சாராம்சம்
குழந்தைகள் ஒளித்து நின்று திடீரென்றுதோன்றி மகிழ்விப்பதும், முகத் தோற்றத்தை
முடியால் மறைத்தும், கண் இமைகளை
மடித்தும் மற்றும் பல விதமான பயமுறுத்தும்
சேஷ்டிதங்களை விளையாட்டாக செய்வதை
'அப்பூச்சி காட்டுவது' எனக் கூறுவார்கள்.
கண்ணனும் இப்படி செய்ததை
ஆழ்வார் அனுபவித்துப் பாடுகிறார்.
(1)
மெச்சூது சங்கமிடத்தான் நல்வேயூதி
பொய்ச்சூதில் தோற்ற
பொறையுடை மன்னர்க்காய்
பத்தூர் பெறாதன்று பாரதம் கைசெய்த
அத்தூதனப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
பாசுர அனுபவம்
அனைவராலும் போற்றும்படி ஊதும் பாஞ்சஜந்யத்தை இடக்கையில் பிடித்தவனும், நல்ல
மூங்கிலால் செய்யப்பட்ட குழலை ஊதியும்,
முன்பொரு சமயம், பொய்ச் சூதில்
பாண்டவர்கள் சொத்துக்களை இழந்து,
பத்து ஊர்களை மட்டுமே துர்யோதனாதிகளிடம்
கேட்டும் பெற முடியாமல் துன்பப்பட்ட போது,
பாண்டவர்களுக்குத் துணையாய் நின்று
பாரதப் போர் செய்த அப்பாண்டவத்
தூதனான கண்ணன், ஆச்சர்யமாக
பயமுறுத்தி விளையாடுகிறான்!
(2)
மலை புரை தோள் மன்னவரும்
மாரதரும் மற்றும்
பலர் குலைய நூற்று வரும் பட்டழிய பார்த்தன்
சிலை வளையத் திண்தேர் மேல்
முன்னின்ற செங்கண்
அலவலைவந்தப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்.
பாசுர அனுபவம்
மலைக்கு சமமான புஜ பலத்தையுடையமஹாரதர் என்ற அரசனையும் மற்றும் பல
அரசர்களைக் கொன்றும், துர்யோதனாதிகள்
நூறு போரையும் உரு தெரியாமல் அழித்தும்,
அர்ஜுனனுடைய காண்டீவமென்னும் வில்
வளைய அவனுடைய வலிமையான
தேரில் முன்புறம் தேரோட்டியாக நின்றும்
அர்ஜுனனைப் புகழ்பவனான சிவந்த
கண்களையுடைய கண்ணன், ஆச்சர்யமாக
பயமுறுத்தி விளையாடுகிறான்!
(3)
காயுநீர்புக்குக் கடம்பேறி காளியன்
தீய பணத்தில் சிலம் பார்க்கப் பாய்ந்தாடி
வேயின் குழலூதி வித்தகனாய் நின்ற
ஆயன் வந்தப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பாசுர அனுபவம்
அன்று கொதிக்கும் மடுவின் நீரில் புகுந்துகடம்ப மரத்தின் மேலேறி, காளியன் என்ற
கொடிய பாம்பின் படமெடுத்த தலை மீது
குதித்து தன் திருவடியில் அணிந்திருந்த
சலங்கைகள் ஓசை எழுப்பும் படி நடனமாடி,
குழலிசைத்து அதிசயமாய் நின்றவன், இன்று
ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகிறான்!
(4)
இருட்டில் பிறந்து போய் ஏழை வல்லாயர்
மருட்டைத் தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்
புரட்டி அந்நாளெங்கள் பூம்பட்டுக் கொண்ட
அரட்டன் வந்தப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பாசுர அனுபவம்
இருள் சூழ்ந்த வேளையில் தேவகியின் வயிற்றில்திருவவதரித்து, இரவோடிரவாக ஆயர்பாடிக்குச்
சென்று, அங்குள்ள ஆயர்களின் பயத்தைப்
போக்கி, கொடியவனான கஞ்சனை அடித்துக்
கொன்று, அன்றொருநாள் யமுனையில்
நீராடும்போது எங்களுடைய அழகிய பட்டு
சேலைகளை அபகரித்த குறும்பனான கண்ணன்,
ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகிறான்!
(5)
சேப்பூண்ட சாடு சிதறி திருடி நெய்க்
காப்பூண்டு நந்தன் மனை விகடை தாம் பால்
சோப்பூண்டு துள்ளித் துடிக்கத் துடிக்க
அன்றாப்பூண்டானப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பாசுர அனுபவம்
மிக வேகமாக சகட உருவில் வந்த அசுரனைதன் சிறிய திருவடிகளைக் கொண்டு உதைத்து
சிதறும்படி செய்தவனும், நெய்யைத்
திருடியதற்காக இடையர்களிடம் பிடிபட்டு,
நந்த கோபனின் மனைவி யசோதையிடம்
தயிர் கடையும் மத்தினால் உதை வாங்கி
வலியால் துடித்தவனும், ஒருசமயம் உரலில்
கட்டுண்டவனாயும் திகழ்ந்த கண்ணன்
ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகிறான்!
(6)
செப்பிள மென்முலைத் தேவகி நங்கைக்கு
சொப்படத் தோன்றித்
தொறுப்பாடியோம் வைத்த
துப்பமும் பாலும் தயிரும் விழுங்கிய
அப்பன்வந்தப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பாசுர அனுபவம்
செம்பு போன்றதும், இளமையும் மிருதுவும்நிறைந்த ஸ்தனங்களை உடைய பெண்ணிற்
சிறந்த தேவகிக்குப் பிறந்து, ஆயர்பாடிகளான
எங்களுடைய நெய்யையும், பாலையும்,
தயிரையும் வயிறாரப் புசித்த ஸ்வாமி
ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகிறான்!
(7)
தத்துக் கொண்டாள் கொலோ? தானே
பெற்றாள் கொலோ?
சித்த மனையாள் அசோதையிளஞ்சிங்கம்
கொத்தார் கருங்குழல் கோபால கோளரி
அத்தன் வந்தப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பாசுர அனுபவம்
தத்து புத்திரனாக கண்ணனை எடுத்துவளர்த்தாளோ? அல்லது, தானே தன்
வயிற்றில் பெற்றெடுத்தாளோ? என்று
பலரும் வியக்கும் படியாகவும், தன்
திருவுள்ளத்தை அநுசரித்தே நடந்தவனும்,
யசோதைக்கு சிங்கக்குட்டி போன்றவனும்,
பூக்கொத்துக்களை சூடிய கரிய கூந்தலை
உடையவனும், இடையர்களை அடக்கி ஆளும்
சிங்கம் போன்றவனும், ஸ்வாமியுமான கண்ணன்
ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகிறான்!
(8)
கொங்கைவன் கூனி சொற்
கொண்டு குவலயத்
துங்கக் கரியும் பரியுமிராச்சியமும்
எங்கும் பரதற்கருளி வன்கானடை
அங்கண்ணனப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பாசுர அனுபவம்
முதுகில் முலை முளைத்தாற்போலிருந்தகூனியின் (மந்தரை) சொல்லிற்கு இணங்க
தனது இருப்பிலிருந்த சிறந்த யானைகள்,
குதிரைகள் மற்றும் ராஜ்யத்தை பரதனுக்கு
தந்தருளி கொடிய காட்டிற்கு சென்ற
அழகிய கண்களைக் கொண்டவன்*
ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகிறான்!
(*இராமனும், கண்ணனும் வேறல்ல
என்று காட்டும் பாசுரம் இது)
(9)
பதக முதலை வாய்ப் பட்டகளிறு
கதறிக்கைகூப்பி என்கண்ணா!
கண்ணா! வென்ன
உதவப் புள்ளூர்ந்து அங்குறுதுயர் தீர்த்த
அதகன்வந்தப்பூச்சி காட்டுகின்றான்
அம்மனே! அப்பூச்சி காட்டுகின்றான்
பாசுர அனுபவம்
கொடிய முதலையின் வாயில் அகப்பட்டயானை (கஜேந்திராழ்வான்), தான்
பகவானுக்காக பறித்து வைத்திருக்கும் பூவை
அவனுக்கு சமர்பிக்கமுடியாமல் போகப்
போகிறதே என்று தவித்து "என் கண்ணா!
கண்ணா!" என்று தும்பிக்கையை தூக்கியவாறே
கதற, உடனே தன்னுடைய வாகனமான கருடன்
மேலமர்ந்து விரைந்து வந்து யானையின்
துயரத்தைப் போக்கின பக்த ரக்ஷகனான கண்ணன்
ஆச்சர்யமாக பயமுறுத்தி விளையாடுகிறான்!
(10)
வல்லாளிலங்கை மலங்கச் சரந்துரந்த
வில்லாளனை விட்டுசித்தன் விரித்த
சொல்லார்ந்த வப்பூச்சிபாட லிவைபத்தும்
வல்லார் போய் வைகுந்தம் மன்னியிருப்பரே
பாசுர அனுபவம்
முன்பு இராமனாய் அவதரித்து, வில்லேந்தி,வீரர்கள் நிரம்பிய இலங்கையை தன்னுடைய
அம்புச் சரங்களால் வீழ்த்தியவன் இன்று
கண்ணனாய் பிறந்து அப்பூச்சி காட்டி
(பயமுறுத்தி) விளையாடியதைக்
கொண்டாடி பெரியாழ்வார் அருளிச் செய்த
இப்பத்துப் பாசுரங்களைகற்பவர்கள், இறுதியில்
வைகுந்தம் போய் அங்கு நித்யவாசம் செய்வர்!