சாராம்சம்
திருவரங்கத்தில் அன்று வாழ்ந்த மக்கள் எப்படி வேதம்ஒதுவதில் நிபுணர்களாக இருந்தார்கள், எப்படி விருந்தோம்பல்
செய்வதில் சிறந்தவர்களாக விளங்கினார்கள் என்பதைப்
பற்றியும், காவேரி ஆற்றின் விஷேத்தையும், எம்பெருமானின்
அவதார சாகசங்களையும், பெரியாழ்வார் இப்பாசுரங்களின்
வழியாக நமக்கு அருளிச் செய்கிறார்.
(1)
மாதவத்தோன் புத்திரன்போய்* மறிகடல்வாய் மாண்டானை*
ஓதுவித்த தக்கணையா* உருவுருவே கொடுத்தானுர்*
தோதவத்தித் தூய்மறையோர்* துறைபடியத் துளும்பிஎங்கும்*
போதில் வைத்த தேன்சொரியும்* புனலரங்கம் என்பதுவே.
பாசுர அனுபவம்
மகா தபஸ்வியான ஸாந்தீபிணியின் இறந்துபோன மகனை குருதக்ஷிணையாக உயிருடன் மீட்டுக் கொடுத்த எம்பெருமானின்
ஊரானது, நன்கு தோய்த்து உலர்த்தின வஸ்த்திரங்களை
உடுத்திக் கொண்டு வேதத்தை ஓதுபவர்கள் காவேரித் துறையில்
மூழ்கிக் குளிக்கையில் அதனால் உண்டான அலைகளினால்
தாமரைப் பூக்களிலுள்ள தேன் பெருகி நிற்கும் நீரையுடைய
திருவரங்கம் என்னும் ஊர்தான்.
(2)
பிறப்பகத்தேமாண்டொழிந்த* பிள்ளைகளை நால்வரையும்*
இறைப்பொழுதில் கொணர்ந்துகொடுத்து* ஒருப்படித்த
உறைப்பனுர்*மறைப்பெருந்தீ வளர்த்திருப்பார்* வருவிருந்தை
அளித்திருப்பார்* சிறப்புடைய மறையவர்வாழ் திருவரங்கம் என்பதுவே.
பாசுர அனுபவம்
பிறந்த உடனேயே, அதே இல்லத்தில், இறப்பை எய்திய நான்குபிள்ளைகளையும் ஒரு கண நேரத்தில் உயிருடன் மீட்டு
பெற்றோர்களிடம், அவர்கள் சம்மதத்துடன் கொடுத்த அந்த
எம்பெருமான் அருள் சாதிக்கும் ஊர், வேதத்தில் விதித்தபடி
பெரு வேள்விகளை செய்துகொண்டும், தங்கள் கிருகங்களுக்கு
வரும் விருந்தினர்களை உப்சரித்துக் கொண்டும், இப்படியான
சிறப்புகளுடைய வேதமோதுபவர்கள் வாழும்
திருவரங்கம் என்னும் ஊர்தான்.
(3)
மருமகன் தன் சந்ததியை* உயிர்மீட்டு மைத்துனன்மார்*
உருமகத்தே வீழாமே* குருமுகமாய்க் காத்தானுர்*
திருமுகமாய்ச் செங்கமலம்* திருநிறமாய்க் கருங்குவளை*
பொருமுகமாய் நின்றலரும்* புனலரங்கம் என்பதுவே.
பாசுர அனுபவம்
மருமகன் அபிமன்யுவின் பிள்ளை பரீக்ஷித்தை உயிருடன் மீட்டும்,மைத்துனர்களான பாண்டவர்களை பாரதப் போரில் மாளாமல்
குருவாய் இருந்து காத்தவனின் ஊர், எம்பெருமானின் திரு முகம்
போன்ற செந்தாமரைப் பூக்களும், அவனது திருமேனியின்
நிறம் போன்ற கரு நெய்தல் பூக்களும் ஒன்றுக்கொன்று உரசி
நிற்கும்படி நீர் வளம் கொண்ட திருவரங்கம் என்னும் ஊர்தான்.
(4)
கூன்தொழுத்தை சிதகுரைப்பக்* கொடியவள் வாய்க்
கடியசொற்கேட்டு ஈன்றெடுத்த தாயரையும்* இராச்சியமும்
ஆங்கொழிய* கான்தொடுத்த நெறிபோகிக்* கண்டகரைக்
களைந்தானுர்* தேன்தொடுத்த மலர்ச்சோலைத்*
திருவரங்கம் என்பதுவே.
பாசுர அனுபவம்
கூனைவுடைய மந்தரை குற்றச் சொற்களைக் கூற,கொடியவளான கைகேயியின் வாயால் சொன்ன கடும்
சொல்லைக் கேட்டு, பெற்ற தாய் கௌசல்யாவையும்.
ராஜ்யத்தையும் உதறிவிட்டு, அடர்ந்த காடுகளின் வழி
சென்று, சாதுக்களை துன்புருத்தும் அரக்கர்களை அழித்த
எம்பெருமான் அருள் சாதிக்கும் ஊர், தேன் சொரியும்
பூக்களுடன் கூடிய சோலைகளையுடைய
திருவரங்கம் என்னும் ஊர்தான்.
(5)
பெருவரங்கள் அவைபற்றிப்* பிழக்குடைய இராவணனை*
உருவரங்கப் பொருதழித்து*இவ்வுலகினைக் கண்பெறுத்தானுர்
குரவரும்பக் கோங்கலரக்* குயில்கூவும் குளிர்பொழில்சூழ்*
திருவரங்கம் என்பதுவே* என் திருமால் சேர்விடமே.
பாசுர அனுபவம்
அரிய வரங்களைப் பெற்று, அவற்றை துர் உபயோகப் படுத்திதப்பு செய்வதையே தொழிலாகக் கொண்ட ராவணனைப் போர்
புரிந்து உரு தெரியாமல் அழித்து இவ்வுலகினை ரக்ஷித்த
எம்பெருமான் இருக்கும் ஊர், குரவ மரங்கள் அரும்பு
விட்டும், கோங்கு மரங்கள் பூக்களைச் சொரிந்தும், குயில்கள்
இன்பமாய்ப் பாடியும், குளிர்ந்த சோலைகளால் சூழப்பெற்று
இருக்கும் திருவரங்கம் என்னும் ஊர்தான்.
(6)
கீழுலகில் அசுரர்களைக்* கிழங்கிருந்து கிளராமே*
ஆழிவிடுத்து அவருடைய* கருவழித்த அழிப்பனுர்*
தாழைமடல் ஊடுரிஞ்சித்* தவளவண்ணப் பொடியணிந்து*
யாழின் இசை வண்டினங்கள்* ஆளம்வைக்கும் அரங்கமே.
பாசுர அனுபவம்
அசுரர்கள் பாதாள உலகத்திலிருந்து வெளிக் கிளம்பாமல் திருச்சக்கரத்தை ப்ரயோகித்து அவர்களை அடியோடு அழித்த
பராக்கிரமுள்ள எம்பெருமானின் ஊர், வண்டினங்கள் தாழம்பூ
இதழ்களில் புகுந்து உடம்பை உரசி அதனால் உடம்பில்
வெண்ணிற மகரந்தப் பொடி படிந்தபடி, வீணையின்
நாதத்தைப் போல் இனிய ரீங்காரத்துடன் இசை பாடும்
திருவரங்கம் என்னும் ஊர்தான்.
(7)
கொழுப்புடைய செழுங்குருதி* கொழித்திழிந்து குமிழ்த்தெறிய*
பிழக்குடைய அசுரர்களைப்* பிணம்படுத்த பெருமானுர்*
தழுப்பரிய சந்தனங்கள்* தடவரைவாய் ஈர்த்துக்கொண்டு*
தெழிப்புடைய காவிரிவந்து* அடிதொழும் சீரரங்கமே.
பாசுர அனுபவம்
கொழுப்பும், வளமும் நிறைந்த ரத்தம் பெருக்கெடுத்து ஓட,பிழைகளையே செய்யும் அசுரர்களைப் பிணமாக்கிய
எம்பெருமானின் ஊர், கைகளால் தழுவ முடியாத சந்தன மரங்கள்
பெரிய மலைகளிலிருந்து அடியோடு பிடுங்கப்பட்டு, சத்ததுடன்
ஓடும் காவேரி ஆற்றால் இழுக்கப் பட்டு, பெருமானின் திருவடியில்
சமர்ப்பித்து சேவிக்கும் பெருமையுடைய திருவரங்கமே!
(8)
வல்லெயிற்றுக் கேழலுமாய்* வாளேயிற்றுச் சீயமுமாய்*
எல்லையில்லாத் தரணியையும்* அவுணனையும் இடந்தானுர்*
எல்லியம்போது இருஞ்சிறைவண்டு* எம்பெருமான் குணம்பாடி*
மல்லிகை வெண்சங்கூதும்* மதிளரங்கம் என்பதுவே.
பாசுர அனுபவம்
கடினமான தந்தங்கள்/பற்களுடன் வராஹ அவதாரமெடுத்தும்,வெண்மையானதும், கூர்மையுடையதுமான பற்களுடன்
நரஸிம்மனாய் அவதரித்தும், ஹிரண்யாஸுரனை அழித்து,
அகண்ட பூமியை வெளிக் கொணர்ந்த எம்பெருமான் சேவை
சாதிக்கும் ஊர், மாலைப் பொழுதில், பெரிய சிறகுகளைக்
கொண்ட வண்டுகள் எம்பெருமானின் குணங்களைப்
பாடியவாறே வெண்சங்கைப் போலிருக்கும் மல்லிகை
பூக்களை ஊதுவதுபோல் காட்சி தரும், மதிள்களுடைய
திருவரங்கம் என்னும் ஊர்தான்.
(9)
குன்றாடு கொழுமுகில்போல்* குவளைகள்போல்
குரைகடல்போல்* நின்றாடு கணமயில்போல்* நிறமுடைய
நெடுமாலூர்* குன்றாடு பொழில்நுழைந்து* கொடியிடையார்
முலையணவி* மன்றூடு தென்றலுமாம்*
மதிளரங்கம் என்பதுவே.
பாசுர அனுபவம்
மலைச் சிகரத்தின் மேல் திரண்ட மேகங்களைப் போலவும்,கருநீல பூக்களைப் போலவும், கோஷிக்கும் கடல் போலவும்,
நடனமாடும் மயில் கூட்டங்களைப் போலவும், அழகான
திருமேனியையுடைய எம்பெருமான் அருள்பாலிக்கும் ஊர்,
மலைச் சோலைகளில் புகுந்த தென்றல், சிறுத்த இடையையுடைய
பெண்களின் முலைகளைத் தழுவி, நான்கு வீதிகளிலும்
உலாவி பரிமளக்கச் செய்யும் மதிள்களுடைய
திருவரங்கம் என்னும் உர்தான்.
(10)
பருவரங்கள் அவைபற்றிப்* படையாலித் தெழுந்தானை*
செருவரங்கப் பொருதழித்த* திருவாளன் திருப்பதிமேல்*
திருவரங்கத் தமிழ்மாலை* விட்டுசித்தன் விரித்தனகொண்டு*
இருவரங்கம் எரித்தானை* ஏத்தவல்லார் அடியோமே.
பாசுர அனுபவம்
பெரு வரங்களைப் பெற்று, அதனால் சிலிர்த்தெழுந்தராவணனை, போர் தொடுத்து அழித்த திருமாலின்
திவ்யக்ஷேத்திரமாகிய திருவரங்கத்தைப் பற்றி
பெரியாழ்வார் இயற்றிய தமிழ் மாலையைக் கொண்டு,
மது கைடபர் என்ற இரு அரக்கர்களின் உடல்களை
எரித்தவனைத் தொழுபவர்களுக்கு அடிமை செய்வோமாக.