திருப்பல்லாண்டு




(1)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
செவ்வடி செவ்விதிருக் காப்பு

பாசுர அனுபவம்

வைகுண்டநாதனும், சர்வலோக ரக்க்ஷகனுமான
எம்பெருமானுக்கு மங்களாஸாஸநம் பாடுகிறார்
பெரியாழ்வார். நீல நிற மணி போன்ற
எம்பெருமானுக்கு எந்த வகையிலும் ஆபத்து
வந்து விடக்கூடாதே என்ற அச்சத்தினால்
விளைந்ததுதான் இப்பல்லாண்டு பாசுரங்கள்.
புஜ பல பராக்ரமனான பெருமான் பல
அவதாரங்களை எடுத்து அசுரர்களையும்,
அரக்கர்களையும் அழித்தது ஆழ்வாருக்கு
தெரியாத விஷயம் அல்ல. இருந்தாலும்
எம்பெருமானுடைய சிவந்த தாமரையையொத்த
திருவடிகளுக்கு ரக்ஷயை கோருகிறார் ஆழ்வார்
என்றால் அது அவருக்கு எம்பெருமானிடம்
இருக்கும் அலாதியான அன்பையும்,
பக்தியையும் காட்டும்.
(2)
அடியோ மோடும்நின்னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும்
சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும்அப்
பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே

பாசுர அனுபவம்

இப்பாசுரத்தில் ஆழ்வார் தனக்கும் பகவானுக்கும்
உள்ள இணைபிரியா பந்தத்திற்கு ஒரு குறையும்
வந்து விடக்கூடாது என்றும், மேலும் அது
நித்தியமாய் இருக்கவும் பல்லாண்டு பாடுகிறார்.
இதுவே நமது லட்சியமாக இருக்க வேண்டுமல்லவா?
எம்பெருமானே, உன் வலது மார்பை விட்டு
அகலாமல் அமர்ந்து கொண்டு அடியார்களுக்கு
அருள் பாலித்துக்கொண்டிருக்கும்
அலர்மேல்மங்கைக்கு மங்களம் உண்டாகுக.
அவள் மூலமாகத்தானே நாம் பகவானை அணுக
முடியும். எம்பெருமானுடைய வலது திருக்கரத்தில்
நித்தியவாசம் செய்பவரும்,ஜோதிஸ்வருபனாய்
உள்ளவரும், பகைவர்களை எரித்து அழிப்பவருமான
ஸ்ரீ சுதர்சன ஆழ்வானுக்கு மங்களம். நிகரற்ற
பெருமையுடைய ஸ்ரீ கிருஷ்ணனுடைய இடத்
திருக்கையில் ஏந்தியிருக்கும் சங்குதான் பாஞ்சஜன்யம்.
இச்சங்கை பாரதப்போரில் ஸ்ரீ கிருஷ்ணன் முழங்கின
உடனேயே பாண்டவர்களுடைய வெற்றி
உருதியாகிவிட்டதல்லவா? நாமும் பகவான்
பக்கம் இருந்தால் சகல கஷ்டங்களிலிருந்தும்
விடுபடலாமல்லவா. அப்பாஞ்சஜன்யத்திற்கு
பல்லாண்டு காலம் மங்களம் உண்டாகுக.
(3)
வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து
மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள்
குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள்
இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப்
பல்லாண்டு கூறுதமே

பாசுர அனுபவம்

ஆழ்வார் அக்கறையுடன் எல்லோரையும்
எம்பெருமானை வழிபட அழைக்கிறார் .
முதலாக வெறும் வயிற்று பிழைப்பிற்காக
மட்டுமோ அல்லது வேறுபல லாபத்திற்காகவோ
பிற தேவதைகளை வேண்டி நிற்பவர்களை
ஒதுக்கி விடுகிறார். ஞானத்தை விரும்பி
எம்பெருமானை அடைய நினைப்பவர்களுக்கு
முதலிடம் கொடுக்கிறார். ராக்ஷஸர்கள் வாழ்ந்த
இலங்கையை தனது வானர படையைக்கொண்டு
அழித்த ராமனின் பெருமையையும் இங்கு பறை
சாற்றி அத்தெய்வத்துக்கு மங்களாஸாஸநமும்
பண்ணுகிறார் ஆழ்வார். காலங்காலமாக அவர்
போற்றும் அப்பெருந்தெய்வத்தையே
வழிபட்டு உய்யுமாறு நம்மையும்
அழைக்கிறார் என்றால் மிகையாகாது.
(4)
ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து
எங்கள் குழாம்புகுந்து
கூடுமனமுடையீர்கள் வரம்பொழி
வந்தொல்லைக் கூடுமினோ
நாடுநகரமும் நன்கறிய
நமோ நாராயணாயவென்று
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்வந்து
பல்லாண்டு கூறுமினே.

பாசுர அனுபவம்

ஆழ்வார் இப்பாசுரத்தில் ஒரு மகத்தான
உண்மையை ஆஸ்தீகர்களுக்கு கூற விரும்புகிறார்.
அது என்னவென்றால் ஆத்மாநுபவத்தில் ஆசையை
விட்டு விட்டு பகவத் அனுபவத்தில் ஆசையை
வையுங்கள். ஆத்மாநுபவத்தினால் கைவல்யம்
என்ற மோக்ஷசுகம் கிட்டினாலும் அது சுய
லாபத்திற்காக இருக்கும். அது முழு
அனுபவமாகயிறாது. மேலும் கைவல்யத்தில்
இருந்துகொண்டு மிக உயர்ந்த மோக்ஷமாகிய
வைகுந்தத்தை அடைய முடியாது என்கிற
சூட்சுமத்தை ஆழ்வார் விளக்குகிறார். பக்தர்களே,
பொருளிலும், கைவல்யதிலும் ஆசையை விட்டு
"நமோ நாராயணாய" என்று ஊராரும்,
உலகத்தாரும் நன்கு உணரச்செய்யுங்கள்,
இதுவே நாம் எம்பெருமானுக்கு செய்யும்
மங்களாஸாஸநம் என்கிறார் ஆழ்வார்.
(5)
அண்டக் குலத்துக்கதிபதி யாகி அசுரரிராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த
இருடீகேசன்தனக்கு தொண்டக் குலத்திலுள்ளீர்
வந்தடிதொழுது ஆயிர நாமம்சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு
பல்லாயிரத் தாண்டென்மினே.

பாசுர அனுபவம்

இப்பாசுரத்தில் ஆழ்வார் கூறும் கருத்து : ஸ்ரீமன்
நாராயணனே அகில உலகங்களையும் படைத்து
அதை நிர்வஹித்தும் வருகிறான். நம்முடைய
வேதங்களும், உபநிஷத்களும் இதையே நமக்கு
எடுத்துரைக்கின்றது. அவ்வப்போது அவதாரங்களை
எடுத்து அசுரர்களையும், ராக்ஷஸர்களையும்
நிர்மூலமாக ஒழித்து ஜகத் ரக்ஷணம் பண்ணி
வருகிறான் ஹ்ருஷீகேசனான எம்பெருமான்.
உன்னதமான மோக்ஷத்தை கொடுப்பவனும் அவனே.
அப்படியிருக்க வேறு பிரயோஜனத்தை எதிர்பாராமல்
அவனுடைய ஆயிரம் திருநாமங்களை செப்புவது
தான் நாம் செய்யவேண்டியது.இதை விடுத்து
ஐஸ்வர்யத்தயே நாம் அவனிடம் கோருவது தவறான
பழக்க தோஷம். அவன் திருவடிகளுக்கு பல்லாண்டு
பாடுவதே மிகச்சிறந்தது என்கிறார் ஆழ்வார்.
(6)
எந்தை தந்தை தந்தைதம் மூத்தப்பன்
ஏழ்படி கால்தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்
திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதி லரியுரு வாகி
அரியை யழித்தவனை
பந்தனை தீரப்பல் லாண்டுபல்லாயிரத்
தாண்டென்று பாடுதமே.

பாசுர அனுபவம்

ஆழ்வார் இப்பாசுரத்தில் தாம் தம் தந்தைமுதல்
ஏழு தலைமுறையாக பகவானுக்கே கைங்கர்யம்
செய்துவருகிறோம் என பெருமையுடன் கூறுகிறார்.
மிகுந்த கோபத்துடன் அவதரித்த
நரசிம்மாவதாரத்தை நமக்கு நினைவூட்டுகிறார்.
நரசிம்மர் உக்கிரமாக அவதரித்திருந்தாலும்,
பெருமானாகையால் அவர் அவதரித்த வேளை
அழகான சாயங்கால சந்தியா நேரம் மற்றும்
திருவோண திருநக்ஷத்திரம் என்று வருணித்து,
நரசிம்மரிடமிருந்த தீராத கோபத்தை ஆழ்வார்
தணிக்க முயல்கிறார் போலும். நரசிம்மனுக்கு
ஹிரண்கசிபுவை சம்ஹரித்தும் கூட கோபம்
அடங்கவில்லை. அந்த அனுபவத்தை மனத்தில்
இருத்தி நரசிம்மனுக்கு அவன் கோபம் தணிய
மங்களாஸாஸநம் பாடுகிறார் ஆழ்வார் .
(7)
தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி
திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று
குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்
தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப்
பல்லாண்டு கூறுதுமே.

பாசுர அனுபவம்

நமது வலது கையில் சக்கரச்சின்னமும் இடது
கையில் சங்குச்சின்னமும் ஆசாரியன் மூலமாக
முத்திரையாக பதித்துக்கொள்வது ஸ்ரீவைஷ்ணவ
சம்பிரதாயம். தாமும் தமது சந்ததியரும்
இச்சின்னங்களை பதித்துக் கொண்டுதான்
காலம் காலமாக பகவானுக்கு தொண்டுபுரிவதாக
கூறுகிறார் ஆழ்வார். சக்ரத்தை பெருமான்
தனது வலது திருக்கையில் தரித்துக்கொண்டு,
தேவைப்படும்போது பேராயுதமாக
பிரயோகிப்பான். சக்கரத்தின் அம்சமான
ஸ்ரீ சுதர்சனாழ்வாரின் பெருமையை நமக்கு
ஆழ்வார் இப்பாசுரத்தின் மூலம் தெரிவிக்கிறார்.
சிவப்பு நிறத்தோடு கூடிய மிக்க ஒளியுடன்
பிரகாசிக்கின்ற ஸ்ரீ சுதர்சனாழ்வான்
முன்பொருசமயம் மாயப் பிரயோகம் செய்து
போர் தொடுத்த பாணாசுரனை அவனுடைய
ஆயிரம் தோள்களையும் வீழ்த்தி வதம்
செய்து ரத்த பெருக்கை எற்படுத்தினார்.
இப்பேற்பட்ட ஸ்ரீ சுதர்சனாழ்வானுக்கும்
எம்பெருமானுக்கும் மங்களாஸாஸநம்.
(8)
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும்
அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு
காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை
வெள்ளுயி ராக்கவல்ல
பையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப்
பல்லாண்டு கூறுவனே.

பாசுர அனுபவம்

முந்தய ஒரு பாசுரத்தில் ஐஸ்வர்யத்தையே
பிரதானமாகக் கருதி பெருமானை
வழிபடுபவர்களை கண்டித்திருந்தார். ஆனால்
அவர்களுக்கும் ஒரு சமாதானமாய்
இப்பாசுரம் அமைந்துள்ளது. வாழ்க்கையை
முறையாக நடத்த தேவையான
ஐஸ்வர்யத்தை பெருமானிடம் பிரார்த்தித்து
பெற்றுக்கொள்வதில் தவறில்லை.
உட்கொள்ள நல்ல உணவு (நெய், பால், தயிர்
போன்றவை), கழுத்து காதுக்கு
அணிகலன்கள், உடம்பில் பூசிக்கொள்ள
வாசனை திரவியங்கள், சேவகர்கள்
இவை எல்லாம் தேவையான அளவு கொடுத்து
பகவான் எங்களை சாத்வீகர்களாக
மாற்றி பகவத் கைங்கர்யத்தில் ஊக்குவித்தான்
என்பதாக, முன்பு ஐஸ்வர்யத்தை
கோரியவர்களே இப்பொழுது திருந்தியவர்களாக
இதை கூறுவதாக பாசுரத்தை
அமைத்துள்ளார். நாகப்பாம்பிற்கு
விரோதியான கருடனை கொடியாக உடைய
எம்பெருமானுக்கு மங்களாஸாஸநம்.

(9)
உடுத்துக் களைந்தநின் பீதக வாடை
யுடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய்மலர் சூடிக் களைந்தன
சூடும்இத் தொண்டர்களோம்
விடுத்த திசைக்கரு மம்திருத் தித்திரு
வோணத் திருவிழவில்
படுத்தபைந் நாகணைப் பள்ளிகொண்
டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

பாசுர அனுபவம்

இப்பாசுரம் பன்மை சொல்லில் அமைந்துள்ளது.
எம்பெருமானிடம் கைங்கர்யம்
செய்பவர்களெல்லாம் சேர்ந்து எம்பெருமானைக்
குறித்து பல்லாண்டு பாடுகிறார்கள். அது
மட்டுமில்லாமல் அவர்கள் பெருமான்
உடுத்திய உடையையே உடுத்தார்கள், அவன்
புசித்த பின் மீந்ததை உண்டார்கள்,
அவன் சாற்றிக்கொண்ட துளசி மாலையை
அணிந்து மகிழ்ந்தார்கள் மற்றும்
அவன் இட்ட காரியங்களை செய்து
முடித்தார்கள். ஒரு ச்ரவண நன்னாளில்
பாம்பணை பள்ளிகொண்டானை குறித்து
பல்லாண்டு பாடுகிறார்கள்.
இப்பாசுரத்தில் ஒரு உண்மையான ஸ்ரீ
வைஷ்ணவனின் வாழ்க்கை முறையை
ஆழ்வார் அழகாகச் சித்தரிக்கிறார்,
(10)
எந்நாள் எம்பெரு மான்உன் தனக்கடி
யோமென் றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில்
வீடுபெற்று உய்ந்தது காண்
செந்நாள் தோற்றித் திருமதுரையுள்
சிலை குனித்து ஐந்தலைய
பைந்நா கத்தலை பாய்ந்தவனே
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே

பாசுர அனுபவம்

கைவல்யர்கள் எம்பெருமானுக்கு அடியவர்களாக
மாறியபின் அவர்களும் அவர்களுடைய
சந்ததியரும் நல்லகதியடைந்து
உயர்ந்துவிட்டார்களாம். எம்பெருமானுக்கு
அடிமைப்பட்டு வாழ்வதே சிறந்த கதியைக்
கொடுத்துவிடும் என்று சுட்டிக்காட்டுகிறார்
ஆழ்வார். நல்ல நக்ஷத்திரத்தில் அழகான
வடமதுரையில் திருவவதாரம் செய்த எம்பெருமான்
பல சாகசங்கள் புரிந்தான். அவற்றுள், கம்ஸனின்
ஆயுத சாலையில் புகுந்து வில்லை முறித்ததையும்,
காளியன் என்ற கொடிய ஐந்து தலை ஸர்பத்தின்
மீதேறி நர்த்தனமாடியதையும் அனுபவித்து
மங்களாஸாஸநம் செய்கிறார் ஆழ்வார்.
(11)
அல்வழக் கொன்றுமில் லாஅணி கோட்டியர்
கோன்அபி மானதுங்கன்
செல்வனைப் போலத் திருமா லேநானும்
உனக்குப் பழவடியேன்
நல்வகை யால்நமோ நாரா யணாவென்று
நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திர னேஉன்னைப்
பல்லாண்டு கூறுவனே.

பாசுர அனுபவம்

எம்பெருமானை சரியாக தெரிந்துகொள்ளாமல்
இத்தனை நாள் வரை வேறு அநீதி வழிகளில்
சென்று கொண்டிருந்தவர்களை மாற்றி
அமைத்து, ஆத்மா பகவானுக்கு சேஷனாய்
இருப்பவன்தான், ஸ்வதந்த்ரன் அல்லன்
என்பதையும் புரிய வைத்தான் எம்பெருமான்.
ஆழ்வார் பெருமானிடம் முறையிடுவதாவது -
அநீதிகளற்ற திருக்கோட்டியூரின் தலைவனான
செல்வநம்பி எப்படி உனக்கு தாஸனோ
அப்படியே என்னையும் உன்
தாஸனாக்கிக்கொள். உன் பல நாமங்களை
பாடியும், நமோ நாராயணா என்று
ஸ்மரிதுக்கொண்டும் தூய்மையாக இருக்கும்
உன்னை மங்களாஸாஸநம் பண்ணுவேன்.
(12)
பல்லாண் டென்று பவித்திரனைப்
பரமேட்டியை சார்ங்கமென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர்
விட்டு சித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார்
நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனைச்
சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே.

பாசுர அனுபவம்

ஸ்ரீ வில்லிபுத்தூரில் பிறந்த விஷ்ணுசித்தன்
என்றழைக்கப்படுகிற பெரியாழ்வார் மிகவும்
ரசித்தருளிய இப்பல்லாணடு பாசுரங்களை
யார் யார் 'நமக்கு நல்ல காலம் வந்தது'
என்று மகிழ்ந்து அனுசந்திப்பார்களோ
அவர்கள் பரமபத நாதனும், பரிசுத்தனும்,
சார்ங்கமென்னும் வில்லை ஏந்தியவனுமான
பரமாத்மனை-ஸ்ரீமன் நாராயணனை எப்பொழுதும்
சூழ்ந்திருந்து அப்பரமாத்மனுக்கு பரமபதத்தில்
மங்களாஸாஸநம் பண்ணும் பாக்கியம் பெறுவர்.