சாராம்சம்
திருவாய்பாடியில் நந்தகோபருடைய அழகியதிருமாளிகையில் கேசவன் என்ற திருநாமத்துடன்
கண்ணனாக திருவவதரித்தபோது கோகுலவாசிகள்
அளவில்லா உத்ஸாகத்தை அடைந்தார்கள். இந்த
பாசுரம் முதலாக, கண்ணன் பிறந்த
சந்தோஷத்தை எப்படியெல்லாம் ஆயர்பாடியர்கள்
கொண்டாடினார்கள் என்பதை மிக
ஆச்சர்யமாக சித்தரிக்கிறார் ஆழ்வார்.
(1)
வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்தளறாயிற்றே.
பாசுர அனுபவம்
திருக்கோட்டியூரில் எழுந்தருளியிருக்கும்எம்பெருமான் கண்ணன் திருவவதரித்தபோது
கோகுலவாசிகள் எண்ணையையும், மஞ்சள்
பொடியையும் ஒருவர்மேல் ஒருவர் தூவி
சந்தோஷப்பட்டார்கள். இதனால் ஸ்ரீ நந்தகோபருடைய
திருமாளிகையின் முற்றமே சேறாகி காட்சியளித்தது.
(குறிப்பு: கண்ணபிரான் வடமதுரையில் கம்ஸனுடைய
சிறைக்கூடத்திலே பிறந்திருக்க, நந்தகோபருடைய
திருமாளிகையில் பிறந்ததாகச் சொன்னது -
கம்ஸனிடமிருந்து தப்பி கோகுலத்தில் பிரவேசித்த
பின்னர்தான் இவன் பிறந்ததாக ஆழ்வார்
நினைத்திருக்கிறார் என்று பெரியோர்கள் வ்யாக்யானம்)
(2)
ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.
பாசுர அனுபவம்
கண்ணன் பிறந்த செய்தியைக் கேட்டவுடன் திருவாய்பாடியில்உள்ளவர்கள் பலர் தலை கால் புரியாமல் அங்குமிங்குமாக
ஓடினார்கள், ஓடும்போது சிலர் கீழே விழுந்தெழுந்தார்கள்.
"எங்கே எங்கள் கண்ணன்" என்று ஆரவாரம் செய்தார்கள்,
சிலர் ஆனந்தத்துடன் பாடினார்கள், சிலரோ வாத்தியங்கள்
முழங்க மேளம் கொட்ட அதற்கு ஏற்றாற்போல் கூத்தாடினார்கள்.
(3)
பேணிச் சீருடைப் பிள்ளை பிறந்தினில்
காணத் தாம்புகு வார்புக்குப் போதுவார்
ஆணொப் பார்இவன் நேரில்லை காண்திரு
வோணத் தானுல காளுமென் பார்களே.
பாசுர அனுபவம்
கம்சனை போன்ற துஷ்டர்களிடமிருந்து காத்துவந்தகண்ணனை அவ்வூர் ஆயர் குலத்து பெருமக்கள்
அவ்வப்போது அன்போடு பார்ப்பதும் வருவதுமாக
இருந்தார்கள். அவர்களில் சிலர் இவனுக்கு நிகர் வேறு
ஒருவன் இல்லை என்பார்கள். இவன் திருவோண
திருநக்ஷத்திரத்தில் பிறந்திருப்பதால் எல்லா
உலகங்களையும் ஆளக்கூடிய திறன் படைத்தவன் என்பார் சிலர்.
(4)
உறியை முற்றத்து உருட்டிநின் றாடுவார்
நறுநெய் பால்தயிர் நன்றாகத் தூவுவார்
செறிமென் கூந்தல் அவிழத் திளைத்துஎங்கும்
அறிவ ழிந்தனர் ஆய்ப்பாடி யாயரே.
பாசுர அனுபவம்
வெண்ணை, பால் தயிர் வைத்திருந்த மண் பானைகுடங்களை உருட்டி விடுவார்கள். மணம் கொண்ட
நெய், பால், தயிர் இவைகளை நிறைய தானமாக
எல்லோருக்கும் கொடுத்துவிடுவார்கள். அடர்த்தியாகவும்
மென்மையாகவும் உள்ள கூந்தலை அவிழ்த்துவிட்டபடியே
தன்னுடைய அறிவையும் சுயநினைவையும்
இழந்ததுபோல் திரிந்தார்கள் ஆயர்பாடியர்கள்.
(5)
கொண்ட தாளுறி கோலக் கொடுமழு
தண்டி னர்பறி யோலைச் சயனத்தர்
விண்ட முல்லை யரும்பன்ன பல்லினர்
அண்டர் மிண்டிப் புகுந்துநெய் யாடினார்.
பாசுர அனுபவம்
இடையர்கள் அவர்களுடைய உடமைகளான உறி, மழுஎன்ற ஆயுதம், மாடு மேய்க்கிற கோல் ஆகியவைகளுடன்,
வெண்மை நிற பற்கள் தெரியும்படி சிரித்தவாறே
ஒருவருக்கொருவர் எண்ணை தேய்த்த உடம்புடன்
ஆலிங்கனம் செய்தும், ஆனந்தமாக ஆடியும்
பாடியும், ஸ்நானம் செய்தும் மகிழ்ந்தனர்.
(6)
கையும் காலும் நிமிர்த்துக் கடாரநீர்
பைய வாட்டிப் பசுஞ்சிறு மஞ்சளால்
ஐய நாவழித் தாளுக்குஅங் காந்திட
வையமேழும் கண்டாள் பிள்ளை வாயுளே.
பாசுர அனுபவம்
ஒரு சமயம் யசோதை கண்ணனை குளிப்பாட்டும் போது,அச்சிசுவின் பிஞ்சு கைகளையும் கால்களையும் நீட்டி
மடக்கி காய்ச்சின மஞ்சள் தீர்த்தத்தால் ஸ்நானம்
செய்து கொண்டிருக்கையில், மெல்லிய நாக்கை
வழிக்கும் சமயம், அவன் திருவாயினுள் ஏழு
உலங்கங்களையும் காண்கிறாள்.
(7)
வாயுள் வையகம் கண்ட மடநல்லார்
ஆயர் புத்திர னல்லன் அருந்தெய்வம்
பாய சீருடைப் பண்புடைப் பாலகன்
மாய னென்று மகிழ்ந்தனர் மாதரே.
பாசுர அனுபவம்
யசோதையுடன் கூட இருந்த பேதை பெண்டிதர்களும்கண்ணன் திருவாயினுள் எல்லா உலகங்களையும் கண்டு
களித்தனர். அவர்கள் வெகு ஆச்சர்யத்துடன்
ஒருவருக்கொருவர் "இவன் சாதாரண இடைச்சிறுவன்
இல்லை, இவன் காணற்கறிய தெய்வம், பெரும் கீர்த்தியும்,
கல்யாண குணங்களும் உடைய இச்சிறுவன்
மகத்தான மாய சக்தி படைத்தவன்"
என்று கூறிக்கொண்டு மகிழ்ந்தார்கள்.
(8)
பத்து நாளும் கடந்த இரண்டாநாள்
எத்தி சையும் சயமரம் கோடித்து
மத்த மாமலை தாங்கிய மைந்தனை
உத்தா னம்செய்து உகந்தனர் ஆயரே.
பாசுர அனுபவம்
குழந்தை பிறந்த பன்னிரண்டாம் நாள் எங்கும் ஜெயதோரணங்கள் கட்டி சிசுவிற்கு ஸ்ரீ கிருஷ்ணன் என்ற
நாமகரணம் சூட்டி மகிழ்ந்தார்கள் ஆயர்பாடியர்.
ஸ்ரீ கிருஷ்ணனை கையில் எடுத்து வைத்துக் கொண்டு
ஆனந்தித்தார்கள். மதம் பிடித்த யானைகள் நிரம்பிய
கோவர்த்தன மலையை தன் சிறு கையாலேயே
தூக்கிப்பிடித்து ஆயர்பாடி ஜனங்களையும், பசுக்களையும்
இந்திரனுடைய கொடுமையிலிருந்து காப்பாற்றிய
கண்ணபிரானின் பராக்ரமத்தைச் சொல்லி மகிழ்ந்தனர்.
(9)
கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்
எடுத்துக் கொள்ளில் மருங்கை யிறுத்திடும்
ஒடுக்கிப் புல்கில் உதரத்தே பாய்ந்திடும்
மிடுக்கி லாமையால் நான்மெலிந் தேன்நங்காய்.
பாசுர அனுபவம்
கண்ணன் ஒரு சிறு குழந்தை போல் தோன்றினாலும் அவன்செய்யும் சேஶ்டிதங்களோ அவன் ஒரு அசாதாராணமானவன்
என்று யசோதைக்கும் மற்றும் அங்குள்ள பெண்டிதர்களுக்கும்
புரிய ஆரம்பிக்கிறது. குழந்தையை தொட்டிலில் விட்டால்,
தொட்டில் உடைய தன் இளம் கால்களால் உதைக்கிறான்.
சரி, தொட்டில் வேண்டாம் என்று இடுப்பில்
வைத்துகொள்ளும்போது இடுப்பை வளைத்து நெருக்குகிறான்,
கை கால்களை ஒடுக்கி மார்பில் அணைத்தாலோ வயிற்றில்
வேகமாக பாய்கிறான். இந்த விநோதமான விளையாட்டுக்களை
தாங்கமுடியாமல் தன் உடம்பே இளைத்து விட்டது என்று
யசோதை சக தோழிகளிடம் கூறுகிறாள்.
(குறிப்பு: இதற்கு மற்றொரு அர்த்தமாக, இச்சேஶ்டிதங்களால்
குழந்தையான கண்ணனுக்கு ஶ்ரமமேற்பட்டு அவன்
இளைத்துவிட்டான் என்று யசோதை கவலைப்படுகிறாள்
என்பதாக சில விமர்சகர்களின் கருத்து.)
(10)
செந்நெ லார்வயல் சூழ்திருக் கோட்டியூர்
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை
மின்னு நூல்விட்டு சித்தன் விரித்தஇப்
பன்னு பாடல்வல் லார்க்குஇல்லை பாவமே.
பாசுர அனுபவம்
திருவாய்ப்பாடியில் திருவவதரித்த கண்ணன்தான், செந் நெல்தானியங்கள் நிரம்பியும்,வயல்களால் சூழப்பட்டதுமான,
திருக்கோட்டியூரில் ஸ்ரீமந்நாராயணனாக பரிபூர்ணனாய்
எழுந்தருளியிருக்கிறான். பூணூலை அணிந்த விஷ்ணுசித்தன்
(பெரியாழ்வார் ) அருளியதும், ஞானிகள் எப்பொழுதும்
அநுஸந்திக்க வல்லதும், நாரணன் கண்ணனாக அவதரித்த
விஷயத்தை விஸ்தரிப்பதுமான, இப்பத்து பாசுரங்களை
ஓதுபவர்களுக்கு பாவங்கள் அழிந்துபோகும் என்பதில் ஐய்யமில்லை.
Hare Krsna Dear Sir why the recording has been removed...please restore as its so useful Sir...Thank You
ReplyDeleteBrilliant efforts says om namo narayana-gopinath whatsapp 9818553575
ReplyDelete