சாராம்சம்
எம்பெருமான் கண்ணனுக்கு பலவித பூக்கள்கொண்டு அலங்கரிக்க ஆசை கொண்டவளாய்
யசோதை கண்ணனை அழைக்கும் காட்சியை
பெரியாழ்வார் மிக அற்புதமாக பாசுர
மாலையாக, கண்ணனின் லீலைகளையும்
சேர்த்து, வழங்கியுள்ளார்!
(1)
ஆனிரை மேய்க்கநீ போதி அருமருந்
தாவ தறியாய் கானக மெல்லாம் திரிந்து
உன் கரிய திருமேனி வாட பானையில் பாலைப்
பருகிப் பற்றாதா ரெல்லாம் சிரிப்ப தேனிலினிய
பிரானே செண்பகப் பூச்சூட்ட வாராய்.
பாசுர அனுபவம்
பசுக்களை மேய்க்கும் பொருட்டு, உன்னுடையஅழகிய கரிய திருமேனி வாடும்படி
காட்டிலெல்லாம் அலைந்து திரிகிறாய்.
பிறவி என்னும் நோயை போக்கும் ஒரு அற்புத
மருந்து நீ என்பதைக்கூட நீ அறியாய்.
உன்னைப் பகைப்பவர்கள் பரிகசிக்க,
பானையிலுள்ள பச்சைப் பாலை அருந்துகிறாய்.
தேனைக் காட்டிலும் இனிக்கும் பெருமானே,
செண்பகபூவை சூட்டிக்கொள்ள வருவாய்!
(2)
கருவுடை மேகங்கள் கண்டால் உன்னைக்
கண்டாலொக்கும் கண்கள் உருவுடை யாய்
உலகேழும் உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடையாள் மணவாளா திருவரங்கத்தே
கிடந்தாய் மருவி மணம் கமழ்கின்ற
மல்லிகைப் பூச்சூட்ட வாராய் .
பாசுர அனுபவம்
உன்னுடைய திருமேனி பார்க்க எப்படிஇருக்கிறதென்றால், நீர்கொண்ட கருத்த
மேகத்திற்கு ஒப்பாகவுள்ளது! ஏழுலகமும்
உய்ய திருவவதரித்தவனே! சகல
ஐஸ்வர்யத்திற்கும் அதிபதியான மஹாலக்ஷ்மியின்
நாயகனே!ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவனே!
இடைவிடாது பரிமளம் வீசும் மல்லிகைப்பூவை
சூட்டிக்கொள்ள வருவாய்!
(3)
மச்சொடு மாளிகை யேறி மாதர்கள் தம்மிடம்
புக்கு கச்சொடு பட்டைக் கிழித்துக் காம்பு
துகிலவை கீறி நிச்சலும் தீமைகள் செய்வாய்
நீள்திரு வேங்கடத்து எந்தாய் பச்சைத் தமனகத்
தோடு பாதிரிப் பூச்சூட்ட வாராய்.
பாசுர அனுபவம்
பெண்கள் தங்கியிருக்கும் மாடங்களின் மேல் ஏறி,அவர்கள் அணிந்திருக்கும் பட்டாடைகளைக்
கிழித்தெறிந்து, தினம் தோறும் தீய செயல்களை
செய்து வருகிறாய்! உயர்ந்த திருமலையில் நின்று
சேவை சாதிக்கும் ஸ்வாமியே! பச்சை மருக்
கொழுந்தை பாதிரிப்பூவுடன்
சேர்த்து சூட்டிக்கொள்ள வருவாய்!
(4)
தெருவின்கண் நின்று இள வாய்ச்சி மார்களைத்
தீமைசெய்யாதே மருவும் தமனக மும்சீர் மாலை
மணம் கமழ்கின்ற புருவம் கருங்குழல் நெற்றி
பொலிந்த முகிற்கன்று போலே
உருவமழகிய நம்பீ உகந்திவை சூட்ட நீ வாராய்.
பாசுர அனுபவம்
தெருவிலே நின்றுகொண்டு இடையர் சிறுமிகளிடம்வம்பு பண்ணாதே! நேர்த்தியான புருவங்களிடையின்
அமைந்த நெற்றியில் படரும் கருங் கூந்தலை
உடையவனே! கரு மேகத்தின் கன்றைப் போன்ற
அழகிய உருவம் படைத்த சிறந்தோனே!
மருக்கொழுந்தும், தவனமும் சேர்த்துக்
கட்டின மாலைகள் நறுமணம் வீசுகின்றன!
இவற்றை விரும்பி நீ சூட்டிக்கொள்ள வரவேணும்!
(5)
புள்ளினை வாய் பிளந்திட்டாய் பொருகரி
யின்கொம் பொசித்தாய்
கள்ள வரக்கியை மூக்கொடு காவலனைத்
தலை கொண்டாய்
அள்ளி நீ வெண்ணெய் விழுங்க அஞ்சாது
அடியேன் அடித்தேன்
தெள்ளிய நீரி லெழுந்த செங்கழு நீர்
சூட்ட வாராய்
பாசுர அனுபவம்
கொக்கு வடிவத்தில் வந்த பகாசுரனை அவன்வாயைக் கிழித்துக் கொன்றும், யுத்தம் செய்யும்
பொருட்டு வந்த குவலயாபீடம் என்கிற
யானையின் தந்தத்தைப் பறித்துக் கொன்றும்,
அன்று ராமாவதாரத்தில் அரக்கி சூர்ப்பனகையின்
மூக்கையறுத்தும், அவளுக்கு பாதுகாப்பாயிருந்த
இராவணனின் தலையை துண்டித்தவனுமான நீ,
வெண்ணெயை அள்ளி தின்ற பொழுது, உன்
பெருமை தெரியாததால், பயமின்றி, உனக்கு பழி
வந்துவிடுமே என்றெண்ணி உன்னை
அடித்துவிட்டேன்! என்னை மன்னித்து, தெளிந்த
தண்ணீரில் உண்டான தாமரைப்பூவை
சூட்டிக்கொள்ள வருவாய்!
(6)
எருதுகளோடு பொருதி ஏதும்
உலோபாய்கான் நம்பி
கருதிய தீமைகள் செய்து கஞ்சனைக்
கால்கொடு பாய்ந்தாய்
தெருவின்கண் தீமைகள் செய்து
சிக்கென மல்லர்களோடு
பொருது வருகின்ற பொன்னே
புன்னைப் பூச்சூட்ட வாராய்.
பாசுர அனுபவம்
நப்பின்னையை மணப்பதற்காக ஏழுகாளைகளை அடக்கியும், உனக்கு தீமை
நினைப்பதைத் தவிர வேறொன்றிலும்
மனமில்லாதவனாயிருந்த கம்சனை காலினால்
பாய்ந்து சண்டையிட்டுக் கொன்றும்,
கம்சனரண்மனை போகும் வழியில், தெருவில்
பல தீமைகள் புரிந்தும், மல்யுத்தர்களான
சாணூரன், முஷ்டிகனை பலம் கொண்டழித்தும்,
பொன் போன்ற பெருமை வாய்ந்தவனே,
புன்னைப்பூ சூட்டிக்கொள்ள வருவாய்!
(7)
குடங்களெடுத்தேற விட்டுக்
கூத்தாட வல்லஎம்கோவே மடங்கொள்
மதிமுகத் தாரை மால்செய்யவல்ல என் மைந்தா
இடந்திட்டு இரணியன் நெஞ்சை இருபிளவாக
முன் கீண்டாய்
குடந்தைக் கிடந்தஎம்கோவே குருக்கத்திப்
பூச்சூட்ட வாராய்.
பாசுர அனுபவம்
குடங்களை கைகளால் பிடித்துத் தூக்கி மேலேஎறிந்து நடனமாடும் சாமர்த்தியம் படைத்த என்
மன்னனே! இளமை பொருந்திய சந்திரன்
போல் முக அழகுடைய பெண்களை வசீகரிக்கும்
என்னுடைய புதல்வனே! முன்பு நரஸிம்ம
அவதாரத்தில் ஹிரண்யகசிபு என்னும் ராக்ஷசனின்
மார்பை கைவிரல்களின் நகங்களை ஊன்றியே
இரண்டு பாகங்களாகக் கிழித்துப் பிளந்தவனே!
திருக்குடந்தை திவ்ய தேசத்தில் பள்ளி கொள்ளும்
என் தலைவனே! குருக்கத்திப் பூவை
சூட்டிக்கொள்ள வருவாய்!
(8)
சீமாலிகன வனோடு தோழமை
கொள்ளவும் வல்லாய்
சாமாறு அவனைநீ யெண்ணிச் சக்கரத்தால்
தலை கொண்டாய்
ஆமா றறியும் பிரானே அணியரங்
கத்தே கிடந்தாய்
ஏமாற்றம் என்னைத் தவிர்த்தாய் இருவாட்சிப்
பூச்சூட்ட வாராய்.
பாசுர அனுபவம்
உன் சூட்சும யுக்தியால் (ஸ்ரீ ) மாலிகனெனும்கர்வம் மிக்க தீயவனை தோழமை பூண்டு,
பிறகு அவன் தலையை உன் சக்ராயுதம் கொண்டு
வீழ்த்தியவனே! எல்லாவற்றையும் முன்கூட்டியே
அறிபவனே! அழகிய திருவரங்கத்தில் பள்ளி
கொண்டிருப்பவனே! என்னுடைய ஏமாற்றத்தைத்
தவிர்த்து இருவாட்சி மலர்களை
தரித்துக் கொள்ள வருவாய்!
(9)
அண்டத் தமரர்கள் சூழ
அத்தாணியுள் ளங்கிருந்தாய்
தொண்டர்கள் நெஞ்சி லுறைவாய்
தூமலராள் மணவாளா
உண்டிட்டு உலகினை யேழும் ஓராலிலையில்
துயில் கொண்டாய்
கண்டுநான் உன்னை யுகக்கக் கருமுகைப்
பூச்சூட்ட வாராய்.
பாசுர அனுபவம்
தேவர்கள் உன்னைச்சூழ அவர்கள் உன்னைஅருகில் சேவிக்கும்படி பரம பதத்தில்
அமர்ந்திருப்பவனே! அதற்கும் மேலாக உன்
பக்தர்களின் இருதயத்தில் குடிகொண்டவனே!
தூய மலரில் வீற்றிருப்பவளான லக்ஷ்மியின்
நாதனே! பிரளய காலத்தில் ஏழுலகத்தையும்
விழுங்கி ஒரு ஆலிலையில் யோக நித்திரையி
லாழ்ந்திருப்பவனே! நான் கண்டு களிக்குமாறு
இருவாட்சி மலர்களை சூட்டிக்கொள்ள வருவாய்!
(10)
செண்பகமல்லிகையோடு செங்கழு
நீர் இருவாட்சி
எண்பகர் பூவும் கொணர்ந்தேன் இன்று
இவை சூட்ட வாவென்று
மண்பகர் கொண்டானை ஆய்ச்சி மகிழ்ந்துரை
செய்த இம்மாலை
பண்பகர் வில்லிபுத்தூர்க்கோன் பட்டர்
பிரான் சொன்ன பத்தே.
பாசுர அனுபவம்
செண்பகம், மல்லிகை, செங்கழுநீர், இருவாட்சிமற்றும் பல மலர்களை கொண்டு வந்துள்ளேன்;
இவைகளை நீ பூச்சூட வர வேணும் என்று,
மகிழ்ச்சியுடன் யசோதை கண்ணனிடம்
உரையாடியதை, ஸ்ரீவில்லிபுத்தூர்
நிர்வாஹகரான பெரியாழ்வார் சுரம்கூட்டி
அருளிச்செய்துள்ளார். இப்பத்து
பாசுரமும் பெருமானுக்கு உகந்த ஒரு மாலையே!
பெரியாழ்வார் திருவடிப்போற்றி. மிகவும் அருமை. நன்றி
ReplyDelete