சாராம்சம்
இந்த கொடிய ஸம்ஸாரத்தில் சிக்கித் தவித்தஎனக்கு, திருமாலிருஞ்சோலையில் சேவை சாதிக்கும்
எம்பெருமானின் தரிசனம் கிடைத்த பிறகு, அந்த
'எம்பெருமானை இனி பிறிந்து எங்கும் போகவிடமாட்டேன்'
என்று பெரியாழ்வார் கூறும் அற்புதமான
பாசுரங்கள் தான் இவை.
(1)
துக்கச்சுழலையைச் சூழ்ந்துகிடந்த
வலையை அறப்பறித்து
புக்கினில் புக்குன்னைக் கண்டுகொண்டேன்
இனிப்போக விடுவதுண்டே ?
மக்களறுவரைக் கல்லிடைமோத
இழந்தவள் தன்வயிற்றில்
சிக்கெனவந்து பிறந்துநின்றாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
பாசுர அனுபவம்
சுழல் ஆறு போன்று வளைய வளைய வருகிறதுன்பத்தை சுற்றிக்கொண்டிருக்கும் இந்த சரீரம்
என்ற வலையை அறுத்துப் போக்கிக் கொண்டேன்.
நீ புகுமிடங்களிலெல்லாம் புகுந்து உன்னைக் கண்ணாரக்
கண்டு சேவித்தேன். இதற்கு முன் பிறந்த ஆறு
குழந்தைகளையும், கம்ஸன் கல்லிலே மோதிக் கொன்றதால்,
இழந்த தேவகியின் வயிற்றில் சட்டென வந்து
அவதரித்தவனே!திருமாலிருஞ்சோலை மலையில்
எழுந்தருளியிருக்கும் என் ஸ்வாமியே! இனி உன்னைப்
போகவிடுவேனோ?
(2)
வளைத்து வைத்தேன் இனிப்போகலொட்டேன்
உந்தனிந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின்திருவாணைகண்டாய்
நீஒருவர்க்கும் மெய்யனல்லை
அளித்தெங்கும் நாடும்நகரமும் தம்முடைத்
தீவினை தீர்க்கலுற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத்
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
பாசுர அனுபவம்
உன்னை சூழ்ந்து கொண்டேன்! இனி உன்னைப்போக விட மாட்டேன். ஒருவேளை, உனக்குத் தெரிந்த
மாயா ஜாலங்களால் உன்னை மறைத்துத் கொள்ள
நினைத்தால், அப்படி நீ செய்யலாகாது என்று
உனனுடைய பெரிய பிராட்டியின் மேல் ஆணையிட்டு
சொல்கிறேன். நீ யாருக்கும் உண்மையானவனில்லை
என்று எனக்குத் தெரியும்!! நாட்டிலும், நகரத்திலும்
மற்றும் பல இடங்களிலும் வாழும் மக்களை காக்கும்
பொருட்டு அவர்களுடைய கடுமையான பாபங்களை
போக்கி பலத்தை கொடுக்கும் தெளிவுடைய ஜலத்தைக்
கொண்ட திருமாலிருஞ்சோலையை உடைய பெரியோனே!
(3)
உனக்குப் பணிசெய்திருக்கும்
தவமுடையேன், இனிப்போய்ஒருவன்
தனக்குப் பணிந்து கடைத்தலைநிற்கை
நின்சாயை யழிவுகண்டாய்
புனத்தினை கிள்ளிப் புதுவவிகாட்டி
உன்பொன்னடி வாழ்கவென்று
இனக்குறவர் புதியதுண்ணும் எழில்
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
பாசுர அனுபவம்
உனக்கு அடிமை செய்யும் பாக்கியம் பெற்றிருக்கும்நான் இனியும் மற்றொருவனுக்கு அடி பணிந்து
அவனுடைய வீட்டு வாசலில் நிற்பதென்பது
உன்னுடைய பெருமைக்கு இழுக்கன்றோ? கூட்டமாய்ச்
சேர்ந்த குறவர்கள், உன் பொன் அடி வாழ்க என்று
உனக்குப் பல்லாண்டு பாடி நிலத்திலுண்டான
தினைகளை கிள்ளிக் கொண்டுவந்து புதிய ஹவிஸ்ஸை
அமுது செய்யப்பண்ணி புதிதாக அவற்றை சாப்பிடும்
அழகையுடையதான மாலிருஞ்சோலையில்
அருள் பாலிக்கும் எம்பெருமானே!
(4)
காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர்
நிழலில்லை நீரில்லை உன்
பாதநிழலல்லால் மற்றோருயிர்ப்பிடம்
நான்எங்கும் காண்கின்றிலேன்
தூதுசென்றாய். குருபாண்டவர்க்காய்
அங்கோர்பொய் சுற்றம்பேசிச்சென்று
பேதஞ்செய்து எங்கும்பிணம் படைத்தாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
பாசுர அனுபவம்
கண்ணுக்கு எட்டின தூரம் வரை வருந்தி திரிந்தஎனக்கு அந்த இடத்தில் தங்குவதற்கு ஒரு நிழலோ,
பருகுவதற்கு நீரோ, உன் திருவடி நிழலைத் தவிற,
வேறொரு மூச்சு விடுமிடம் தென்படவில்லை.
குருவம்சத்தில் பிறந்த பாண்டவர்களுக்காக தூது
சென்றவனாய் அவர்களிடம் ஒரு பொய் உறவைச்
சொல்லி, இரு தரப்பிலும் கலகத்தை உண்டு
பண்ணி அதன் விளைவாக ஏற்பட்ட போரில்
துரியோதனாதிகளை பிணமாக்கினவனே!
திருமாலிருஞ்சோலையில் அருள் பாலிப்பவனே!
(5)
காலுமெழா கண்ணநீரும்நில்லா உடல்
சோர்ந்து நடுங்கி குரல்
மேலுமெழா மயிர்க்கூச்சுமறா என
தோள்களும் வீழ்வொழியா
மாலுகளா நிற்கும் என்மனனே. உன்னை
வாழத்தலைப்பெய்திட்டேன்
சேலுகளாநிற்கும் நீள்சுனைசூழ்
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
பாசுர அனுபவம்
கால்களால் நடக்க முடியவில்லை, கண்களில் நீர்நில்லாமல் சோர்கிறது,உடலோ சோர்ந்து நடுங்குகிறது,
குரல் மேல் எழ மறுக்கிறது, மயிர் கூச்செறிதலும்
நின்றபாடில்லை, என்னுடைய தோள்களும் தொய்ந்து
விட்டன. இப்படியாக என் மனஸ்ஸானது பரவசமடைந்து,
என் வாழ்கையை உன்னை அனுபவிப்பதில் அர்பணித்தேன்.
மீன்கள் துள்ளி விளையாடும் ஆழமான
குட்டைகள் சூழப்பெற்ற திருமாலிருஞ்சோலையில்
அருள் பாலிக்கும் எம்பெருமானே!
(6)
எருத்துக் கொடியுடையானும்
பிரமனும் இந்திரனும் மற்றும்
ஒருத்தரும் இப்பிறவியென்னும்
நோய்க்கு மருந்தறிவாருமில்லை
மருத்துவனாய் நின்றமாமணி
வண்ணா. மறுபிறவிதவிரத்
திருத்தி உங்கோயிற் கடைப்புகப்
பெய் திருமாலிருஞ்சோலையெந்தாய்.
பாசுர அனுபவம்
காளை மாட்டின் சின்னத்தைக் கொண்ட கொடியைஉடைய சிவனும், பிரமனும், இந்திரனும் மற்றுமொருவரும்
இப்படிப்பட்ட பிறவி என்னும் வ்யாதிக்கு மருந்தை
அறிந்தாரில்லை. பிறவி என்னும் நோயைப் போக்கும்
மருத்துவனாய் இருக்கும் சிறந்த நீல மணி போன்ற
நிறத்தையுடையவனே! திருமாலிருஞ்சோலையில் அருள்
பாலிக்கும் எம்பெருமானே! எனக்கு மீண்டும் பிறவி
இல்லாமல் செய்து, உன் கோயில் வாசலில் இருந்து
வாழும்படி அருள் புரியவேண்டும்.
(7)
அக்கரையென்னு மனத்தக்
கடலுளழுந்தி உன்பேரருளால்
இக்கரையேறி யிளைத்திருந்தேனை
அஞ்சலென்று கைகவியாய்
சக்கரமும் தடக்கைகளும்
கண்களும் பீதகவாடையொடும்
செக்கர்நிறத்துச் சிவப்புடையாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
பாசுர அனுபவம்
நான் ஸம்ஸாரமென்னும் அனர்த்தமாகிய கடலில்மூழ்கி வருந்தியிருந்த போது உன்னுடைய பெரும்
கருணையால் என்னை இக்கரையேற்றி 'பயப்படாதே'
என்று உனது அபய முத்திரையைக் காட்டியருள வேண்டும்.
திருச்சக்கரமுடனும், அகன்ற கைகளோடும், திருக்
கண்களோடும், பீதாம்பரத்தோடும் கூட, சிவப்பு நிற
வானம் போன்ற நிறத்தையுடையவனே!
திருமாலிருஞ்சோலையில் அருள்
பாலிக்கும் எம்பெருமானே!
(8)
எத்தனை காலமும் எத்தனையூழியும்
இன்றொடு நாளையென்றே
இத்தனை காலமும்போய்க்கிறிப் பட்டேன்
இனிஉன்னைப் போகலொட்டேன்
மைத்துனன்மார்களை வாழ்வித்து
மாற்றலர் நூற்றுவரைக் கெடுத்தாய்.
சித்தம் நின்பாலதறிதியன்றே
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
பாசுர அனுபவம்
இன்று, நாளை, நேற்று, என்று கழிந்த காலங்களில்,எவ்வளவு காலமோ, எத்தனை மஹா ப்ரளயங்களோ
தெரியாது, தப்ப முடியாத ஸம்ஸாரமென்னும்
யந்திரத்தில் அகப்பட்டிருந்தேன். இதெல்லாம் உன்
மாயை என்று அறிந்த பின், உன்னை வேறு இடம்
போக விட மாட்டேன்! திருமாலிருஞ்சோலையில்
அருள் பாலிக்கும் எம்பெருமானே! உனது அத்தை
மகன்களான பாண்டவர்களை அரசாளவைத்து,
எதிரிகளான நூறு பேர் துரியோதநாதிகளை
அழித்த நீ, என் மனதானது உன்னிடம்
லயித்திருப்பதை அறிவாயா?
(9)
அன்று வயிற்றில் கிடந்திருந்தே
அடிமை செய்யலுற்றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக்கண்டு
கொண்டேன் இனிப்போக விடுவதுண்டே?
சென்றங்குவாணனை ஆயிரந்தோளும்
திருச்சக்கரமதனால்
தென்றித் திசைதிசைவீழச் செற்றாய்.
திருமாலிருஞ்சோலையெந்தாய்.
பாசுர அனுபவம்
அன்று தாயார் வயிற்றில் கர்ப்ப வாஸத்தில்இருக்கும்போதே உனக்கு அடிமை செய்வதில்
நாட்டமுடன் இருந்தேன். இன்று இங்கு
திருமாலிருஞ்சோலையில் கோவில் கொண்டிருக்கும்
உன்னைக் கண்ணாரக் கண்டு சேவித்தபின் உன்னை
இனிப் போகவிடுவேனோ? முன்பு சோணித புரம்
சென்று உனது திருச் சக்கரத்தால் பாணாசுரனின்
ஆயிரம் தோள்களும் எல்லா திசைகளிலும்
சிதறி விழச் செய்த எம்பெருமானே!
(10)
சென்றுலகம் குடைந்தாடும் சுனைத்
திருமாலிருஞ்சோலைதன்னுள்
நின்றபிரான் அடிமேல்அடிமைத்திறம்
நேர்படவிண்ணப்பஞ்செய்
பொன்திகழ் மாடம்பொலிந்துதோன்றும்
புதுவைக்கோன்விட்டுசித்தன்
ஒன்றினோடொன்பதும் பாட
வல்லார் உலகமளந்தான்தமரே.
பாசுர அனுபவம்
உலகத்தில் வாழ்பவர்கள் நன்றாக அமிழ்ந்துநீராடக்கூடிய நீர் நிலைகள் நிரம்பிய
திருமாலிருஞ்சோலையில் நிற்கும் எம்பெருமானுடைய
திருவடிகளில் சரணாகதி செய்யும் விஷயமாக, தங்க
மயமான மாடங்கள் நிரம்பிய ஸ்ரீவில்லிபுத்தூரின்
தலைவர், பெரியாழ்வார் அருளிச் செய்த இந்த பத்து
பாசுரங்களையும் பாட சாமர்த்தியம்
கொண்டவர்கள், மூன்று லோகங்களையும்
அளந்தவனுக்கு அடியாரக இருப்பர்கள்.
No comments:
Post a Comment
Please feel free to leave your comments. I would love to see them. Thanks.