சாராம்சம்
கண்ணன் தன்னுடைய பால்ய பருவத்தில்பண்ணும் சேஷ்டிதங்களை அழகாக சித்தரிக்கிறார்
பெரியாழ்வார். வெண்ணை, பால், தின்பண்டங்கள்
இவைகளை பிற வீடுகளில் புகுந்து திருடுவது
போன்ற செயல்களை செய்யும் கண்ணனின் மீது
ஆய்ச்சிகள் பழி சுமத்தி யசோதையிடம் குறை
கூற, யசோதையோ மகனிடம் கொண்ட பாசத்தால்
அவனை கண்டிக்கவும் முடியாமல் அவன்
செய்யும் வினோத லீலைகளை புரிந்து கொள்ளவும்
முடியாமல் தவிக்கிறாள். மேலே பார்ப்போம்.
(1)
வெண்ணை விழுங்கி வெறுங் கலத்தை
வெற்பிடை இட்டு, அதன் ஓசை கேட்கும்
கண்ணபிரான் கற்ற கல்வி தன்னைக்
காக்ககில்லோம் உன்மகனைக் காவாய்
புண்ணிற் புளிப் பெய்தால் ஒக்கும் தீமை
புரை புரையால் இவை செய்யவல்ல
அண்ணற் கண்ணான் ஓர் மகனை பெற்ற
அசோதைநங்காயுன்மகனைக் கூவாய்
பாசுர அனுபவம்
பிற வீடுகளில் மண் பானையில் வைக்கப்பட்டிருந்தவெண்ணையைத் திருடி அதை முழுமையாக
தின்று விட்டு, வெறும் பானையை கல்லின்
மேல் போட்டுடைத்து, அது உடையும் ஓசையைக்
கேட்டு கண்ணன் மகிழ்கிறான்! இவன் வம்பு
செய்வதையே கல்வியாக கற்றிருப்பதால்,
எங்களால் அவன் செய்வதை பொறுக்க இயலாது.
யசோதா! நீ கண்ணன் தீம்பு செய்வதை தடுக்க
வேண்டும்! புண்ணில் புளியைப் பொழிவதுபோல்
வீடுகள் தோறும் சென்று தீராத விஷமம் புரியும்
சாதுர்யம் படைத்த, தன் அண்ணனுக்கு ஒப்பான,
கண்ணனை மகனாய் பெற்ற யசோதா! உன்
மகனை அழைத்துக்கொள்!
(2)
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக
இங்கே கரிய குழல் செய்ய வாய் முகத்து எம்
காகுத்த நம்பீ வருக இங்கேஅரியன் இவன்
எனக்கு இன்று நங்காய்! அஞ்சனவண்ணா
அசலகத்தார் பரிபவம் பேசத் தரிக்ககில்லேன்
பாவியேனுக்கு இங்கே போதராயே
பாசுர அனுபவம்
வாமன மூர்த்தி! ராமச்சந்திரா! கருங் கூந்தலும்,செவ்வாயும், அழகிய முகமும் கொண்டவனே!
அதி வேகமாக இங்கே வரவேணும்! கண்ணனை
குறை கூறும் ஒரு பெண்ணை நோக்கி யசோதை
கூறுவதாவது: ஏ பெண்ணே! இவன் இப்போது
என் செல்லப் பிள்ளை. நான் கண்டிக்கிறேன் .
நீ போய் வா! யசோதை கண்ணனை நோக்கி
கூறுவதாவது: கண்ணா! மை நிறத்தை
உடையவனே! இப்படி எல்லோரும் உன்மேல் பழி
சுமப்பதை நான் சகித்துக் கொள்ள முடியாது.
நான் பாபம் பண்ணியிருக்கிறபடியால் தான்
இந்த அபாக்கியம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
நீ இங்கே வந்து என் பாபத்தை போக்கவேணும்.
(3)
திரு உடைப் பிள்ளைதான் தீயவாறு
தேக்கம் ஒன்றும் இலன்
தேசு உடையான்உருக வைத்த குடத்தொடு
வெண்ணெய் உறிஞ்சி
உடைத்திட்டு போந்து நின்றான்
அருகு இருந்தார் தம்மை
அநியாயம் செய்வதுதான்வழக்கோ
அசோதாய்!வருக
என்று உன்மகன் தன்னைக்
கூவாய்வாழ ஒட்டான் மதுசூதனனே.
பாசுர அனுபவம்
ஒரு இடைச்சி யசோதையை நோக்கி கூறுவதாவது:ஐஸ்வர்யம் படைத்த உன் பிள்ளை தீய காரியம்
செய்வதற்கு சிறிதும் தயங்குவதில்லை.
அப்படி செய்வதிலோ பெருமிதம் கொள்கிறான்.
இது எப்படிப் பொருந்தும். நான், உருக்குவதற்காக
குடத்தில் வைத்திருந்த வெண்ணையை
முழுமையாக உண்ட பின், அக்குடத்தையும்
உடைத்துப்போட்டு விட்டு வந்து நின்றான்.
உன் வீட்டின் அருகில் உள்ள எங்களை இப்படிப்
அநியாயம் பண்ணுவது தகுமோ! உன் மகனை
கூப்பிட்டு அழைத்துக்கொள். இல்லையேல் ,
இந்த மதுசூதனன் எங்களை வாழ விட மாட்டான்.
(4)
கொண்டல்வண்ணா! இங்கே
போதராயே கோயிற் பிள்ளாய்!
இங்கே போதராயே தென் திரை சூழ்
திருப்பேர்க் கிடந்த திருநாரணா!
இங்கே போதராயே உண்டு வந்தேன்
அம்மம் என்று சொல்லி
ஓடி அகம் புக ஆய்ச்சிதானும்
கண்டு எதிரே சென்று
எடுத்துக்கொள்ளக் கண்ணபிரான்
கற்ற கல்வி தானே.
பாசுர அனுபவம்
காள மேகத்தின் நிறத்தவனே! திருவரங்கச்செல்வனே!தெளிந்த ஜலத்தால் சூழப்பட்ட
திருப்பேரில் பள்ளிகொண்டிருப்பவனே,
ஸ்ரீமன் நாராயணனே ! பாலுண்ண இங்கே
வாராய் என்று யசோதை கண்ணனை புகழ்ந்து
அழைக்க, கண்ணனோ, நான் உணவு
உண்டுவிட்டுதான் வந்தேன் என்று கூறிக்கொண்டே
வீட்டிற்குள் ஓடி வர, யசோதை பெருமிதத்துடன்
அவனை எதிர்கொண்டு தன் இடுப்பில் தூக்கி
வைத்துக் கொள்கிறாள். இதுவும் கண்ணன்
கற்றுக்கொண்ட கல்விதானோ என வியக்கிறாள்!
(5)
பாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்
பல்வளையாள் என்மகளி இருப்பமேலை
அகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப்
பொழுது அங்கே பேசி நின்றேன் சாளக்கிராமம்
உடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப்
போந்து நின்றான் ஆலைக்கு கரும்பின்
மொழி அனைய யசோதை
நங்காய்! உன்மகனைக் கூவாய்.
பாசுர அனுபவம்
ஓரு ஆய்ச்சி யசோதையிடம் கூறுவதாவது:கரும்பை ஆலையிலிட்டு பிழியும் போது
ஏற்படும் ஓசையை ஒத்த இனிய மொழியை
பேசுபவளே! பல வளைகளால் தன் கைகளை
அலங்கரித்துக்கொண்டு என் மகள் பாலை
பாத்திரங்களில் கறந்து அவற்றை அடுப்பில்
ஏற்றி காத்து நிற்க, நான் அடுப்பை
பற்ற வைப்பதற்கு நெருப்பு எடுத்து வர
மேலகத்திற்கு சென்று ஒரு க்ஷணம் அங்கு
இருப்பவர்களுடன் பேசிக்
கொண்டிருக்கையில், ஸ்ரீசாளக்கிராம
மூர்த்தியான உன் மகன், பாத்திரங்களை
சாய்த்து பாலனைத்தையும் குடித்துவிட்டு,
ஒன்றுமறியாதவன் போல் இங்கு வந்து
நிற்கிறான்! உன் மகனை
கண்டித்து அழைத்துக்கொள்.
(6)
போதர் கண்டாய் இங்கே போதர்
கண்டாய் போதரேன் என்னாதே
போதர் கண்டாய் ஏதேனும் சொல்லி
அசலகத்தார் ஏதேனும் பேச
நான் கேட்கமாட்டேன் கோதுகலம்
உடைக்குட்டனேயோ!
குன்று எடுத்தாய்! குடம் ஆடு
கூத்தா! வேதப் பொருளே!
என் வேங்கடவா! வித்தகனே!
இங்கே போதராயே
பாசுர அனுபவம்
யசோதை கண்ணனை தன்னிடம் வருமாறுஅழைத்தும், கண்ணன் வர மறுக்கிறான்.
கண்ணா! அண்டை வீட்டுக்காரர்கள்
கோபமாக பேசி ஏதேனும் உன்மேல் பழி
சொல்ல, அவற்றை என்னால் தாங்கிக்கொள்ள
முடியாது. எல்லோராலும் விரும்பப்படுகிற
பாலகனே! மலையை விரலால் தூக்கிப்
பிடித்தவனே! குடங்களை மேலே எறிந்து
நடனமாடியவனே! வேதங்களின் உட்பொருளே!
'என் வேங்கடவா' என அனைவரும் போற்றும்
திருவேங்கடத்தில் நின்று அருள் பாலிப்பவனே!
அனைத்து வித்தைகளின் இருப்பிடமே!
கண்ணா! ஓடி வா ! இங்கே
சீக்கிரம் என்னிடம் ஓடி வந்துவிடு!
(7)
செந்நெல் அரிசி சிறு
பருப்புச் செய்த அக்காரம்
நறு நெய் பாலால்
பன்னிரண்டு திருவோணம்
அட்டேன் பண்டும் இப்பிள்ளை
பரிசு அறிவன்
இன்னமுகப்பன் நான்
என்று சொல்லி எல்லாம்
விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன்மகன் தன்னை
அசோதை நங்காய்! கூவிக்
கொள்ளாய் இவையும் சிலவே.
பாசுர அனுபவம்
அழகிய யசோதா! பன்னிரண்டு திருவோணதிருநாட்களின் விரதத்தை முன்னிட்டு,
செந்நெல் அரிசி, பருப்பு, வெல்லம்,
நறுமணம் மிக்க நெய், பால் சேர்த்து நான்
சமைத்த பக்ஷணங்களை ஒன்று விடாமல்
விழுங்கிவிட்டு இன்னும் என்ன சாப்பிட
இருக்கிறது என்று கேட்பதுபோல் உன்
பிள்ளை வந்து நிற்கிறான்! உன் பிள்ளையின்
இந்த விஷமத் தனத்தை நன்கு அறிவேன்.
சிலவற்றைத்தான் கூறினேன்!
அவனை அழைத்துக்கொள்.
(8)
கேசவனே! இங்கே போதராயே
கில்லேன் என்னாது
இங்கே போதராயே நேசமிலாதார்
அகத்து இருந்து
நீ விளையாடாதே போதராயே
தூசனம் சொல்லும்
தொழுத்தைமாறும் தொண்டரும்
நின்ற இடத்தில்
நின்று தாய் சொல்லுக் கொள்வது
தன்மம் கண்டாய் தாமோதரா!
இங்கே போதராயே.
பாசுர அனுபவம்
யசோதை கண்ணனைப் பார்த்துக்கூறுவதாவது: இங்கே வரமாட்டேன் என்று
சொல்லிக் கொண்டிராமல், என்னருகில்
வா! உன்னை விரும்பாமலிருப்பவர்கள்
வீட்டில் போய் நீ விளையாடாமல் இங்கே
வந்து விடு. இடைச்சிமார்களின்
வேலைக்காரர்கள் உன்னைப் பழி சொல்லால்
ஏசுகிறபடியால் அவர்கள் அருகில் நிற்காதே.
தாய் சொல்வதைக் கேட்டு அதன்படி நடப்பது
தர்மமாதலால், நீ இங்கே வந்துவிடு.
(9)
கன்னல் இலட்டுவத்தோடு
சீடை காரெள்ளின்
உண்டை கலத்தில்இட்டு என்
அகம் என்று நான்
வைத்துப் போந்தேன்
இவன்புக்குஅவற்றைப்
பெருத்திப் போந்தான் பின்னும்
அகம்புக்கு உறியை
நோக்கிப் பிறங்கு ஒளி
வெண்ணையும் சோதிக்கின்றான்.
உன்மகன் தன்னை அசோதைநங்காய்!
கூவிக்கொள்ளாய் இவையும் சிலவே
பாசுர அனுபவம்
யசோதா பிராட்டியே! பாகுடன் சேர்த்துப்பிடித்த லட்டு,சீடை, எள்ளுருண்டை
ஆகியவற்றை பண்ணி என் வீட்டில்
பாத்திரங்களில் வைத்து நான் வெளியே
வந்தேன். அவ்வளவில், இப்பிள்ளை என் வீடு
புகுந்து அவற்றை மிச்சமில்லாமல் உண்டுவிட்டுப்
போனான். மறுபடி வீட்டுக்குள் நுழைந்து,
உறியைப் பார்த்து நல்ல வெண்ணை
இருக்கிறதா என ஆராய்கிறான். இவை
அவன் செய்யும் நிறைய விஷமங்களில்
ஒருசிலவே. கண்ணனை உடனே அழைத்துச்செல்.
(10)
சொல்லி லரசிப் படுதி நங்காய்
சூழலுடையன் உன் பிள்ளை
தானே இல்லம் புகுந்துஎன் மகளைக்
கூவிக் கையில் வளையைக்
கழற்றிக் கொண்டு கொல்லையில்
நின்றும் கொணர்ந்து விற்ற
அங்கொருத்திக்கு அவ் வளைகொடுத்து
நல்லன நாவற் பழங்கள்
கொண்டு நானல்லேனென்று சிரிக்கின்றானே.
பாசுர அனுபவம்
யசோதையைப் நோக்கி ஒருத்தி கூறுவதாவது:ஏ பெண்ணே! உன்
பிள்ளை பல வஞ்சனை செயல்களைச்
செய்கிறான் எனக் கூறினால் உனக்கு கோபம்
வருகிறது! அவன் என் வீட்டில் புகுந்து என்
மகளை அழைத்து அவள் கையிலிருந்து
வளையைக் கழட்டி கொண்டு கொல்லை
புறங்களில் போய் காத்திருந்து அங்குவந்த
நாவல் பழம் விற்கும் ஒருத்தியிடம் அவ்
வளையல்களை விற்று, அதற்கு பதிலாக நல்ல
நாவல் பழத்தையும் பெற்று உண்டு, நான்
ஒன்றும் செய்யவில்லையே, என என்னிடம்
வந்து வாதாடுகிறான்! சிரிக்கிறான்!
(11)
வண்டுகளித் திரைக்கும் பொழில்சூழ்
வருபுனல் காவிரித்
தென்ன ரங்கன் பண்டவன் செய்த
கிரீடை யெல்லாம்
பட்டர்பிரான்விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக் குனிக்க
வல்லார் கோவிந்தன் தன்
அடியார்களாகி எண்திசைக்கும்
விளக்காகி நிற்பார் இணையடி
என்தலை மேலனவே.
பாசுர அனுபவம்
வண்டுகள் தேனைப் பருகி ஆரவாரம் செய்யும்சோலைகள் நிரம்பப் பெற்றதும், நீர் பொங்கி
கரை புரளும் காவிரியும் சூழ்ந்த திருவரங்கத்தில்
நித்ய வாசம் புரியும் எம்பெருமானின்
முற்காலத்திய லீலா விநோதங்களையெல்லாம்,
விஷ்ணுவை எப்பொழுதும் மனதில் தியானம்
பண்ணும் பெரியாழ்வார், பாசுரங்களாக
இயற்றியுள்ளதை, கூத்தாடிப் பாட வல்லார்
கோவிந்தன் அடி பணிபவர்களாகி, எட்டு
திக்கும் விளக்குபோல் ஞானத்தால் பிரகாசிப்பர்.
அப்பேற்பட்ட அடியார்களின் திருவடிகள்
என் முடியை அலங்கரிக்கட்டும்.