மூன்றாம் பத்து ஆறாம் திருமொழி



சாராம்சம்

தேவர்களுக்கெல்லாம் தேவனான கண்ணன்
எம்பெருமான் வேணு கானத்தை இசைக்க, அதைக்
கேட்டு பேரின்ப அதிர்ச்சியையும், பேரானந்தத்தையும்
அடையும் தேவர்கள், முனிவர்கள், ஆயர்பாடி ஜனங்கள்,
பசுக்கள், பறவைகள், மரங்கள், எப்படி தன்னிலை
இழந்து, தங்கள் தொழில்களையும், செயல்களையும்
மறந்து செயலற்று பிரமித்து நின்றார்கள்
என்பதை சித்தரிக்கும் பாசுரங்கள்.
(1)
நாவலம் பெரிய தீவினில் வாழும்
நங்கை மீர்களி தோரற்புதங்கேளீர்
தூவலம் புரியுடைய திருமால்
தூய வாயிற் குழலோசை வழியே
கோவலர் சிறுமியரிளங் கொங்கை குதூகலிப்ப
உடலுள விழ்ந்து எங்குங்
காவலுங் கடந்து கயிறு மாலையாகி
வந்து கவிழ்ந்து நின்றனரே.

பாசுர அனுபவம்

ஜம்பூத்வீபம் என்கிற மிகப் பெரிய தீவில் வசிக்கும்
பெண்களே! ஓர் ஆச்சர்யமான செய்தியைக்
கேளுங்கள்! சுத்தமான வலம்புரி சங்கை திருக்கையில்
வைத்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனுடைய பவள
வாயினால் ஊதப்பெற்று வரும் குழலோசையானது,
திருவாய்பாடியிலிருக்கும் இடைப்பெண்களின்
காதில் ஒலித்தவுடன், அவர்கள், தங்களின் உடலும்
உள்ளமும் கண்ணனிடம் இழந்தவர்களாக, காமத்தினால்
மார்பகங்கள் புடைக்க, காவல்களை மீறி அவனிடம் ஓடி
வந்து, கயிறில் கோத்த மாலை போல் அவனைச் சூழ்ந்து
வெட்கத்துடன் தலையை கீழ் நோக்கி
தொங்கவிட்டு நின்றார்கள்!
(2)
இடவணரை யிடத் தோளொடு சாய்த்து
இருகை கூடப் புருவம் நெரிந்தேற
குடவயிறு படவாய் கடைகூடக்
கோவிந்தன் குழல் கொடூ தினபோது
மட மயில்களொடு மான்பிணை போலே
மங்கை மார்கள் மலர்க் கூந்தலவிழ
உடைநெகிழவோர் கையால் துகில் பற்றி
ஒல்கியோட ரிக்கணோட நின்றனரே

பாசுர அனுபவம்

தன்னுடைய இடப்பக்க மோவாய்கட்டையை இடது
தோள் பக்கமாகச் சாய்த்து, புருவத்தை நெரித்தவாறு,
வயிற்றில் காற்றை நிரப்பி வயிறு குடம்போல்
காட்சியளிக்க, திருவாயை குவித்து, கோவிந்தன் தன்
இரு கைகளால் குழலைப் பிடித்து ஊத,
அக்குழலோசையைக் கேட்டவுடன், மயில், மான்
போன்று அழகிய தோற்றத்துடனிருந்த பெண்களின்
கூந்தலவிழ்ந்து, புடவையும் உடலை விட்டு நழுவியது.
அவர்கள், புடவையை ஒரு கையாலே பிடித்து சரி
செய்தவாறே,கண்ணனைக் காணும் துடிப்பில்,
கண்களை அங்குமிங்குமாக ஓடவிட்டு,
வெட்கத்துடன் நின்றார்கள்!
(3)
வானிளவரசு வைகுந்தக் குட்டன்
வாசுதேவன் மதுரை மன்னன் நந்த
கோனிளவரசு கோவலர் குட்டன்
கோவிந்தன் குழல் கொடூதினபோது
வானிளம் படியர் வந்து வந்தீண்டி
மனமுருகி மலர்க்கண்கள் பனிப்ப
தேனளவு செறி கூந்தலவிழச்
சென்னிவேர்ப்பச் செவி சேர்த்து நின்றனரே

பாசுர அனுபவம்

வானோர்களுக்கு அரசன், வைகுந்தத்திலிருக்கும்
நித்யஸூரிகளுக்கு குழந்தை போலிருப்பவன்,
வசுதேவரின் புத்திரன், மதுரைப் பட்டினத்தின்
மன்னன், நந்தகோப வம்ச இளவரசன், இடையர்
குல புதல்வன், இப்படியாயிருக்கிற கோவிந்தன்
என்று போற்றப்படுகின்ற கண்ணன் குழலைக்
கொண்டு ஊதினபோது,ஸ்வர்கலோக ஸ்த்ரீகள்
அவனிடம் வந்தடைந்து, மனதைப் பறி
கொடுத்தவர்களாய், பூ போன்ற மிருதுவான
கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுக்க,
தேனடர்ந்த தங்கள் கூந்தல்கள் அவிழ, நெற்றி
வேர்க்க, பரவசத்துடன் குழலோசையைக்
கேட்டவாறு ஸ்தம்பித்து நின்றார்கள்!
(4)
தேனுகன் பிலம்பன் காளியனென்னும்
தீப்பப்பூடுகளடங்க வுழக்கி
கானகம்படி யுலாவியுலாவிக்
கருஞ்சிருக்கன் குழலூதின போது
மேனகையொடு திலோத்தமை யரம்பை
உருப்பசி யரவர் வெள்கி மயங்கி
வானகம் படியில் வாய் திறப்பின்றி
ஆடல் பாடலவை மாறினர் தாமே

பாசுர அனுபவம்

கொடிய அசுரர்களான தேனுகன், ப்ரலம்பன்,
காளியன் இவர்களை புல் பூண்டுகளை களைவது
போல் அழித்து, காடுகளில் தன்னிச்சையாக
உலாவித் திரியும் கருத்த மேனியையுடைய
சிறுவன், கண்ணபிரான், குழலைப் பிடித்து
ஊதினபோது, மேனகை, திலோத்தமை, ரம்பை,
ஊர்வசி, அப்சரஸ் ஆகிய தேவலோக ஸ்த்ரீகள்
கண்ணனின் அழகையும், ஓசையையும் கேட்டு
மயங்கியவர்களாய், வெட்கம் கொண்டவர்களாய்,
அவர்கள் வானுலகத்தில் நித்யம் புரியும்
ஆடல்களையும், பாடல்களையும், மறுபேச்சில்லாமல்,
தாமாகவே நிறுத்திக் கொண்டார்கள்!
(5)
முன்நர சிங்கமதாகி யவுணன்
முக்கியத்தை முடிப்பான், மூவுலகில்
மன்னரஞ்சும் மதுசூதனன் வாயிற் குழலினோசை
செவியைப் பற்றி வாங்க
நன்னரம்புடைய தும்புருவோடு
நாரதனுந் தந்தம் வீணை மறந்து
கின்னர மிதுனங்களுந் தந்தங் கின்னரம்
தொடுகிலோ மென்றனரே.

பாசுர அனுபவம்

முன்னொரு சமயம் ந்ருஸிம்ஹனாக அவதரித்து,
ஹிரண்யகசிபு என்ற அசுரனின் ஆதிக்கத்தை
முடித்தவனும், மூன்று உலகிலுமுள்ள அரசர்கள்
தன்னைக் கண்டு பயப்படும்படி வைத்திருப்பவனான
மதுசூதனன்-கண்ணன், தனது பவள வாயில் குழலை
வைத்து ஊதினபோது ஏற்பட்ட குழலினோசையை
நன்றாகக் கேட்ட, நாரத-தும்புரு முனிவர்கள்
தங்களுடைய வீணையை மறந்தார்கள். அதேபோல்,
கின்னர-மிதுனர்களும் அவர்கள் சதா வைத்திருக்கும்
கின்னரம் என்ற வாத்தியங்களை
இனித் தொட மாட்டோம் என்றனர்!
(6)
செம்பெருந் தடங் கண்ணன் திரடோளன்
தேவகி சிறுவன் தேவர்கள் சிங்கம்
நம்பரம னிந்நாள் குழலூதக் கேட்டவர்கள்
இடருற்றன கேளீர்
அம்பரந் திரியுங் காந்தப்ப ரெல்லாம்
அமுத கீத வலையாற் சுருக்குண்டு
நம்பரமன்றென்று நாணி மயங்கி
நைந்து சோர்ந்து கைம்மறித்து நின்றனரே

பாசுர அனுபவம்

பெரிய சிவந்த கண்களுடையோன், திரண்ட
தோளுடையோன், தேவகியின் அருமை மைந்தன்,
தேவர்களுக்கு சிம்மம் போன்றவன், நம்பெருமான்
கண்ணன் இன்று குழலை ஊதுகையில் அந்த
இனிமையான குழலோசையைக் கேட்டவர்கள்
படும் அவஸ்தையைக் கேளுங்கள்! வானில் உலாவும்
காந்தர்வர்கள் அனைவரும் அந்த இனிமையான
குழலோசை என்னும் வலையில் அகப்பட்டு, இனி
பாடும் சுமை நமக்கு எதற்கு என்று வெட்கி,
தன்னிலை மறந்து, புத்தி பேதலித்து, உடல்
சோர்வுற்று கை கட்டி நின்றார்கள் !
(7)
புவியுள் நான் கண்டதோரற்புதங் கேளீர்
பூணிமேய்க்கு மிளங் கோவலர் கூட்டத்
தவையுள்* நாகத்தணையான் குழலூத
அமரலோகத்தளவுஞ் சென்றிசைப்ப
அவியுணா மறந்து வானவரெல்லாம்
ஆயர்பாடி நிறையப் புகுந்தீண்டி
செவியுணாவின் சுவை கொண்டு மகிழ்ந்து
கோவிந்தனைத் தொடர்ந்தென்றும் விடாரே.

பாசுர அனுபவம்

இந்த பூமியில் நான் பார்த்த ஓர் அதிசயத்தைக்
கேளுங்கள்! பசுக்களை மேய்க்கும் இடைச்
சிறுவர்கள் குழுமியிருந்த இடத்தில், பாம்பின்மேல்
துயில் கொள்ளும் கண்ணபிரான் குழலை ஊத,
அந்த கானம் தேவலோகம் வரை சென்றடைந்து,
அங்குள்ள தேவர்களெல்லாம் ஹவிஸ் உட்கொள்வதை
மறந்தவர்களாக, ஆயர்பாடி முழுவதும் வந்திரங்கி
ஆக்ரமித்தவர்களாய், அந்த இன்னிசை ரசத்தை
தங்கள் செவியால் உட்கொண்டு, களிப்புற்று
கோவிந்தனை எக்காலமும் விட
மனமில்லாமல் அவன் பின் சென்றனர்!
(8)
சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச்
செங்கண் கோடச் செய்யவாய் கொப்பளிப்ப
குருவெயர்ப் புருவங் கூடலிப்பக்
கோவிந்தன் குழல் கொடூதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து
வந்து சூழ்ந்து படு காடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்திறங்கிச் செவியாட்ட கில்லாவே.

பாசுர அனுபவம்

தன்னுடைய சிறிய கை விரல்களால் புல்லாங்குழல்
துவாரங்களைத் தடவிக் கொண்டும், செந்நிறக்
கண்களை கோணலாகச் செய்துகொண்டும்,
செம்பவள வாயை குமிழ்த்தும், முத்து போல்
வியர்த்த புருவங்களை மேல்நோக்கி வளைத்தும்,
கோவிந்தன் குழலைக்கொண்டு ஊதினபோது,
பறவைக் கூட்டங்கள் தங்கள் கூடுகளை விட்டு
வெளியில் வந்து, கண்ணனைச் சூழ்ந்து, காடுகளில்
வெட்டி விழுந்த மரக்கிளைகள் போல் தன்நிலையற்று
கிடந்தன! பசுக்கூட்டங்களோ தங்கள் கால்களைப்
பரப்பி, தலைகளைத் தொங்கவிட்டு, காதுகளை
அசைக்காமல், குழலோசையால் மெய்மறந்து நின்றன!
(9)
திரண்டெழு தழை மழை முகில் வண்ணன்
செங்கமல மலர் சூழ் வண்டினம் போலே
சுருண்டிருண்ட குழல் தாழ்ந்த முகத்தான்
ஊதுகின்ற குழலோசை வழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து
மேய்ந்த புல்லுங் கடை வாய் வழி சோர
இரண்டு பாடுந் துலங்காப் புடை பெயரா
எழுது சித்திரங்கள் போல நின்றனவே

பாசுர அனுபவம்

மழை மேகம் திரண்டு எழுந்தாற்போல் காட்சி
அளிப்பவனும், செந்தாமரைப் பூவில் கரு வண்டுகள்
மொய்ப்பது போல் அவனுடய திருமுகத்தில் சுருள்
கூந்தல் தாழ்ந்து அசைய, கண்ணபிரான் ஊதுகிற
குழலோசையைக் கேட்ட மான் கூட்டங்கள் மதிமயங்கி
மேய்ப்பதை மறந்து, ஏற்கனவே வாயில் கவ்வின
புல்லும் வாயின் ஓரமாக வெளியே நழுவி விழ, முன்
பின் பக்கங்களில் அடி வைத்து நகராமல், சுவரில்
எழுதின சித்திரம் போல் அசையாமல் நின்றன!
(10)
கருங்கண் தோகை மயிற் பீலி யணிந்து
கட்டி நன்குடுத்த பீதகவாடை
அருங்கல வுருவினாயர் பெருமான்
அவனொருவன் குழலூதினபோது
மரங்கள் நின்று மது தாரைகள் பாயும்
மலர்கள் வீழும் வளர் கொம்புகள் தாழும்
இரங்குங் கூம்புந் திருமால் நின்ற
நின்ற பக்கம் நோக்கி
அவை செய்யுங் குணமே.

பாசுர அனுபவம்

கருநிறக் கண் கொண்ட மயில் தோகை இறகுகளை
தனது திருமுடியில் அணிந்தும், நன்றாகச் சாத்தின
பீதாம்பரத்துடனும், அழகான திருவாபரணங்களை
அணிந்த திருமேனியுடன் கூடின எம்பெருமான்,
குழலைப் பிடித்து ஊதினபோது அங்குள்ள மரங்கள்
திருமால் நின்ற பக்கம் பார்த்து மது நிறைந்த
மகரந்தங்களை பெருக்கின, மலர்களை அர்ச்சனை
செய்வது போல் விழச் செய்தன, மேல் நோக்கி
வளரும் கிளைகளை தாழச் செய்து கூப்பி வணங்கின!
(11)
குழலிருண்டு சுருண்டேரிய குஞ்சிக்
கோவிந்தனுடைய கோமளவாயில்
குழல் முழைஞ்சு களினூடு குமிழ்த்துக்
கொழித்திழிந்த வமுதப்புனல் தன்னை
குழல் முழவம் விளம்பும் புதுவைக்கோன்
விட்டுசித்தன் விரித்த தமிழ் வல்லார்
குழலை வென்ற குளிர் வாயின ராகிச்
சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே.

பாசுர அனுபவம்

சுருண்ட கருத்த திருமுடியையுடைய கோவிந்தன்
தன்னுடைய அழகிய வாயில் குழலை வைத்து ஊத,
அக்குழலின் துளைகளிலிருந்து கிளம்பிய அம்ருத
நீர்திவலைகளுடன் கூடிய குழலோசைக்கு ஒப்பாக,
ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவனான பெரியாழ்வாரால்
அருளிச் செய்த இந்த தமிழ்ப் பாசுரங்களை
ஓதவல்லவர்கள், குழலோசையை வெல்லும்
இனிய பேச்சுத் திறன் பெற்று சாதுக்களில்
ஒருவராகத் திகழ்வர்!