சாராம்சம்
கண்ணனுக்கு மாடு கன்றுகளை மேய்க்கஒரு நல்ல கோல் தேவைப்பட்டது போலும்!
யசோதை அங்கிருக்கும் காகத்திடம்
முறையிடுவதாக இப்பாடல்களை சித்தரித்திருக்கும்
பெரியாழ்வார், கூடவே எம்பெருமானின்
ராமாவதார பெருமைகளையும் சேர்த்து மிகவும்
ரசனையாக அள்ளித் தெளித்திருக்கிறார்!
வாருங்கள், ஆனந்தமாக பருகலாம்!
(1)
வேலிக்கோல் வெட்டி விளையாடு வில்லேற்றி
தாலிக் கொழுந்தைத் தடங்கழுத் திற்பூண்டு
பீலித் தழையைப் பிணைத்துப் பிறகிட்டு
காலிப்பின் போவாற்கு ஓர் கோல் கொண்டுவா
கடல்நிற வண்ணர்க்கு ஓர் கோல்கொண்டுவா
பாசுர அனுபவம்
வேலிச் செடியின் கிளையைக்கொண்டுவிளையாட்டாக செய்த வில்லும் அதில் பூட்டிய
அம்பையும் கையில் ஏந்தியவனாயும்,தனது
கழுத்தில் ஆமைத்தாலியை தொங்கவிட்டுக்
கொண்டும், மயில் தோகைகளை ஒன்று சேர
கூட்டி பின்புறம் சொருகிக்கொண்டும்,
பசுக்களின் பின் செல்லும் இக்கண்ணனுக்கு,
கடல் நிறத்தையொத்த திருமேனி படைத்தவனுக்கு,
ஒரு கோல் கொண்டு வா !
(2)
கொங்கும் குடந்தையும் கோட்டியூரும் பேரும்
எங்கும் திரிந்து விளையாடும் என்மகன்
சங்கம் பிடிக்கும் தடக்கைக்குத் தக்க நல்
அங்கமுடையதோர் கோல்கொண்டுவா .
அரக்கு வழித்ததோர் கோல்கொண்டுவா.
பாசுர அனுபவம்
நறுமணம் வீசும் திவ்யதேசமான குடந்தை,கோட்டியூர், திருப்பேர் என பல இடங்களில்
அலைந்தும், விளையாடியும் வரும் என் மகனின்
பாஞ்சஜன்யம் ஏந்தும் திருக்கைக்கு ஏத்த
அழகான வடிவம் கொண்ட தும் அரக்கு வண்ணம்
பூசப்பட்டதுமான ஒரு கோல்கொண்டுவா!
(3)
கருத்திட்டு எதிர் நின்ற கஞ்சனைக் கொன்றான்
பொறுத்திட்டு எதிர் வந்த புள்ளின் வாய் கீண்டான்
நெறித்த குழல்களை நீங்க முன் னோடி
சிறுக்கன்று மேய்பாற்க்கு ஓர் கோல்கொண்டுவா
தேவபிரானுக்கு ஓர் கோல்கொண்டுவா.
பாசுர அனுபவம்
கோபித்து வந்த கம்சனை மாய்த்தும் கொக்குவேடம் பூண்டு தன்னைக் கொல்ல வந்த பகாசுரனை
பொறுத்திருந்து வாயை கிழித்துக் கொன்றும்,
ஓடும்போது அடர்ந்த தன்னுடைய கூந்தல்கள்
இரண்டு பக்கமும் அசையும் அழகுடையவனுமான
கண்ணன், கன்றுகளுக்கு முன் ஓடிச்சென்று சிறு
கன்றுகளை மேய்க்கிறான்! காகமே! அவனுக்காக
ஒரு கோல் கொண்டுவா, தேவர்களின்
தலைவனுக்கு ஒரு கோல் கொண்டுவா!
(4)
ஒன்றே யுரைப்பான் ஒரு சொல்லே சொல்லுவான்
துன்று முடியான் துரியோதனன் பக்கல்
சென்று அங்கு பாரதம் கையெறிந்தானுக்கு
கன்றுகள் மேய்ப்பதோர் கோல்கொண்டுவா
கடல்நிற வண்ணர்க்கு ஓர் கோல்கொண்டுவா.
பாசுர அனுபவம்
பாண்டவர்குளுக்கு கடுகளவு நிலமும் தரமுடியாது, மற்றும் அவர்களுடன் சேர்ந்து வாழ
இயலாதென்று ஒரே சொல்லைக் கூறிக்கொண்டு
பிடிவாதமாக இருந்த, நவரத்தினங்கள்
பதித்த கிரீடம் அணிந்த, துரியோதனிடத்தில்,
பாண்டவர்களின் தூதனாய் சென்ற கண்ணன்,
இனி மஹாபாரத போரன்றி வேறு யுக்தியில்லை
என்பதை உறுதி செய்தனல்லவோ. காகமே!
அந்த எம்பெருமானுக்கு , கன்றுகளை மேய்க்க,
ஒரு கோல் கொண்டுவா. கடல் நிறத்தையொத்த
திருமேனி படைத்தவனுக்கு ஒரு கோல் கொண்டுவா!
(5)
சீரொன்று தூதாய்த் துரியோதனன் பக்கல்
ஊரொன்று வேண்டிப் பெறாத உரோடத்தால்
பாரொன்றிப் பாரதம் கைசெய்து பார்த்தற்குத்
தேரொன்றை யூர்ந்தாற்கு ஓர் கோல் கொண்டுவா
தேவபிரானுக்கு ஓர் கோல் கொண்டுவா.
பாசுர அனுபவம்
மஹாபாரத யுத்தத்திற்கு மூல காரணம்துரியோதனன். தர்மத்தை உத்தேசித்து ஒரு
ஊரையாவது பாண்டவர்களுக்கு கொடு என,
சிறந்த தூதனாய் சென்ற, கண்ணன் எடுத்துச்
சொல்லியும் கேளாத துரியோதனனிடம் மிகவும்
கோபித்தவனாய், அர்ஜுனனுக்கு தேரோட்டியாய்
துணை நின்று பாரதப் போரை துடங்கி வைத்தான்.
காகமே! ஒரு கோல் கொண்டுவா. தேவர்களின்
தலைவனுக்கு ஒரு கோல் கொண்டுவா!
(6)
ஆலத் திலையான் அரவி னணைமேலான்
நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான்
பாலப் பிராயத்தே பார்த்தர்க்கு அருள்செய்த
கோலப் பிரானுக்கு ஓர் கோல்கொண்டுவா
குடந்தைக் கிடந்தார்க்கு ஓர் கோல்கொண்டுவா.
பாசுர அனுபவம்
ஆலிலையில் அமர்ந்திருப்பவனும், பாம்பைபடுக்கையாகக் கொண்டவனும், நீல நிறக்
கடலில் வெகு காலம் யோக நித்திரையில்
ஆழ்ந்திருப்பவனும், சிறு வயதிலிருந்தே
அர்ஜுனனுக்கு அருள் புரிந்தவனும், அழகிய
வடிவத்துடனிருக்கும் இந்த எம்பெருமானுக்கு
ஓரு கோல்கொண்டுவா,காகமே! குடந்தை
திவ்ய தேசத்தில் உறைபவனுக்கு
ஒரு கோல்கொண்டுவா!
(7)
பொன்திகழ் சித்திரக்கூடப் பொறுப்பினில்
உற்ற வடிவில் ஒருகண்ணும் கொண்ட அக்
கற்றைக் குழலன் கடியன் விரைந்து உன்னை
மற்றைக் கண் கொள்ளாமே கோல்கொண்டுவா
மணிவண்ண நம்பிக்கு ஓர் கோல்கொண்டுவா.
பாசுர அனுபவம்
பொன் போன்று அழகாய் விளங்கும் சித்ரகூடமலைச்சாரலில், ராமாவதாரத்தில் ராமன் சீதையின்
மடியில் தலை வைத்துப் படுத்திருந்தபொழுது,
காகாசுரன் பிராட்டியின் வடிவை நோக்கியதால்
கோபமுற்ற ராமன், அசுரனின் ஒரு கண்ணை
பறித்தான். காகமே! அடர்ந்த கூந்தலை உடைய
கண்ணன் மிகவும் கொடூரமானவன்! உன் காக
வடிவை நோக்கியதும், பழைய நினைவில்,
சீற்றமடைந்து உன்னுடைய இன்னொரு
கண்ணையும் பறிக்காமலிருக்க,விரைந்து
ஒரு கோல் கொண்டுவா.நீல மணி போன்ற
நிறமுடையவனுக்கு ஒரு கோல் கொண்டுவா.
(8)
மின்னிடைச் சீதை பொருட்டா இலங்கையர்
மன்னன் மணிமுடி பத்தும் உடன்வீழ
தன்னிகரொன் றில்லாச்சிலைகால் வளைத்திட்ட
மின்னு முடியற்கு ஓர் கோல்கொண்டுவா
வேலை யடைத்தாற்கு ஓர் கோல்கொண்டுவா.
பாசுர அனுபவம்
சிறுத்த இடை கொண்ட சீதா பிராட்டியைராவணனிடமிருந்து மீட்க, மிகச்சிறப்பான வில்லின்
கால் வளைத்து, இலங்கை வாழ் மன்னன்
ராவணன் மீது அம்பெய்தி, ரத்தின கிரீடமணிந்த
அவனுடைய பத்து தலைகளையும் ஒருசேர
வீழ்த்திய அந்த ஒளி மகுடம் அணிந்தவனுக்கு
ஒரு கோல் கொண்டுவா. கடலில் பாலம்
அமைத்தவனுக்கு ஒரு கோல் கொண்டுவா!
(9)
தென்னிலங்கை மன்னன் சிரம்
தோள் துணி செய்து
மின்னிலங்கு பூண் விபீடண நம்பிக்கு
என்னிலங்கு நாமத்தளவும் அரசென்ற
மின்னிலங் காரற்கு ஓர் கோல்கொண்டுவா
வேங்கட வாணர்க்கு ஓர் கோல்கொண்டுவா.
பாசுர அனுபவம்
தெற்கு திக்கிலுள்ள இலங்கையின் அரசன்ராவணனின் தலை, புஜங்களை அம்பினால்
துண்டித்து, அதன் பின், ஒளிரும் ஆபரணங்கள்
பூண்ட விபீஷணாழ்வானுக்கு பேரும் புகழுடன்
அரசாள அருள் செய்து, மின்னல் போல்
பளிச்சென்ற மாலையை அணிந்தவனுக்கு ஒரு
கோல் கொண்டுவா. காகமே! திருவேங்கட
மலையில் உறைபவனுக்கு
ஒரு கோல் கொண்டுவா!
(10)
அக்காக்காய் நம்பிக்கு கோல்கொண்டுவாவென்று
மிக்கா ளுரைத்த சொல் வில்லிபுத் தூர்ப்பட்டன்
ஒக்க உரைத்த தமிழ் பத்தும் வல்லவர்
மக்களைப் பெற்று மகிழ்வர் இவ் வையத்தே.
பாசுர அனுபவம்
எம்பெருமானுக்கு கோல் கொண்டுவா என்றுஒரு காகத்தை யசோதை அழைப்பதை,
வில்லிபுத்தூரில் அவதரித்த பெரியாழ்வார்
பத்து தமிழ்ப் பாசுரங்களாக சித்தரித்துள்ளார்.
இப் பாசுரங்களைப் பாடுபவர்கள் நன் மக்களை
பெற்று இவ்வுலகத்தில் மகிழ்ந்திருப்பார்கள்!
No comments:
Post a Comment
Please feel free to leave your comments. I would love to see them. Thanks.