சாராம்சம்
திருக்கோட்டியூரில் சேவை ஸாதிக்கும் எம்பெருமானின்குணங்களையும்,அவ்வூரில் வாழும் அடியார்களின்
பாக்கியத்தையும் பெரியாழ்வார் கொண்டாடுகிறார்.
அதே சமயம், பகவானைத் துதிக்காமல் வாழ்ந்துவரும்
மனிதர்களை கடுமையாகச் சாடுகிறார்.
(1)
நாவகாரியம் சொல்லிலாதவர் நாடொறும் விருந்தோம்புவார்
தேவகாரியம் செய்து வேதம் பயின்று வாழ் திருக்கோட்டியூர்
மூவர் காரியமுந்திருத்தும் முதல்வனைச் சிந்தியாத அப்
பாவகாரிகளைப் படைத்தவன் எங்ஙனம் படைத்தாங்கொலோ.
பாசுர அனுபவம்
நாவினால் கெட்டவைகளைப் பேசாமலும், தினமும்பிறர்க்கு விருந்திட்டும் தெய்வீக கைங்கர்யங்களில்
தங்களை ஈடுபடுத்தியும், வேதமோதியும் பக்தர்கள்
வாழுமிடமான திருக்கோட்டியூரில் எம்பெருமான்
சேவை சாதித்துக்கொண்டிருக்க, எல்லோர்க்கும்
முதன்மையானவனும், மூன்று தேவர்களின்*
வேலைகளச் சரி பார்ப்பவனுமான அவனை
நினைக்காத சிலப் பாவிகளை பிரமன்
படைத்தன் நோக்கமென்னவோ?
*பிரமன், ருத்ரன், இந்திரன்
(2)
குற்றமின்றிக் குணம் பெருக்கிக் குருக்களக்கனு கூலராய்
செற்றமொன்றுமிலாத வண்கையினார்கள்வாழ் திருக்கோட்டியூர்
துற்றியேழுலகுண்ட தூமணி வண்ணன் தன்னைத் தொழாதவர்
பெற்றதாயர் வயிற்றினைப் பெருநோய் செய்வான்பிறந்தார்களே.
பாசுர அனுபவம்
தவரிழைக்காமலும், நல்ல பண்புடனும், பெரியோர்களுக்குஉதவி செய்தும், பகைமையுணர்வு இல்லாமலும், தாராள
குணத்துடனும் பக்தர்கள் வாழும் திருக்கோட்டியூரில்
எம்பெருமான் சேவை சாதித்துக்கொண்டிருக்க, நல்ல
ரத்தினத்தைப் போன்றவனும், ஏழுலகங்களை, சோற்றை
விழுங்குவது போல், உண்டவனுமான அவனை
வணங்காதவர்கள், அவர்களைப் பெற்ற தாயின் வயிற்றை
கொடிய பிரசவ வேதனைக்கும், கஷ்டத்திற்கும்
ஆளாக்கினார்களே ஒழிய, அவர்கள் பிறந்ததால்
ஒரு பிரயோஜனமுமில்லை.
(3)
வண்ணநல் மணியும் மரகதமும் அழுத்தி நிழலெழும்
திண்ணைசூழ் திருக் கோட்டியூர்த்திருமாலவன்திரு நாமங்கள்
எண்ணக்கண்டவிரல்களால் இறைப்பொழுதும்எண்ணகிலாதுபோய்
உண்ணக்கண்டதம் ஊத்தைவாய்க்குக் கவளம்உந்து கின்றார்களே.
பாசுர அனுபவம்
அழகிய ரத்தினமும், மரகதமும் சேர்த்து அலங்கரிக்கப்பெற்று வண்ணமயமாய் ஒளிவீசும் வீட்டுத் திண்ணைகள்
இருக்கும் திருக்கோட்டியூரில்,எம்பெருமான் சேவை
சாதித்துக்கொண்டிருக்க, ஸ்ரீயப்பதியான அவன்
திருநாமங்களை கைவிரல்களைக் கொண்டு எண்ணி
அவன் புகழை ஒரு நொடியாவது போற்றாமல், அந்த
விரல்களால் சோற்றை அள்ளி தங்கள் அழுக்கு
வாய்களில் திணித்து உட் கொள்வதையே
பிரதானமாக எண்ணுகிறார்களே!
(4)
உரகமெல்லணையான்கையில் உறைசங்கம்போல்மடவன்னங்கள்
நிரைகணம் பரந் தேறும் செங்கம லவயல் திருக்கோட்டியூர்
நரகநாசனை நாவிற் கொண்டழை யாதமானிட சாதியர்
பருகுநீரும் உடுக்குங் கூறையும் பாவம்செய்தன தாங்கொலோ
பாசுர அனுபவம்
பாம்பை மெலிதான படுக்கையாகக் கொண்டவனின் கையில்பிடித்திருக்கும் ( வெண்மையான ) சங்கை ஒத்த, அழகான
அன்ன பட்சிகள் கூட்டமாகத் திரண்டு வந்து பரவிப் படர்ந்த
செந்தாமரைப் பூக்கள் மேலமரும் திருக்கோட்டியூரில் சேவை
சாதிப்பவனும், மனிதர்களை நரகம் செல்லாமல் தடுத்துக்
காப்பவனுமான எம்பெருமானை துதிக்காதவர்கள் பருகும்
நீரும், உடுத்தும் ஆடையும் என்ன பாவம் செய்ததோ?
(5)
ஆமையின் முதுகத் திடைக் குதி கொண்டு தூமலர் சாடிப்போய்
தீமைசெய்து இள வாளைகள் விளையாடு நீர்த் திருக்கோட்டியூர்
நேமி சேர்தடங் கையினானை நினைப்பிலாவலி நெஞ்சுடை
பூமிபாரங்களுண்ணும் சோற்றினைவாங்கிப்புல்லைத் திணிமினே.
பாசுர அனுபவம்
ஆமையினுடைய முதுகில் குதித்தும், தூய தாமரை மலர்களைஉரசிக் கொண்டும் விஷமத்தோடு நீரில் விளையாடும் குட்டி
வாளை மீன்கள் இருக்கும் திருக்கோட்டியூரில்,திருச்சக்கரமேந்திய
பெரிய கையோடு சேவை சாதிக்கும் எம்பெருமானை ஒருபோதும்
நினைக்காத கல் நெஞ்சம் படைத்த பூமிக்கு பாரமாயிருப்பவர்கள்
உண்ணும் சோற்றை பரித்து விட்டு, அதற்கு பதிலாக
புல்லை அவர்கள் வாயில் திணியுங்கள்!
(6)
பூதமைந் தொடு வேள்வியைந்துபுலன்களைந்து பொறிகளால்
ஏதமொன்றுமிலாதவண் கையினார்கள்வாழ் திருக்கோட்டியூர்
நாதனை நர சிங்கனை நவின் றேத்துவார்க ளுழக்கிய
பாததூளி படுதலால் இவ் வுலகம் பாக்கியம் செய்ததே.
பாசுர அனுபவம்
ஐந்து பூதங்களோடு* கூட, ஐந்து யஜ்ஞங்கள்**, ஐம்புலன்கள்", ஐந்து இந்திரியங்கள்"" இவைகளால் குற்றம்
ஏதும் இழைக்காமல் வாழும் தாராள குணம் படைத்த
பக்தர்கள், திருக்கோட்டியூரில் சேவை சாதிக்கும் தலைவனை,
நரசிம்மனை எப்பொழுதும் துதித்துப் போற்றுவதால், அவர்களின்
பாத தூசி பட்டு இந்த உலகம் பெரும் பாக்கியம் செய்ததாகிறது.
*நிலம், நீர், தீ, காற்று, ஆகாசம் **ப்ரம்ம, தேவ, பித்ரு, பூத, மனுஷ்ய
"பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல்
""கண், செவி, வாய், மூக்கு, உடல்(சருமம்)
"பார்த்தல், கேட்டல், சுவைத்தல், மணத்தல், உணர்தல்
""கண், செவி, வாய், மூக்கு, உடல்(சருமம்)
(7)
குருந்தமொன்றொசித் தானொடும்சென்று கூடியாடி விழாச்செய்து
திருந்து நான்மறையோர் இராப்பகல்ஏத்தி வாழ்திருக்கோட்டியூர்
கருந்தடமுகில்வண்ணனைக்கடைக் கொண்டுகைதொழும்பத்தர்கள்
இருந்தவூரி லிருக்கும் மானிடர் எத்தவங்கள் செய் தார்கொலோ
பாசுர அனுபவம்
குருந்த மரமொன்றை முறித்த கண்ணபிரானை, கூட்டமாகவந்து பாடி ஆடி, இரவு பகலாக விழாவெடுத்துக் கொண்டாடி,
நான்கு வேதத்தையும் பிழையறப் பாராயணம்
செய்துகொண்டு, திருக்கோட்டியூரில் சேவை சாதிக்கும்
பெரிய கரு மேகம் போலிருக்கும் அவனை உறுதியாக
நம்பி சேவிக்கும் பக்தர்கள் வாழும் அந்த ஊரில்
இருக்கும் மனிதர்கள் என்ன தவம் செய்தார்களோ!
(8)
நளிர்ந்த சீலன் நயாசல னபிமான துங்கனை நாடொறும்
தெளிந்த செல்வனைச்சேவகங்கொண்ட செங்கண்மால்திருக்கோட்டியூர்
குளிர்ந் துறைகின்ற கோவிந்தன் குணம் பாடுவாருள்ள நாட்டினுள்
விளைந்த் தானியமு மிராக்கர் மீது கொள்ளகிலார்களே.
பாசுர அனுபவம்
நல்ல குணமும், ஒழுக்கமும், தினமும் பெருமானிடம் பக்திசெய்து உயர்ந்தவரும், சஞ்சலமற்றவருமான செல்வ நம்பியை
சேவகனாகக் கொண்ட செந்தாமரையையொத்த திருக்கண்
களையுடைய எம்பெருமான் கோவிந்தன் சாந்தமாகச் சேவை
சாதிக்கும் திருக்கோட்டியூரில் அவனுடைய குணங்களைப்
போற்றிப் பாடுபவர்கள் இருப்பதால் தான் அந்த ஊரில்
விளையும் தான்யங்களை ராக்ஷஸர்கள் திருடுவதில்லை.
(9)
கொம்பினார்பொழில் வாய்குயிலினம்கோவிந்தன்குணம்பாடுசீர்
செம்பொனார் மதிள் சூழ்செழுங்கழ னியுடைத் திருக் கோட்டியூர்
நம்பனை நர சிங்கனை நவின் றேத்துவார்களைக் கண்டக்கால்
எம்பிரான்தன சின்னங்கள் இவ ரிவரென்று ஆசைகள் தீர்வனே.
பாசுர அனுபவம்
கிளைகள் நிறைந்த சோலைகளில் குயில் கூட்டங்கள்கோவிந்தனின் பெருமையைப் பாட, சிறந்த மதிள்களாலும்,
வயல்களாலும் சூழப்பட்டதுமான திருக்கோட்டியூரில்
நரசிம்மப் பெருமான் சேவை சாதித்து நிற்க, அவனை
ஆழ்ந்து அனுபவித்துப் போற்றுபவர்களைக் கண்டேனாகில்,
இவர் இவர்கள் எம்பெருமானின் அடையாளச் சின்னங்கள் என்று
வியந்து என்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வேன்!
(10)
காசின்வாய்க்கரம் விற்கிலும்கர வாதுமாற்றிலி சோறிட்டு
தேசவார்த்தைபடைக்கும்வண்கையினார்கள் வாழ்திருக் கோட்டியூர்
கேசவாபுரு டோத்தமாகிளர் சோதியாய் குறளாஎன்று
பேசுவார் அடியார்கள் எந்தம்மை விற்கவும் பெறுவார்களே.
பாசுர அனுபவம்
ஒரு காசுக்கு ஒரு கைப்பிடி நெல் விற்கும் போதும்,விருந்தினர்களுக்கு உணவு தந்து, நன்றாக உபசரித்து,
பிரதி உபகாரத்தையும் எதிர்பாராமல், தம்மிடம் உள்ளவற்றை
மறைக்காமல்,தாராள மனம் படைத்தவர்கள் வாழும்
திருக்கோட்டியூரில், கேசவா, புருஷோத்தமா, ஜ்யோதி
ஸ்வரூபா, குட்டை வடிவுடையவனே (வாமனனாக
அவதரித்தபோது) என்று பேசும் அடியார்கள் என்னை
விற்கவும் உரிமை பெற்றவர்களாகிறார்கள்.
(11)
சீதநீர்புடை சூழ் செழுங்கழ னியுடைத் திருக் கோட்டியூர்
ஆதியானடி யாரையும் அடி மையின்றித் திரி வாரையும்
கோதில்பட்டர்பிரான் குளிர்புதுவைமன் விட்டுசித்தன்சொல்
ஏதமின்றி உ ரைப்பவர் இருடீகேசனுக் காளரே.
பாசுர அனுபவம்
குளிர்ந்த நீரால் சூழப்பெற்றதும், வளமான வயல்களைஉடையதுமான திருக்கோட்டியூரில் உறையும்
எம்பெருமானுக்கு அடிமை செய்யும் அடியார்களையும்,
அப்படியில்லாமல் வேறு பாதையில் திரிபவர்களையும்
குறித்து, குளிர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவன், குறை
ஏதுமில்லாத பெரியாழ்வார் இயற்றிய இப்பாசுரங்களை
பிழையில்லாமல், பொருள் தெரிந்து ஓதுபவர்கள்
ஹ்ருஷீகேசனுக்கு அடிமை செய்யும் பாக்கியம் பெறுவர்கள்.
No comments:
Post a Comment
Please feel free to leave your comments. I would love to see them. Thanks.