சாராம்சம்
கண்ணன் கன்றுகளை மேய்த்துவிட்டு இடைப்பிள்ளைகள் சூழ, ஆடலுடனும் பாடலுடனும்,
மயில் தோகை குடையின் கீழே, தன்னை
அலங்கரித்துக்கொண்டு வருகிற அற்புதக் காட்சியை
இடைப்பெண்கள் போட்டி போட்டுக்கொண்டு வீதியில்
ஓடி வந்து கண்டு களிக்கிறார்கள். அவர்களில் சிலர்
கண்ணனை கண்டதும் மோகித்தவர்களாய், அவனை
அடைய முடியாமல் ஏக்கம்கொண்டு, அதனால்
உடல் மெலிந்து,தங்களுடைய ஆடைகளும்,
வளைகளும் கழன்று போகும் நிலையை அடைந்தார்கள்.
(1)
தழைகளுந் தொங்கலுந் ததும்பி யெங்குந்
தண்ணுமை யெக்கம் மத்தளி தாழ் பீலி
குழல்களுங் கீதமுமாகி யெங்கும்
கோவிந்தன் வருகின்ற கூட்டங் கண்டு
மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி
மங்கை மார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிர்ப்பனராகி யெங்கும்
உள்ளம் விட்டூண் மறந்தொழிந்தனரே
பாசுர அனுபவம்
வித விதமான மயில் தோகை குடைகளால்அலங்கரிக்கப் பெற்று எங்கும் நிறைந்து காணப்
பெற்றவர்களாயும் மேள வாத்தியங்கள், ஒரு தந்தியுடன்
கூடிய மத்தள வாத்தியங்கள், பெரிய விசிறிகள்,
பல தரப்பட்ட குழல்கள், அவற்றால் இசைக்கப்படும்
பாட்டுகள், இவைகளால் சூழப்பெற்று, கோவிந்தன்
கன்றுகளை மேய்த்து விட்டு கூட்டமாக வருவதைப்
பார்த்து அங்குள்ள இடைப் பெண்கள் மழை மேகக்
கூட்டங்களே வருகின்றதோ என வியக்கிறார்கள்.
அவர்களில் சிலர் வாசலுக்குச் முண்டி அடித்துச்
சென்றும், சிலர் ஜன்னல் அருகே நின்று கொண்டும் ,
சிலர் மோகத்தோடும், பிரமிப்போடும் அந்த அழகிய
கண்ணனின் திரு உருவை கண்டு களித்து, தங்கள்
உள்ளங்களைப் பறிகொடுத்தவர்களாய், அன்ன
ஆஹாரம் புசிப்பதையும் மறந்துவிட்டார்கள்
(2)
வல்லி நுண்ணிதழன்ன வாடை கொண்டு
வசையற திருவரை விரித்துடுத்து
பல்லி நுண் பற்றாக வுடை வாள் சாத்திப்
பணைக் கச்சுந்திப் பலதழை நடுவே
முல்லை நன்னறு மலர் வேங்கை மலரணிந்து
பல்லாயர் குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்
எதிர் நின்றங்கின வளையிழவேன் மினே
பாசுர அனுபவம்
நந்தகோபனின் பிள்ளை, பூவை ஒத்த மிருதுவானஆடையை முறையாக விரித்து இடையில் அணிந்து
கொண்டும், அதன் மேல் பெரிய கச்சுப் பட்டையை
கட்டிக்கொண்டும் அதில் வாளை எப்படி பல்லி சுவரில்
இடைவெளி இல்லாமல் ஒட்டிக்கொண்டிருக்குமோ
அப்படி சொருகிக் கொண்டும், நறு மணமுடைய
முல்லை மற்றும் வேங்கை மலர்களை மாலையாக
தொடுத்து சூடிக்கொண்டும், பல இடைப்பிள்ளைகளின்
கூட்டத்தின் நடுவே, பல மயில் தோகைக் குடைகளின்
நிழலிலே, அந்தி மாலைப் போதில் வரும் பொழுது
அவனுக்கு எதிரே போய் நிற்காதீர்கள். அவனை
அடைய முடியாத வருத்தத்தில், உங்களுடைய கைகள்
மெலிந்து கை வளையல்கள் கழன்று போக நேரிடும்!
(3)
சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும்
மேலாடையும் தோழன் மார்கொண் டோட
ஒரு கையாலொருவன் தன் தோளையூன்றி
ஆநிரையினம் மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன்
மஞ்சளும் மேனியும் வடிவுங் கண்டாள்
அருகே நின்றாளென் பெண்ணோக்கிக் கண்டாள்
அதுகண்டீவ்வூ ரொன்று புணர்கின்றதே
பாசுர அனுபவம்
கண்ணனுக்கு கொடுப்பதற்காக உடை வாள், சுண்டுவில், பூச்செண்டு கோல், மேலாடை இவைகளை கையில்
வைத்துக்கொண்டு அவனுடைய தோழர்களான இடைப்
பிள்ளைகள் அவன் பின்னே ஓடி வர, தன் ஒரு கையால்
ஒருவன் தோளைப் பிடித்தும், பசுக் கூட்டங்களை
வீடு திரும்புமாறு ஊதிஅழைக்க உதவும் சங்கை
மற்றொரு கையில் ஏந்தியும், சோர்வுடன் வரும்
பிள்ளை கண்ணனின் மஞ்சள் நிற காந்தியையும்,
சுந்தர மேனியையும் அருகில் நின்று பார்த்து, பிறகு
மீண்டும் உற்றுப் பார்த்த என் மகளை இந்த ஊர்க்
காரர்கள் கண்ணனுக்கும் இவளுக்கும் ஒரு வித
சம்பந்தம் இருப்பதாக பேசுகிறார்கள்
(4)
குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான்
கோவல னாய்க்குழ லூதி யூதி
கன்றுகள் மேய்த்துத் தன் தோழரோடு
கலந்துடன் வருவானைத் தெருவில் கண்டு
என்றும் இவனையொப்பாரை நங்காய்
கண்டறியேனேடி வந்து காணாய்
ஒன்று நில்லா வளை கழன்று
துகிலேந்திள முலையுமென் வசமல்லவே.
பாசுர அனுபவம்
கோவர்தன பர்வதத்தை குடையாக எடுத்து பசுக்களின்கூட்டத்தை காப்பாற்றிய கண்ணபிரான், இடையனாய்
குழலை ஊதியவாறே கன்றுகளை மேய்த்துவிட்டு தன்
தோழர்களோடு கூடி தெருவில் வருவதைக் கண்டேன்.
நல்ல பண்புடைய தோழியே ! இவனைப் போல்
இதுவரை நான் பார்த்ததில்லை! நீயும் வந்து பார்! நான்
இவனைப் பார்த்த மாத்திரத்தில் எனது புடவை
விலகியது, எனது வளையல்களும் கைகளில்
நிற்கவில்லை, எனது முலைகளும்
என் கட்டுப்பாட்டில் இல்லை.
(5)
சுற்றி நின்று ஆயர் தழை களிடச்
சுருள் பங்கி நேத்திரத்தால் அணிந்து
பற்றி நின்று ஆயர் கடைத் தலையே
பாடவும் ஆடக் கண்டேன் அன்றிப்பின்
மற்றொரு வர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற் கல்லால்
கொற்றவனுக்கு இவளாமென் றெண்ணிக்
கொடுமின்கள் கொடீராகிற் கோழம்பமே.
பாசுர அனுபவம்
மயில் தோகைக் குடைகளை கண்ணனுக்கு நிழலாகப்பிடித்துக் கொண்டு அவனைச் சூழ்ந்து இடைப்பிள்ளைகள்
வர, அவர்களுடன் கூட, தனது சுருண்ட கேசத்தை மயில்
தோகைகளால் அலங்கரித்துக் கொண்டு, இடைப்
பிள்ளைகளின் கூட்டத்தில் முதல்வனாக நின்றுகொண்டு,
பாடலுடனும், ஆடலுடனும் கண்ணன் வருவதைக்
கண்டேன். இதற்கு மேலும் அவனன்றி வேறொருவனுக்கு
என்னை மணம் பேச நான் சம்மதிக்க மாட்டேன்.
திருமாலிருஞ் சோலையில் அருள்பாலிக்கும் எனது
தலைவன் தான் இவளுக்கு பொருத்தம் என நிச்சயித்து,
அவனுக்கே தாரை வார்த்து கொடுத்து விடுங்கள்.
அப்படி கொடுக்காவிட்டால், பெற்றோர்களான உங்களுக்கு,
மிகுந்த மனக் குழப்பம் உண்டாகும்.
(6)
சிந்துர மிலங்கத் தன்திரு நெற்றிமேல்
திருத்திய கோறம் பும்திருக் குழலும்
அந்தர முழவத் தண் தழைக் காவின் கீழ்
வருமாய ரோடுஉடன் வளைகோல் வீச
அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை
அறிந்தறிந்து இவ்வீதி போது மாகில்
பந்து கொண் டானென்று வளைத்து வைத்துப்
பவளவாய் முறுவலும் காண்போம் தோழி
பாசுர அனுபவம்
தோழியே! நெற்றியில் சிந்தூரமும் அதன் மேல்பளிச்சென திலகமும், அழகான சுருள் கேசத்துடனும்,
மத்தளங்களின் ஓசை விண்ணை சூழ்ந்துகொள்ள,
குளிர்ந்த மயில் தோகைக் குடைகளின் கீழே
இடைப் பிள்ளைகளோடு கூட, வளைந்த கோல்களை
வீசிக் கொண்டும், எல்லை காணமுடியா பொலிவுடனும்,
எல்லாவற்றையும் அறிந்தவனாயும் இடைப்பிள்ளையான
கண்ணன் இவ்வீதி வழியே வருவானேயாகில்,
'எங்கள் பந்தை பிடுங்கி வைத்துள்ளவன் இவனன்றோ'
என்று அவனை மடக்கி, அவனுடைய பவள
வாயையும், புன் சிரிப்பையும் கண்டு களிக்கலாம்.
(7)
சாலப்பல் நிரை பின்னே தழைக் காவின் கீழ்த்
தன் திருமேனி நின்றொளி திகழ
நீல நல்நறுங் குஞ்சி நேத்திரத் தால ணிந்து
பல்லாயர் குழா நடுவே
கோலச் செந்தா மரைக்கண் மிளிரக்
குழலூதி யிசை பாடிக் குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை
அழகு கண்டுஎன் மகளயர்க் கின்றதே.
பாசுர அனுபவம்
பசுக் கூட்டங்கள் பலவாறாக முன் செல்ல, அதன்பின்னே,மயில் தோகைக் குடைகளின் கீழே தன் நீல
நிறத் திருமேனி ஜோதியுடன் விளங்க, நல்ல நறு
மணத்துடன் கூடிய கருத்த நீண்ட சுருள் முடியை
மயில் தோகைக் கண்கள் அலங்கரிக்க,பல இடையர்கள்
கூட்டத்தின் நடுவே, சிவப்பு தாமரைப்பூ போல் கண்கள்
காந்தியுடன் திகழ, குழலை ஊதிக்கொண்டும், பாடியும்
ஆடியும் இடையர்களோடு குதூகலத்துடன் வருகின்ற
இடைச் சிறுவன் கண்ணனின் அழகை என் மகள்
பார்த்தவுடன் புத்தி பேதலித்து நின்றாள்.
(8)
சிந்துரப்பொடிக் கொண்டு சென்னி யப்பித்
திருநாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்
அந்தரமின்றித் தன்னெறி பங்கியை
அழகிய நேத்திரத்தாலணிந்து
இந்திரன் போல் வருமாயப் பிள்ளை
எதிர் நின்றங்கின வளையிழ வேலென்ன
சந்தியில் நின்று கண்டீர்
நங்கை தன் துகிலொடு சரிவளை கழல்கின்றதே.
பாசுர அனுபவம்
சிந்தூரப் பொடியை தன் முடியில் பூசிக்கொண்டும்,நெற்றியில் ஒரு இலையினால் நாமம் சாத்திக்கொண்டும்,
அடர்ந்த திருமுடியை இறுக்கமாக மயில் தோகைக்
கண்களினால் அலங்கரித்துக் கொண்டும், தேவேந்திரனைப்
போல வருகின்ற இடைபிள்ளை கண்ணனுக்கு எதிராகப்
போய் நின்று கைவளைகளை இழக்காதே என்று என்
மகளிடம் கூறியும், அவள் அதைக் கேளாமல், அவன்
வரும் பாதையில் நின்றதும் அவளது ஆடையும்,
வளைகளும் கழன்று நழுவியதே!
(9)
வலங்காதின் மேல் தோன்றிப்பூ வணிந்து
மல்லிகை வனமாலை மெளவல் மாலை
சிலிங்காரத்தால் குழல் தாழ விட்டுத்
தீங்குழல் வாய் மடுத்தூதி யூதி
அலங்காரத்தால் வருமாயப் பிள்ளை
அழகு கண்டென் மகளாசைப்பட்டு
விலங்கி நில்லாதெதிர் நின்று கண்டீர்
வெள் வளை கழன்று மெய்ம் மெலிகின்றதே.
பாசுர அனுபவம்
செங்காந்தள் பூவை வலது காதில் சூடிக்கொண்டும்,காட்டுமல்லிகைப் பூ, மாலதி புஷ்ப மாலைகளை
சாத்திக்கொண்டும், திருமுடியை முதுகில்
தொங்கும்படி செய்து கொண்டும், குழலை வாயில்
வைத்து ஊதியவாறு, அலங்காரத்தோடு வருகின்ற
இடைப்பிள்ளை கண்ணனின் திருமேனியழகை என்
மகள் பார்த்ததும் மோகித்தவளாய், அவன் வரும்
வழியிலிருந்து விலகி நில்லாமல், அவன் எதிரே
போய் நின்றதினால் அவளது கை வளையலும்
கழன்று, உடலும் மெலிந்து போயிற்றே!
(10)
விண்ணின் மீதமரர்கள் விரும்பித் தொழ
மிறைத் தாயர் பாடியில் வீதியூடே
கண்ணன் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு
இளவாய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டமர் பொழிற் புதுவையர் கோன்
விட்டுசித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தருள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே.
பாசுர அனுபவம்
வைகுண்ட வாசியான எம்பெருமான் கண்ணனைநித்யஸூரிகள் அன்போடு சேவித்து வந்த போதிலும்,
அவர்களை விடுத்து ஆயர் பாடியில் திருவவதரித்து,
தெருக்களில் பசுக்களின் பின்னே அவன் செல்லும்
அழகை இளம் இடைப்பெண்கள் பார்த்து மோகித்த
விஷயங்களை, வண்டுகள் மொய்க்கும்
சோலைகளையுடைய ஸ்ரீ வில்லிபுத்தூரின் தலைவரான
பெரியாழ்வார் சொல்மாலையாக அருளிச்செய்த இப்பத்து
பாசுரங்களை இனிமையான இசையோடு கூட பாட வல்ல
பக்தர்கள் மேலான வைகுண்ட பதவியை அடைவர்கள்.
No comments:
Post a Comment
Please feel free to leave your comments. I would love to see them. Thanks.