சாராம்சம்
ஆழ்வார் தன்னுடைய தாழ்ச்சியையும், தூய்மையில்லாத்தன்மையையும், எம்பெருமானைத் தவிர வேறொன்றையும்
நினைக்கத் தெரியாத மன நிலை உடையவராய்
இருப்பதாகவும் தெரிவிக்கிறார். எம்பெருமானை
எப்பொழுதும் நினைத்து, மனமுருகிப் பிரார்த்தித்து,
அவன் நாமங்களை துதித்துப் போற்றி வந்தால் நாமும்,
அவன் அருளால், நாரயணனின் லோகமான ஸ்ரீவைகுந்தத்தை
சீக்கிரமே அடைய முடியும் என்று இப்பாசுரங்களின்
மூலம் அருளிச் செய்கிறார்.
(1)
வாக்குத்தூய்மையிலாமையினாலே
மாதவா. உன்னைவாய்க்கொள்ளமாட்டேன்
நாக்குநின்னையல்லால்அறியாது
நானதஞ்சுவன்என்வசமன்று
மூர்க்குப்பேசுகின்றானிவனென்று
முனிவாயேலும்என்நாவினுக்குஆற்றேன்
காக்கைவாயிலும்கட்டுரைகொள்வர்
காரணா. கருளக்கொடியானே.
பாசுர அனுபவம்
என்னுடைய வாக்கு சுத்தமாக இல்லாததினால்,மாதவனான உன்னை ஸ்தோத்திரம் பண்ண அருகதை
அற்றவனாய் இருக்கிறேன். என்னுடைய நாக்கு உன்னைத்
தவிர வேறு ஒருவரையும் பேசினதில்லை என்றாலும், அந்த
நாக்கு எப்பொழுதும் என் வசமிருக்கப்போவதில்லை என்று
நினைத்து அச்சம் கொள்கிறேன். இவன் என்னைக் குறித்து
பேசுவது மூடர் பேசும் பேச்சைப்போலுள்ளது என்று நீ
கோபித்துக்கொண்டாலும், என் நாக்கு பிதற்றுவதை
என்னால் தடுக்க முடியவில்லை. கருடனின் கொடியை
உடையோனே! எல்லாவற்றிற்கும் காரணமானவனே!
காக்கை வாயில் உண்டான சொல்லையும் நம் முன்னோர்கள்
நல்ல சகுனமாக ஏற்றுக் கொண்டார்கள் அல்லவோ.
அதேபோல் என் சொற்களையும் நல்ல சொற்களாக ஏற்று
என்னைப் பொருத்தருளவேணும்.
(2)
சழக்குநாக்கொடுபுன்கவிசொன்னேன்
சங்குசக்கரமேந்துகையனே.
பிழைப்பராகிலும்தம்மடியார்சொல்
பொறுப்பது பெரியோர்கடனன்றே
விழிக்கும்கண்ணிலேன்நின்கண்மற்றல்லால்
வேறொருவரோடுஎன்மனம்பற்றாது
உழைக்குஓர்புள்ளிமிகையன்றுகண்டாய்
ஊழியேழுலகுண்டுமிழ்ந்தானே.
பாசுர அனுபவம்
சங்கு சக்கரம் ஏந்தியிருக்கும் திருக்கைகளை உடையவனே!குற்றமுடைய என்னுடைய நாக்கால் பிழையான கவிதைகளைச்
சொன்னேன். அடியார்களின் தப்புச் சொல்லை பொருத்துக்
கொள்வது பெரியோர்களின் கடமையல்லவோ. தேவரீரின்
கடாக்ஷத்தைத் தவிர மற்றொன்றை அறியேன்.
அதோடில்லாமல், வேறொருவரை என் மனம் விரும்பாது.
பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும் உண்டு வயிற்றில்
அடக்கி பின்பு உமிழ்ந்து அவற்றை வெளிப்படுத்தினவனே!
புள்ளி மானின் உடம்பில் ஒரு புள்ளி கூடினால் அது அதற்கு
குற்றமாகாது எனறு நீ அறிவாய்.நீயும் என் குற்றங்களை
அதே கண்ணோட்டத்தில் பார்க்க வேணும்!
(3)
நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
நாரணா என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்
புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே
உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன்
ஓவாதே நமோ நாரணா என்பன்
வன்மை ஆவது உன் கோயிலில் வாழும்
வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே
பாசுர அனுபவம்
நாராயணா என்னும் உன் திருநாமத்தைச் சொல்வதைத்தவிர வேறொறு நல்லதோ, கெட்டதோ எனக்குத் தெரியாது.
ப்ரயோஜனத்தில் ஆசை வைத்து உன்னை வஞ்சனைச்
சொற்களால் புகழுபவன் அல்லன் நான். திருவின்
மணாளனே! உன்னை நினைக்கத்தக்க வழியொன்றும்
அறிகிலேன்! ஓயாமல் நமோ நாராயணா என்று சொல்லிக்
கொண்டு உன்னுடைய கோயிலில் வைஷ்ணவனாக வாழ்வதே
எனக்கு ஒரு பலம் எனத் தெரிந்துகொள்!
(4)
நெடுமையால் உலகேழும் அளந்தாய்
நின்மலா நெடியாய் அடியேனைக்
குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா
கூறை சோறு இவை வேண்டுவதில்லை
அடிமை என்னும் அக் கோயின்மையாலே
அங்கங்கே அவை போதரும் கண்டாய்
கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின் தாதை
கோத்த வன் தளை கோள் விடுத்தானே
பாசுர அனுபவம்
நீண்டு வளர்ந்து, ஏழுலகங்களையும் அளந்தவனே!தூய்மையானவனே! என்னை உனக்கு அடிமை படுத்திக்
கொள்வதற்கு சந்தேகிக்க வேண்டாம்! தங்குவதற்கு கூறையும்,
உண்ணுவதற்கு சோற்றையும் நான் உன்னிடம் கோரவில்லை!
உனக்கு அடிமை செய்வதினாலேயே அவைகள் தானாகவே
வந்தடையும் என்று தெரிந்துகொள்! கொடிய அரக்கன்
கம்சனைக் கொன்றவனே! உன்னுடைய தகப்பனாரான
வஸூதேவருடைய காலிலே பூட்டியிருந்த வலிய
விலங்கின் பூட்டை உடைத்தவனே!
(5)
தோட்டம் இல்லவள் ஆத் தொழு ஓடை
துடவையும் கிணறும் இவை எல்லாம்
வாட்டம் இன்றி உன் பொன்னடிக் கீழே
வளைப்பு-அகம் வகுத்துக்கொண்டு இருந்தேன்
நாட்டு மானிடத்தோடு எனக்கு அரிது
நச்சுவார் பலர் கேழல் ஒன்று ஆகிக்
கோட்டு மண் கொண்ட கொள்கையினானே
குஞ்சரம் விழக் கொம்பு ஒசித்தானே
பாசுர அனுபவம்
தோட்டம், மனைவி, பசுக்கள், மாட்டு கொட்டகை,குளம், நல்ல விளை பூமி, கிணறு இவை அனைத்தையும்
ஒரு குறையுமில்லாமல் உன்னுடைய அழகிய திருவடியிலேயே
அமையப் பெற்றிருக்கக் கண்டேன்! பல பேர் விரும்பினாலும்,
என்னால் ஊரில் வாழும் மனிதர்களோடு சகவாஸம்
செய்வது கடினம். நிகரில்லாத வராக ரூபத்தை கொண்டு,
தன்னுடைய கோர தந்தத்தால் பூமியை உயர எடுத்தருளின
ஸ்வபாவத்தையுடையவனே!குவலையாபீடம் என்ற மத
யானையின் கொம்பை முறித்து அதைக் கொன்றவனே!
(6)
கண்ணா நான்முகனைப் படைத்தானே
காரணா கரியாய் அடியேன் நான்
உண்ணா நாள் பசி ஆவது ஒன்று இல்லை
ஓவாதே நமோ நாரணா என்று
எண்ணா நாளும் இருக்கு எசுச் சாம
வேத நாள்மலர் கொண்டு உன் பாதம்
நண்ணா நாள் அவை தத்துறுமாகில்
அன்று எனக்கு அவை பட்டினி நாளே
பாசுர அனுபவம்
கண்ணனே! ப்ரம்மாவைப் படைத்தவனே! அனைத்துக்கும்காரணமாயிருப்பவனே! கருமேகம் போலிருப்பவனே!
உன்னுடைய அடிமையான நான் சாப்பிடாமல்
இருந்த நாளில் பசி ஏற்பட்டதில்லை. ஆனால்,
இடைவிடாமல் நமோ நாராயணா என்று நினைக்காத
நாளும், ரிக், யஜுஸ், சாம வேதங்களைச் சொல்லி,
அப்போது மலர்ந்த பூக்களால் உன் திருவடிகளை
அர்ச்சிக்காத நாளும் நான் சாப்பிடாத நாளாகக் கருதுவேன்.
அவை தட்டுப் பட்டால், அந்த நாட்களே
எனக்கு பட்டினி நாட்களாகும்.
(7)
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை
மெத்தையாக விரித்து அதன் மேலே
கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம்
காணலாங்கொல் என்று ஆசையினாலே
உள்ளம் சோர உகந்து எதிர் விம்மி
உரோம கூபங்களாய்க் கண்ண நீர்கள்
துள்ளம் சோரத் துயில் அணை கொள்ளேன்
சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே
பாசுர அனுபவம்
வெண்மை நிறத்துடன் விளங்கும் திருப்பாற்கடலில் ஒருபாம்பைப் படுக்கையாக விரித்து அதன் மேல் யோக
நித்திரையில் படுத்திருக்கும் உன்னைப் பார்க்க
ஆவலாய் மனமுருகி, நெகிழ்ந்து, மெய் சிலிர்த்து,
கண்கள் நீர் மல்க படுக்கையில் தூக்கமின்றி தவித்தேன்.
நான் உன்னை அடையும் வழியை நீயே திருவாய்
மலர்ந்தருள பிரார்த்திக்கிறேன்.
(8)
வண்ணமால்வரையேகுடையாக
மாரிகாத்தவனே. மதுசூதா.
கண்ணனே. கரிகோள்விடுத்தானே.
காரணா. களிறட்டபிரானே.
எண்ணுவாரிடரைக்களைவானே.
ஏத்தரும்பெருங்கீர்த்தியினானே.
நண்ணிநான்உன்னைநாள்தொறும்ஏத்தும்
நன்மையேஅருள்செய்எம்பிரானே.
பாசுர அனுபவம்
பல வித வண்ணக் கற்களைக் கொண்ட பெரிதானகோவர்த்தன மலையை குடையாக எடுத்து மழையினின்றும்
பசுக்களையும், இடையர்களையும் காத்தவனே! மது என்ற
அரக்கனை அழித்தவனே! கஜேந்த்ராழ்வானின் (யானையின்)
ஆபத்தை தீர்த்தவனே! அனைத்திற்கும் மூல காரணனே!
குவலையாபீடம் என்ற யானையை கொன்றவனே! ஸதா
காலமும் உன்னையே எண்ணுபவர்களின் துன்பத்தைக்
களைபவனே! அளவிடமுடியாத பெரும் கீர்த்தியை
உடையவனே! எம் தலைவனே! நான் உன்னை
எப்போதும் அணுகிப் போற்றும் நல்லமனதை எனக்கு
தந்தருளப் பிரார்த்திக்கிறேன்.
(9)
நம்பனே! நவின்றேத்தவல்லார்கள்
நாதனே! நரசிங்கமதானாய்!
உம்பர்கோனுலகேழும்அளந்தாய்
ஊழியாயினாய்! ஆழிமுன்னேந்தி
கம்பமாகரிகோள்விடுத்தானே!
காரணா! கடலைக்கடைந்தானே!
எம்பிரான்! என்னையாளுடைத்தேனே!
ஏழையேனிடரைக்களையாயே.
பாசுர அனுபவம்
நம் நம்பிக்கைக்கு பாத்திரமானவனே! வாயால் அவன்புகழ் பாடுபவர்களுக்கு நாதனே! அன்று நரசிம்மனாக
அவதரித்தவனே! வானோர் தலைவனே! திரிவிக்கிரமனாக
எல்லா உலகங்களையும் அளந்தவனே! முன்பு, தனது
திருக்கையில் திருச்சக்கரத்தை எடுத்துக் கொண்டு,
முதலையின் வாயில் கால் அகப்பட்டு மிகவும் பயத்தோடு
தவித்த யானையின் துயர் தீர்த்தவனே! எல்லாவற்றிற்கும்
காரணமானவனே! கடலைக் கடைந்தவனே! எனக்குத்
தலைவனே! என்னை ஆட்படுத்திக் கொண்டவனே!
தேனைப் போன்றவனே! ஏழையான என்னுடைய
துயரைப் போக்கப் பிரார்த்திக்கிறேன்!
(10)
காமர்தாதைகருதலர்சிங்கம்
காணவினியகருங்குழல்குட்டன்
வாமனன்என்மரகதவண்ணன்
மாதவன்மதுசூதனன்தன்னை
சேமநன்கமரும்புதுவையர்கோன்
விட்டுசித்தன்வியந்தமிழ்பத்தும்
நாமமென்றுநவின்றுரைப்பார்கள்
நண்ணுவார்ஒல்லைநாரணனுலகே.
பாசுர அனுபவம்
மன்மதனின் தந்தையும், தன்னை நினைக்காதவர்களுக்குசிங்கம் போன்றவனும், தன்னை அடைய நினைப்பவர்களுக்கு
அழகிய கருத்த கூந்தலுடைய சிறுவனாக, வாமன அவதாரம்
எடுத்தவனும், என்னுடையவனும், மரகதப் பச்சை வண்ணம்
போல் வடிவழகுடையவனும், ஸ்ரீயப்பதியுமான மதுசூதனின்
விஷயமாக, க்ஷேமமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் வாழ்
மக்களுக்கு அரசானான, பெரியாழ்வார் இயற்றிய
ஆச்சர்யமான இப்பத்து தமிழ்ப் பாசுரங்களை, திருநாமமாக
நினைத்துப் படிப்பவர்கள் சீக்கிரம் நாராயணனின் லோகமான
ஸ்ரீவைகுந்தத்தை அடையப் பெறுவர்கள்.