சாராம்சம்
இந்திரன் தனக்கு பூஜை செய்யாததால் கோபமுற்று,கடும் மழை பொழிவித்தான். இடையர்களும்,
பசுக்களும் மழையால் அவதியுறுவதை கண்டு
சகிக்காமல் கண்ணன் கோவர்த்தன மலையை
தனது திருக்கையால் தகர்த்து குடையாக மேலே
தூக்கிப் பிடித்து ஜீவர்களை ரக்ஷித்தான்.கண்ணனின்
பெருமையையும், கோவர்த்தன மலையின்
சிறப்பையும் பெரியாழ்வார் கீழ்கண்ட
பாசுரங்களில் அழகாக வர்ணித்துள்ளார்.
(1)
அட்டுக் குவிசோற்றுப் பருப் பதமும்
தயிர்வாவியும் நெய் யளறும் அடங்கப்
பொட்டத் துற்றி மாரிப்பகை புணர்த்த
பொருமா கடல்வண்ணன் பொறுத்தமலை
வட்டத் தடங்கண் மடமான் கன்றினை
வலைவாய்ப் பற்றிக்கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப்பால் கொடுத்து வளர்க்கும்
கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
பாசுர அனுபவம்
நன்றாக சமைத்து குவித்து வைத்த சோற்றைவிழுங்கி, குடத்திலிருந்து தயிரையும் குடித்து,
உருக்கி வைத்திருந்த நெய்யையும் அவசரமாகப்
பருகி, இந்திரனுக்கு கோபமுண்டாக்கி, அதனால்
பகை கொண்ட அவன் பலத்த மழையை
உண்டாக்க, அந்த மழையைத் தடுக்க
வெற்றியையுடைய ஒரு மலையை தன்னுடைய
விரலால் தூக்கிப் பிடித்தான். குறப் பெண்கள்
வட்ட வடிவான பெரிய கண்களைக் கொண்ட
மான் குட்டியை, அதனுடைய தாயினின்றும்
பிரித்து, வலையில் அகப்படுத்தி, பஞ்சை
சுருளாக்கி அதன் நுனியாலே பாலை ஊட்டி வரும்
இடம் தான் கோவர்தனமென்னும் அந்த மலை.
(2)
வழுவொன் றுமிலாச் செய்கை வானவர்கோன்
வலிப் பட்டுமுனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்தெழுநாள் பெய்து மாத்தடுப்ப
மது சூதனெடுத்து மறித்தமலை
இழவு தரியாத தோரீ ற்றுப்பிடி
இளஞ் சீயந் தொடர்ந்து முடுகுதலும்
குழவியிடைக் காலிட்டெதிர்ந்து பொரும்
கோவர்தன மென்னுங் கொற்றக குடையே.
பாசுர அனுபவம்
குறையிலாச் செயல்களை உடையவனாக இருந்தும்,இந்திரன் தனக்கு பூஜை செய்யாததால் கோபமுற்று,
ஏழு நாட்கள் இடைவிடாது மழை பொழிவித்து,
பசுக்களை வெளியில் வரவிடாமல் செய்ததைப்
பொறுக்காமல், மதுசூதனனான கண்ணபிரான்,
ஒரு மலையை பெயர்த்தெடுத்து, தலைகீழாக
கொடையைப்போல் பிடித்து ஜனங்களையும்,
பசுக்களையும் ரக்ஷித்தருளினான். ஒரு பெண்
யானை தன் குட்டியை தாக்க தொடர்ந்து வந்த
சிங்கக் குட்டியிடமிருந்து காப்பாற்ற, குட்டியை
பிரிய நேரிடுமோ என்று துக்கமுற்று, தன்
கால்களின் இடுக்கில் அக்குட்டி யானையை
பத்திரமாக அடக்கி வைத்து, அச்சிங்கக் குட்டியை
எதிர்த்துப் போராடிய இடம் தான்
கோவர்தனமென்னும் அந்த மலை.
(3)
அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும்
ஆனாயரும் ஆ நிரையும் அலறி
எம்மைச் சரணேன்று கொள்ளென்றிரப்ப
இலங்காழிக் கையெந்தை யெடுத்தமலை
தம்மைச் சரணென்றதம்பாவையரைப்
புனமேய் கின்ற மானினம் காண்மினென்று
கொம்மைப் புயக்குன்றர் சிலை குனிக்கும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே
பாசுர அனுபவம்
மை இட்ட பரந்த அழகிய கண்களையுடைய பேதமைகுணம் படைத்த இடைச்சியர்களும், இடையர்களும்,
பசுக்கூட்டங்களும் கடுமையான மழையைக் கண்டு
பயத்தால் பெரிய கூக்குரலிட்டு, பெருமானே! நீ தான்
எங்களை காப்பாற்றவேண்டும் என்று கதறி முறையிட,
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எம்பெருமான்
கையில் சக்ராயுதம் ஏந்தியவனாய், ஒரு மலையைத்
தூக்கிப் பிடித்தான். பருத்த தோள்களை கொண்ட
குறவர்கள், தங்களையே நம்பி இருக்கிற தம்
பெண்களின் கண்களைக் கண்டு, மான்
கூட்டங்கள்தான் கொல்லையில் பயிர்களை மேய்ந்து
அழிக்கின்றதோ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு,
கையில் வில்லையும் அம்பையும் எடுத்த இடம் தான்
கோவர்தனமென்னும் அந்த மலை.
(4)
கடுவாய்ச்சின வெங்கட் களிற்றினுக்குக்
கவள மெடுத்துக் கொடுப்பானவன் போல்
அடிவாயுறக்கையிட்டெழப்பறித்திட்டு
அமரர் பெருமான் கொண்டுநின்ற மலை
கடல்வாய்ச் சென்று மேகங் கவிழ்ந் திறங்கிக்
கதுவாய்ப்படநீர் முகந்தேறி எங்குங்
குடவாய்ப்பட நின்று மழை பொழியும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே
பாசுர அனுபவம்
கோபத்துடனும், கூர்மையான கண்களுடனும்,பயங்கரமான வாயையுமுடைய ஒரு யானைக்கு
சோற்றை பெரிய உருண்டையாக திரட்டி எடுத்து
கொடுக்கும் யானைப்பாகனைப்போல், தேவர்களின்
தலைவனான கண்ணபிரான் மலையை வேரோடு
பிடுங்கி மேலே தூக்கி பிடித்து நின்றான். மேகங்கள்
கடலிடத்திற்கு திரண்டு போய் நின்று, கீழே இறங்கி
கடல் நீர் அனைத்தையும் அதனிடம் ஈர்த்து,
பிறகு மேலேறி, குடங்கள் நிரம்ப மழையாகப்
பொழிவதும் கோவர்தனமென்னும் மலையில் தான்
(5)
வானத் திலுள்ளீர் வலியீர் உள்ளீரேல்
அறையோ வந்து வாங்குமினென்பவன் போல்
ஏனத் துருவாகிய வீசன் எந்தை
இடவனெழ வாங்கியெடுத்த மலை
கானக் களி யானை தன்கொம்பிழந்து
கதுவாய் மதம்சோரத்தன் கையெடுத்து
கூனல் பிறைவேண்டி அண்ணாந்து நிற்கும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே.
பாசுர அனுபவம்
வானோர்களே! உங்களில் பலசாலி யாரேனும்உள்ளீராகில் இங்கு வந்து இந்த மலையை தூக்கிப்
பாருங்கள்! என்று சவால் விடுபவன் போல், அன்று
வராஹ உருவம் எடுத்த எனது தந்தை கண்ணபிரான்,
மலையை மண்கட்டியை எடுப்பது போல் அடியோடு
பிடுங்கி கையில் தூக்கியவாறு நின்றான்! காடுகளில்
திரியும் ஒரு யானை தன்னுடைய தந்தத்தை இழந்து,
மத நீர் சுரக்க, பிறை சந்திரனை தானிழந்த தந்தம்
என்று தவறாக எண்ணி தும்பிக்கையை மேலே தூக்கி
அதை எடுத்துக்கொள்ள நினைத்து நின்ற இடம்
அந்த கோவர்தனமென்னும் மலையில் தான.
(6)
செப்பாடுடைய திருமாலவன் தன்
செந்தாமரைக்கை விரலைந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடுந்தோள்
காம்பாகக் கொடுத்துக் கவித்தமலை
எப்பாடும் பரந்திழி தெள்ளருவி
இலங்கு மணி முத்துவடம் பிறழ
குப்பாயமென நின்று காட்சி தரும்
கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே.
பாசுர அனுபவம்
நேர்மை குணமுள்ள திருமகள் துணைவன்,தன்னுடைய செந்தாமரைக் கையின் ஐந்து
விரல்களையும், அழகிய தோள்களையும் கொண்டு
மலையை பிடுங்கி எடுத்து தலைகீழாக கவிழ்த்த
போது, அம்மலையில் எங்கும் பெருகி வந்த சுனை
நீர் அருவிகளானது, கண்ணபிரானுக்காகத் தயார்
செய்த முத்துச் சட்டைபோல் காட்சி தந்தது. அந்த
இடம் கோவர்த்தனமென்னும் மலை தான்.
(7)
படங்கள் பலவுமுடைப் பாம்பணையன்
படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங்கை விரலைந்தும் மலர வைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்றிலங்கையையீடழித்த
அனுமன் புகழ் பாடித் தங்குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே.
பாசுர அனுபவம்
எப்படி பரந்த பூமியை ஒரு பெரிய நாகம்தன்னுடைய பல தலைகளைக் கொண்டு
தாங்குவதைப் போல், தாமோதரன் என்ற
திருநாமமுடைய கண்ணன் தனது கைகளிலுள்ள
ஐந்து விரல்களை விரித்து தாங்கிப் பிடித்த
பெரிய மலை எதுவெனில், இலங்கைக்கு போய்
அந்த நகரையே அழித்த ஹனுமனின் புகழைப்
பாடிக்கொண்டு அங்கு உள்ள பெண் குரங்குகள்,
தங்கள் குட்டிகளை தூங்க வைக்கும்
கோவர்த்தனமென்னும் மலை தான்.
(8)
சலமா முகிற் பல்கணப் போர்க்களத்துச்
சரமாரி பொழிந்தெங்கும் பூசலிட்டு
நலிவானுறக் கேடகங் கோப்பவன் போல்
நாராயணன் முன் முகங்காத்த மலை
இலைவேய் குரம்பைத் தவமா முனிவர்
இருந்தார் நடுவே சென்றணார் சொறிய
கொலைவாய்ச்சின வேங்கைகள் நின்றுறங்கும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே.
பாசுர அனுபவம்
நீரால் மேகங்கள் இடைச்சேரி எங்கும் சூழ்ந்துஇடியின் சப்தத்துடன், போர் களத்தில்
சரமாரியாக மழை பொழிவது போல், கன மழை
பெய்து ஜனங்களையும், பசுக்களையும் கஷ்டப்
படுத்திய வேளையில், நாராயணன், கேடயமென்கிற
ஆயுதத்தை கையில் கோத்து நிற்பவன் போல்,
ஜனங்களுக்கு முன் கொடுத்த வாக்குறுதிப்படி,
மலையை குடையாக எடுத்துப் பிடித்து ரக்ஷித்தான்.
புலிகள், இலைகளால் அமைத்த வீடுகளில் வாழும்
தவம் புரியும் மகரிஷிகளின் நடுவே செல்ல, அவர்கள்
அப்புலிகளின் கழுத்தை வருட, அவை நின்றபடியே
உறங்கிய இடம் அந்த மலை தான்.
(9)
வன் பேய் முலையுண்டதோர் வாயுடையன்
வன் தூணென நின்றதோர் வன் பரத்தை
தன் பேரிட்டுக் கொண்டு தரணி தன்னில்
தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக்கணங்கள்
முதுகிற் பெய்து தம்முடைக்குட்டன்களை
கொம்பேற்றியிருந்து குதிபயிற்றும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே.
பாசுர அனுபவம்
வஞ்சனையாக வந்த பூதனை முலையை உண்டவாயையுடையவனான தாமோதரன் தன்னுடைய
பெயரை கொண்ட பெரிய மலையைத் தாங்கிப்
பிடித்து தூணைப்போல் இவ்வுலகத்தில் நின்றான்.
குரங்குக் கூட்டங்கள் தம் தம் குட்டிகளை முதுகில்
கட்டிக்கொண்டு போய் மரக்கொம்பில் ஏற்றிவைத்து
ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு தாவும்
பயிற்சியை அளிக்கும் இடம் அந்த
கோவர்தனமென்னும் மலை தான்.
(10)
கொடியேறு செந்தாமரைக் கைவிரல்கள்
கோலமு மழிந்தில வாடிற்றில
வடிவேறு திருவுகிர் நொந்துமில
மணிவண்ணன் மலையுமோர் சம்பிரதம்
முடியேறிய மாமுகிற் பல்கணங்கள்
முன்னெற்றி நரைத்தன போல எங்கும்
குடியேறி யிருந்து மழைபொழியும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடையே.
பாசுர அனுபவம்
கொடி படர்ந்த செந்தாமரை மலர் போன்ற கையும்,விரல்களும் அவனுடையஅழகும், மலையை ஏழு
நாட்கள் இடைவிடாது தூக்கிப் பிடித்ததால், எவ்வித
விகாரமோ, தளர்ச்சியோ அடையவில்லை. அவனுடைய
அழகிய நகங்களுக்கும் வலி ஏற்படவில்லை. நீல மணி
வண்ணனான கண்ணனின் இந்த அசாதாரணமான
செயல் ஒரு மாயா ஜாலம் போலிருந்தது. பெரிய
மேகக் கூட்டங்கள் பலவாறாக மேல் சென்று மலையின்
எல்லாவிடங்களிலும் மழையைப் பெய்து, மலையின்
முன்புறம் வெளுத்து நரைத்தது போல் காட்சியளித்த
இடமும் கோவர்தனமென்னும் அந்த மலையே.
(11)
அரவிற் பள்ளிகொண்டர வந்துரந்திட்டு
அரவப் பகையூர்திய வனுடைய
குரவிற் கொடி முல்லைகள் நின்றுறங்கும்
கோவர்த்தன மென்னும் கொற்றக் குடைமேல்
திருவிற் பொலிமறை வாணர் புத்தூர் திகழ்
பட்டர்பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவுமன நன்குடைப் பத்தருள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே.
பாசுர அனுபவம்
திருப்பாற்கடலில் பாம்பின் மேல் பள்ளிகொண்டும், ஒருசமயம் காளியன் என்ற கொடிய
நாகத்தை அழித்தும்,பாம்பினிடத்தில் பகை கொண்ட
கருடனை வாகனமாகக் கொண்டவனும், முல்லைக்
கொடிகள் படர்ந்திருக்கும் கோவர்தனமென்னும்
மலையை குடையாகக் கொண்டவனுமான
கண்ணனுடைய விஷயமாக, வேதமோதும்
ஸ்ரீவைஷ்ணவர்களின் இருப்பிடமான
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார்
அருளிச் செய்த இப்பத்து பாசுரங்களையும் மனதார
நன்கு ஓதவல்ல பக்தர்கள் பரம பதத்தை அடைவர்.