மூனறாம் பத்து மூன்றாம் திருமொழி



சாராம்சம்

சிறுபிள்ளை கண்ணன் கன்றுகளை மேய்த்து
விட்டு வீடு திரும்புவதை ஆவலுடன்
எதிர்நோக்கியிருக்கும் யசோதை, அவனுடைய
திருமேனியின் அழகை தானும் அனுபவித்து,
பிறரையும் அனுபவிக்கச் செய்கிறாள். அதே
சமயம், காட்டில் அலைந்துவிட்டு வந்ததால்
அவனுடைய திருமேனி வாடியிருப்பதை கண்டு
மனம் நொந்து போகிறாள். கண்ணனின்
அசாத்திய சாகசங்களை அவள் பெருமையாக
ஒருபுறம் பேசினாலும், மறுபுறம் அவளுக்கு
இப்பிள்ளையை கண்டு பயமேற்படுகிறது.

(1)
சீலைக் குதம்பை யொருகா தொருகாது
செந்நிற மேற்றோன்றிப்பூ
கோலப் பணைக்கச்சுங் கூறையுடையும்
குளிர் முத்தின் கோடாலமும்
காலிப்பின்னே வருகின்ற
கடல் வண்ணன் வேடத்தை வந்து காணீர்
ஞாலத்துப் புத்திரனைப் பெற்றார்
நங்கைமீர் நானே மற்றாருமில்லை.

பாசுர அனுபவம்

ஒரு காதில் துணித்திரியையும் மற்றொரு
காதில் சிவப்பு நிற கார்த்திகைப் பூவையும்
சொருகிக் கொண்டும், திருப்பீதாம்பரத்தை
உடுத்தியும், இடுப்பில் அழகிய பெரிய
கச்சுப் பட்டை கட்டியும், திருமார்பில் குளிர்ந்த
முத்து மாலையை அணிந்தும், கடல் நிற
வண்ணனான கண்ணன் கன்றுகளின் பின்னே,
அவைகளை மேய்த்து விட்டு வீடு திரும்பி வரும்
காட்சியை வந்து பாருங்கள் பெண்களே!
இவ்வுலகத்தில் இப்பேர்பட்ட பிள்ளையைப்
பெற்றவள் நானேயன்றி வேறு யாருமில்லை!

(2)
கன்னி நன் மாமதிள் சூழ்தரு
பூம்பொழிற் காவிரித் தென்னரங்கம்
மன்னிய சீர் மதுசூதனா கேசவா
பாவியேன் வாழ்வுகந்து
உன்னை யிளங் கன்று மேய்க்கச்
சிறுகாலே யூட்டி யொருப்படுத்தேன்
என்னில் மனம் வலியாளொரு பெண்ணில்லை
என் குட்டனே முத்தம் தா.

பாசுர அனுபவம்

அழகிய பெரிய மதில்கள் சூழ்ந்ததும்,
பூஞ்சோலைகளோடு கூடிய காவேரி நதிக்
கரையிலமைந்ததுமான தென் திருவரங்கத்தில்
எழுந்தருளியிருக்கும் கல்யாண குண சீலனான
மதுசூதனா! கேசவா! பாவியாகிய நான்,
ஜீவனத்தை உத்தேசித்து உன்னை அதி
காலையிலேயே உண்ண வைத்து, கன்றுகளின்
பின்னே, அவைகளை மேய்த்துவருவதற்காக,
போகச் சம்மதித்தேன். என்னைக் காட்டிலும்
கல் நெஞ்சம் படைத்த வேறொரு பெண்
இவ்வுலகில் இல்லை. என் குழந்தையே!
எனக்கு ஒரு முத்தம் கொடு!

(3)
காடுகளூடு போய்க் கன்றுகள்
மேய்த்து மறியோடி கார்க்கோடல் பூச்
சூடி வருகின்ற தாமோதரா
கற்றுத்தூளி காணுன்னுடம்பு
பேடை மயிற் சாயல் பின்னை மணாளா
நீராட்ட மைத்து வைத்தேன்
ஆடியமுது செய்யப்பனு முண்டிலன்
உன்னோடுடனே யுண்பான்.

பாசுர அனுபவம்

காடுகள் பல சென்று, கன்றுகளின் முன்னே
போய் அவைகளை சிதற விடாமல் மேய்த்து விட்டு,
பெரிய கார்த்திகைப் பூவை தலை முடியில் சூடியவாரு
வீடு திரும்பும் தாமோதரா! கன்றுகள் கிளப்பிய
புழுதி உன் திருமேனியில் படர்ந்திருக்கிறது. பெண்
மயில்போல் அழகுடைய நப்பின்னை பிராட்டியின்
மணாளனே! உன்னைக் குளிப்பாட்ட தயாராக
இருக்கிறேன். உடனே நீராடி அமுது செய்ய வா.
உன்னோடு கூட சாப்பிட வேணும் என்பதற்காக
உன் தகப்பனாரும் உண்ணாமல் இருக்கிறார்.
(4)
கடியார் பொழிலணி வேங்கடவா
கரும்போரேறே நீயுகக்குங்
குடையுஞ் செருப்புங் குழலுந்தருவிக்கக்
கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெங்கானிடைக் கன்றின்பின் போன
சிறுக்குட்டச் செங்கமல
வடியும் வெதும்பி உன்கண்கள்
சிவந்தா யசைந்திட்டாய் நீ எம்பிரான்.

பாசுர அனுபவம்

நறுமணம் வீசும் சோலைகள் மலர்ந்திருக்கும்
திருவேங்கட மலையில் அருள் பாலிப்பவனே,
முறுக்கேறிய காளை போன்றவனே, கன்றுகளிடத்தில்
ப்ரியமுள்ளவனே, நீ விரும்பிய செருப்பும், குடையும்,
குழலையும் நான் கொடுத்தும் அவைகளை பெற்றுக்
கொள்ளாமல் சென்றாய். சிறு பிள்ளையாகிய நீ
கன்றுகளின் பின் வெய்யில் தகிக்கும் கொடிய
காட்டினில் பிஞ்சு கால்கள் வெதும்பும் படியும்,
கண்கள் சிவக்கும் படியும் அலைகிறாய். என்
ஸ்வாமியே,உன் உடம்பும் சோர்ந்து காணப்படுகிறது.

(5)
பற்றார் நடுங்க முன் பாஞ்ச சன்னியத்தை
வாய் வைத்த போரேறே என்
சிற்றாயர் சிங்கமே சீதை மணாளா
சிறுக்குட்டச் செங்கண்மாலே
சிற்றாடையுஞ் சிறுப்பத்திரமும்
இவை கட்டிலின் மேல் வைத்துப்போய்
கற்றாயரோடு நீ கன்றுகள் மேய்த்துக்
கலந்துடன் வந்தாய் போலும்.

பாசுர அனுபவம்

முன்பொரு சமயம் பாரதப் போரில் பாஞ்சஜன்யம்
என்னும் சங்கை உன் திருவாயில் வைத்து ஊதி
பகைவர்களை நடுங்கும்படி செய்த, காளை
போன்ற, கண்ணனே! சிறு இடைப்பிள்ளைகளுள்
சிங்கக்குட்டி போன்றவனே! சீதை பிராட்டியின்
மணாளனே! சிறு பிள்ளையே! சிவந்த தாமரைப்
பூவை ஒத்த கண்களையுடைய பெருமானே!
நீ உன்னுடைய சிறிய பரிவட்டமும், சிறிய
வாளையும் கட்டிலின் மேல் வைத்துவிட்டு,
கன்றுகளை மேய்க்கப் போகும் அவசரத்தில்,
அவைகளை எடுத்துக்கொள்ள மறந்தவனாய்
இடைப்பிள்ளைகளுடன் சென்று, கன்றுகளை
மேய்த்து விட்டு அவர்களுடன்
ஒன்றாகச் சேர்ந்து வந்தாயல்லவோ.

(6)
அஞ் சுடராழி யுன் கையகத்தேந்தும்
அழகா நீ பொய்கை புக்கு
நஞ்சுமிழ் நாகத்தினோடு பிணங்கவும்
நானுயிர் வாழ்ந்திருந்தேன்
என்செய்ய வென்னை வயிறு மறுக்கினாய்
ஏதுமோ ரச்சமில்லை
கஞ்சன் மனத்துக்குகப்பனவே செய்தாய்
காயாம்பூ வண்ணங் கொண்டாய்.

பாசுர அனுபவம்

உன் திருக்கையில் சங்கை ஏந்தி அழகிய
ஒளியுடன் திகழ்பவனே. நீ பொய்கையில் புகுந்து
காளியன் என்கிற விஷப் பாம்புடன் சண்டையிட்ட
போதும் நான் ஜீவித்திருந்தேன், எதுக்காக என்
வயிற்றை கலக்கும்படி செய்கிறாய். காயாம்பூ
போல் அழகிய வடிவுள்ளவனே! உனக்கு சிறிதும்
பயமில்லையே. கம்சனின் சூழ்ச்சியான மனதிற்கு
ஏற்றவாறு இப்படிச் செய்கிறாயே!
(7)
பன்றியுமாமையு மீனமுமாகிய
பாற் கடல் வண்ணா வுன்மேல்
கன்றினுருவாகி மேய்புலத்தே வந்த
கள்ள வசுரர் தம்மை
சென்று பிடித்துச் சிறுக்கைகளாலே
விளங்கா எறிந்தாய் போலும்
என்றுமென் பிள்ளைக்குத்
தீமைகள் செய்வார்கள் அங்கனமாவர்களே
<

பாசுர அனுபவம்

பன்றியாய், ஆமையாய், மீனாய் அவதார
மெடுத்தவனே ! பாற்கடலின் வண்ணத்தை
உடையவனே! உனக்கு தீங்கு நினைத்து
கன்றுபோல் வேடம் எடுத்து நிலத்தை மேய
வந்த கள்ள அசுரனை உன் சிறு கைகளால்
பிடித்து விளாமரத்தின் மீது வீசியெறிந்து,
அசுரத்தன்மை கொண்ட விளாங்காய்களையும்
அக்கன்றுடன் சேர்த்து வீழ்த்தினாயன்றோ!
என் பிள்ளைக்கு தீங்கு செய்பவர்கள் என்றும்
அவ்வாறே அழிந்து போவார்கள்.
(8)
கேட்டறியாதன கேட்கின்றேன்
கேசவா கோவலர் இந்திரற்கு
காட்டிய சோறுங் கறியுந்தயிருங்
கலந்து டனுண்டாய் போலும்
ஊட்ட முதலிலேனுன்றன் னைக்கொண்டு
ஒருபோது மெனக் கரிது
வாட்டமிலாப் புகழ் வாசுதேவா
உன்னை யஞ்சுவ னின்றுதொட்டும்

பாசுர அனுபவம்

இதுவரை நான் உன்னைப்பற்றி கேட்காதவற்றை
இன்று பிறர் சொல்ல தெரிந்துகொண்டேன்!
கோபாலர்கள் இந்திரனுக்காக அனுப்பிய சோறு,
காய் கறிகள், தயிர் இவைகளை எல்லாம்
ஒன்றாகக்கலந்து மொத்தமாக உண்டாயாமே
நீ ! உன்னை ஊட்டி வளர்க்க வசதி என்னிடம்
இல்லை. இனி ஒரு வேளை கூட உன்னை வைத்து
சமாளிப்பது எனக்கு கடினம். என்றும் நீங்காத
புகழுடன் விளங்கும் வாசுதேவனே! இன்றுமுதல்
உன்னைக் குறித்து எனக்கு பயம் ஏற்படுகிறது.
(9)
திண்ணார் வெண் சங்குடையாய்
திருநாள் திருவோண மின்றேழுநாள் முன்
பண்ணேர் மொழியாரைக் கூவி முளை யட்டிப்
பல்லாண்டு கூறுவித்தேன்
கண்ணாலஞ் செய்யக்
கறியுங் கலத்த தரிசியு மாக்கி வைத்தேன்
கண்ணா நீ நாளைத் தொட்டுக் கன்றின்பின் போகேல்
கோலஞ் செய்திங்கேயிரு

பாசுர அனுபவம்

நல்ல திடமான வெண்ணிற சங்கை ஏந்தியுள்ள
கண்ணா! இன்றிலிருந்து ஏழு நாட்களில்
உன்னுடைய பிறந்த நக்ஷத்திரமாகிய
திருவோணம். அழகான பேச்சையுடைய
பெண்களை அழைத்து உனக்கு மங்கள
காரியங்களை செய்வித்தும், மங்களமும்
பாடவைத்தேன். உன்னுடைய இத்திருக்
கல்யாணத்தை கொண்டாட அரிசி, காய்
கறிகளை பாத்திரங்களில் சேமித்து வைத்துள்ளேன்.
நீ நாளை தொடங்க கன்றுகளின் பின்னே
போக வேண்டாம். உன்னை நன்றாக
அலங்கரித்துக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிடு.
(10)
புற்றவல்குல சோதை நல்லாய்ச்சி
தன் புத்திரன் கோவிந்தனை
கற்றினம் மேய்த்து வரக் கண்டுகந்து, அவள்
கற்பித்த மாற்றமெல்லாம்
செற்ற மிலாதவர் வாழ்தரு
தென் புதுவை விட்டு சித்தன் சொல்
கற்றிவை பாடவல்லார்
கடல் வண்ணன் கழலிணை காண்பர்களே

பாசுர அனுபவம்

புத்திலிருக்கும் பாம்பு படம் எடுத்தாற் போல்
விளங்கும் மெல்லிய இடுப்பையுடைய நல்ல
உள்ளம் படைத்த ஆய்ச்சியான யசோதை,
தன்னுடைய பிள்ளை கோவிந்தன் (கண்ணபிரான்)
கன்றுகளை மேய்த்து விட்டு வரும் காட்சியை
கண்டு மகிழ்ந்து, அவனை குறித்து சொன்ன
வார்த்தைகளை, பகைமை உள்ளம் இல்லாதவர்கள்
வாழும் அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரின் பெரியாழ்வார்,
பாசுரங்களாக அருளிச் செய்திருக்கும் இவற்றை
கற்றறிந்து பாடவல்லவர்கள், கடல் நிறக்
கண்ணனின் திருவடிகளை காணும்
பெரும் பாக்கியம் பெறுவர்கள்.