சாராம்சம்
யசோதை தன் மகன் கண்ணனை இதுவரைஒன்றுமறியாத ஒரு சிறு பிள்ளையாகத்தான்
எண்ணி வந்தாள். ஆனால் அவன் அவ்வப்போது
அரங்கேற்றிய குரும்புச் செயல்களையும்,
அமானுஷ்ய செயல்களையும் கண்டு அவளுக்கு
ஒருபக்கம் ஆச்சர்யமும், ஒருபக்கம் பயமும்
ஏற்படுகிறது. அவளால் அவன் செய்யும்
விஷமத்தை கண்டிக்கவோ, கட்டுப்படுத்தவோ
இயலவில்லை. அவன் மேல் பழி சொல்
வருவதை தடுக்க முடியாமல் தவிக்கிறாள்.
அவன் தெய்வம்தான் என்பதை
உணர்கிறாள். அந்த உணர்வால்,
கண்ணனுக்கு பாலூட்ட தன்னுடைய
முலையைக் கொடுக்கவே அஞ்சுகிறாள் !
(1)
தன்நேர் ஆயிரம் பிள்ளைகளோடு
தளர்நடை இட்டு வருவான்
பொன்ஏய் நெய்யொடு பால்அமுது உண்டு
ஒரு புள்ளுவன்பொய்யே தவழும்
மின்நேர் நுண்ணிடை வஞ்சமகள் கொங்கை
துஞ்ச வாய்வைத்த பிரானே!
அன்னே!உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
தன்னோடு கூட பிறந்த தன்னை ஒத்த, ஆயிரம்பிள்ளைகளோடு தளர் நடையாய் வருகிறான்
கண்ணன்! பொன்நிற நெய், பால் இவற்றை
ஆய்ச்சிகளின் வீடுகளிலிருந்து திருடி நன்றாக
புசித்துவிட்டு, ஒன்றும் தெரியாத ஒரு சிறு
குழந்தை போல் தவழ்ந்து வேஷம் போடுபவன்
தான், ஒருசமயம் வஞ்சனையோடு வந்த
நூலிடை கொண்ட பேய்மகள் பூதனையின்
முலையில் தன் திரு வாயை வைத்து பாலை
உறிஞ்சி சுவைத்து அவளையும் மாண்டு
போகச்செய்தான்! எம்பெருமானே! உன்னை
இதுவரை என் மகனாய்த்தான்
எண்ணியிருந்தேன். ஆனால் நீ அருந்தெய்வம்
என்று உணர்ந்தபின், உனக்கு பாலூட்ட
என் முலையைத் தரவே பயமாக உள்ளது !
(2)
பொன்போல் மஞ்சனம் ஆட்டி
அமுது ஊட்டிப் போனேன் வருமளவு இப்பால்
வன் பாரச் சகடம் இறச் சாடி
வடக்கில் அகம் புக்கு இருந்து
மின்போல் நுண்ணிடையாள் ஒரு கன்னியை
வேற்றுருவம் செய்து வைத்த
அன்பா! உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
தங்க பிம்பம் போலுள்ள உன் திருமேனியைகுளிப்பாட்டி, உனக்கு பாலமுதும் ஊட்டிவிட்டு
நான் யமுனையில் நீராடப் போனேன். நான்
திரும்பி வருவதற்குள், கடினமாயும், கனமாயும்
சக்கர வடிவுகொண்டு வந்த அசுரனை உதைத்து
நிலை குலைய வைத்து, பிறகு வடக்கிலுள்ள
வீட்டில் நுழைந்து, அங்கிருந்த மின்னிடை
கொண்ட ஒரு பெண்ணை வேறு ஒரு உருவமாகச்
செய்தவனே! உன் ஸ்வாமித்தனத்தை
புரிந்து கொண்டேன். உனக்கு பாலூட்ட
என் முலையைத் தரவே பயமாக உள்ளது !
(3)
கும்மாயத்தொடு வெண்ணெய் விழுங்கிக்
குடத் தயிர் சாய்த்துப் பருகி
பொய்ம் மாய மருது ஆன அசுரரைப்
பொன்றுவித்து இன்று நீ வந்தாய்
இம் மாயம் வல்ல பிள்ளை நம்பீ!
உன்னை என்மகனே என்பர் நின்றார்
அம்மா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
குழைந்த பருப்பையும் வெண்ணெயையும்விழுங்கிவிட்டு, குடத்தில் நிரம்பியிருந்த தயிரை
சாய்த்து குடித்தும், பொய்யையும்,
மாயைகளையும் செய்யக்கூடிய அசுரர்கள்
புகலிடம் கொண்ட இரட்டை மரங்களை
விழுந்து முறியும்படி பண்ணியும், நீ இப்போது
ஒன்றும் செய்யாதவன் போல வந்து நிற்கிறாய்!
இப்படிப்பட்ட மாயச் செயல்களை செய்யவல்ல
பிள்ளையே ! பூர்ணனே! உன்னை
அறியாதவர்கள் 'என் மகனே' என்பார்கள்.
நானோ, நீதான் ஸர்வக்ஞன் என புரிந்து
கொண்டேன். உனக்கு பாலூட்ட என்
முலையைத் தரவே பயமாக உள்ளது !
(4)
மை ஆர் கண் மட ஆய்ச்சியர் மக்களை
மையன்மை செய்து அவர் பின்போய்
கொய் ஆர் பூந்துகில் பற்றித் தனி நின்று
குற்றம் பல பல செய்தாய்
பொய்யா உன்னைப் புறம் பல பேசுவ
புத்தகத்துக்கு உள் கேட்டேன்
ஐயா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
கண்களில் மையை இட்டுக்கொண்டுபேதமையாக இருக்கும் இடைப் பெண்களை
உன்னிடம் மோஹிக்கப்பண்ணி அவர்களுடைய
கொசுவ மடிப்பு நிறைந்த அழகிய புடவைகளை
பிடித்துக்கொண்டு அவர்களின் பின்னேபோய்
மறைவாக நின்று கொண்டு பல பல தீமைகளை
நீ பண்ணினாய். அப்படி ஒன்றும் செய்யவில்லை
என்று பற்பல சொற்களால் பொய் சொல்லும் உன்
திறத்தைக் குறித்து ஒரு புத்தகமே எழுதும்படியாக
பலர் கூற என் காதால் கேட்டிருக்கின்றேன்.
அய்யனே, உன்னை அறிந்து கொண்டேன்.
உனக்கு பாலூட்ட பயமேற்படுகிறது!
(5)
முப்போதும் கடைந்து ஈண்டிய
வெண்ணெயினோடு தயிரும் விழுங்கி
கப்பால் ஆயர்கள் காவிற் கொணர்ந்த
கலத்தொடு சாய்த்துப் பருகி
மெய்ப்பால் உண்டு அழு பிள்ளைகள் போல
நீ விம்மி விம்மி அழுகின்ற
அப்பா! உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
மூன்று போதுகளிலும் இடையரால்கடையப்பட்ட திரண்ட வெண்ணை, தயிர்
இவைகளை புசித்து, அதுதவிர அவ்விடையர்கள்
காவடியில் சுமந்து வந்த பால்
முதலானவைகளை கலத்தோடு சாய்த்துப்
பருகியபின்பும், அந்த சம்பவத்தை மறைத்து,
பசிகொண்டவன் போல் நடித்து,
முலைப்பாலையும் உண்டு விம்மி விம்மி
அழுகின்ற பெரியோனே! உன்னை சுவாமி
என்று அறிந்துகொண்டேன். உனக்கு
பாலூட்ட பயமேற்படுகிறது!
(6)
கரும்பார் நீள் வயற் காய்கதிர்ச் செந்நெலைக்
கற்றாநிரை மண்டித் தின்ன
விரும்பாக் கன்று ஒன்று கொண்டு
விளங்கனி வீழ எறிந்த பிரானே!
சுரும்பார் மென்குழற் கன்னி ஒருத்திக்குச்
சூழ்வலை வைத்துத் திரியும்
அரம்பா ! உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
அடர்ந்து பரந்து கிடந்தும், கரும்பு போல்உயர்ந்தும் வளர்ந்திருந்த செந்நெல் கதிர்களை,
கன்றுகளோடு கூடின, மாடுகள் மேய்கையில்,
அதில் ஒரு கன்று மட்டும் அத்திரளிலே சேர்ந்து
மேய்கிறாற்போல் பாவனை செய்துகொண்டு
தின்னாமல் நிற்பதைக் கண்டு, இக்கன்று
ஒரு அசுரன் என்று அறிந்து, அக்கன்றை
பிடித்து மற்றொரு அசுரனால் ஆவேசிக்கப்
பட்டிருந்த விளாமரத்தில் வீசியெறிந்து
விளாம்பழங்கள் உதிரும்படி செய்த
பெருமானே! வண்டு மொய்க்கும் பூக்களை
தன்னுடைய மெல்லிய கூந்தலில்
அணிந்திருக்கும் ஒரு இளம் பெண்ணைக்
கவர்வதற்காக அவள் மேல் கண் வலையை
வீசித் திரியும் குறும்புக்காரனே! உன்னை
சுவாமி என்று அறிந்துகொண்டேன். உனக்கு
பாலூட்ட பயமேற்படுகிறது!
(7)
மருட்டார் மென்குழற் கொண்டு பொழில் புக்கு
வாய்வைத்து அவ் ஆயர்தம் பாடி
சுருட்டார் மென்குழற் கன்னியர் வந்து உன்னைச்
சுற்றும் தொழ நின்ற சோதி!
பொருள் தாயம் இலேன் எம்பெருமான்!
உன்னைப் பெற்ற குற்றம் அல்லால் மற்று இங்கு
அரட்டா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
வேணு கானத்தால் கேட்பவர்களை மயங்கச்செய்யும் மெலிதான த்வனியை உடைய குழலைக்
கையில் பிடித்து, சோலைகளில் சென்று அந்தக்
குழலை வாயில் வைத்து ஊத, அங்கிருக்கும்
சுருண்ட மெல்லிய கூந்தலையுடைய இடைப்
பெண்கள் உன்னை சூழ்ந்து சேவிக்க, மிகுந்த
ஒளிப் பொலிவுடன் நின்றவனே! எமக்குப்
பெரியோனே! இப்படி தீராத குறும்பு செய்யும்
உன்னைப் பிள்ளையாகப் பெற்றதைத் தவிர
வேறு ஒரு பொருள் லாபமும் எனக்கு இவ்வூரில்
இல்லையே, தீம்பனே! உன்னை சுவாமி என்று
அறிந்துகொண்டேன்.உனக்கு
பாலூட்ட பயமேற்படுகிறது!
(8)
வாளா ஆகிலும் காணகில்லார்
பிறர் மக்களை மையன்மை செய்து
தோளால் இட்டு அவரோடு திளைத்து
நீ சொல்லப் படாதன செய்தாய்
கேளார் ஆயர் குலத்தவர் இப் பழி
கெட்டேன் வாழ்வில்லை நந்தன்
காளாய்! உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
நீ ஒன்றும் செய்யாமலிருந்தாலும், உன்பெருமை தெரியாதவர்கள் உன்னைப் பார்க்க
விருப்பமில்லாதிருக்கிறார்கள். இப்படியிருக்க,
மற்றவருடைய பெண்களை மயக்கியும்,
அவர்களைத் தோளால் அணைத்தும் ,
அவர்களோடு இன்புற்றும் நீ, வாயால் பேச
முடியாதவைகளை செய்து இடைக்குலத்தவர்களை
பழிக்கு ஆளாக்கினாய். நானோ இப்பழிகளைக்
கேட்டு தோற்றுப்போனேன்! இவ்வூரில் இனிமேல்
நான் வாழ முடியாது, நந்தகோபனுடைய அழகிய
மைந்தனே! உன்னை அறிந்துகொண்டேன்.
உனக்கு பாலூட்ட பயமேற்படுகிறது!
(9)
தாய்மார் மோர் விற்கப் போவர்
தமப்பன்மார் கற்றா நிரைப் பின்பு போவர்
நீ ஆய்ப்பாடி இளங் கன்னிமார்களை
நேர்படவே கொண்டு போதி
காய்வார்க்கு என்றும் உகப்பனவே செய்து
கண்டார் கழறத் திரியும்
ஆயா! உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
பெண்களை தம் தம் வீடுகளில் தங்கவைத்துவிட்டு, தாய்மார்கள் மோர் விற்பதற்கு வெளியே
செல்வார்கள், தந்தைமார்கள் பசுக்களை
மேய்ப்பதற்கு சென்று விடுவார்கள். அப்படி
அவர்கள் இல்லாத சமயம் பார்த்து நீ அங்கு,
தனியே இருக்கும் இடைப் பெண்களை,
அவர்களிடத்தில் போய் சந்தித்து, நீ விரும்பிய
இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வாய்!
உன்னை ஏற்கனவே ஏசுபவர்கள், உன்னுடைய
இந்தச் செய்கைகளைக் கண்டு மேலும் உன்மேல்
பழி சுமத்த சந்தர்ப்பம் கிடைத்ததால்
சந்தோஷப்படுகிறார்கள். உன்னை விரும்பவர்கள்
கூட அவர்கள் வெறுக்கும்படி இப்படி
குறும்புகளைச் செய்து திரிகிறாயே! ஆயர்
குலச்செம்மலே! உன்னை தெய்வம்
என்று நான் அறிந்துகொண்டேன்.
உனக்கு பாலூட்ட பயமேற்படுகிறது!
(10)
தொத்தார் பூங்குழற் கன்னி ஒருத்தியைச்
சோலைத் தடம் கொண்டு புக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து இரா நாழிகை
மூவேழு சென்றபின் வந்தாய்
ஒத்தார்க்கு ஒத்தன பேசுவர்
உன்னை உரப்பவே நான் ஒன்றும் மாட்டேன்
அத்தா உன்னை அறிந்துகொண்டேன்
உனக்கு அஞ்சுவன் அம்மம் தரவே
பாசுர அனுபவம்
பூங்கொத்துக்களை தன் கூந்தலில் சூடியிருந்தஒரு கன்னிப் பெண்ணை பரந்த
சோலையொன்றிற்கு அழைத்துச் சென்று
அவளுடைய முத்து மணி மாலை தவழும்
ஸ்தனங்களைத் தழுவி அவளுடன் கூடி இரவு
மூன்றுயாமங்கள் கழிந்தபின் வீடு வந்து
சேர்ந்தாய். உன்னை பழி சொல்ல
நினைத்தவர்கள் உன்னுடைய தீம்புகளைக்
கண்டு தங்கள் இஷ்டப்படி பேசுகிறார்கள்.
உன்னை அதட்டவோ என்னால் முடியாது.
தந்தையே! உன்னை தெய்வம்
என்று நான் அறிந்துகொண்டேன்.
உனக்கு பாலூட்ட பயமேற்படுகிறது!
(11)
காரார் மேனி நிறத்து எம்பிரானைக்
கடிகமழ் பூங்குழல் ஆய்ச்சி
ஆரா இன்னமுது உண்ணத்தருவன் நான்
அம்மம் தாரேன் என்ற மாற்றம்
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்
பட்டர்பிரான் சொன்ன பாடல்
ஏரார் இன்னிசை மாலை வல்லார்
இருடீகேசன் அடியாரே
பாசுர அனுபவம்
கருமையான மேகத்தின் நிறத்தை ஒத்தஎம்பிரானை குறித்து, நறுமணம் நிறைந்த
பூக்களை தன் கூந்தலில் அணிந்த யசோதை
(கண்ணனுக்கு திருப்தி தீர முலைப்பால் தந்த
போதிலும், அவனுடைய உண்மை ஸ்வரூபம்
அறிந்த பின்) அவனுக்கு பாலூட்ட அஞ்சுவள்
எனக் கூறும் பாசுரங்களை சொன்ன உலகில்
புகழ்பெற்றவரும், ஸ்ரீவில்லிபுத்தூரின்
தலைவருமான பெரியாழ்வார் இயலழகோடு
தொடுத்திருக்கும் இன்னிசை மாலையை
ஓதவல்லவர்கள் ஹ்ருஷீகேசனான
எம்பெருமானுக்கு அடியார்களாவர்கள்.