முதற்பத்து ஒன்பதாம் திருமொழி



சாராம்சம்

குழந்தைகள் விளையாட்டாக ஒருவரின் பின்புறம்
வந்து முதுகை கட்டிப் பிடித்துக்கொள்ளும்.
எம்பெருமான் கண்ணனும் யசோதையின்
பின்னால் வந்து கட்டிக்கொள்வதை தனது
மனக்கண்ணால் கண்டு களித்த
ஆழ்வார், இந்த ஆனந்த அனுபவத்தை, அவன்
அழகையும் பராகிரமத்தையும் சேர்த்துக்
கலந்து, நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்!
(1)
வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையில் முளைக்கின்ற முத்தேபோல்
சொட்டு சொட்டென்னெத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்தென்னைப் புறம்புல்குவான்
கோவிந்தனென்னைப் புறம்புல்குவான்

பாசுர அனுபவம்

ஒரு மாணிக்க மொட்டின் நுனியில் முத்துக்கள்
முளைப்பதுபோல் குழந்தையான கண்ணனின்
குறியிலிருந்து சொட்டு சொட்டாக சிறுநீர்
துளிர்க்கிறது! இந்த நிலையிலேயே கண்ணன்
என் பின்னால் வந்து என்னைக் கட்டிக்
கொள்வான்! கோவிந்தன் என்னைப் பின்புறம்
வந்து கட்டிக்கொள்வான் !
(2)
கிண்கிணிக் கட்டி கிறிகட்டி கையினில்
கங்கணமிட்டுக் கழுத்தில் தொடர்கட்டி
தன்கணத்தாலே சதிரா நடந்து வந்து
என் கண்ணனென்னைப் புறம்புல்குவான்
எம்பிரானென்னைப் புறம்புல்குவான்

பாசுர அனுபவம்

கால்களில் கட்டிய கிண்கிணி என்று ஓசை
எழுப்பும் சதங்கைகளோடும், கைகளில் கட்டிய
சிறு பவள வடத்தோடும், திருத்தோள்களில்
அணிந்த தோள்வளைகளோடும், கழுத்தில் சாத்திய
சங்கிலியோடும் மற்றும் பலவித
திருவாபரணங்களைச் சூட்டியவாறே கண்ணன்
என் பின்னால் வந்து என்னைக் கட்டிக்கொள்வான்!
என் தலைவன் என்னைப் பின்புறம்
வந்து கட்டிக் கொள்வான் !
(3)
கத்தக் கதித்துக் கிடந்த பெருஞ்செல்வம்
ஒத்துப் பொருந்திக் கொண்டு
உண்ணாது மண்ணாள்வான்
கொத்துத் தலைவன் குடிகெடத் தோன்றிய
அத்தன் வந்தென்னைப் புறம்புல்குவான்
ஆயர்களேறென் புறம்புல்குவான்

பாசுர அனுபவம்

மிகுந்த செல்வமுடையவனாக இருந்தும்,
தன் பந்துக்களுடன் கூடி அச் செல்வத்தைப்
பகிர்ந்துகொள்ளாமல், பூமி உள்பட,
எல்லாவற்றையும் தானே ஆள நினைத்த
துர்யோதனனை குடும்பத்தோடு அழிப்பதற்காக
திருவவதரித்த கண்ணன் என் பின்னால்
வந்து என்னைக் கட்டிக்கொள்வான்!
இடையர்களின் தலைவன், என்னைப்
பின்புறம் வந்து கட்டிக்கொள்வான் !
(4)
நாந்தக மேந்திய நம்பி சரணென்று
தாழ்ந்ததனஞ்சயற்காகி தரணியில்
வேந்தர்களுட்க விசயன் மணித்திண்டேர்
ஊர்ந்தவனென்னைப் புறம்புல்குவான்
உம்பர்கோனென்னைப் புறம்புல்குவான்

பாசுர அனுபவம்

அர்ஜுனன் கண்ணனை நோக்கி, "நந்தகம்
என்னும் வாளைக் கையிலேந்தியவனே!
உன்னை சரண் அடைகிறேன். நீ தான்
என்னை ரக்ஷிக்க வேணும்" என்று பிரார்த்தித்த
நிமித்தம், தனஞ்சயனுக்காக* இந்த பூமியில்
எதிர்த்துவந்த அரசர்களை நடுங்கும்படி செய்து,
அவனுடைய அழகிய தேரை ஒட்டிய கண்ணன்
என் பின்னால் வந்து என்னைக் கட்டிக்கொள்வான்!
விண்ணோர் தலைவன் என்னைப் பின்புறம்
வந்து கட்டிக்கொள்வான் ! (* அர்ஜுனனை
குறிக்கும் தனஞ்சயன் என்ற சொல்லுக்கு
வெற்றியைச் செல்வமாக கொண்டவன் என்று
பொருள் கொள்ளலாம்.)
(5)
வெண்கலப் பத்திரம் கட்டி விளையாடி
கண்பல செய்த கருந்தழைக் காவின் கீழ்
பண்பல பாடிப் பல்லாண்டிசைப்ப பண்டு
மண்பல கொண்டான் புறம்புல்குவான்
வாமனனென்னைப் புறம்புல்குவான்

பாசுர அனுபவம்

வெண்கலத்தால் செய்த ஆடையைக் கட்டிக்
கொண்டும் , மயில் தோகை போன்றவற்றால்
செய்த பெரிய குடையின் கீழ் இருந்து
விளையாடியபடியும், மகாபலியிடம் மூவடி
மண்ணை பெற்று, பிறகு தேவர்கள் புகழ் பாட,
சகல உலகங்களையும் தன் வசமாக்கிக்
கொண்டவன், என் பின்னால் வந்து என்னைக்
கட்டிக்கொள்வான்! வாமனன் என்னைப்
பின்புறம் வந்து கட்டிக்கொள்வான் !
(6)
சத்திர மேந்தித் தனியொரு மாணியாய்
உத்தரவேதியில் நின்ற வொருவனை
கத்திரியர் காணக் காணி முற்றுங்கொண்ட
பத்திராகாரன் புறம்புல்குவான்
பாரளந்தானென் புறம்புல்குவான்

பாசுர அனுபவம்

குடையைப் பிடித்தவனாய், நிகரற்ற ஒரு
ப்ரஹ்மசாரியாய், மகாபலியிடம் மூவடி மண்ணை
யாசகமாகப் பெற்று, க்ஷத்ரியர்கள் பார்த்துக்
கொண்டிருக்கையில், உலகனைத்தையும்
தனதாக்கிக்கொண்ட சிறந்த லக்ஷணங்களைக்
கொண்ட வடிவுடையவன் என் பின்னால் வந்து
என்னைக் கட்டிக்கொள்வான்! திரிவிக்ரமனாய்
பூமியை அளந்தவன், என்னைப் பின்புறம்
வந்து கட்டிக்கொள்வான் !
(7)
பொத்த வுரலைக் கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்த பாலும் தடாவினில் வெண்ணையும்
மெத்தத் திருவயிறார விழுங்கிய
அத்தன் வந்தென்னைப் புறம்புல்குவான்
ஆழியானென்னைப் புறம்புல்குவான்

பாசுர அனுபவம்

ஓட்டையான உரலை தலை கீழாகப் போட்டு
அதன் மீதேறி, உயரே வைத்திருந்த
மிடாக்களிலிருந்து சுவையான பாலையும்,
வெண்ணையையும் எடுத்து வயிறு நிரம்ப
நன்றாக உண்ட என் தலைவன் கண்ணன்
என் பின்னால் வந்து என்னைக் கட்டிக்கொள்வான்!
கைகளில் திருச்சக்கரமேந்தியவன்
என்னைப் பின்புறம் வந்து கட்டிக்கொள்வான் !
(8)
மூத்தவை காண முதுமணற் குன்றேறி
கூத்து வந்தாடிக் குழலாலிசை பாடி
வாய்த்த மறையோர் வணங்க இமையவர்
ஏத்தவந்தென்னை புறம்புல்குவான்
எம்பிரானென்னைப் புறம்புல்குவான்

பாசுர அனுபவம்

வயதில் முதிர்ந்த இடையர்கள் காணும்படியாகவும்,
ஒரு பழமையான மணற்குன்றின் மேலேறி ஆடிப்
பாடியும், வேணுகானம் இசைத்தும், பிரம்மரிஷிகள்
தன்னை வணங்க, தேவர்கள் துதிக்க, மிக்க
ஆனந்தமாய் என் பின்னால் வந்து என்னைக்
கட்டிக்கொள்வான்! எம்பெருமான், என்னைப்
பின்புறம் வந்து கட்டிக்கொள்வான் !
(9)
கற்பகக் காவு கருதிய காதலிக்கு
இப்பொழுதீவனென்று இந்திரன் காவினில்
நிற்பன செய்து நிலாத்திகழ் முற்றத்துள்
உய்த்தவனென்னைப் புறம்புல்குவான்
உம்பர்கோனென்னைப் புறம்புல்குவான்

பாசுர அனுபவம்

தன்னுடைய காதலி சத்யபாமாவின்
விருப்பத்திற்கு இணங்க இந்திரனுடைய
நந்தவனத்திலிருந்த கற்பகச் சோலையை,
"இதோ இப்பொழுதே கொண்டு வந்து
தருகிறேன் " என்று கூறி அவள் வீட்டு நிலா
காயும் முற்றத்தில் இருத்தி மலரச்செய்தவன்,
கண்ணன், என் பின்னால் வந்து என்னைக்
கட்டிக்கொள்வான்! விண்ணோர்
தலைவன் என்னைப் பின்புறம் வந்து
கட்டிக்கொள்வான் !
(10)
ஆய்ச்சியன்றாழிப்பிரான் புறம்புல்கிய
வேய்த்தடன்தோளிசொல் விட்டுசித்தன் மகிழ்ந்து
ஈத்த தமிழிவை ஈரைந்தும்வல்லவர்
வாய்த்த நன் மக்களைப் பெற்று மகிழ்வரே

பாசுர அனுபவம்

மூங்கில் போன்ற அழகிய தோள்களையுடைய
யசோதை, சக்ராயுதபாணியான கண்ணன்
அன்று புறம் புல்கியதை (பின்புறம் வந்து
தன்னை கட்டிக்கொண்டு விளையாடியதை
பற்றிக் கூறியதை), பெரியாழ்வார் தாம்
அனுபவித்து உலகத்தாருக்காகத் தந்த இப்பத்து
தமிழ்ப் பாசுரங்களை ஓதவல்லவர்கள் நல்ல
மக்களைப் பெற்று மகிழ்ச்சி அடைவர்கள்.