சாராம்சம்
எம்பெருமான், தான் வசிக்கும் திருப்பாற்கடல்,ஸ்ரீ வைகுந்தம் போன்ற ஒப்பற்ற இடங்களை
வெறுத்து ஒதுக்கி ஓடி வந்து, தன்னுடைய ஹ்ருதய
கமலத்தில் அமர்ந்து சேவை சாதிக்கிறான் என்று
பெரியாழ்வார் பெருமிதமாகக் கூறும் கீழ்கண்ட இந்த
பாசுரங்களை நாமும் அனுசந்தித்து ஆழ்வார்-எம்பெருமான்
அனுக்கிரகத்தைப் பரிபூரணமாகப் பெறுவோமாக.
(1)
சென்னி யோங்கு தண் திருவேங்கடமுடையாய்.உலகு
தன்னை வாழ நின்றநம்பீ. தாமோதரா. சதிரா
என்னையும் என்னுடைமையையும் உன் சக்கரப்
பொறியொற்றிக் கொண்டு நின்னருளே
புரிந்திருந்தேன் இனி என்திருக்குறிப்பே?
பாசுர அனுபவம்
ஆகாயத்தை தொடுமளவு உயர்ந்திருக்கும் சிகரங்களைஉடைய, குளிர்ந்த திருவேங்கடமலையை
வாசஸ்தலமாகக் கொண்டவனே! உலகத்தாரை
வாழ்வித்தருளும் குணபூர்த்தியை உடையவனே!,
யசோதை பிராட்டியால் கட்டுண்ட தாமோதரனே!
அடியார்களின் குற்றத்தைக் கண்டு கொள்ளாத திறமை
உடையவனே! என் ஆத்மாவுக்கும், சரீரத்துக்கும்
உன்னுடைய திருச்சக்கர சின்னத்தைப் பதித்துக்
கொண்டு உன்னுடைய க்ருபையை வேண்டி நிற்கின்றேன்.
இனி உன்னுடைய திருவுள்ளம்தான் என்னவாயிருக்கும்?
(2)
பறவையேறு பரம்புருடா. நீஎன்னைக் கைக்கொண்டபின்
பிறவியென்னும் கடலும் வற்றிப் பெரும் பதமாகின்றதால்
இறவு செய்யும் பாவக்காடு தீக்கொளீஇவேகின்றதால்
அறிவை யென்னும்அமுதவாறு தலைப்
பற்றி வாய்க்கொண்டதே.
பாசுர அனுபவம்
கருடனை வாகனமாகக் கொண்டு அதன் மேல்ஏறிப் பயணிக்கும் புருஷோத்தமனே! நீ என்னை
ஆட்கொண்டபின், பிறவி என்னும் பெரும் கடல்
முற்றிலுமாய் வற்றிப் போய், நானும் பெரும்
பாக்கியம் செய்தவனாகிறேன்! அழிவை ஏற்படுத்தும்
இந்தப் பாவக் காடானது தீயினில் வெந்து போயிற்று!
ஞானமென்னும் அம்ருத ஆறு என்னில்
பெருக்கெடுத்து தலைக்கு மேலே போகின்றதே!
(3)
எம்மனா என்குலதெய்வமே. என்னுடைய நாயகனே.
நின்னுளேனாய்ப் பெற்றநன்மை இவ்வுலகினில்
ஆர்பெறுவார்? நம்மன்போலே வீழ்த்தமுக்கும்
நாட்டிலுள்ள பாவமெல்லாம் சும்மெனாதே
கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே.
பாசுர அனுபவம்
எமக்கு இறைவனாய், என் குலத்தின் தெய்வமாய்,எனக்குத் தலைவனானவனே! உன்னிடம் நான் பெற்ற
நன்மையை இவ்வுலகில் வேறு யார் தான் பெறக் கூடும்?
பேய்கள் எப்படி கீழே தள்ளி அமுக்குமோ, அப்படியே
உலகத்திலுள்ள பாவங்களெல்லாம் மூச்சு விடாமல்
பயந்து ஓடி புதர்களில் மறைந்து கொண்டனவே!
(4)
கடல்கடைந்துஅமுதம் கொண்டு கலசத்தை
நிறைத்தாற்போல் உடலுருகிவாய் திறந்து மடுத்து
உன்னை நிறைத்துக் கொண்டேன் கொடுமை
செய்யும் கூற்றமும் என்கோலாடி குறுகப்பெறா
தடவரைத்தோள் சக்கரபாணீ. சார்ங்கவிற் சேவகனே.
பாசுர அனுபவம்
பெரிய மலை போன்ற தோள்களை உடையவனே!திருசக்கரத்தை கையில் ஏந்தியவனே! சார்ங்கமென்கிற
வில்லை தரித்த வீரனே! திருப்பாற்கடலை கடைந்து
அமிர்தத்தை கொண்டு கலசத்தை நிறைத்தது போலே,
உடல் உருகி வாயைத் திறந்து இரண்டு கைகளாலும்
அமுதமாகிய உன்னை அள்ளிப் பருகி என்னில்
தேக்கிக்கொண்டேன். இதற்குப் பின், கொடிய
தண்டனைகளை வழங்கும் யமனும் கூட என்னுடைய
ஆட்சி செல்லுமிடங்களில் வருவதில்லை.
(5)
பொன்னைக்கொண்டுஉரைகல்மீதே நிறமெழ
வுரைத்தாற்போல் உன்னைக்கொண்டுஎன்நாவகம்
பால் மாற்றின்றிஉரைத்துக்கொண்டேன் உன்னைக்
கொண்டுஎன்னுள்வைத்தேன் என்னையும்உன்னிலிட்டேன்
என்னப்பா என்னிருடீகேசா என்னுயிர்க்காவலனே.
பாசுர அனுபவம்
தங்கத்தின் தரத்தை உரை கல்லில் வைத்து உரைப்பதுபோல், உன்னை என் நாக்கினால் தரம் குறையப்
பேசியிருக்கிறேன். இப்பொழுது உன்னுடைய
அனுமதியுடன் உன்னை என் மனத்துள் வைத்தேன்.
என்னையும் உன் திருவடிகளில் ஸமர்ப்பித்தேன்.
என் அப்பனே! என் இந்திரியங்களை ஆள்பவனே!
என் உயிரைக் காப்பவனே!
(6)
உன்னுடைய விக்கிரமம் ஒன்றொழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம்பால் சுவர்வழி
எழுதிக்கொண்டேன் மன்னடங்கமழு வலங்கைக்
கொண்ட இராமநம்பீ. என்னிடை வந்து
எம்பெருமான். இனியெங்குப் போகின்றதே?
பாசுர அனுபவம்
உன்னுடைய திருவிளையாட்டுக்களில் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சுவரிலெழுதும் சித்திரம்
போல என்னுடைய மனதிலே ப்ரகாசிக்கும் படி
பண்ணிக்கொண்டேன். க்ஷத்திரியர்கள் இருந்த இடம்
தெரியாமல் அழியும்படி கோடரியை வலதுகையில்
தரித்து பரசுராமாவதாரம் செய்தருளின குணபூர்த்தியைக்
கொண்டவனே! என்னிடத்திலே எழுந்தருளின பின்பு
உனக்கு வேறு புகலிடம் எங்கு இருக்க முடியும்?
(7)
பருப்பதத்துக் கயல்பொறித்த பாண்டியர்
குலபதிபோல் திருப்பொலிந்த சேவடி எஞ்சென்னியின்
மேல்பொறித்தாய் மருப்பொசித்தாய். மல்லடர்த்தாய்.
என்றென்று உன்வாசகமே உருப்பொலிந்த நாவினேனை
உனக்கு உரித்தாகினையே
பாசுர அனுபவம்
மஹாமேருவிலே தனது மீன் உருவம் பதித்தகொடியை நட்ட பாண்டிய வம்சத்து அரனைப்
போலே, அழகான சிகப்புத் தாமரை மலர் போன்ற
திருவடிகளை என் தலையின் மீது அலங்கரித்தவனே
என்றும், குவலயாபீடம் என்ற துஷ்ட யானையின்
கொம்பை முறித்தவனே என்றும், மல்யுத்த
வீரர்களைக் கொன்றவனே என்றும் இவ்வாறான உன்
குணங்கள் அடங்கிய திருநாமங்களைச் சொல்லிச்
சொல்லியே தழும்பேறின நாக்கையுடைய என்னை
உனக்கு உரியவனாக்கிக் கொண்டாயே!
(8)
அனந்தன்பாலும் கருடன்பாலும் ஐதுநொய்தாக
வைத்து என் மனந்தனுள்ளே வந்துவைகி வாழச்
செய்தாய் எம்பிரான். நினைந்து என்னுள்ளே
நின்றுநெக்குக் கண்கள் அசும்பொழுக நினைந்திருந்தே
சிரமம் தீர்ந்தேன் நேமி நெடியவனே.
பாசுர அனுபவம்
அனந்தனிடத்திலும், கருடனிடத்திலும் அன்பைமிக கொஞ்சமாக வைத்து, என் மனத்தினுள்ளே வந்து
அமர்ந்து என்னை வாழ வைத்தாய். இந்த வைபவத்தால்,
என் மனம் உருகி, கண்களில் நீர் பெருகியது. கையில்
சக்கரம் எந்திய பெரியோனே! நீ செய்த இந்த
உபகாரத்தை நினைத்து நினைத்து என்
வருத்தமெல்லாம் தீர்ந்து விட்டது.
(9)
பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்துஎன்
மனக்கடலில் வாழவல்ல மாயமணாளநம்பீ.
தனிக்கடலே தனிச்சுடரே தனியுலகே என்றென்று
உனக்கிடமாயிருக்க என்னை உனக்குஉரித்தாக்கினையே.
பாசுர அனுபவம்
குளிர்ச்சியான திருப்பாற்கடலில் படுத்துக்கொள்ளுவதை மறந்துவிட்டு, அங்கிருந்து ஓடிவந்து
என்னுடைய மனம் என்ற கடலில் வாழ்கின்ற மாயோனே!
திருமகளின் மணாளனே! பரிபூரணனே! தன்னிகரற்ற
இடங்களான திருப்பாற்கடலும், சூரியமண்டலமும்,
பரம பதமும் உனக்கு ஏற்ற வாழும் இடமாக
இருக்க, அவற்றை விடுத்து என்னை
உனக்கு அடிமையாக்கிக் கொண்டாயே!
(10)
தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவளநெடுங்
கொடிபோல் சுடரொளியாய் நெஞ்சினுள்ளே
தோன்றும் என்சோதிநம்பி. வடதடமும் வைகுந்தமும்
மதிள் துவராபதியும் இடவகைகள்இகழ்ந்திட்டு
என்பால் இடவகை கொண்டனையே.
பாசுர அனுபவம்
பெரிதான ஒரு மலையின் உச்சியில் பரிசுத்தமாகவிளங்குகின்ற ஒரு கொடி எல்லார்க்கும் காண
எளிதாக இருப்பது போல், என்னுடைய ஹ்ருதய
கமலத்தினுள் மிகத் தெளிவாக பளபளவென்று
தேஜஸ்ஸுடன் விளங்கும் எம்பெருமானே! வட
திசையிலுள்ள திருப்பாற்கடல்,, ஸ்ரீ வைகுண்டம்,
மதிளால் சூழப்பட்ட ஸ்ரீ த்வாரகை ஆகிய உனக்கு
ஏற்ற இடங்களையெல்லாம் துறந்து விட்டு,
என்னுள் வந்தமர்ந்து எனக்கு பேரருள் புரிந்தாயே!
(11)
வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர்
முகில் வண்ணனை ஆயரேற்றை அமரர்கோவை
அந்தணர் தமமுதத்தினை சாயைபோலப்
பாட வல்லார்தாமும் அணுக்கர்களே.
பாசுர அனுபவம்
வைதிகருடைய குலத்திலே அவதரித்தபெரியாழ்வாருடைய மனஸ்ஸில் கோயில் கொண்ட
கோப குமாரனை, குளுர்ச்சி பொருந்திய திரண்ட
மேகம் போன்ற நிறத்தையுடையவனை, இடையர்
களுக்குத் தலைவனை, நித்யஸூரிகளுக்கு ஸ்வாமியை,
ஸநகாதி ப்ரம்ம ரிஷிகளுக்கு அம்ருதம் போன்றவனைப்
பாடவல்லவர்கள் நிழலைப் போல எம்பெருமானுடன்
எப்போதும் நெருக்கமாக இருக்கப் பெறுவர்கள்.
பெரியாழ்வார் திருமொழி முற்றும்
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.
Thank you very much!!
ReplyDelete