இரண்டாம் பத்து எட்டாம் திருமொழி



சாராம்சம்

கண்ணன் மிக அழகாக வசீகரித் தோற்றத்துடன்
இருப்பதால், அவனுக்கு கண் திருஷ்டி பட்டுவிடப்
போகிறதே என்கிற பயம் யசோதைக்கு
உண்டாகிறது. யசோதை அவனை, திருஷ்டி
கழிப்பதற்காக, அழைக்கிறாள். கண்ணனோ
தெருவில் விளையாடுகிறான். அந்தி மாலை
நேரம் வந்து விட்டது! வாருங்கள்
பார்க்கலாம், என்ன நடக்கிறதென்று!
(1)
இந்திரனோடு பிரமன் ஈசன்
இமையவர் எல்லாம்
மந்திர மாமலர் கொண்டு மறைந்து
வராய் வந்து நின்றார்
சந்திரன் மாளிகை சேரும் சதுரர்கள்
வெள்ளறை நின்றாய்!
அந்தியம் போது இதுவாகும்
அழகனே! காப்பிட வாராய்.

பாசுர அனுபவம்

இந்திரனோடு பிரமனும், சிவனும் மற்றும்
தேவர்கள் பலரும் அர்ச்சனைக்குறிய மலர்
மாலைகளோடு வந்து மறைந்து நிற்கின்றார்கள்.
பண்டிதர்கள் நிறைந்தும், நிலவைத்
தொடுவதுபோல் மாளிகைகள் அமைந்த
திருவெள்ளறை திவ்ய தேசத்தில் நின்று
சேவை சாதிக்கும் அழகிய பெருமானே!
இது அந்தி மாலை நேரம். உனக்கு, ஆபத்து
வராமலிருக்க, கண் திருஷ்டி
கழிக்கத் தோதுவாய் வரவேணும்.
(2)
கன்றுகள் இல்லம் புகுந்து
கதறுகின்ற பசுவெல்லாம்
நின்றொழிந்தேன் உன்னைக் கூவி
நேசமேல் ஒன்றும் இலாதாய் !
மன்றில் நில்லேல் அந்திப் போது மதிள்
திருவெள்ளறை நின்றாய்!
நன்று கண்டாய் என்தன் சொல்லு நான்
உன்னைக் காப்பிட வாராய்.

பாசுர அனுபவம்

பசுக்களை பால் கறக்காமல், நான் உன்னை
அழைத்துக் கொண்டிருக்கையில்,
பசுக்களும், கன்றுகளும் வீடு திரும்பி, அவதியால்
கத்துகின்றன. என்மேல் ஆசையற்றவனே!
வெளியில் நில்லாதே! இருட்டுகிற நேரம் இது.
உயர்ந்த கோட்டைச் சுவர்கள் உள்ள
திருவெள்ளறையில் அருள் பாலிப்பவனே! நான்
சொல்வதை நன்றாகக் கேள். உனக்கு ஆபத்து
வராமலிருக்க கண் திருஷ்டி
கழிக்கத் தோதுவாய் வரவேணும்.
(3)
செப்போது மென்முலையார்கள் சிறுசோறும்
இல்லும் சிதைத்திட்டு
அப்போது நான் உரப்பப் போய்
அடிசிலுமுண்டிலை ஆள்வாய்!
முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள்
வெள்ளறை நின்றாய்!
இப்போது நான் ஒன்றும் செய்யேன்
எம்பிரான்! காப்பிட வாராய்.

பாசுர அனுபவம்

மிருதுவான மார்பகங்களும்,செம்பொன்
மேனியையும் உடைய சிறுமிகள் வீடு கட்டி
விளையாடும்போது, அந்த மணல் வீடுகளை நீ
காலால் எட்டி உதைத்து உடைக்க,நான் உன்னை
கோபிக்கையில் நீ உண்ண வர மறுத்தாய்!
தேவர்களும், முனிவர்களும் உன்னை தினமும்
மும்முறை சேவிக்கிறார்கள். திருவெள்ளறையில்
உறைபவனே! இப்பொழுது நான் உன்னை
ஒன்றும் செய்ய மாட்டேன்! என்னை ஆள்பவனே!
உனக்கு ஆபத்து வராமலிருக்க கண் திருஷ்டி
கழிக்கத் தோதுவாய் வரவேணும்.
(4)
கண்ணில் மணல் கொடு தூவிக் காலினால்
பாய்ந்தனை என்றென்று
எண்ணரும் பிள்ளைகள் வந்திட்டு
இவரால் முறைப்படுகின்றார்
கண்ணனே! வெள்ளறை நின்றாய்!
கண்டாரோடே தீமை செய்வாய்!
வண்ணமே வேலைய தொப்பாய்!
வள்ளலே! காப்பிட வாராய்

பாசுர அனுபவம்

பிள்ளைகளின் கண்களில் மணலைத் தூவியும்,
அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறாய் எனக்
கேட்டபோது, அவர்களை காலால் உதைத்தும்
தீமை செய்கிறாய். எல்லோரும் உன்னைப்பற்றி
பலவிதமாக என்னிடம் குறை கூறுகின்றனர்.
கடல் நிறக் கண்ணனே! திருவெள்ளறையில்
அருள் புரிபவனே! உனக்கு ஆபத்து வராமலிருக்க
கண் திருஷ்டி கழிக்கத் தோதுவாய் வரவேணும்.
(5)
பல்லாயிரவர் இவ்வூரிற் பிள்ளைகள்
தீமைகள் செய்வார்
எல்லாம் உன்மேல் அன்றிப் போகாது
எம்பிரான்! நீ இங்கே வாராய்
நல்லார்கள் வெள்ளறை நின்றாய்!
ஞானச் சுடரே! உன் மேனி
சொல்லார வாழ்த்தி நின்றேந்திச்
சொப்படக் காப்பிட வாராய்.

பாசுர அனுபவம்

பல்லாயிரம் பிள்ளைகள் உள்ள இவ்வூரில் துஷ்ட
சேஷ்டிதங்கள் செய்யும் பிள்ளைகள் நிறைய
இருக்கும் பட்சத்தில், உன்மேல் மட்டும் எல்லாப்
பழியையும் போடுவது சரியல்ல. என் தலைவனே!
இங்கு வா ! நல்லோர்கள் வாழும் திருவெள்ளறையில்
நின்று அருள் பாலிப்பவனே! உன் மேனி அழகை
சொற்களால் வாழ்த்த இயலாமல் வாழ்த்துகிறேன்!
உனக்கு ஆபத்து வராமலிருக்க கண் திருஷ்டி
கழிக்கத் தோதுவாய் வரவேணும்.
(6)
கஞ்சன் கருக்கொண்டு நின் மேல்
கருநிறச் செம்மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர்
வார்த்தையும் உண்டு
மஞ்சு தவழ் மணி மாட மதிள்
திருவெள்ளறை நின்றாய்!
அஞ்சுவன் நீ அங்கு நிற்க
அழகனே! காப்பிட வாராய்.

பாசுர அனுபவம்

கம்சன் உன்னிடம் கோபம் கொண்டவனாய்
உன்னைக் கொல்லத் திட்டமிட்டு, சிகப்பு
சடையுடனும் கருப்பு நிறத்துடனுமிருந்த அரக்கி
பூதனையை ஏவினான் என்று பேசப்படுகிறது.
எனக்கு பயமாக இருக்கிறது. நீ அங்கு நிற்காதே.
மேகங்களைத் தொடும் மதிள் மாளிகைகள்
நிறைந்த திருவெள்ளறையில் அருள் சாதிக்கும்
பெருமானே! அழகானவனே! உனக்கு ஆபத்து
வராமலிருக்க கண் திருஷ்டி
கழிக்கத் தோதுவாய் வரவேணும்.
(7)
கள்ளச் சகடும் மருதும்
கலக்கழிய உதை செய்த
பிள்ளை அரசே! நீ பேயைப் பிடித்து
முலை உண்ட பின்னை
உள்ளவாறு ஒன்றும் அறியேன் ஒளியுடை
வெள்ளறை நின்றாய்!
பள்ளிகொள் போது இதுவாகும்
பரமனே! காப்பிட வாராய்.

பாசுர அனுபவம்

சக்ரவடிவில் வந்த சகடாசுரனையும், மரங்கள்
வடிவிலிருந்த யமளார்ஜுன ராக்ஷஸர்களையும்
காலால் உதைத்துக் கொன்ற என் இளவரசனே!
பூதனை என்னும் பேயின் முலையைப் பற்றி
பாலை அருந்தின பின் உன்னை புரிந்துகொள்ள
என்னால் இயலவில்லை! திருவெள்ளறையில்
ஒளியுடன் பிரகாசிக்கிறாய்! தூங்கும் நேரம்
வந்துவிட்டது, உயர்ந்தோனே! உனக்கு ஆபத்து
வராமலிருக்க கண் திருஷ்டி
கழிக்கத் தோதுவாய் வரவேணும்.
(8)
இன்பமதனை உயர்த்தாய்!
இமையவர்க்கு என்றும் அரியாய்!
கும்பக் களிறட்ட கோவே! கொடுங்கஞ்சன்
நெஞ்சினிற் கூற்றே!
செம்பொன் மதிள் வெள்ளறையாய்!
செல்வத்தினால் வளர் பிள்ளாய்!
கம்பக் கபாலி காண் அங்குக்
கடிதோடிக் காப்பிட வாராய்

பாசுர அனுபவம்

உயர்ந்த இன்பத்தை எனக்களிப்பவனே!
தேவர்களுக்கு என்றும் இனிமையானவனே!
அன்று மதம்கொண்ட யானையின் கொம்பை
அறுத்துக் கொன்றும், கொடிய நெஞ்சம் படைத்த
கம்சனுக்கு மரண பயமும் உண்டாக்கியவனே!
பொன்நிற மதிள் மாடங்கள் நிறைந்த
வெள்ளறையில் நின்றவனே! செல்வம் கொழித்து
வளரும் பிள்ளையே! கையில் கபாலத்துடன்
அங்கே யாரோ ஒருவன் வருகிறான் பார்!
ஓடி வந்துவிடு ! உனக்கு ஆபத்து வராமலிருக்க
கண் திருஷ்டி கழிக்கத் தோதுவாய் வரவேணும்.
(9)
இருக்கொடு நீர் சங்கில் கொண்டிட்டு
எழில் மறையோர் வந்து நின்றார்
தருக்கேல் நம்பி! சந்தி நின்று தாய்
சொல்லுக் கொள்ளாய் சில நாள்
திருக்காப்பு நான் உன்னைச் சாத்தத்
தேசுடை வெள்ளறை நின்றாய்!
உருக்காட்டும் அந்தி விளக்கு இன்றொளி
கொள்ள ஏற்றுகேன் வாராய்.

பாசுர அனுபவம்

வேதம் படித்தவர்கள் சங்கில் நீர் பிடித்து உனக்கு
மங்களாசாசனம் பாட நிற்கிறார்கள். நான்
சொல்வதை சில நாள் நீ கேட்கவேணும்.
தெருச்சந்தியில் நிற்காதே. ஒளி பொருந்தியவனாய்
வெள்ளறையில் அருள் பாலிக்கிறாய். உன்
திருமுகத்திற்கு விளக்கு காட்டி கண்
திருஷ்டி கழிக்கத் தோதுவாய் வரவேணும்.
(10)
போதமர் செல்வக்கொழுந்து
புணர் திருவெள்ளறையானை
மாதர்க்குயர்ந்த அசோதை மகன்
தன்னைக் காப்பிட்ட மாற்றம்
வேதப் பயன் கொள்ள வல்ல
விட்டுசித்தன் சொன்ன மாலை
பாதப் பயன் கொள்ள வல்ல
பத்தருள்ளார் வினை போமே.

பாசுர அனுபவம்

மாதர்களில் சிறந்தவளும், செல்வத்தின்
இருப்பிடமுமான யசோதை பிராட்டி தன்
மகன் கண்ணனை, திருஷ்டி கழித்துக்
கொள்ளும்படி, அழைக்கும் காட்சியை,
வேதத்தில் நிபுணரான விஷ்ணு சித்தன்,
பக்தர்கள் பயன் பெற, பாசுரமாகத் தந்துள்ளார்.
இதை ஓதுபவர்களின் வினைகள் அகலும்.

4 comments:

  1. அற்புதமான பதிவுகள் தன்யோஸ்மி சுவாமி

    ReplyDelete
  2. Excellentthe service you're doing is really great. God bless you

    ReplyDelete

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.