாமரைக் கண்ணனே கண்ணுறங்கு.

(4)
சங்கின் வலம்புரியும் சேவடிக் கிண்கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத்தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ!
தேவகி சிங்கமே தாலேலோ!

பாசுர அனுபவம்

விரிந்து பரந்த அழகான தேவலோகத்திலுள்ள
தேவர்கள், கண்ணனுக்கு சிறந்த வலம்புரிச்
சங்கையும், உயர்ந்ததான திருவடிகளில்
அணிய சதங்கைகளும், அழகான கைகளுக்கும்,
தோள்களுக்கும் அணிவதற்கு வளையல்களும்,
இடுப்பில் கட்ட பொன்னாலான நாணான்கயிறும்,
பதக்கத்தையும் அனுப்பியுள்ளார்கள். சிவந்த
கண்களையுடையவனாயும், கருத்த மேகம் போல்
காட்சியளிப்பவனுமான கண்ணனே கண்ணுறங்கு!
தேவகியின் வயிற்றில் தோன்றிய
சிங்கக் குட்டியே கண்ணுறங்கு!

(5)
எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுஉவ னாய்நின்றான் தாலேலோ!
தூமணி வண்ணனே தாலேலோ!

பாசுர அனுபவம்

பஞ்சாயுதங்களின் சின்னங்கள் பொருந்திய முத்து
மாலை ஒன்றை கண்ணனின் அழகான திரு
மார்பிற்கு உகந்தவை என்றெண்ணி அப்பழுக்கு
இல்லாத குபேரன் உனக்கு சமர்ப்பித்துவிட்டு
கை கூப்பி நிற்கின்றான்! கண்ணுறங்கு,
தூய நீல மணி போன்றவனே கண்ணுறங்கு!

(6)
ஓதக் கடலின் ஒளிமுத்தி னாரமும்
சாதிப் பவளமும்சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ!
சுந்தரத் தோளனே தாலேலோ!

பாசுர அனுபவம்

அலை மோதும் சமுத்திரத்திலிருந்து எடுக்கப்
பட்டதும் , ஒளிபடர்ந்த முத்துக்களால் கோக்கப்
பட்டதுமான மாலையும், நல்ல ஜாதிப்
பவளத்தாலான அழகான கை, தோள்
வளயல்களையும், விலை மதிப்பில்லாதவை
இவை எனக்கருதி வருணன் உனக்கு
அனுப்பியிருக்கிறான், மிக்க பிரகாசமுடைய
திருமுடியையுடைய கண்ணனே கண்ணுறங்கு,
அழகிய தோள்களையுடைய கண்ணனே கண்ணுறங்கு!

(7)
கானார் நறுந்துழாய் கைசெய்த கண்ணியும்
வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும்
தேனார் மலர்மேல் திருமங்கை போத்தந்தாள்
கோனே! அழேல்அழேல் தாலேலோ!
குடந்தைக் கிடந்தானே தாலேலோ!

பாசுர அனுபவம்

தேன் நிறைந்த சிவப்புத்தாமரையில் உரைபவளான
பெரிய பிராட்டி, காட்டில் உற்பத்தியான மணமுள்ள
துளசியால் தொடுத்த மாலையும், சுவர்க்க
லோகத்தில் பசுமையாகவும் சோலையாகவும்
தழைத்துக் கிடந்த கல்பக வ்ருக்ஷத்தின் பூக்களால்
தொடுத்த நெற்றியில் அணிவதற்கு மாலையும்
கொடுத்தனுப்பியிருக்கிறாள். இளவரசே ! கண்ணா,
அழாதே, அழாதே, கண்ணுறங்கு, திருக்குடந்தையில்
சயனத்திருப்பவனே கண்ணுறங்கு!

(8)
கச்சொடு பொற்சுரிகை காம்பு கனகவளை
உச்சி மணிச்சுட்டி ஒண்தாள் நிரைப்பொற்பூ
அச்சுத னுக்கென்று அவனியாள் போத்தந்தாள்
நச்சு முலையுண்டாய் தாலேலோ!
நாராயணா அழேல் தாலேலோ!!

பாசுர அனுபவம்

பொன்னாலான வளையல்களையும்,நெற்றியில்
அணிய உயர்ந்த கற்களாலான நெற்றிச்
சுட்டியையும், காம்புகளை உடைத்த பூவடிவிலுள்ள
தங்கத்திலான ஆபரணங்களையும், பூமிப்
பிராட்டியானவள் கண்ணனுக்கு கொடுக்குமாறு
அனுப்பியுள்ளாள். பூதனையின் முலையிலிருந்த
விஷப்பாலை உண்ட கண்ணனே, கண்ணுறங்கு,
நாராயணா! அழாமல் கண்ணுறங்கு !

(9)
மெய்திமிரும் நானப் பொடியோடு மஞ்சளும்
செய்ய தடங்கண்ணுக்குஅஞ்சனமும் சிந்துரமும்
வெய்ய கலைப்பாகி கொண்டு உவளாய்நின்றாள்
அய்யா அழேல்அழேல் தாலேலோ!
அரங்கத் தணையானே தாலேலோ!!

பாசுர அனுபவம்

திருமேனியில் பூசுவதற்க்காக வாசனை மற்றும்
மஞ்சள் பொடிகளையும், சிவந்து அகந்திருந்த
கண்களுக்கு மையையும், நெற்றிக்கு இட
சிந்தூரத்தையும் கொண்டுவந்து கண்ணனுக்கு
அளிப்பதற்காக அதோ நிற்க்கிறாள்
ஆண்மானை வாகனமாகக் கொண்ட- துர்காதேவி.
பெருமானே, அழாதே, அழாதே, கண்ணுறங்கு,
ஸ்ரீரங்கத்தில் பாம்பைப்படுக்கையாக
உடையவனே, கண்ணுறங்கு!

(10)
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலையுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சிதா லாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர்புதுவைப் பட்டன்சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர்தானே.

பாசுர அனுபவம்

வஞ்சகமே வடிவாக வந்த பூதனையின் விஷமேறிய
முலைப்பாலை அமுது செய்தவனும் , மை போன்ற
நிறத்தை உடையவனுமான கண்ணனை ,
தாலாட்டிப் பாடிய இந்த வரிகளை,
வேதமோதுவோர் செழித்தோங்கிய ஸ்ரீவில்லி
புத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார் அருளிச்
செய்திருக்கிறார். இப்பாசுரங்களை
குறையில்லாமல் ஓத வல்லவர்களுக்கு
ஒரு துன்பமும் இல்லையாம்.





No comments:

Post a Comment

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.