மூன்றாம் பத்து ஏழாம் திருமொழி



சாராம்சம்

கீழ்கண்ட பாசுரங்களை பெரியாழ்வார் ஒரு
தாயின் மனோபாவத்தோடு இயற்றினார் எனக்
கொள்ளவேண்டும். தன் மகளை அன்புடன் வளர்த்து,
விசேஷமாக அவளுக்கு கல்யாணம் செய்வித்து
தன்னிடமே வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்.
ஆனால் அவளோ கண்ணனையே நினைத்து
பித்து பிடித்தவளாய், தன் தாயையும் விட்டுப் போய்,
அவனையே அடையத் துடிக்கிறாள். ஒரு தாய்க்கும்,
மகளுக்கும் உண்டான மனப் போராட்டத்தை
சித்தரிக்கும் பாசுரங்கள், பெருமானிடம் வைக்கும்
தீவிர காதலே உண்மையான பக்தி என்பதை உணர்த்துகிறது.
(1)
ஐயப்புழுதியுடம்பளைந்து இவள் பேச்சுமலந்தலையாய்
செய்ய நூலின் சிற்றாடை செப்பனுடக்கவும் வல்லளல்லள்
கையினிற் சிறுதூதையோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பையரவணைப் பள்ளியானொடு கைவைத்திவள் வருமே.

பாசுர அனுபவம்

விளையாடியதால் உடம்பு முழுவதும் புழுதி
படர்ந்தவளாயும், மிகுந்த குழப்பத்துடன் பேசுபவளாயும்,
சிறிய சிவப்பு நிற ஆடையைக் கூட சரியாக உடுக்கத்
தெரியாதவளாயும், கையில் மண் பானையுடன் கூட
முறத்தையும் விடாமல் பிடித்தவளாய் இவள்,
பாம்பை படுக்கையாக கொண்டவனுடன்
கை கோர்த்து வருகிறாள் போலும்!
(2)
வாயிற் பல்லு மெழுந்தில மயிரும் முடி கூடிற்றில
சாய்விலாத குறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடி வந்துஇவள்தன்னன்ன செம்மைசொல்லி
மாயன் மாமணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே.

பாசுர அனுபவம்

வாயில் பற்கள் இன்னும் முழுமையாக வெளி வராத
பருவம்; தலையிலோ முடிக்குமளவுக்கு கூந்தலில்லை.
அப்படியிருந்தும், தலை நிமிர்ந்து நடக்கும் சில கெட்ட
பெண்களுடன் சேர்ந்து இவள் தீய காரியங்களில்
ஈடுபடுகிறாள்.ஆனாலும், ஒன்றுமறியாதவள் போல்
தனக்கு சாதகமாகப் பேசுகிறாள்!நீல நிற மேனியையுடைய
அத்புதமான கண்ணனிடம் இவள் மோஹிக்கிறாள்!
(3)
பொங்கு வெண்மணற்கொண்டு சிற்றிலும்முற்றத் திழைக்கலுறில்
சங்கு சக்கரந்தண்டு வாள் வில்லு மல்ல திழைக்கலுறாள்
கொங்கையின்னங் குவிந்தெழுந்தில கோவிந்தனோடிவளை
சங்கையாகி யென்னுள்ளம் நாடொறுந்தட்டுளுப்பாகின்றதே.

பாசுர அனுபவம்

எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டின் முற்றத்திலேயே
வெள்ளை மணலைக் கொண்டு வீடு கட்டி விளையாடும்படி
செய்தும், இவள் சங்கு, சக்கரம்,தண்டுடைய வாள்,
வில் இவற்றைத் தவிர வேறொன்றையும் வரைவதில்லை.
முலைகள் கூட வளராத பருவமுடைய இவளை,
கோவிந்தனோடு சம்பந்தப்படுத்துகையில்
எனது நெஞ்சம் தினந்தோரும் தவிக்கின்றதே!
(4)
ஏழை பேதையோர்பாலகன்வந்துஎன் பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டு போய்ச்செய்தசூழ்ச்சியையார்க்குரைக்கேன்
ஆழியானென்னு மாழ மோழையில் பாய்ச்சியகப்படுத்தி
மூழையுப்பறியாத தென்னும் மூதுரையுமிலளே.

பாசுர அனுபவம்

ஏழை,ஒன்றுமறியாதவள் என்றெண்ணி என்னுடைய
மகளை, தோழிகள் பலர் உடனிருக்க, கண்ணன் வந்து
ஏமாற்றி அழைத்துப் போய் செய்த விஷமத்தை யாரிடம்
சொல்ல! 'சங்கேந்திய பெருமான்'என்னும் ஆழமாக ஓடும்
ஆற்றில் அகப்பட்டு செய்வதறியாத இவளுக்கு,
'உணவை எடுக்கும் கரண்டிக்கு உப்பின் சுவை தெரியாது'
என்கிற முதியோர் கூரும் பழமொழியும் தெரியவில்லையே!
(5)
நாடு மூருமறியவே போய் நல்லதுழாயலங்கல்
சூடி*நாரணன் போமிடமெல்லாஞ்சோதித்துழி தருகின்றாள்
கேடுவேண்டுகின்றார் பலருளர் கேசவனோடிவளை
பாடு காவலிடுமினென் றென்று பார்தடுமாறினதே.

பாசுர அனுபவம்

நல்ல துளசி மாலையை அணிந்துகொண்டு நாட்டிலும்
ஊரிலும் வாழும் ஜனங்களெல்லாம் நன்றாகவே தெறிந்து
கொள்ளும்படி, நாராயணன் செல்லுமிடமெல்லாம் தேடிச்
செல்கின்றாள். இவளுக்கு கேடு நினைப்பவர்கள் பலர்
என்னிடம் சொல்வதாவது-"கேசவனோடு இவளை இணைத்து
அவனிடத்திலேயே பாதுகாப்போடு இவளை வைத்திருங்கள்".
இவ்வுலகம் இவ்வாரு பேசுவதைக் கேட்டு என் மனம் குழம்பியதே.
(6)
பட்டங்கட்டிப் பொற்றோடு பெய்து இவள் பாடகமுஞ்சிலம்பும்
இட்டமாக வளர்த்தெடுத்தேனுக்கு என்னோடிருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டு நின்றுஇவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே.

பாசுர அனுபவம்

நீண்ட அழகிய சுருள் முடியையுடைய பெண்களே, கேளுங்கள்!
என் மகளுக்கு சுட்டி, பொன் தோடு, சூடகம்,சிலம்பு, தண்டை
என பலவாராக அணிவித்து, அலங்கரித்து வளர்த்தேன்.
அப்படியிருந்தும், அவள் என்னோடு இருக்காமல் திடீரென்று
வெளியே போய் எல்லோருக்கும் தெறியும்படி நின்று
"காயாம்பூ போன்ற நிறமுடைய கணணா" என்று குரலெழுப்பி,
கண்ணன் நினைவாகவே மோஹம் அடைகிறாள்!
(7)
பேசவுந்தரியாத பெண்மையின் பேதையேன் பேதையிவள்
கூசமின்றி நின்றார்கள் தம்மெதிர் கோல்கழிந்தான் மூழையாய்
கேசவாவென்றுங் கேடிலீயென்றும் கிஞ்சுகவாய் மொழியாள்
வாசவார் குழல் மங்கைமீர் இவள் மாலுறுகின்றாளே.

பாசுர அனுபவம்

நீளமாய் சுகந்தத்துடன் கூடிய அழகிய கூந்தலையுடைய
பெண்களே! சூதுவாது அறியாத என் பெண் பிறர் ஏசினால்
கூட பதில் சொல் பேசத்தெரியாதவள், கிளி போல
இனிமையாக பேசுபவள், கைப்பிடி அற்ற கரண்டி மாதிரி,
என்னை விட்டகன்று, எல்லோர் முன்னிலையிலும் வந்து
நின்றுகொண்டு,கேசவா என்றும், அழிவில்லாதவனே
என்றும் குரலெழுப்பி கண்ணனை நினைத்து மயங்குகிறாள்!
(8)
காறை பூணுங்கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுக்கும்
கூறையுடுக்கும் மயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறி நின்றாயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும்
மாறில் மாமணி வண்ணன் மேல் இவள் மாலுறுகின்றாளே.

பாசுர அனுபவம்

கழுத்திற்க்கு அட்டிகை அணிவதும், அந்த அழகை கண்ணாடியில்
பார்த்து ரசிப்பதும், கையில் வளை அணிந்தவுடன் கையை
குலுக்கி ஒசை எழுப்புவதும், பட்டுப்புடவை உடுத்துவதும்
சரிசெய்வதுமாகப் பண்ணியும், கண்ணனின் வருகையை
எதிர்பார்த்து, அவன் வராததால் சற்று சோர்வுற்று, பிறகு
தன்னுடைய கோவைப்பழம் போன்ற உதடுகளை தாம்பூலத்தால்
சென்னிரமாக்கி,ஒருவாராக மனதை தேற்றி,பெருமானின்
ஆயிரம் நாமாக்களையும் குணங்களையும் வாயாரப்
பாடிக் கொண்டே, ஒப்பற்றவனும், சிறந்த மாணிக்கம்
போன்றவனை நினைத்து மோஹமடைகின்றாள்.
(9)
கைத்தலுத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டென்ன வாணிபம்நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தட முகில் வண்ணன் பக்கல் வளர விடுமிங்களே.

பாசுர அனுபவம்

கைவசமிருந்த செல்வங்களையெல்லாம் செலவழித்து இவளுக்கு
கல்யாணங்கள் செய்து இவளை வைத்து கொண்டிருப்பதால் என்ன
லாபம். நமக்கு வீண் பழி தான் மிஞ்சும். எப்படி வயலில் வளரும்
நாற்றை அவ்வயலுக்கு சொந்தக்காரன் தன் இஷ்டப்படி நடவு
வயலில் நடுவது போல், கண்ணபிரானும் அவனிஷ்டப்படி
இவளை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். பெரிய கருத்த
மேகம் போன்ற திருமேனியையுடைய கண்ணனிடத்தில் இவளை
வாழுமாறு கொண்டு விட்டு விடுங்கள்.
(10)
பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணி நம்மில்லத்துள்ளே
இருத்துவானெண்ணி நாமிருக்க இவளுமொன்றெண்ணுகின்றாள்
மருத்துவப்பதம் நீங்கினாளென்னும் வார்த்தை படுவதன் முன்
ஒருப்படுத்திடுமினிவளை உலகளந்தானிடைக்கே.

பாசுர அனுபவம்

மிக விமர்சையாக பல கல்யாண காரியங்களை இவளுக்குச்
செய்து இவளை பாசத்துடன் நம் வசமே வைத்திருக்க
எண்ணினாலும், இவளோ வேறு விதமாக எண்ணுகிறாள்.
எப்படி ஒரு மருத்துவன் மருந்தை சரிவர பதமாகச்
செய்யாவிடில் விபரீதம் உண்டாகுமோ, அதேபோல்
இவளுக்கு பிடிக்காததை செய்ததால் இவள் வாழாமல்
போனாள் என்கிற பழி உண்டாகும் முன் இவளை உலகளந்த
பெருமானிடமே கொண்டு போய் சேர்த்துவிடுங்கள்.
(11)
ஞாலமுற்று முண்டாலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகி மகிழ்ந்தனளென்று தாயுரைசெய்த தனை
கோலமார் பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன் சொன்ன
மாலை பத்தும் வல்லவர்கட்கு இல்லை வருதுயரே.

பாசுர அனுபவம்

உலகத்தையெல்லாம் தன் வயிற்றில் அடக்கிக் கொண்டு
ஒரு ஆலிலை மேல் படுத்திருக்கும் நாராயணனிடமே என்
மகள் காதல் வயப்பட்டாள் என்று, அழகிய சோலைகளால்
சூழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவன் பெரியாழ்வார்,தாயின்
மனோபாவத்துடன் அருளிச்செய்த இந்த பத்து பாசுரங்களை
அறிந்தவர்க்கு வரக்கூடிய துயரங்கள் ஒன்றுமில்லை.