நான்காம் பத்து மூன்றாம் திருமொழி



சாராம்சம்

திருமாலிருஞ்சோலை மலையின் அழகையும்,
சிறப்பையும், அது எம்பெருமானுக்கு எவ்வளவு
பிடித்த மலை என்பதையும் வெகு விமர்சையாக,
கீழ்கண்ட பாசுரங்களின் மூலம்,
பெரியாழ்வார் விவரிக்கிறார்.

(1)
உருப்பிணி நங்கை தன்னை மீட்பான் தொடர்ந்தோடிச்
சென்ற உருப்பனையோட்டிக் கொண்டிட்டு
உறைத்திட்டவுறைப்பன் மலை
பொருப்பிடைக் கொன்றை நின்று
முறியாழியுங்காசுங்கொண்டு
விருப்பொடு பொன் வழங்கும்
வியன் மாலிருஞ்சோலையதே

பாசுர அனுபவம்

ருக்மிணி பிராட்டியை தூக்கித் தேரில் அமர்த்தி
அழைத்துச் செல்லும் சமயம், அவளுடைய தம்பி
ருக்மன் அவளை மீட்க தேரைப் பின் தொடர்ந்து
ஓடி வர, அவனைத் தேரின் தரையில் வைத்துக்
கட்டிப் போட்ட வலிமை மிக்க கண்ணபிரானின்மலை
எதுவென்றால், கீழே விழும் கொன்றை மரங்களின்
இலைகளின் உடைந்த காம்புகளும், பூவிதழ்களும் ,
பிறர்க்கு பொன் மோதிரங்களையும், பொற்க்
காசுகளையும் வாரி வழங்குவது போல் வியப்பாக
காட்சி அளிக்கும் அந்த திருமாலிருஞ்சோலை தான்.

(2)
கஞ்சனும் காளியனும் களிறும் மருது மெருதும்
வஞ்சனையில் மடிய வளர்ந்த மணி வண்ணன்மலை
நஞ்சுமிழ் நாக மெழுந்தணிவி நளிர் மாமதியை
செஞ்சுடர் நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே

பாசுர அனுபவம்

வஞ்சனையால் கம்ஸன், காளியன்*, யானை**, மருத
மரங்கள், காளை" இவர்கள் அழிந்து போக, கோகுலத்தில்
வளர்ந்த நீல மணி நிறத்துடையவன் உறையும் மலை,
விஷத்தைக் கக்கும் ஒரு நாகப் பாம்பு தன் தலையைத்
தூக்கி குளிர்ச்சியுடன் விளங்கும் சந்திரனை சிவந்த
ஒளியுடன் கூடிய தனது நாக்கினால் வருடுவது போல்
காட்சியளிக்கும் திருமாலிருஞ்சோலையே!
*காளியன் என்ற கொடிய பாம்பு/
**குவலயாபீடம் என்ற கம்ஸனின் போர் யானை/
"அரிஷ்டாசுரன் என்ற காளை

(3)
மன்னு நரகன் தன்னைச் சூழ் போகிவளைத் தெறிந்து
கன்னி மகளிர் தம்மைக் கவர்ந்த கடல் வண்ணன் மலை
புன்னை செருந்தியொடு புனவேங்கையும் கோங்கும் நின்று
பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ்சோலையதே

பாசுர அனுபவம்

தமக்கு இனி அழிவில்லை என்று கர்வித்திருந்த நரகன்
என்ற அசுரனை, அவன் தப்பிப் போகாதபடி சூழ்ச்சியுடன்
வளைத்து, திருச்சக்கரத்தைப் பிரயோகித்து கொன்று,
பின்பு அவனால் அடைத்துவைக்கப்பட்டிருந்த கன்னிப்
பெண்கள் அனைவரையும் விடுவித்து அவர்களையும்
ஆட்கொண்ட அந்தக் கடல் நிற வண்ணன் கண்ணபிரான்
எழுந்தருளியிருக்கிற மலை எதுவென்றால், புன்னை,
செருந்தி, வேங்கை, கோங்கு போன்ற மரங்கள் பூக்களால்
நிறைந்து பொன்னால் கோர்த்த மாலைகள் போல்
காட்சியளிக்கும் சோலைகள் சூழப்பெற்ற
திருமாலிருஞ்சோலைதான்!

(4)
மாவலிதன்னுடைய் மகன் வாணன் மகளிருந்த
காவலைக் கட்டழித்த தனிக் காளை கருதும் மலை
கோவலர் கோவிந்தனைக் குற மாதர்கள் பண்குறிஞ்சிப்
பாவொலிபாடி நடம்பயில் மாலிருஞ்சோலையதே

பாசுர அனுபவம்

மகாபலியின் மகன் பாணனுடைய மகள் உஷை
இருந்த சிறையையும், காவலர்களையும் அழித்த,
காளை போன்ற இளைஞன் விரும்பித் தங்கியிருக்கும்
மலை எதுவென்றால், இடையர்கள் கோவிந்தனை, குறிஞ்சி
ராகத்தில் இசையமைத்து, பாடியும், நடனமாடியும்
அனுபவிக்கும் திருமாலிருஞ்சோலைதான்!

(5)
பலபல நாழஞ்சொல்லிப் பழித்த சிசு பாலன் தன்னை
அலை வலை மதவிர்த்த அழகனலங்காரன் மலை
குலமலை கோலமலை குளிர் மாமலை கொற்றமலை
நிலமலை நீண்டமலை திருமாலிருஞ்சோலையதே

பாசுர அனுபவம்

கண்ணனைக் கண்ட படி கடும் சொற்களால் பேசின
சிசுபாலனை, அவன் இறக்கும் தருவாயில் தன்னுடைய
அழகைக் காட்டி அவனுக்கிருந்த பகைமையுணர்வை
போக்கியருளிய அழகனும், அலங்காரப் ப்ரியனுமான
கண்ணபிரான் அருள் சாதிக்கும் மலை எதுவென்றால்,
காக்கும் இயல்பும், அழகும், குளிர்ச்சியும், வெற்றியும்,
செழிப்பும், நீண்ட உயரமும் கொண்ட
திருமாலிருஞ்சோலை மலை தான்!

(6)
பாண்டவர் தம்முடைய பாஞ்சாலி மறுக்க மெல்லாம்
ஆண்டங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்த அப்பன்மலை
பாண்தகு வண்டினங்கள் பண்கள் பாடி மதுப் பருக
தோண்டலுடைய மலை தொல்லை மாலிருஞ்சோலையதே

பாசுர அனுபவம்

பாண்டவர்களுடைய மனைவி த்ரௌபதியின் துன்பத்தை
மனதில் கொண்டு, அதே அவஸ்தையை துர்யோதனாதிகளின்
மனைவிகளும் அனுபவிக்கும்படி செய்த எம்பெருமான்
சேவை சாதிக்கும் மலை எதுவென்றால், ராகத்துடன்
கானம் பாடும் வண்டினங்கள் தேனைப் பருக ஏதுவாக
சோலைகளும், நீர் ஊற்றுகளும் நிறைந்த
பழமையுடன் திகழும் திருமாலிருஞ்சோலை மலை தான்!

(7)
கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்துஅரக்கர்தங்கள்
இனம் கழுவேற்று வித்த எழில் தோளெம்மிராமன் மலை
களங்கொழி தெள்ளருவி வந்து சூழ்ந்தகல் ஞாலமெல்லாம்
இனங்குழு வாடும் மலை எழில் மாலிருஞ்சோலையதே

பாசுர அனுபவம்

பொன்னால் செய்த காதணிகளை அணிந்த சீதா
பிராட்டிக்காக அம்புகளை ஏவி ராஷதர்களை வதம்
செய்த அந்த தோளழகன் ராமபிரான் அருள் சாதிக்கும்
மலை எதுவென்றால், பொன் போன்று தோற்றமளிக்கும்
அருவிகளிலிருந்து பெருகி வரும் சுத்தமான நீரில்
உலகத்தார் அனைவரும் திரளாக வந்து குளிக்கும்
அழகிய திருமாலிருஞ்சோலை மலை தான்!

(8)
எரி சிதறும் சரத்தால் இலங்கையனை தன்னுடைய
வரிசிலை வாயிற் பெய்து வாய்க் கோட்டம் தவிர்த்துகந்த
அரையணமரும் மலை அமரரொடு கோனும் சென்று
திரிசுடர் சூழும் மலை திருமாலிருஞ்சோலையதே

பாசுர அனுபவம்

அநீதியான பேச்சுடைய இலங்கை அரசன் ராவணனை
தன்னுடைய நெருப்பை தெரிக்கும் அம்புகளால் அழித்து
வென்ற சிறப்புடைய ராமபிரான் எழுந்தருளியிருக்கும் மலை
எதுவென்றால், இமையவர்களோடு சேர்ந்து தேவர்களின்
தலைவன் (இந்திரன்), ஓளி பொருந்திய சந்திரன், சூரியன்
ஆகியவர்கள் பய பக்தியுடன் வலம் வரும்
திருமாலிருஞ்சோலை மலை தான்!

(9)
கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து
மீட்டு மதுண்டுமிழ்ந்து விளையாடும் விமலன் மலை
ஈட்டிய பல் பொருள்கள் எம்பிரானுக்கடியுறையென்று
ஓட்டரும் தண் சிலம் பாறுடை மாலிருஞ்சோலையதே

பாசுர அனுபவம்

வராகமாக அவதரித்து பூமியை தனது கொம்பினால் மீட்டு
ரக்ஷித்தும், வாமனனாய் அவதரித்து மூன்றடி மண்ணை
உள்ளங்கையில் தானமாகப் பெற்று பூமியை அளந்தவனும்,
பிறகு பிரளய காலத்தில் அப்பூமியை வயிற்றில் அடக்கி,
பிரளயம் ஓய்ந்த பின் அதனை வெளியில் கொண்டு வந்தும்,
இப்படியாக லீலா வினோதங்களைச் செய்து விளையாடும்
நிர்மலனான ஸ்வாமி சேவை சாதிக்கும் மலை எதுவென்றால்,
எம்பெருமானுடைய பாதத்தில் சமர்ப்பணம் பண்ணுவதற்க்காக
பல அரிய பொருள்களை திரட்டிக்கொண்டு குளிர்ந்த
நீருடைய நூபுர கங்கையானது மலைச் சரிவில் பாய்ந்தோடி
வரும் திருமாலிருஞ்சோலை மலை தான்!

(10)
ஆயிரம் தோள் பரப்பி முடியாயிர மின்னிலக
ஆயிரம் பைந்தலைய அனந்த சயனன் ஆளும் மலை
ஆயிர மாறுகளும் சுனைகள் பலவாயிரமும்
ஆயிரம் பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே

பாசுர அனுபவம்

பரந்த ஆயிரம் தோள்களுடனும், ஆயிரம் மின்னும்
கிரீடங்களுடனும், விரிந்த ஆயிரம் தலைகளுடைய
நாகத்தின் மேல் பள்ளிகொண்டவனுமான எம்பெருமான்
ஆட்சி செய்யும் மலை எதுவென்றால் ஆயிரமாயிரம்
நதிகளையும், ஏரிகளையும், சோலைகளையும் உடைய
திருமாலிருஞ்சோலை மலை தான்!

(11)
மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை
நாலிரு மூர்த்தி தன்னை நால் வேதக் கடலமுதை
மேலிருங்கற்பகத்தை வேதாந்த விழுப் பொருளின்
மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனவே.

பாசுர அனுபவம்

மாலிருன்சோலை மலையை தனதாக்கிக் கொண்டவனும்,
ஒரு மலையைப் போன்றவனும், எட்டு எழுத்து மந்திரத்தின்
வடிவானவனும், நான்கு வேதக் கடலின் அம்ருதம்
போன்றவனும், வேதாந்தங்களின் உட்பொருளாக
விளங்குபவனும், ஜோதி ஸ்வரூபனுமான பெருமானைப்
போற்றும் இப்பாசுரங்கள் பெரியாழ்வார் இயற்றியதே!