சாராம்சம்
பெரியாழ்வார் தம்மையே இரண்டு பெண் தோழிகளாகபாவித்து, ஒருத்தி கண்ணனின் குணங்களையும்,
மறறொருத்தி ராமனின் குணங்களையும் போற்றி
பரவசமடைந்து குதித்து விளையாடுவது போல்
(பாடிப் பற) தமது அபார கற்பனைத் திறத்தோடு
இப்பாசுரங்களை அமைத்துளளார். கண்ணனை பற்றி
ஒரு பாசுரமும், ராமனைப் பற்றி ஒரு பாசுரமுமாக
மாறி மாறி ரசனையோடு அனுபவிக்கிறார்!
(1)
என்னாதன் தேவிக்கு அன்றின்பப்பூவீயாதாள்
தன்னாதன் காணவே தண்பூமரத்தினை
வன்னாதப் புள்ளால் வலியப் பறித்திட்ட
என்னாதன் வன்மையைப் பாடிப்பற
எம்பிரான் வன்மையைப் பாடிப்பற.
பாசுர அனுபவம்
முன்பொரு சமயம் என்னுடைய தலைவனின்(கண்ணன்) தேவி சத்யபாமை விரும்பிய
கற்பகப்பூவை, கொட மறுத்தாள் இந்திராணி;
அவள் கணவன் இந்திரன் பார்த்துக்
கொண்டிருக்கையிலேயே, வேத வடிவாம்
கருடனோடு கூட, பலத்துடன் குளிர்ந்த பூவுடைய
அம்மரத்தையே பிடுங்கி தேவியின் முற்றத்தில்
நட்டான். என் ஸ்வாமியின் பேராற்றலைப் பாடி
விளையாடு! எம்பெருமானின் பராக்கிரமத்தைப்
போற்றி விளையாடு!
(2)
என் வில்வலிகண்டு போவென்றெதிர் வந்தான்
தன் வில்லினோடும் தவத்தையெதிர் வாங்கி
முன் வில் வலித்துழுது பெண்ணுயிருண்டான்
தன் வில்லின் வன்மையைப் பாடிப்பற
தாசரதி தன்மையைப் பாடிப்பற
பாசுர அனுபவம்
என் வில்லினுடைய வலிமையைப் பார்க்கிறாயா?என்று அறை கூவலிட்டு வந்த பரசுராமரின் வில்லை
வளைத்தும், அவருடைய தபஸ்ஸைக் கவர்ந்தும்
அருளினான்! இதற்க்கு முன் தாடகை என்ற மூதாட்டி
-அரக்கியை வில்லை வளைத்து அம்பை எய்து
கொன்றான். ராமனுடைய வில்லின் ஆற்றலைப்
பாடி விளையாடு!தசரத மைந்தனின்
இயல்பைப் போற்றி விளையாடு!
(3)
உருப்பிணி நங்கையைத் தேரேற்றிக் கொண்டு
விருப்புற்றங்கேக விரைந்தெதிர் வந்து
செருக்குற்றான் வீரஞ்சிதைய தலையைச்
சிரைத்திட்டான் வன்மையைப் பாடிப்பற
தேவகி சிங்கத்தைப் பாடிப்பற
பாசுர அனுபவம்
சிறந்த பெண்மணி ருக்மிணியை ஆசையுடன்தேரில் ஏற்றி கண்ணன் செல்கையில், அச்சமயம்
வேகமாக எதிர்த்து வந்த தம்பி ருக்மனின் ஆணவத்தை
அடக்க அவன் சிகையை வெட்டி பங்கப்படுத்தினான்.
அந்த கண்ணனின் ஆற்றலைப் பாடி விளையாடு!
தேவகியின் சிங்கக் குட்டியைப் போற்றி விளையாடு!
(4)
மாற்றுத்தாய் சென்று வனம் போகே யென்றிட
ஈற்றுத் தாய்பின் தொடர்ந்து எம்பிரானென்றழ
கூற்றுத் தாய் சொல்லக் கொடிய வனம் போன
சீற்றமில்லாதானைப் பாடிப்பற
சீதை மணாளனைப் பாடிப்பற
பாசுர அனுபவம்
மாற்றாந்தாயோ (கைகேயி) 'நீ காட்டுக்குப் போ'என்றாள்; பின் வந்த பெற்ற தாயோ (கௌஸல்யா)
'அப்பனே, உன்னை எப்படிப் பிரிவேன்' என்றழுதாள்;
ராமனோ, யமனையொத்த கைகேயி-யின் சொல்லைக்
கேட்டான்; கொடுமையான கானகம் சென்றான்;
கோபமற்றவனைப் பாடி விளையாடு! சீதையின்
கணவனைப் போற்றி விளையாடு!
(5)
பஞ்சவர் தூதனாய்ப் பாரதங் கைசெய்து
நஞ்சுமிழ் நாகங்கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டருள் செய்த
அஞ்சன வண்ணனைப் பாடிப்பற
அசோதை தன் சிங்கத்தைப் பாடிப்பற
பாசுர அனுபவம்
ஐந்து பேர் கொண்ட பாண்டவர்களுக்கு தூதனாகச்சென்று; மஹா பாரதப் போரை களமிறங்கி நடத்தி,
விஷத்தைக் கக்கி வசித்து வந்த காளியன் என்ற
கொடிய பாம்பின் குட்டையில் புகுந்து அவன் தலையின்
மேலேறி அவன் பயப்படும்படி நடனமாடி பிறகு
அவனுக்கும் அருள்செய்த;அந்த மை நிறமுடையவனைப்
பாடி விளையாடு! யசோதையின்
சிங்கத்தைப் போற்றி விளையாடு!
(6)
முடியொன்றி மூவுலகங்களுமாண்டு உன்
அடியேற்கருளென்று அவன் பின் தொடர்ந்த
படியில் குணத்துப் பரத நம்பிக்கு அன்று
அடி நிலை யீந்தானைப் பாடிப்பற
அயோத்தியர் கோமானைப் பாடிப்பற
பாசுர அனுபவம்
அரச பட்டம் சூட்டிக் கொண்டு, மூவுலகமும் ஆண்டுஉன் அடியவனான எனக்கு அருள் புரிய வேண்டுமென
வேண்டி ராமனைத் தொடர்ந்து சென்ற குணத்தின்
பொக்கிஷம்-பரதனுக்கு அன்று தன்னுடைய திருப்
பாதுகைகளை கொடுத்தவனைப் பாடி விளையாடு!
அயோத்தியர்களின் மன்னனைப் போற்றி விளையாடு!
(7)
காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீண்முடியைந்திலும் நின்று நடஞ்செய்து
மீளவவனுக்கு அருள்செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப்பற
தூமணி வண்ணனைப் பாடிப்பற
பாசுர அனுபவம்
காளியன் என்ற கொடிய பாம்பு வசித்து வந்தகுளத்தில், அக்குளம் கலங்கும்படி குதித்து,
அவனுடைய நீண்ட ஐந்து தலைகளின் மேல் நின்று
நடனமாடி, அவன் உடல் இளைத்து உயிர் ஊசலாட;
மனம் திருந்தியவனாய், சரணம் என்றதும் அவனுக்கு
அருள் புரிந்து காத்த தந்திரக்காரனின்
புஜ பலத்தைப் பாடி விளையாடு!
நீல மணி நிறத்தோனைப் போற்றி விளையாடு!
(8)
தார்க் கிளந்தம்பிக்கு அரசீந்து தண்டகம்
நூற்றவள் சொற்கொண்டு போகி துடங்கிடை
சூர்ப்பணகாவைச் செவியோடு மூக்கு அவள்
ஆர்க்கவரிந்தானைப் பாடிப்பற
அயோத்திக் கரசனைப் பாடிப்பற
பாசுர அனுபவம்
கைகேயியினுடைய தந்திர சொல்லுக்கு கட்டுப்பட்டுதன்னுடைய, இளம் பருவத்திலிருந்த, தம்பி பரதனுக்கு
ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு கடும் காட்டிற்க்கு போன
ராமன், அவ்விடத்தில் சீதா பிராட்டியைக் கொல்லும்
நோக்கத்துடனிருந்த அரக்கி சூர்ப்பணகாவின்
காதையும், மூக்கையும், அவள் அலரும்படி
அருத்தானைப் பாடி விளையாடு!
அயோத்தி மன்னனைப் போற்றி விளையாடு!
(9)
மாயச்சகட முதைத்து மரு திறுத்து
ஆயர்களோடு போய் ஆநிரை காத்து அணி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயர்களேற்றினைப் பாடிப்பற
ஆநிரை மேய்த்தானைப் பாடிப்பற
பாசுர அனுபவம்
மாயாவியாய் ஒரு சிறு தேர் வடிவத்தில் வந்தசகடாசுரனை தன் காலால் உதைத்து அழித்து, இரு
மருது மரங்களின் நடுவே உரலை இழுத்துச்சென்று
அவைகளை வீழ்த்தி, இடையர்களுடன் காட்டிற்க்குப்
போய் பசுக்களை ரக்ஷித்து,அழகான மூங்கில்
குழலை ஊதி மதி மயங்கச் செய்பவனாய் விளங்கிய
இடையர்களின் சிங்கத்தைப் பாடி விளையாடு!
பசுக்களை மேய்த்தவனைப் போற்றி விளையாடு!
(10)
காரார் கடலை அடைத்திட்டி லங்கைப் புக்கு
ஓராதான் பொன்முடி ஒன்பதோ டொன்றையும்
நேராவவன் தம்பிக்கே நீளரசீந்த
ஆராவமுதனைப் பாடிப்பற
அயோத்தியர் வேந்தனைப் பாடிப்பற
பாசுர அனுபவம்
கரு நிற சமுத்திரத்தில் பெரும் கற்களால் பாலம்அமைத்து இலங்கையுள் புகுந்து, தன்னுடைய வீரத்தை
உணராத ராவணனின் பத்து தலைகளை துண்டித்து,
அவனுடைய தம்பி விபீஷணனுக்கே சிரஞ்சீவியாய்
ஆளுமாரு பட்டம்கட்டிய தெகட்டாத அம்ருதம்
போன்றவனைப் பாடி விளையாடு! அயோத்தி
மன்னனைப் போற்றி விளையாடு!
(11)
நந்தன் மதலையைக் காகுத்தனை நவின்று
உந்தி பறந்த ஒளியிழையார்கள் சொல்
செந்தமிழ்த் தென்புதுவை விட்டுசித்தன் சொல்
ஐந்தினோடைந்தும் வல்லார்க்கு அல்லலில்லையே
பாசுர அனுபவம்
நந்தகோபரின் மகன் கண்ணனையும், காகுத்தன் என்றராமனையும் குறித்து, குதித்தும் விளையாடிக் கொண்டும்,
பள பளக்கும் ஆடையணிந்த இப்பெண்கள் சொல்லியதை,
ஸ்ரீவில்லிபுத்தூரின் பெரியாழ்வார், கண்ணன் விஷயமாக
ஐந்து பாசுரங்களும், ராமன் விஷயமாக ஐந்து
பாசுரங்களுமாக தூய தமிழில் அருளிச் செய்தவைகளை
கற்றுணர்ந்தவர்களுக்குத் துன்பமொன்றுமில்லை.
No comments:
Post a Comment
Please feel free to leave your comments. I would love to see them. Thanks.