சாராம்சம்
எம்பெருமானைத் தேடும் பக்தர்கள், அவனுடையஅவதாரங்களை நினைவு கூர்ந்தாலே போதும் என்று
மிக அழகாக இப்பாசுரங்களின் மூலம் நமக்கு
உணர்த்துகிறார் பெரியாழ்வார்.
(1)
கதிராயிர மிரவி கலந்தெறித்தா லொத்த நீண்முடியன்
எதிரில் பெருமை யிராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
அதிருங்கழற் பொருதோள் இரணியனாகம் பிளந்து அரியாய்
உதிர மளைந்த கையோடிருந்தானை உள்ளவா கண்டாருளர்.
பாசுர அனுபவம்
ஆயிரம் சூரியர்கள் அளவற்ற ஒளிக் கிரணங்களுடன்ஜ்வலிப்பது போல் நீண்ட கிரீடத்துடன் கூடிய ராமன்
இருக்குமிடம் தேடுகிறீர்களாகில், அதிரும்படி ஒலி செய்யும்
தண்டையை அணிந்த, பெருத்த தோள் பலத்தையுடைய
ஹிரண்யகசிபுவின் மார்பை, ந்ருசிம்ஹ அவதாரமெடுத்து,
கிழித்து ரத்தத்தை கைகளால் அளைந்து கோபாவேசத்துடன்
இருந்தவனை நினைவு கூருங்கள். அவனை அந்தக்
கோலத்தில் பலர் கண்டு சேவித்திருக்கின்றனர்!
(2)
நாந்தகம் சங்கு தண்டு நாணொலிச் சார்ங்கம் திருச்சக்கரம்
ஏந்து பெருமையிராமனை இருக்குமிடம் நாடுதிரேல்
காந்தள் முகிழ் விரற் சீதைக் காகிக் கடுஞ்சிலை சென்றிறுக்க
வேந்தர் தலைவன் சனக ராசன் தன் வேள்வியிற் கண்டாருளர்.
பாசுர அனுபவம்
வாள், சங்கு, கதை, நாணோசையுடைய வில், சக்கரம் என்றபஞ்சாயுதங்களை* தனது திருக்கைகளில் ஏந்தியிருக்கும்
பெருமை நிறைந்த ராமன் இருக்குமிடம் தேடுகிறீர்களாகில்,
அழகிய சென்னிறப் பூ இதழ்களைப் போலிருக்கும்
விரல்களையுடைய சீதையை அடைவதற்க்காக, அரசர்களின்
தலைவனான ஜனக ராஜனுடைய யக்ஞ சாலைக்குச் சென்று
கடினமான வில்லை ராமபிரான் முறித்ததை நினைவு
கூறுங்கள். அதைப் பலர் பார்த்து அனுபவித்திருக்கிறார்கள்!
*பஞ்சாயுதங்கள் யாவை எனில்-
நாந்தகம் என்னும் வாள்/பாஞ்சஜன்யம் என்னும் சங்கு/
கௌமோதகி என்னும் கதை/ சார்ங்கம் என்னும் வில்/
ஆழி என்னும் சக்கரம்.
நாந்தகம் என்னும் வாள்/பாஞ்சஜன்யம் என்னும் சங்கு/
கௌமோதகி என்னும் கதை/ சார்ங்கம் என்னும் வில்/
ஆழி என்னும் சக்கரம்.
(3)
கொலையானைக் கொம்பு பறித்துக் கூடலர் சேனை பொருதழிய
சிலையால் மராமர மெய்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
தலையால் குரக்கினம் தாங்கிச் சென்று தடவரை கொண்டடைப்ப
அலையார் கடற்கரை வீற்றிருந்தானை அங்குத்தைக் கண்டாருளர்.
பாசுர அனுபவம்
குவலாயாபீடம் என்னும் கொடிய யானையின் கொம்பைப்பறித்தவனை, பகைவர்களின் சேனைகளை போரிட்டு
அழித்தவனை, ஒரே வில்லைக் கொண்டு ஏழு சால மரங்களை
துளைத்தவனை ஆவலுடன் தேடுகிறீர்களாகில், குரங்குகள்
பெரிய பாராங்கற்களை தலை மேல் தூக்கிக் கொண்டு
போய் கடலில் பாலம் அமைக்கையில், அங்கு அலை
மோதும் கடற்கரையில் உட்கார்ந்திருந்த ராமனை
நினைவு கூறுங்கள். அந்த நிலையில்
அவனைப் பார்த்தவர்கள் பலர் உளர்.
(4)
தோயம் பரந்த நடுவு சூழலில் தொல்லை வடிவு கொண்ட
மாயக் குழவியதனை நாடுறில் வம்மின் சுவடுரைக்கேன்
ஆயர் மடமகள் பின்னைக்காகி அடல் விடையேழினையும்
வீயப் பொருது வியர்த்து நின்றானை மெய்ம்மையே கண்டாருளர்.
பாசுர அனுபவம்
பூமியெங்கும் நீர் சூழ்ந்திருந்த வேளையில், தனது பெரியஉருவத்தை மிகச்சிறியதாக ஆக்கிக் கொண்ட* அந்த அற்புதக்
குழந்தையை தேடுகிறீர்களாகில், வாருங்கள் இங்கே! ஓர்
அடையாளம் கூருகிறேன். ஒரு இடைக் குலப் பெண்மணிக்காக**
ஏழு முரட்டு பலமுள்ள காளைகளை போரிட்டுக் கொன்று,
அந்தக் களைப்பால் வியர்த்து நின்றானை நினைவு கூறுங்கள்.
இதை உண்மையில் கண்டவர் பலர் இருக்கிறார்கள்.
*பிரளையத்தின் போது ஆலிலையில்
குழந்தை வடிவில் கண்ணன் துயில் கொண்டதை இது
மேற்கோள் காட்டுகிறது. **நப்பின்னை பிராட்டி
குழந்தை வடிவில் கண்ணன் துயில் கொண்டதை இது
மேற்கோள் காட்டுகிறது. **நப்பின்னை பிராட்டி
(5)
நீரேறு செஞ்சடை நீல கண்டனும் நான்முகனும் முறையால்
சீரேறு வாசகஞ் செய்ய நின்ற திருமாலை நாடுதிரேல்
வாரேறு கொங்கையுரப் பிணியை வலியப் பிடித்துக் கொண்டு
தேரேற்றி சேனை நடுவு போர் செய்யச் சிக்கெனக் கண்டாருளர்.
பாசுர அனுபவம்
சிவப்பு நிற முடியும், விஷமேறியதால் நீல நிறத்துடன் விளங்கியதொண்டையையும் உடைய சிவபிரானும், நான்கு முகம் கொண்ட
ப்ரம்மதேவனும் முறையாக ஸ்தோத்திரம் பண்ணி நிற்கும்
எம்பெருமானை தேடுகிறீர்களாகில், பொருத்தமான கச்சை
அணிந்த ருக்மிணி தேவியை அபகரித்துக் கொண்டு தேரில் ஏற்றி,
எதிர்த்து வந்த எதிரிகளின் சேனையுடன் கண்ணன் போர்
செய்ததை நினைவு கூறுங்கள். அந்தக் காட்சியை
நேரில் கணடவர்கள் பலர் இருக்கிறார்கள்.
(6)
பொல்லா வடிவுடைப் பேய்ச்சிதுஞ்சப் புணர் முலைவாய் மடுக்க
வல்லானை மாமணி வண்ணனை மருவு மிடம் நாடுதிரேல்
பல்லாயிரம் பெருந்தேவி மாரொடு பௌவமெறிதுவரை
எல்லாருஞ் சூழச் சிங்காசனத்தே இருந்தானைக் கண்டாருளர்.
பாசுர அனுபவம்
மிகக் கொடூர வடிவுடைய பூதனை என்ற அரக்கியை அவள்முலையில் வாயை வைத்து பாலருந்துவதுபோல் உயிரைக் குடித்த
சாமர்த்ய சாலியான சிறந்த நீலமணி போன்ற நிறமுடைய
கண்ணன் இருக்குமிடம் தேடுகிறீர்களாகில், கடலலைகள் மோதும்
துவாரகா பட்டிணத்தில் ஆயிரமாயிரம் தேவி மார்களோடுகூட,
அனைவரும் புடை சூழ சிங்காசனத்தில் அமர்ந்திருந்த
கண்ணனை நினைவு கூறுங்கள். அந்தக் கோலத்தில்
அவனை நேரில் கண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
(7)
வெள்ளை விளிக்கு வெஞ்சுடர்த் திருச் சக்கர மேந்துகையன்
உள்ள விடம் வினவில் உமக்கிறை வம்மின் சுவடுரைக்கேன்
வெள்ளைப் புரவிக்குரக்கு வெல்கொடித் தேர்மிசை முன்புநின்று
கள்ளப் படைத்துணையாகிப் பாரதம்கை செய்யக் கண்டாருளர்.
பாசுர அனுபவம்
பக்தர்களை பெருமானுக்கு தொண்டு செய்ய அழைப்பதுபோல் விளங்கும் வெள்ளைச் சங்கு, கடும் வெப்பத்தினொளி
போல் ப்ரகாசிக்கும் திருச்சக்கரம் இவைகளைத் தன்னுடைய
திருக்கைகளில் ஏந்தி நிற்க்கும் எம்பெருமானின் இருப்பிடம்
தேடுகிறீர்களாகில், வாருங்கள், உங்களுக்கோர் அடையாளம்
சொல்லுவேன்! வெள்ளைக் குதிரைகள் பூட்டியிருந்த மற்றும்
குரங்கின் சின்னம் பதித்த வெற்றிக் கொடி கட்டப்பட்ட தேரின்
மீது நின்று, பல விதங்களில் பாண்டவர்களுக்கு கள்ளத்
துணையாயிருந்து பாரதப் போரை முன் நின்று நடத்திய
கண்ணபிரானை நினைவு கூறுங்கள். அந்த அற்புதக்
காட்சியை நேரில் கணடவர்கள் பலர் இருக்கிறார்கள்.
(8)
நாழிகை கூறிட்டுக்காத்து நின்ற அரசர்கள் தம் முகப்பே
நாழிகை போகப் படை பொருதவன் தேவகிதன் சிறுவன்
ஆழி கொண்டன்றிரவி மறைப்பச் சயத்திரதன் தலையை
பாழிலுருளப் படை பொருதவன் பக்கமே கண்டாருளர்
பாசுர அனுபவம்
அரசர்கள் ஜயத்ரதனை முப்பது நாழிகைகள் காத்து நிற்க,அவர்கள் முன்னிலையில் தனது திருச்சக்கரத்தை ப்ரயோகித்து
சூரியனை மறைத்து பகல் கடந்துவிட்டது போல் மாயயை
ஏற்ப்படுத்திய தேவகியின் மைந்தன் கண்ணன் இருக்குமிடம்
தேடுகிறீர்களாகில், அன்று திருவாழியை உபயோகித்து
சூரியனை மறைத்த உடனேயே ஜயத்ரதனின் தலை
அர்ஜுனனின் அம்பால் வீழ்த்தப்பட்டு குழியில் விழுந்தோடிய
சமயம், அர்ஜுனனின் பக்கம் கண்ணன் இருந்ததை
நினைவு கூறுங்கள். அந்த வேளையில் கண்ணனைக்
கண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.
(9)
மண்ணும் மலையும் மறிகடல்களும் மற்றும் யாவுமெல்லாம்
திண்ணம் விழுங்கியுமிழ்ந்த தேவனைச் சிக்கென நாடுதிரேல்
எண்ணற் கரிய தோரேனமாகி இருநிலம் புக்கிடந்து
வண்ணக் கருங்குழல் மாதரோடு மணந்தானைக் கண்டாருளர்.
பாசுர அனுபவம்
ப்ரளயத்தின் போது பூமி, மலைகள், அலை மோதும் கடல்கள்,மற்றுமெல்லாவற்றையும் உறுதியாய் விழுங்கி, ப்ரளயம் விட்ட
பிறகு அவைகளை வெளிக் கொண்டு வந்த பெருமானை
ஆவலுடன் தேடுகிறீர்களாகில், ஒப்பற்ற பெருமையுடன்
வராகமாக அவதரித்து கடலுக்கடியில் ஹிரண்யாக்ஷன்
ஒளித்து வைத்த பெரிய பூமியை வெளிக் கொண்டு
வந்தவுடன், அழகிய கருத்த கூந்தலையுடைய பூமி
தேவியுடன் இணைந்து மணம் புரிந்தானை நினைவு
கூறுங்கள். அதைக் கணடவர்கள் பலர் இருக்கிறார்கள்.
(10)
கரிய முகில் புரை மேனி மாயனை கண்ட சுவடுரைத்து
புரவி முகஞ்செய்து செந்நெலோங்கி விளைகழனிப் புதுவை
திருவிற் பொலி மறைவாணன் பட்டர்
பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மன முடைப் பத்தருள்ளார் பரமனடி சேர்வர்களே.
பாசுர அனுபவம்
கருமேகம் போல் திருமேனியையுடையவனும்,அதிசயமானவனுமான கண்ணனைக் கண்ட
அடையாளங்களைக் கூறிய விஷயங்களை,செழித்து உயர்ந்தும்,
குதிரை முகம் போல் தலை குனிந்தும் விளைந்த வயல்கள்
நிறைந்த ஸ்ரீவில்லிபுத்துருக்கு அதிபதியும், செல்வம்
நிறைந்தவரும், வேத பண்டிதருமான பெரியாழ்வார்
மாலையாகத் தொகுத்த இந்த பத்து பாசுரங்களை மனதார
அனுசந்திக்கும் பக்தர்கள் பெருமானின்
திருவடி கிடைக்கப் பெறுவர்கள்.