இரண்டாம் பத்து பத்தாம் திருமொழி



சாராம்சம்

கண்ணன், இடைப் பெண்கள் குளிக்கையில்,
அவர்களுடைய ஆடைகளை மறைத்தும்,
எத்தனை மன்றாடியும், ஆடைகளை திருப்பித்
தற மறுத்தும் அவர்ளை துன்புறுத்துகிறான்.
எத்தனையோ அவதாரங்களில் பல சாகசங்களைப்
புரிந்து ஆஸ்ரிதர்களை காப்பாற்றிய கண்ணன்,
எங்களை மட்டும் இப்படி தீமைகளால் வருத்தி
எங்கள் வாழ்வே முடிந்துவிடும்போல் செய்கிறானே
என்று அந்த இடைப்பெண்கள் யசோதையிடம்
கதறி முறையிடுவதை, பெரியாழ்வார்
பாசுரங்களாக அருளிச் செய்கிறார்.
(1)
ஆற்றிலிருந்து விளையாடு வோங்களை
சேற்றா லெறிந்து வளைதுகில் கைக்கொண்டு
காற்றின் கடியனாய் ஓடி அகம்புக்கு மாற்றமும்
தாரானால் இன்று முற்றும்
வளைத்திறம் பேசானால் இன்று முற்றும்.

பாசுர அனுபவம்

நாங்கள் ஆற்றில் விளையாடுகையில் எங்கள்
மேல் சேற்றை வாறி எறிந்துவிட்டு, எங்களுடைய
கை வளையல்களையும், புடவைகளையும் தன்
கைகளால் கழற்றிக்கொண்டு, காற்றினும்
வேகமாக ஓடிவந்து தன் வீட்டினுள் புகுந்து,
உன் மகனைப் பேர் சொல்லி அழைத்தும் அவன்
பதில் சொல்லாமல் இருக்க, எங்கள் உயிர் இன்றே
போகும்! எங்கள் வளையல்களை திருப்பி
தருவத்தைப்பற்றி ஒன்றும் கூறாமலிருக்கும் உன்
பிள்ளையைக் கண்டு இன்று முடிவோம் !

(2)
குண்டலம் தாழக் குழல்தாழ நாண்தாழ
எண்திசை யோரும் இறைஞ்சித் தொழுதேத்த
வண்டமர் பூங்குழ லார்துகில் கைக்கொண்டு
விண்தோய் மரத்தானால் இன்று முற்றும் வேண்டவும்
தாரானால் இன்று முற்றும்.

பாசுர அனுபவம்

காதில் அணிந்திருக்கும் குண்டலங்கள் தாழ்ந்து
அசைய, அழகிய கூந்தல் அசைய, கழுத்திலிருக்கும்
மாலை அசைய, எட்டு திசையிலிருந்து அனைவரும்
துதித்து வணங்கிப் போற்றும் பெருமானாகிய
இந்தக் கண்ணன், வண்டுகள் மொய்த்த பூக்களை
சூடியிருக்கும் ஆயர் குலப் பெண்களாகிய எங்கள்
புடவைகளை, நாங்கள் ஆற்றங்கரையில் கழற்றி
வைத்து குளித்துக்கொண்டிருக்கையில், தூக்கிக்
கொண்டு போய் வானளாவிய மரத்தின் உச்சியில்
உட்கார்ந்து கொண்டிருப்பதால், எங்கள் உயிர்
இன்றே போகும்! கெஞ்சிக் கேட்டும் புடவையைத்
தர அவன் மறுப்பதால், இன்று முடிவோம்!
(3)
தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை யசைத்தானால் இன்று முற்றும்
உச்சியில் நின்றானால் இன்று முற்றும்.

பாசுர அனுபவம்

காளியன் என்கிற விஷப் பாம்பு, பெரியதான
தாமரை குளத்தில் குதித்தும், ஜலத்தை கலக்கியும்,
விஷத்தை கக்கியும், ஊர் ஜனங்களை குளத்தை
அண்டவிடாமல் தடுத்தும் பயமுறுத்தி வந்த
நிலையில் ஒரு சமயம் அந்த கொடிய பாம்பு
தன் தலையை வெளியே தூக்கிய பொழுது,
கண்ணன் அதன் வாலைப் பிடித்திழுத்து அதை
படமெடுக்கச் செய்து, அதன் மெத்தென்ற
தலைமேல் துள்ளி குதித்து உடல் அசைத்து
ஆடுகிறான். நாங்கள் வாழ்வது கடினம்.
எங்கள் உயிர் இன்றே போகும் ! நாகத்தின்
தலை உச்சியில் நின்று ஆடுகிறான்.
நாங்கள் இன்று முடிவோம் !

(4)
தேனுக னாவி செகுத்து பனங்கனி
தானெறிந்திட்ட தடம்பெறுந் தோளினால்
வானவர் கோன்விட வந்த மழைதடுத்து
ஆநிரை காத்தானால் இன்று முற்றும்
அவையுய்யக் கொண்டானால் இன்று முற்றும்.

பாசுர அனுபவம்

கழுதை வடிவத்தில் வந்த தேனுகாசுரனை
பனை மரத்தின் மேலே சுழற்றி எறிந்து கொன்று,
அசுரத்தன்மை கொண்ட பனைப் பழங்களையும்
கீழே விழச்செய்து, தன்னுடைய மிகப் பெரிய
தோளினால் கோவர்தன மலையை தூக்கி,
இந்திரன் பொழிவித்த பலத்த மழையை தடுத்து
பசுக்களின் கூட்டத்தை ரக்ஷித்துக்கொடுத்த
கண்ணன், எங்களிடம் தீமை செய்வதால்,
இன்று முடிவோம் ! அவன் அப்பசுக்கூட்டத்தை
வாழச் செய்து, எங்களை மறந்தானல்லவோ!
நாங்கள் இன்று முடிவோம்!
(5)
ஆய்ச்சியர் சேரி அளைதயிர்
பாலுண்டு பேர்த்தவர்
கண்டு பிடிக்கப் பிடியுண்டு
வேய்த்தடந் தோளினார்
வெண்ணைகொள் மாட்டாது அங்கு
ஆப்புண் டிருந்தானால்
இன்று முற்றும் அடியுண்டழுதானால்
இன்று முற்றும்

பாசுர அனுபவம்

ஆய்ச்சியர் வசிக்கும் இடத்தில், அவர்கள்
வீட்டில் வைத்திருந்த சிலுப்பிய தயிர், பால்
இவைகளை புசித்தும் த்ருப்தியடையாதவனாய்,
மீண்டும் வெண்ணை திருட புகுந்தபோது,
அங்கு ஒளிந்துகொண்டிருந்த இடைச்சிகள்
அவனைப் பிடித்து கட்டிப்போட்டு, வெண்ணை
உண்ணமுடியாமல் அவர்கள் வீட்டில்
கட்டுண்டவனால், நாங்கள் இன்று முடிவோம்!
அவர்களிடம் அடி வாங்கி
அழுதவனால் இன்று முடிவோம்!
(6)
தள்ளித் தளர் நடையிட்டு இளம் பிள்ளையாய்
உள்ளத்தி னுள்ளே அவளை யுறனோக்கி
கள்ளத்தினால் வந்த பேய்ச்சி முலையுயிர்
துள்ளச் சுவைத்தானால் இன்று முற்றும்
துவக்கற உண்டானால் இன்று முற்றும்.

பாசுர அனுபவம்

கால்கள் ஊன்றி நடக்க முடியாத குழந்தைப்
பருவத்திலிருந்த கண்ணபிரான்,கபட வேஷம்
பூண்டு முலையில் விஷத்தைத் தடவிக்கொண்டு
அவனுக்கு பாலூட்டி கொல்ல வந்த பூதனையை,
தன் மனக்கண்ணால் அவள் வந்த நோக்கத்தை
அறிந்து, அவள் உயிர் துடிக்கும்படி முலையை
உறிஞ்சி பாலை சுவைத்து உண்டானல்லவோ!
நாங்கள் இன்று முடிவோம்! பற்றில்லாமல்
விஷப் பாலை உண்டவனால் இன்று முடிவோம்!
(7)
மாவலி வேள்வியில் மாணுரு வாய்ச்சென்று
மூவடி தாவென்று இரந்த இம் மண்ணினை
ஓரடியிட்டு இரண்டாமடி தன்னிலே
தாவடியிட்டானால் இன்று முற்றும்
தரணி யளந்தானால் இன்று முற்றும்.

பாசுர அனுபவம்

மஹாபலி நடத்திய யாகத்தில் பிரம்மச்சாரி
உருவத்தில் சென்று அவனிடம் மூன்று அடி
நிலத்தை யாசகமாய் பெற்று, ஒரு அடியால்
மண்ணுலகம் முழுவதும் அளந்து, இரண்டாம்
அடியால் தாவி மேலுலகங்கள் அனைத்தையும்
அளந்தவனால் இன்று முடிவோம்! உலகத்தை
அளந்தவனால் இன்று முடிவோம்!
(8)
தாழைதண்ணாம்பல் தடம்பெறும்பொய்கைவாய்
வாழும் முதலை வலைப்பட்டு வாதிப்புண்
வேழம் துயர்கெட விண்ணோர் பெருமானாய்
ஆழிபணி கொண்டானால் இன்று முற்றும்
அதற்கு அருள் செய்தானால் இன்று முற்றும்

பாசுர அனுபவம்

தாழ்ந்து தொங்கும் தாழம்பூ மலர்களும், ஆம்பல்
மலர்களும் நிறைந்த மிகப் பெரிய குளத்தில்
வாழ்ந்து வந்த முதலையின் வாயில் சிக்கி
துன்பத்தால் தவித்த யானையின் துயர் தீர்க்கும்
பொருட்டு, நித்யஸூரிகளின் தலைவனான
பெருமான் கருட வாகனத்தில் விரைந்து வந்து
தனது சக்ராயுதத்தால் முதலையைத் துணித்து
கஜேந்திரனின் புஷ்ப கைங்கர்யத்தை
பெற்றுக் கொண்டவனால் இன்று
முடிவோம்! அந்த யானைக்கு அருள்
பாலித்தவனால் இன்று முடிவோம்!
(9)
வானத் தெழுந்த மழை முகில் போல் எங்கும்
கானத்து மேய்ந்து களித்து விளையாடி
ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை
தானத்தே வைத்தானால் இன்று முற்றும்
தரணி யிடந்தானால் இன்று முற்றும்.

பாசுர அனுபவம்

மழை மேகம் திரண்டு வானத்தில் எழுந்தாற்
போல் கருத்த நிறம் கொண்டு, ஒரு பன்றி
உருவம் தரித்து, காடு முழுவதும் திரிந்து,
உணைவைத் தேடி உண்டு,ஆரவாரத்துடன்
விளையாடியும், ஹிரண்யாக்ஷனால் பாயைப்
போல் சுருட்டி அபகரிக்கப்பட்ட பூமியை,
அவனைக் கொன்று, தன் கோர தந்தத்தினால்
குத்தி கடலுக்குள்ளிலிருந்து வெளியே
கொணர்ந்து ரக்ஷித்துக் கொடுத்த
கண்ணபிரானால் இன்று முடிவோம்! பூமியை
தன்னுடைய தந்தத்தினால் மீட்டெடுத்தவனால்
இன்று முடிவோம்!
(10)
அங்கமலக் கண்ணன் தன்னை யசோதைக்கு
மங்கைநல் லார்கள் தாம்வந்து முறைபட்ட
அங்கவர்சொல்லைப் புதுவைகோன் பட்டன்சொல்
இங்கிவை வல்லவர்க்கு ஏதமொன்றில்லையே.

பாசுர அனுபவம்

நல்ல குணம் பொருந்திய இடைக்குல
மங்கைகள், செந்தாமரைப்பூவை ஒத்த
கண்களையுடைய கண்ணபிரானின் தீம்புச்
செயல்களை பற்றி யசோதையிடம் கதறி
முறையிட, அவர்கள் சொன்ன சொற்களை,
ஸ்ரீவில்லிபுத்தூர் தலைவன் பெரியாழ்வார்
பாசுரமாக அருளிச்செய்ய, இப்பாசுரங்களை,
இந்த சம்சாரத்தில் இருந்துகொண்டே
ஓதவல்வர்களுக்கு ஒருவகை
குற்றமும் இல்லையாம்.