சாராம்சம்
தன் மகள் கண்ணன் பின் சென்று விட்டதால்,அந்தப் பிரிவைத் தாங்காமல் ஒரு தாயானவள்
மிகவும் வருத்தப்படுவது போல அமைந்திருக்கிறது
இப்பாசுரங்கள். தன் மகளுக்கு பெருமான் கண்ணன்
தான் கணவன் என்று தெரிந்திருந்தும், தாயின்
புலம்பல் நம்மை நெகிழவைக்கும்.
(1)
நல்லதோர் தாமரைப் பொய்கை
நாண்மலர் மேற்பனி சோர
அல்லியுந் தாது முதிர்ந்திட்டு
அழகழிந்தா லொத்ததாலோ
இல்லம் வெறியோடிற்றாலோ
என் மகளை யெங்குங் காணேன்
மல்லரை யட்டவன் பின் போய்
மதுரைப் புறம் புக்காள் கொலோ
பாசுர அனுபவம்
ஒரு நல்ல தாமரை குளத்தில் பூத்திருக்கும் பூவின்மேல் பனி விழுவதால் எப்படி இதழ்கள் உதிர்ந்து
அழகை இழக்குமோ, அதுபோல், இவ்வீடானது
வெறிச்சோடி கிடக்கிறது. என் மகளை எவ்விடத்திலும்
காணவில்லை. மல்லர்களை அழித்த கண்ணன்
பின் சென்று மதுரா பட்டிணத்தின்
எல்லைக்குள் புகுந்து விட்டாளோ?
(2)
ஒன்றுமறிவொன்றில்லாத
உருவறைக் கோபாலர் தங்கள்
கன்று கால் மாறுமா போலே
கன்னி யிருந்தாளைக் கொண்டு
நன்றுங்கிறி செய்து போனான்
நாராயணன் செய்த தீமை
என்று மெமர்கள் குடிக்கு
ஓரேச்சுக் கொலா யிடுங்கொலோ
பாசுர அனுபவம்
பெரிதாக ஞானம் இல்லாதவர்களாயும்,அழகற்றவர்களாயும் இருக்கின்ற இடையர்கள்
எப்படி பிறருடைய கன்றுகளை திருடிக் கொண்டு
போவது போல், என் அழகிய இளம் கன்னிப்
பெண்ணை நல்ல திட்டங்கள் தீட்டி கடத்திச் சென்ற
நாராயணன் செய்த இந்த கெட்ட காரியம் எங்கள்
குலத்துக்கே அவப் பெயர் ஏற்படுத்திவிடுமோ?
(3)
குமரிமணஞ் செய்துகொண்டு
கோலஞ்செய் தில்லத்திருத்தி
தமரும் பிறரு மறியத் தாமோதரற்
கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி
அரசாணியை வழிபட்டு
துமில் மெழப் பறை கொட்டித்
தோரணம் நாட்டிடுங்கொலோ
பாசுர அனுபவம்
மண மகளான என் பெண்ணிற்கு மங்களவிசேஷங்களைச் செய்து, அவளை நன்றாக
அலங்கரித்து, திருமண மண்டபத்தில்
இருக்கச்செய்து, உற்றார் உரவினர் அரியும்படி,
தாமோதரனுக்கு இவளை தாரை வார்த்து
கொடுத்த பின்,தேவர்களுக்குத் தலைவனின்
தேவியான இவளை அரச மரக் கிளையை
சுற்றி வரச்செய்து, மேள தாளங்கள்
முழங்க, பெரிய தோரணங்களைக்
கட்டி கொண்டாடுவர்களோ?
(4)
ஒரு மகள் தன்னை யுடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்
மால்தான் கொண்டு போனான்
பெரு மகளாய்க் குடி வாழ்ந்து பெரும்
பிள்ளை பெற்றவசோதை
மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப்
புறஞ் செய்யுங் கொலோ.
பாசுர அனுபவம்
உலகம் புகழும்படி, லக்ஷ்மீ பிராட்டி போல் வளர்த்தஎன்னுடைய ஒரே மகளை செந்தாமரைக் கண்ணன்
வந்து அழைத்துச் சென்று விட்டான். இடைச்சேரியில்
கீர்த்தியுடன் வாழ்ந்து பெரும் புகழையுடைய
பிள்ளையைப் பெற்ற யசோதை பிராட்டியானவள்,
அவளுக்கு மருமகளான என் மகளைக் கண்டு
மகிழ்ந்து மணமகளுக்குச் செய்ய வேண்டிய சீர்
சிறப்புக்களை நன்கு செய்வளோ?
(5)
தம்மாமன் நந்தகோபாலன் தழீ
இக்கொண்டென் மகள் தன்னை
செம்மாந்திரேயென்று சொல்லிச்
செழுங்கயற் கண்ணுஞ் செவ்வாயும்
கொம்மை முலை யுமிடையும் கொழும்பணைத்
தோள்களுங் கண்டிட்டு
இம்மகளைப் பெற்ற தாயர்
இனித்தரியா ரென்னுங்கொலோ
பாசுர அனுபவம்
என் மகளுக்கு மாமனாரான நந்தகோபாலர் என்மகளை அன்போடு அணைத்துக் கொண்டு, '
வெட்கி நில்லாமல் நிமிர்ந்து நில்' என்று சொல்லி,
அவளுடைய் மீன் போன்ற கண்களையும், சிவந்த
வாயையும், அழகான ஸ்தனங்களையும், இடுப்பையும்,
மூங்கில் போன்ற தோள்களையும் கண்டு விட்டு,
'இப்பேர்பட்ட பெண்ணை பெற்ற தாயார் இவளைப்
பிரிந்த பின் இன்னும் உயிரோடு இருக்க
மாட்டாள்' எனக் கூருவாரோ.
(6)
வேடர் மறக் குலம் போலே வேண்டிற்றுச்
செய்தென் மகளை
கூடிய கூட்ட மேயாகக் கொண்டு
குடி வாழுங்கொலோ
நாடு நகரு மறிய நல்லதோர்
கண்ணாலஞ்செய்து
சாடிறப் பாய்ந்த பெருமான் தக்க
வாகைப் பற்றுங்கொலோ
பாசுர அனுபவம்
வேடர்கள் மறக் குடி மக்கள் வழக்கப்படி என்மகளை 'இருவர் மனதார சேர்வதே விவாஹம்'
எனக் கொண்டு இல்லர வாழ்க்கையை தொடங்கச்
சொல்வார்களோ, இல்லை ஊர் மக்கள் நன்கறிய
முறையாக இவளை, சகடாசுரனை காலால்
உதைத்துக் கொன்ற, கண்ணபிரானுக்கு
பாணிக்ரஹணம் செய்து வைப்பர்களோ.
(7)
அண்டத்தமரர் பெருமான்
ஆழியானின் றென்மகளை
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப்
பரிசற வாண்டிடுங்கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து
கோவலப் பட்டங்கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே
பாதுகாவல் வைக்குங்கொலோ
பாசுர அனுபவம்
வானோர்களின் தலைவனும், திருச்சங்கைகையிலேந்தியவனும்,என் மகளிடம் குறை ஏதேனும்
கண்டுபிடித்து இவளை வாசல் பராமரிக்கும் பணிக்கு
நியமிப்பானோ, இல்லை ஏற்கனவே இருக்கும்
மனைவிகளுடன் இவளையும் சமமாக பாவித்து,
இடையர் குலத் தலைவி எனப் பட்டங்கட்டி,
இவளைப் பாதுகாப்புடன் வைப்பனோ.
(8)
குடியிற் பிறந்தவர் செய்யும் குண
மொன்றுஞ் செய்திலனந்தோ
நடை யொன்றுஞ் செய்திலன் நங்காய்
நந்த கோபன் மகன் கண்ணன்
இடை யிருபாலும் வணங்க இளைத்
திளைத் தென் மகளேங்கி
கடை கயிறே பற்றி வாங்கிக் கைதழும்
பேறி டுங்கொலோ.
பாசுர அனுபவம்
ஏ பெண்ணே! நந்தகோபருடைய செல்வன் கண்ணன்,குலத்தின் பெருமையைக் காக்கும் செயல் ஒன்றுமே
செய்யவில்லை.பொதுவாக எல்லோரும் நடந்து
கொள்வதைப் போலவும் நடந்து கொண்டானில்லை.
அய்யோ! என் மகள் தயிர் கடையும்போது,இடையின்
இருப்பக்கமும் துவண்டு, மூச்சுப் பிடித்து, சோர்ந்து
விடுவாளே. கயிற்றைப் பிடித்து இழுத்துத் தயிர்
கடைவதினால் அவள் கைகள்
கொப்பளித்துவிடுமே, என் செய்வேன்.
(9)
வெண்ணிறத் தோய் தயிர் தன்னை
வெள்ளரைப் பின் முன்னெழுந்து
கண்ணுறங்காதே யிருந்து கடைய
வுந்தான் வல்லள் கொலோ
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
உலகளந்தா னென் மகளை
பண்ணறையாப் பணி கொண்டு
பரிசற வாண்டி டுங்கொலோ
பாசுர அனுபவம்
என் மகள், பொழுது விடிவதற்கு முன்பாகவே எழுந்து,மருபடியும் தூங்கிவிடாமல், வெள்ளை நிறத்துடன்
இருக்கும் தோய்ந்த தயிரைக் கடைய சக்தி
படைத்தவளோ? அழகிய செந்தாமரைக் கண்களை
கொண்டவனும், உலகளந்தவனுமாகிய கண்ணன்
என் மகளைஅதர்மமான செயல்களில் ஈடுபடுத்தி
அவளது பெருமைக்கு பங்கம் விளைவிப்பானோ?
(10)
மாயவன் பின் வழி சென்று
வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியிலும் புக்கு
அங்குத்தை மாற்றமுமெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத் தண்
புதுவைப் பட்டன் சொன்ன
தூய தமிழ்ப் பத்தும் வல்லார்
தூமணி வண்ணனுக் காளரே.
பாசுர அனுபவம்
கண்ணன் போகுமிடமெல்லாம் பின் சென்று, பிறர்சொல்வதை எல்லாம் கேட்டு, திருவாய்ப்பாடியுலும்
புகுந்து, அங்கு நடந்த எல்லாவற்றையும் குறித்து
தாயானவள் சொன்ன வார்த்தைகளை,குளிர்ந்த
ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவன் பெரியாழ்வார் உசந்த
பத்து தமிழ்ப் பாசுரங்களாக அருளிச்செய்தார். இதை
அனுசந்திப்பவர்கள் அழகிய மணி போன்ற
நிறத்தையுடைய கண்ணனுக்கு பணி செய்யும்
பாக்யம் கிடைக்கப் பெறுவர்கள்.