நான்காம் பத்து ஐந்தாம் திருமொழி



சாராம்சம்

எல்லாவற்றிற்கும் காரணமான எம்பெருமானிடம்
பக்தி செலுத்தாமல் வாழும் மனிதர்கள் இறக்கும்
தருவாயில் அடையும் துன்பங்களையும், யமனால்
எப்படியெல்லாம் தண்டனை பெறப் போகிறார்கள்
என்பதையும், மிக பயங்கரமாகச் சித்தரிக்கிறார்
பெரியாழ்வார். அவரது உள்நோக்கம் நம்மை நல்
வழி நடத்தி, கடைசியில் பெருமானின்
திருவடியை அடையச் செய்வதேயாகும்.

(1)
ஆசைவாய்ச் சென்ற சிந்தையர்ஆகி* அன்னை
அத்தன் என் புத்திரர்பூமி* வாசவார் குழலாள்
என்றுமயங்கி* மாளும்எல்லைக் கண்வாய் திறவாதே*
கேசவா! புருடோத்தமா! என்றும்* கேழல்ஆகிய
கேடிலீ! என்றும்* பேசுவார் அவர் எய்தும் பெருமை*
பேசுவான் புகில் நம்பரம்அன்றே

பாசுர அனுபவம்

இறக்கும் தருவாயில், சம்சாரத்தில் ஆழ்ந்து
போய்விட்ட காரணத்தால், ஆசையோடு கூடிய
எண்ணங்களையுடையவராய், தாயே, தந்தையே,
என் புதல்வனே, ஐயோ என்னுடைய நிலமே,
என்னுடைய நறுமணமுடைய கூந்தலைக் கொண்ட
மனைவியே, என்று அழைக்க நினைத்து, மூர்ச்சித்து
கண், வாய் திறக்க முடியாமல் இறப்பதற்குள், கேசவா!
புருஷோத்தமா, குற்றமிலாப் பன்றியாய் அவதரித்தவனே!
என்று பெருமானின் நாமங்களைப் பாடிப்
போற்றுபவர்களின் பெருமையைப்
பேசுவதற்கு நம்மால் இயலாது!

(2)
சீயினால் செறிந்துஏறிய புண்மேல்* செற்றல்ஏறிக்
குழம்புஇருந்து* எங்கும்- ஈயினால் அரிப்புஉண்டு
மயங்கி* எல்லைவாய்ச்சென்று சேர்வதன்முன்னம்*
வாயினால் நமோநாரணா என்று* மத்தகத்திடைக்
கைகளைக்கூப்பிப்* போயினால் பின்னை இத்திசைக்கு
என்றும்* பிணைக்கொடுக்கிலும் போகஒட்டாரே.

பாசுர அனுபவம்

உடம்பில் பரவலாக இருக்கும் புண்களில் சீ கோர்த்து,
ஈ எரும்புகள் அப்புண்களின் மேலேறி முட்டையிட்டு,
அதனிருந்தும் புழுக்கள் வெளிக்கிளம்பி, அரிப்பெடுத்து,
மயக்கமடைந்து மரணம் ஏற்படுவதற்கு முன்னால்,
தலைக்கு மேல் கைகளைக் கூப்பி, வாயினால் "நமோ
நாராயணா" என்று வணங்குபவர்கள்
பரமபதம் போய்ச் சேர்வர்கள்; அதன் பின்
இந்த பூலோகத்திற்கு வருவதில்லை, இது உறுதி!

(3)
சோர்வினால் பொருள் வைத்தது உண்டாகில்*
சொல்லு சொல்லு என்றுசுற்றும்இருந்து* ஆர்வினவிலும்
வாய் திறவாதே* அந்தகாலம் அடைவதன்முன்னம்*
மார்வம்என்பதுஓர் கோயில் அமைத்து* மாதவன்என்னும்
தெய்வத்தைநாட்டி* ஆர்வம் என்பதுஓர் பூஇடவல்லார்க்கு*
அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.

பாசுர அனுபவம்

ஒருவன் இறக்கும் தருணத்தில், உறவினர்கள் அவனைச்
சூழ்ந்து கொண்டு, "ஏதேனும் பொருளை எங்களுக்குத்
தெரியாமல் வைத்திருக்கிறாயா? அவ்விடத்தை எங்களுக்குச்
சொல்லு, சொல்லு" என்று கேட்க, உணர்வற்றவனாய்,
அவன் ஏதும் பேசாமலிருக்கும் அந்த கடைசி நாட்கள்
வருமுன், மனமாகிற ஹ்ருதயத்தில் ஒரு கோயிலமைத்து,
மாதவனை அதில் தெய்வமாக அமர்த்தி, அன்பெனும்
பூவினால் அர்ச்சிப்பவர்கள் யம தூதர்களின்
தண்டனையிலிருந்து தப்பலாம்.

(4)
மேலெழுந்ததோர் வாயுக்கிளர்ந்து* மேல்மிடற்றினை
உள்எழவாங்கிக்* காலும் கையும் விதிர்விதிர்த்துஏறிக்*
கண்உறக்கமது ஆவதன்முன்னம்*மூலம்ஆகிய
ஒற்றைஎழுத்தை* மூன்றுமாத்திரை உள்ளெழவாங்கி*
வேலைவண்ணனை மேவுதிர்ஆகில்*
விண்ணகத்தினில் மேவலும்மாமே.

பாசுர அனுபவம்

இறக்கும் தருவாயில், மூச்சு காற்று மேலே கிளம்பியும்,
நெஞ்சு பட படத்து வீழ்ந்தும்,கை கால்கள் நடுக்கம் கண்டும்,
கண்கள் சொருகி மூடும் முன்னமே, ஓம் என்ற ஒற்றை
எழுத்து மந்திரத்தை மூன்று நொடிகள் மூச்சை உள்ளே
இழுத்துக்கொண்டே உச்சரித்து, கடல் வண்ணனான
எம்பெருமானை த்யானித்தால், உயர்ந்த
பரமபதத்தை அடையலாம்.

(5)
மடிவழி வந்து நீர்புலன்சோர* வாயில்அட்டிய
கஞ்சியும் மீண்டே* கடைவழிவாரக் கண்டம்அடைப்பக்*
கண்உறக்கமது ஆவதன்முன்னம்*தொடைவழி உம்மை
நாய்கள்கவரா* சூலத்தால் உம்மைப் பாய்வதும்செய்யார்*
இடைவழியில் நீர் கூறையும் இழவீர்*
இருடீகேசன் என்று ஏத்தவல்லீரே.

பாசுர அனுபவம்

மரண காலம் நெருங்கும் சமயம், தன்னையறியாமல்
மூத்திரம் போவதும், வாயில் விட்ட கஞ்சி தொண்டையில்
அடைபட்டு கடைவாய் வழியே வழிந்து போவதும்,
இப்படியாக உடல் அவஸ்தையுடன் கண் இருண்டு உயிர்
பிரியும் முன்னால், ஹ்ருஷீகேசனை போற்றிப்
புகழ்ந்திருந்தால், யமனின் நாய்கள் உம் துடையைக்
கவ்வாது, யம தூதர்கள் உம்மை சூலத்தால் குத்த
மாட்டார்கள், உம்முடைய ஆடைகளும்
உம்மை விட்டு நீங்காதிருக்கும்.

(6)
அங்கம்விட்டுஅவை ஐந்தும் அகற்றி* ஆவி மூக்கினிற்
சோதித்த பின்னை* சங்கம்விட்டுஅவர் கையைமறித்துப்*
பையவே தலை சாய்ப்பதன்முன்னம்* வங்கம்விட்டு
உலவும் கடற்பள்ளி மாயனை* மதுசூதனை மார்பில்-
தங்க விட்டு வைத்து* ஆவதுஓர் கருமம்
சாதிப்பார்க்கு* என்றும் சாதிக்கலாமே.

பாசுர அனுபவம்

ஒருவரின் உடலை விட்டு ஐந்து பிராணன்களும்* விலக,
அவரைச் சேர்ந்தவர் மூக்கில் கையை வைத்து உயிர்
பிரிந்ததை உறுதி செய்தவாறே, அவர் இறந்ததை
வெளிப்படையாகக் கூறாமல் கையை மட்டும் விரித்துக்
காட்டி, மெதுவாக ஒரு மூலையில் சென்று, தலையைத்
தொங்க விட்டுக் கொண்டு அழும் முன்னமையே,
கப்பல்கள் உலாவும் கடலில் சயனித்திருக்கும்
ஆச்சர்யமான மதுசூதனனை மனதில் ஆசையுடன்
தங்க வைத்து ப்ரபத்தி பண்ணுபவர்கள், இடைவிடாது
அவனை அனுபவிக்கும் பெரும் பாக்கியம் பெறுவர்கள்.
*பிராண, அபான, வியான, உதான, ஸமான

(7)
தென்னவன் தமர் செப்பம்இலாதார்* சேவதக்குவார்
போலப்புகுந்து* பின்னும் வன்கயிற்றால் பிணித்துஎற்றிப்*
பின்முன்ஆக இழுப்பதன் முன்னம்* இன்னவன் இனையான்
என்றுசொல்லி* எண்ணி உள்ளத்து இருள்அறநோக்கி*
மன்னவன் மதுசூதனன் என்பார்* வானகத்துமன்றாடிகள்தாமே.

பாசுர அனுபவம்

யம தூதர்கள், தயையோ, கருணையோ கொஞ்சம்
கூட இல்லாமல் வந்து, எருதுகளை அடக்கி ஓட்டுவதுபோல்,
கனமான கயிற்றால் கட்டி, முன்பும், பின்புமாக இழுத்துக்
கொண்டு யமலோகம் செல்வதற்கு முன்னமையே,
எம்பெருமானின் திவ்ய நாமங்களையும், லீலைகளையும்
நினைத்து நினைத்து மனதின் இருட்டைப் போக்கி,
மன்னன் மதுசூதனன் என்று போற்றுபவர்கள் வைகுந்தம்
சென்று நித்யசூரிகளின் கைங்கர்யங்களைத் தங்களுக்கு
கொடுத்தருளுமாறு பகவானிடம் மன்றாடுவர்கள்.

(8)
கூடிக்கூடி உற்றார்கள் இருந்து* குற்றம் நிற்க நற்றங்கள்
பறைந்து* பாடிப்பாடி ஓர் பாடையில்இட்டு* நரிப்படைக்கு
ஒரு பாகுடம்போலே*கோடி மூடிஎடுப்பதன் முன்னம்*
கௌத்துவம்உடைக் கோவிந்தனோடு* கூடிஆடிய
உள்ளத்தர்ஆனால்* குறிப்பிடம் கடந்து உய்யலும்ஆமே.

பாசுர அனுபவம்

ஒருவன் இறந்தபின் உறவினர்கள் ஒன்று கூடி,
அவனுடைய குற்றத்தைப் பாராமல், செய்த
நல்லவைகளைப் பேசியும், பாடியும்,
ஆடியும், பூத உடலை ஓரு பாடையில் வைத்து,
அதைத் துணியால் மூடி, நரிகளுக்கு உணவு படைக்கக்
கொண்டுபோவது போல், போகும் முன்னமையே,
கௌஸ்துப மணியை அணிந்த கோவிந்தனைப்
பாடியாடி மகிழும் மனத்தையுடையவர்கள்,
தண்டனைக்கென்றே ஒதுக்கப்பட்ட இடமான
யமலோகம் செல்லாமல் தப்பிப் பிழைக்கலாம்.

(9)
வாயொரு பக்கம் வாங்கிவலிப்ப* வார்ந்த நீர்க்குழிக்
கண்கள் மிழற்ற* தாய்ஒருபக்கம் தந்தைஒருபக்கம்*
தாரமும் ஒருபக்கம் அலற்ற*தீஒருபக்கம் சேர்வதன்
முன்னம்* செங்கண் மாலொடும் சிக்கெனச் சுற்ற-
மாய்* ஒருபக்கம் நிற்கவல்லார்க்கு*
அரவதண்டத்தில் உய்யலும்ஆமே.

பாசுர அனுபவம்

மரணம் சம்பவிக்கும் சமயத்தில், வாயொரு பக்கம்
இழுத்து வலிக்க, கண்கள் இடுங்கியும், விழிகள்
பிதுங்கியும் பயங்கரமாகத் தோற்றமளிக்க,
தாயொரு பக்கம், தந்தையொரு பக்கம், மனைவி
ஒரு பக்கம் ஓலமிட, அந்த உடல் நெருப்பில் சேர்க்கப்படும்
முன்னமையே, சிவந்த கண்களையுடைய எம்பெருமான்
ஒருவனையே உறவாய் ஏற்று வாழ்வார்களேயானால்,
யம தண்டனையிலிருந்து தப்பிப் பிழைக்கலாம்.

(10)
செத்துப்போவதோர் போதுநினைந்து* செய்யும்
செய்கைகள் தேவபிரான்மேல்* பத்தராய்இறந்தார்
பெறும்பேற்றைப்* பாழித்தோள் விட்டுசித்தன்
புத்தூர்க்கோன்* சித்தம் நன்குஒருங்கித் திருமாலைச்*
செய்த மாலை இவைபத்தும் வல்லார்*
சித்தம் நன்குஒருங்கித் திருமால் மேல்*
சென்ற சிந்தை பெறுவர் தாமே

பாசுர அனுபவம்

எம்பெருமானின் பக்தர்கள் அல்லாதவர்கள் செத்துப்
போகும் சமயத்தில் நடக்கும் கொடிய சம்பவங்களை
நினைவு கூர்ந்தும், அப்படி இல்லாமல் தேவ பிரான் மேல்
பேரன்பு கொண்டவர்கள் அடையும் பெரும் பாக்கியத்தையும்,
தோள் பலம் கொண்ட ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவன்,
திருமாலிடம் ஆழ்ந்த பக்தியுடைய பெரியாழ்வார்
அருளிச் செய்த இந்த பத்து பாசுரங்களை ஓத வல்லவர்கள்,
திருமாலிடம் மனதை நிலை நிறுத்தும்
பெரும் பேறு பெறுவர்கள்.


No comments:

Post a Comment

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.