ஐந்தாம் பத்து இரண்டாம் திருமொழி



சாராம்சம்

தமது திருமேனியில் எம்பெருமான் புகுந்து இருதய
கமலத்தில் நிலையாக கோயில் கொண்டுள்ளதால்,
நெடுங்காலம் செய்த பாபங்களினால் ஏற்பட்ட
நோய்களுக்கு தமது உடம்பில் தங்குவதற்கு இனி
இடமில்லை என்பதை மிக அழகாக
பெரியாழ்வார் வர்ணிக்கிறார்.
(1)
நெய்க்குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள்போல்
நிரந்து எங்கும் கைக்கொண்டு நிற்கின்ற நோய்காள்.
காலம்பெற உய்யப்போமின் மெய்க்கொண்டு வந்து
புகுந்து வேதப்பிரானார் கிடந்தார் பைக்கொண்ட
பாம்பணையோடும் பண்டன்று பட்டினம்காப்பே.

பாசுர அனுபவம்

நெய் வைத்துள்ள குடத்தில் எப்படி எறும்புகள் ஏறுமோ,
அப்படி உடம்பாகிய குடத்தில் எல்லா இடத்திலும் பரவி
நிற்கும் நோய்களே! சீக்கிரமே விட்டு விலகி,பிழைத்துப்
போங்கள்! ஏனென்றால், வேதத்திற்கு அதிபதியான
எம்பெருமான், படங்களுடன் கூடிய பாம்பின்
படுக்கையோடு கூட, உடம்பில் புகுந்து விருப்பத்தோடு
படுத்திருக்கிறார். இது பழைய உடம்பு இல்லை. இந்த
சரீர-ஆத்மா என்கிற பட்டினம் இப்பொழுது
எம்பெருமானால் காக்கப்பட்டுள்ளது!
(2)
சித்திரகுத்தனெழுத்தால் தென்புலக்கோன் பொறியொற்றி
வைத்த இலச்சினைமாற்றித் தூதுவர் ஓடியொளித்தார்
முத்துத்திரைக் கடற்சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம்காப்பே.

பாசுர அனுபவம்

தென் திசையை ஆள்பவனான யம தர்மனின் முத்திரை
பொதித்து எழுதிய சித்ரகுப்தனின் பாவ-புண்ணிய
கணக்கை கிழித்துவிட்டு அவனுடைய தூதர்கள் ஓடிப்போய்
மறைந்து கொண்டார்கள். முத்துக்கள் அடங்கிய
அலைகளோடு கூடிய கடலின் கரையோரம் வாழ்பவனும்,
பூரண அறிவு பெற்ற வானோர்களுக்குத் தலைவனும்,
பக்தர்களுக்கு இனியவனுமான எம்பெருமானுக்கு நான்
அடிமை. ஆகையால் இது பழைய உடம்பு இல்லை.
இந்த சரீர-ஆத்மா என்ற பட்டினம் இப்பொழுது
எம்பெருமானால் காக்கப்பட்டுள்ளது!
(3)
வயிற்றில் தொழுவைப்பிரித்து வன்புலச் சேவையதக்கி
கயிற்றும் அக்காணிகழித்துக் காலிடைப் பாசம்கழற்றி
எயிற்றிடைமண்கொண்ட எந்தைஇராப்பகல்ஓதுவித்துஎன்னைப்
பயிற்றிப்பணிசெய்யக் கொண்டான்பண்டன்றுபட்டினம்காப்பே.

பாசுர அனுபவம்

வயிற்றில் சிறை வைக்கப்பட்டிருந்தவன் போல் இருந்த
என்னை விடுவித்தும், ஐந்து புலன்களினால் எழுகின்ற,
கட்டுக்கடங்காத காளை போல் திரியும்,எனது
ஆசைகளை அடக்கியும், நரம்பும் எலும்புமாகிய இந்த
சரீரத்தில் நான் வைத்திருந்த பற்றை ஒழித்தும்,
யம தூதர்கள் கயிற்றால் என்னைக் காலிலே கட்டி
இழுத்துச் செல்லாமல் பண்ணியும், தன்னுடைய கோரப்
பல்லால் ஒருசமயம் பூமியை தாங்கி ரக்ஷித்த
எம்பெருமான், இப்படியாக என்னையும் ரக்ஷித்தவனாய்,
இரவும் பகலும் எனக்கு நல்லறிவை போதித்தும்,
வழி நடத்தியும், என்னை அவன் பணி செய்ய வைத்தான்.
ஆகையால் இது பழைய உடம்பு இல்லை. இந்த
சரீர-ஆத்மா என்கிற பட்டினம் இப்பொழுது
எம்பெருமானால் காக்கப்பட்டுள்ளது!
(4)
மங்கியவல்வினைநோய்காள் உமக்கும்ஓர்வல்வினைகண்டீர்
இங்குப் புகேன்மின் புகேன்மின்எளிதன்றுகண்டீர்புகேன்மின்
சிங்கப்பிரானவன் எம்மான் சேரும்திருக்கோயில் கண்டீர்
பங்கப்படாது உய்யப்போமின் பண்டன்று பட்டினம்காப்பே.

பாசுர அனுபவம்

உருத்தெரியாமல் இருக்கும் மிகக் கொடிய பாபங்களினால்
ஏற்பட்ட வியாதிகளே! உங்களுக்கும் ஒரு கெட்ட காலம்
வந்தது பாருங்கள்! இனி நீங்கள் என்னுள் புக வேண்டாம்!
புக வேண்டாம்! அப்படி புகுவது சுலபமில்லை என்று
தெரிந்து கொள்ளுங்கள்! இப்பொழுது இந்த உடம்பில்
எம்பிரான் நரசிம்மப் பெருமான் திருக் கோவில்
கொண்டிருக்கிறான். ஆதலால் அவமானப் படாமல்
பிழைத்துப் போங்கள்! இது பழைய உடம்பு இல்லை.
இந்த சரீர-ஆத்மா என்கிற பட்டினம் இப்பொழுது
எம்பெருமானால் காக்கப்பட்டுள்ளது!
(5)
மாணிக் குறளுருவாய மாயனை என்மனத்துள்ளே
பேணிக்கொணர்ந்து புகுதவைத்துக்கொண்டேன்பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரம்கண்டீர் வலிவன்குறும்பர்களுள்ளீர்.
பாணிக்க வேண்டாநடமின் பண்டன்று பட்டினம்காப்பே.

பாசுர அனுபவம்

குட்டை உருவாக அவதரித்தவனும், மாணிக்கங்களின்
இருப்பிடம் போன்றவனும், ஆச்சர்ய செயல்களைக்
கொண்டவனுமான எம்பெருமானை, விரும்பிக் கொண்டு
வந்து என் நெஞ்சினுள் புகுரும்படி செய்து, பிரிவில்லாதபடி
நிறுத்தியுள்ளேன், கவனியுங்கள். மிகக் கடுமையாக
தொல்லை பண்ணும் இந்திரியங்களே! பிழைக்க
நினைத்தால் தாமதிக்காமல் போய்விடுங்கள்! இது
பழைய உடம்பு இல்லை. இந்த சரீர-ஆத்மா என்கிற
பட்டினம் இப்பொழுது எம்பெருமானால் காக்கப்பட்டுள்ளது!
(6)
உற்றவுறு பிணிநோய்காள் உமக்குஒன்றுசொல்லுகேன்கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும்பிரானார் பேணும் திருக்கோயில்கண்டீர்
அற்றமுரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினைகாள் உமக்குஇங்குஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம்காப்பே.

பாசுர அனுபவம்

நீண்ட காலம் துன்புருத்தும் கொடிய வ்யாதிகளே!
உங்களுக்கு ஒன்று சொல்லுகிறேன், கேளுங்கள்.
பசுக்களை மேய்க்கின்ற கண்ணன் எம்பெருமான்
விரும்பி வசிக்கும் திருக்கோயில் தான் எனது உடல்
என்று தெரிந்து கொள்ளுங்கள். பிறவிக் கடலில்
மூழ்கடித்த பாபங்களே. உங்களுக்கு உருதியாகச்
சொல்கிறேன்! இங்கிருந்து போய்விடுங்கள்!
உங்களுக்கு இனி ஒரு பிரயோஜனமும் இல்லை.
இது பழைய உடம்பு இல்லை. இந்த சரீர-ஆத்மா என்கிற
பட்டினம் இப்பொழுது எம்பெருமானால் காக்கப்பட்டுள்ளது!
(7)
கொங்கைச் சிறுவரையென்னும்பொதும்பினில்வீழ்ந்துவழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டுஅழுந்திக்கிடந்துழல்வேனை
வங்கக்கடல் வண்ணன் அம்மான் வல்வினையாயின மாற்றி
பங்கப்படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம்காப்பே.

பாசுர அனுபவம்

மலை போன்ற முலைகளிடத்தும், சிற்றிடைகளிடத்தும்
மனத்தைச் செலுத்தி, மயங்கி ஒரு குழியில் வழுக்கி
விழுந்து, அதன் விளைவாலே ஓர் ஒப்பற்ற நரகத்தில்
புகுந்து அவ்விடத்தில் அழுந்திக் கிடந்து உழன்ற என்னை
மரக்கலங்கள்-உலாவும்-கடல் நிறமுடைய எம்பெருமான்,
கொடிய பாபங்களைப் போக்கி பெரும் இழிவிலிருந்து
காத்தருளினான். இது பழைய உடம்பு இல்லை.
இந்த சரீர-ஆத்மா என்கிற பட்டினம் இப்பொழுது
எம்பெருமானால் காக்கப்பட்டுள்ளது!
(8)
ஏதங்களாயின வெல்லாம் இறங்க லிடுவித்து என்னுள்ளே
பீதகவாடைப் பிரானார் பிரமகுருவாகிவந்து
போதில் கமலவன்னெஞ்சம் புகுந்தும் என்சென்னித்திடரில்
பாதவிலச் சினைவைத்தார் பண்டன்று பட்டினம்காப்பே.

பாசுர அனுபவம்

பீதாம்பரத்தை தரித்தவனும், ப்ரம்மோபதேசத்தை
உபதேசிக்கும் குருவாக விளங்குபவனுமான எம்பெருமான்
அறிவுக்கு இருப்பிடமாய் உள்ளிருப்பவனை அறிய
விடாமல் தடுக்கும் என் நெஞ்சினுள் வந்து புகுந்து என்
இருதயத்திலுள்ள தோஷங்களைக் களைந்து, எனது
தலைமீது தனது திருவடியின் முத்திரையை
வைத்தருளினார். இது பழைய உடம்பு இல்லை.
இந்த சரீர-ஆத்மா என்கிற பட்டினம்
இப்பொழுது எம்பெருமானால் காக்கப்பட்டுள்ளது!
(9)
உறகலுற கலுறகல் ஒண்சுடராழியே. சங்கே.
அறவெறி நாந்தகவாளே. அழகிய சார்ங்கமே. தண்டே.
இறவு படாமலிருந்த எண்மர் உலோகபாலீர்காள்.
பறவையரையா. உறகல் பள்ளியறைக் குறிக்கோண்மின்.

பாசுர அனுபவம்

நல்ல ஜ்யோதியுடன் விளங்கும் திருச்சக்கரமே!
சத்ருக்களின் உடல் அறும்படி செய்யும் நாந்தக
மென்னும் வீசப்படும் சிறிய உடை வாளே! ஸ்ரீபாஞ்ச
ஜன்யமே! அழகிய சார்ங்கமென்னும் தனுஸ்ஸே!
ஸ்ரீ கதயே! எட்டு திசைகளில் நிற்கும் அஷ்ட திக்
பாலர்களே! தப்பாமல் தூங்காதீர்கள்! தூங்காதீர்கள்!
தூங்காதீர்கள்! பறவைகளுக்குத் தலைவனே!
தூங்காது விழித்திரு! எம்பெருமானுடைய சயன
அறையான இந்த என் சரீரத்தை
கவனமாகக் காத்திடுங்கள்!
(10)
அரவத்தமளியினோடும் அழகிய பாற்கடலோடும்
அரவிந்தப் பாவையும்தானும் அகம்படி வந்துபுகுந்து
பரவைத் திரைபலமோதப் பள்ளிகொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவற்பொருட்டே.

பாசுர அனுபவம்

பாம்பணையோடும், அழகிய திருப்பாற்கடலோடும்,
தாமரை மலராளோடும் கூட தமது உடம்பில் வந்து
புகுந்து, கடல் அலைகள் மோத தமது உள்ளத்தில்
துயில் கொண்ட பெருமானை, எப்பொழுதும்
சித்தத்தில் விஷ்ணுவை வைத்திருக்கும்
பெரியாழ்வார், தமது சரீரத்தை காக்கும்படி
போற்றிப் பாடிய பாசுரங்கள் தான் இவை.


5 comments:

  1. Namaskaram. I am reciting this pasuram for few days now after a friend suggested. Though I understood the meaning broadly, your blogpost has helped in learning and understanding the meaning thoroughly. Thank you so much for this. Also may I ask your permission to read out the meanings that you have given in my Instagram page?
    Please reply

    ReplyDelete
  2. Amazing. The verses with meaning. periazhwar thiruvadigale charanam

    ReplyDelete
  3. amazing with meaning perialwar tiruvadigale saranam

    ReplyDelete
  4. very nice pasurams amazing alwar tiruvadigale saranam

    ReplyDelete

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.