மூன்றாம் பத்து பத்தாம் திருமொழி



சாராம்சம்

அனுமன் சீதா பிராட்டியைக் கண்டவுடன், தான்
ராமபிரானால் அனுப்பப் பட்டவன், ராமனுடைய
நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்பதை நிரூபிக்க,
ராமபிரானால் கூறப்பட்ட பல நிகழ்ச்சிகளை
சீதையிடம் அடையாளங்களாக எடுத்துச் சொல்லி
புரிய வைக்கிறான். கடைசியில் ராமபிரானுடைய
மோதிரத்தையும் காண்பித்து சீதையை
மகிழ வைக்கிறான்.
(1)
நெறிந்த கருங்குழல் மடவாய்! நின்னடியேன்
விண்ணப்பம்* செறிந்த மணிமுடி ச்சனகன் சிலை
மிறுத்து நினைக் கொணர்ந்த தறிந்து * அரசுகளை
கட்ட அருந்தவத்தோனிடை விலங்க* செறிந்த சிலை
கொடுதவத்தைச் சிதைத்தது மோரடையாளம்.

பாசுர அனுபவம்

அடர்ந்த கரிய, அழகிய கூந்தலையுடைய
பிராட்டியே! உன் அடியவனான நான் கூறும்
ஒன்றைக் கேட்க வேண்டுகிறேன்:உயர்ந்த
கிரீடத்தை அணிந்த ஜனக மகாராஜாவினுடைய
வில்லை முறித்து உம்மை மணம் புரிந்த
ராமனுடைய பராக்கிரமத்தை அறிந்தவனாய்,
கடும் தவமுடையவனும், அரசர்களை பயிர்களின்
களைகளை நீக்குவதுபோல் வெட்டி
வீழ்த்தியவனுமான பரசுராமன் எதிர் கொண்டு
வர,ராமபிரான் அவனது தனுஸ்ஸை வாங்கி
அத்துடன் அவனுடைய தபஸ்ஸின் பலத்தையும்
அபகரித்தது ஓர் அடையாளம்.
(2)
அல்லியம் பூமலர்க் கோதாய்! அடி பணிந்தேன்
விண்ணப்பம் சொல்லுகேன் கேட்டருளாய் துணை
மலர்க் கண் மடமானே!எல்லியம் போதினி திருத்தல்
இருந்த தோரிட வகையில் மல்லிகை மாமாலை
கொண்டு அங்கார்த்தது மோரடையாளம்.

பாசுர அனுபவம்

அழகிய மலர்களால் தொடுக்கப்பட்ட பூ மாலை
போன்றவளே! தாமரை போன்ற கண்களைக் கொண்ட
பெண் மானைப் போன்றவளே! உன் திருவடியை
சேவித்தேன். நான் கூறுவதைக் கேட்டருளவேண்டும்:
அழகிய ராத்திரிப் பொழுதில் இனிமையான
ஏகாந்தமான ஓரிடத்தில் மல்லிகைப் பூவினால்
தொடுத்த சிறப்பான மாலையினால் நீ ராமபிரானை
கட்டியதும் ஓர் அடையாளமாகக் கொள்ளவேணும்.

(3)
கலக்கிய மாமனத்தனளாய்க் கைகேசி வரம்
வேண்ட மலக்கிய மாமனத்தனளாய் மன்னவனும்
மறாதொழிய குலக்குமரா! காடுறையப்போ வென்று
விடை கொடுப்ப இலக்குமணன் தன்னொடும்
அங்கேகியதோர டையாளம்.

பாசுர அனுபவம்

மந்தரையினால் கலக்கப்பட்ட மனத்தையுடைய-
வளான கைகேயி தசரதனிடம் வரத்தின் பயனை
யாசித்தவுடன் அதைக் கேட்ட தசரத மன்னன்
கலக்கமுற்றவனாய் மறுத்து பேசாமலிருக்க, அந்த
சமயத்தை சாதகமாய் பயன்படுத்திய கைகேயி
ராமனை நோக்கி "உயர் குலத்து மைந்தனே!
காட்டிலே வசித்துவிட்டு வா' என்று வழியனுப்ப,
லக்ஷ்மணனோடு கூட ராமன் காட்டைச்
சென்றடைந்ததும் ஓர் அடையாளம்.

(4)
வாரணிந்த முலை மடவாய்! வைதேவீ!
விண்ணப்பம் தேரணிந்த வயோத்தியர்கோன்
பெருந்தேவீ! கேட்டருளாய் கூரணிந்த வேல்
வலவன் குகனோடும் கங்கை தன்னில்
சீரணிந்த தோழமை கொண்டது மோரடையாளம்.

பாசுர அனுபவம்

மார்பில் கச்சை அணிந்த பிராட்டியே!
எளிமையானவளே! விதேஹ குலப் பெண்மணியே!
ஒரு கோரிக்கை: தேர்களினால் அலங்கரிக்கப்பட்ட
அயோத்தி மாநகரத்தின் அரசனான ராமபிரானுக்கு
உகந்த பெருந்தலைவியே! என்னுடைய
விண்ணப்பத்தை கேட்டருளவேணும்:கூர்மையுடைய
வேலாயுதத்தை ப்ரயோகப்பதில் வல்லமை படைத்த
குகப் பெருமானுடன் கங்கைக் கரையில் சிறப்பான
ஸ்னேகத்தை கொண்டதும் ஓர் அடையாளம்.

(5)
மானமரு மென்னோக்கி! வைதேவீ ! விண்ணப்பம்
கானமரும் கல்லதர்போய்க் காடுறைந்த காலத்து
தேனமரும் பொழிற்சாரல் சித்திர கூடத்திருப்ப
பான் மொழியாய்! பரத நம்பி
பணிந்தது மோரடையாளம்.

பாசுர அனுபவம்

மானைப் போன்று ம்ருதுவான விழிகளை
உடையவளே! பால் போன்ற சொல்லுடையாளே!
பணிவோடு தெரிவிக்கிறேன்! கற்கள் நிறைந்த
வழியாக காட்டிற்க்குள் சென்று அங்கு வசித்த
சமயம், தேன் வண்டுகள் மொய்க்கும் சோலை
களுடன் விளங்கிய சித்திர கூட மலையில்
நீங்கள் தங்கியிருந்த போது, பரதன்
அங்கு வந்து வணங்கியதை ஓர்
அடையாளமாகக் கொள்ளவேணும்.

(6)
சித்திர கூடத்திருப்பச் சிறு காக்கை
முலை தீண்ட அத்திரமே கொண்டெறிய
அனைத்துலகும் திரிந்தோடி வித்தகனே!
இராமா! ஓ! நின்னபயம் என்றழைப்ப
அத்திரமேயதன் கண்ணை
அறுத்தது மோரடையாளம்.

பாசுர அனுபவம்

சித்திரக்கூட மலையில் நீங்கள் உல்லாசமாக
இருக்கையில், சிறிய காக்கை வடிவில் வந்த
அசுரன் உனது மார்பகத்தை பற்ற, அந்தக்
க்ஷணமே ராமன் ப்ரஹ்மாஸ்த்திரத்தை
அக்காக்கையின் மீது ஏவிவிட, அது, தனதுயிரை
காத்துக்கொள்ள உலகமனைத்திலும் திரிந்து ஓட,
கடைசியில் தப்பிக்க முடியாமல், வல்லவனான
ராமனிடம் வந்து,ராமா! நீயே எனக்கு அடைக்கலம்
என்று கதற, அந்த அஸ்த்திரத்தாலேயே காகத்தின்
ஒரு கண்ணை மட்டும் அறுத்தது ஓர்
அடையாளமாகக் கொள்ள வேணும்.
(7)
மின்னொத்த நுண்ணிடையாய்! மெய்யடியேன்
விண்ணப்பம் பொன்னொத்த மானொன்று
புகுந்தினிது விளையாட நின்னன்பின் வழிநின்று
சிலை பிடித்தெம்பிரானேக பின்னேயங்கி
லக்குமணன் பிரிந்தது மோரடையாளம்

பாசுர அனுபவம்

மின்னலைப் போன்ற மெல்லிய இடையைக்
கொண்டவளே! உனக்கு உண்மையாக அடி
பணிந்த நான் கூறுவதைக் கேட்டருளவேணும்.
பொன் போன்ற நிறமுடைய ஒரு மான்,நீ
இருக்குமிடத்தில் புகுந்து இனிமையாக
விளையாடுகையில், உன் அன்பிற்க்கு இணங்க
ராமன், வில்லை எடுத்தவனாய் அம்மானை
பிடித்துக் வரப் போக, அப்பொழுது
லக்ஷ்மணனும் பின் தொடர்ந்து, பிரிந்து
சென்றது ஓர் அடையாளம்.
(8)
மைத்தகு மாமலர் குழலாய்! வைதேவீ!
விண்ணப்பம் ஒத்தபுகழ் வானரக்கோன்
உடனிருந்து நினைத்தேட அத்தகு சீரயோத்தியர்
கோன் அடையாளமிவை மொழிந்தான் இத்தகை
யாலடையாளம் ஈதவன் கைம்மோதிரமே

பாசுர அனுபவம்

சிறந்த பூக்களால் அலங்கரிக்கப் பெற்ற மை
போன்ற கரிய நிறம் கொண்ட கூந்தலை
உடையவளே! வைதேஹியே! நான் கூறுவதைக்
கேட்டருளவேணும். பெருமானுக்கு சமமான
புகழ் படைத்த சுக்ரீவனோடு சேர்ந்து,
அயோத்தியர்களின் தலைவன் ராமபிரான்
உன்னை தேடும் படி என்னை நியமித்து
இவ்வடையாளங்களை சொல்லி அனுப்பினான்.
அதோடுகூட அவன் திருக்கையிலணிந்திருந்த
இந்த மோதிரமும் ஓர் அடையாளமே.
(9)
திக்கு நிறை புகழாளன் தீவேள்விச்சென்ற
நாள் மிக்க பெருஞ் சபை நடுவே வில்லிறுத்தான்
மோதிரங்கண்டு ஒக்கு மாலடையாளம் அனுமான்!
என்று உச்சி மேல் வைத்துக் கொண்டு
உகந்தனளால் மலர்க்குழலாள் சீதையுமே

பாசுர அனுபவம்

எல்லா திக்குகளிலும் நிறைந்த புகழை
உடையவனான ராமன், ஒருசமயம் அக்னியால்
யாகம் செய்யப்படும் மிகப் பெரிய யாகசாலைக்குச்
சென்று ருத்ர தனுஸ்ஸை முறித்தான். அன்று அவன்
கையிலணிந்திருந்த அதே மோதிரத்தை இப்பொழுது
கண்டவுடன், அழகிய மலர்களை தன்னுடைய
கூந்தலில் சூட்டியிருந்த சீதா பிராட்டி, அனுமனை
நோக்கி, "ஏ அனுமனே! நீ கூறிய அடையாளங்கள்
ஒத்துப் போகிறது! " என்று சொல்லிக்
கொண்டே அந்த மோதிரத்தை தன்
தலைமீது வைத்து மகிழ்ந்தாள்.
(10)
வாராரும் முலைமடவாள் வைதேவி தனைக்
கண்டு சீராரும் திறலனுமன் தெரிந்துரைத்த
வடையாளம் பாராரும் புகழ்ப் புதுவைப்
பட்டர் பிரான் பாடல்வல்லார் ஏராரும்
வைகுந்தத்து இமையவரோடிருப்பாரே.

பாசுர அனுபவம்

மார்பகங்களில் கச்சை உடுத்திய பெண்மணி
சீதா தேவியைப் பார்த்து சிறந்த வல்லமை படைத்த
அனுமன் , தான் ராமபிரானிடமிருந்து அறிந்த
அடையாளங்களைக் கூறுவதான இவ்விஷயங்களை,
உலககெங்கும் பரவி நிற்க்கும் புகழுடைய
ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவர் பெரியாழ்வார்,
பாசுரங்களாக அருளிச் செய்த இவற்றைப் பாட
வல்லவர்கள், அழகு பொருந்திய வைகுந்தத்தில்
நித்தியசூரிகளுடன் கூடியிருப்பர்கள்.