சாராம்சம்
தன்னை ஓடி வந்து அணைத்துக் கொள்ளுமாறு,கண்ணனை யசோதை 'அச்சோவச்சோ'
என்ற குறிப்புச் சொல்லால் முறையிடுவதாக
இப்பாசுரங்கள் அமைந்துள்ளன. இந்த
ஆச்சர்யமான பாசுரங்களை
நாமும் அனுபவிக்கலாமே !
(1)
பொன்னியல் கிண்கிணி சுட்டி புறங்கட்டி
தன்னியலோசை சலன்சல னென்றிட
மின்னியல் மேகம் விரைந்தெதிர் வந்தாற்போல்
என்னிடைக் கோட்டரா அச்சோவச்சோ
எம்பெருமான்! வாரா அச்சோவச்சோ
பாசுர அனுபவம்
பொன்னால் செய்த சதங்கைகளை கால்மற்றும் இடுப்பில் அணிந்தவாரும் நெற்றிச்
சுட்டியுடனும், இவைகள் எழுப்பும் இன்பகரமான
ஜல் ஜல் என்ற ஓசையுடன், மின்னலுடன் கூடிய
மேகம் விரைந்து எதிரில் வருவது போல்,
என்னுடைய இடுப்பில் அமர விரும்பி, ஓடி வந்து
என்னை அணைத்துக்கொள்ள வேண்டும், எங்கள்
தலைவனே! அணைத்துக்கொள்ள வர வேண்டும்.
(2)
செங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல்
பங்கிகள் வந்து உன்பவளவாய் மொய்ப்ப
சங்கு வில்வாள் தண்டு சக்கரமேந்திய
அங்கைகளாலே வந்தச்சோ வச்சோ
ஆரத் தழுவா வந்தச்சோ வச்சோ
பாசுர அனுபவம்
செந்தாமரைப் பூவின் தேனை சுவைக்க கருவண்டுகள் பூவை மொய்ப்பதைப் போல்,
கண்ணனே! உன்னுடைய சுருண்ட கூந்தல்
உன் பவளம் போலுள்ள வாயில் விழுந்தவாரே,
சங்கு, வில், வாள், கதை, சக்கரம் ஏந்திய
அக்கைகளால் என்னை அணைக்க வா!
என்னை கட்டியணைக்க ஓடி வர வேண்டும்.
(3)
பஞ்சவர் தூதனாய்ப் பாரதம் கைசெய்து
நஞ்சுமிழ் நாகங் கிடந்த நற்பொய்கைபுக்கு
அஞ்சப் பணத்தின் மேல் பாய்ந்திட்டருள் செய்த
அஞ்சனவண்ணனே! அச்சோவச்சோ
ஆயர்பெருமானே ! அச்சோவச்சோ
பாசுர அனுபவம்
பஞ்ச பாண்டவர்களுக்காக துர்யோதனாதிகளிடம்தூதனாய்ப் போனவனும், பேச்சு வார்த்தையில்
சமரசம் ஏற்படாததால் பாரத யுத்தத்தை
அணிவகுத்து செய்தவனும், விஷத்தைக் கக்கும்
காளியன் என்கிற ஸர்ப்பத்தை, ஆயர்கள்
பயப்படும்படி, மடுவிலே புகுந்து அதன்
தலையின் மேல் நடனமாடி அடக்கி, பின்பு தனது
கருணையால் அதற்கும் அருள் புரிந்த, மை
போன்ற நிறமுடையவனுமான கண்ணனே!
என்னை அணைத்துக்கொள்ள வர வேண்டும்,
ஆயர்களின் தலைவனே, அணைத்துக்
கொள்ள வர வேண்டும்.
(4)
நாறிய சாந்தம் நமக்கிறை நல்கென்ன
தேறியவளும் திருவுடம்பிற்பூச
ஊறிய கூனினை உள்ளேயொடுங்க அன்
றேறவுருவினாய்! அச்சோவச்சோ
எம்பெருமான்! வாரா அச்சோவச்சோ
பாசுர அனுபவம்
ஒருசமயம் பலராமனுடன் நீ சென்றுகொண்டிருக்க, கூனியை சந்திக்க
நேரிடுகையில், நறு மணம் வீசும் சந்தனத்தை
அவள் கம்சனுக்காக எடுத்துச் செல்வதைப்
பார்த்து, எங்களுக்கு கொஞ்சம் கொடு என்று
அவளை நீ கேட்க, அவளும் கம்சனக்கு
அஞ்சாமல், அந்த நல்ல சந்தனத்தை எடுத்து
உன் திருமேனியில் பூச, உடனே அவளிடம்
கருணையுள்ளம் கொண்டவனாய் அவளது
கூனை, அவளுள்ளே அடங்குமாறு செய்து,
நிமிர்த்திட்டாய். எம்பெருமானே! என்னை
அணைத்துக்கொள்ள வர வேண்டும்.
அணைத்துக்கொள்ள வர வேண்டும்.
(5)
கழல்மன்னர்சூழக் கதிர்போல் விளங்கி
எழலுற்று மீண்டே இருந்துன்னை நோக்கும்
சூழலைப் பெரிதுடைத் துச்சோதனனை
அழல விழித்தானே! அச்சோவச்சோ
ஆழியங்கையனே! அச்சோவச்சோ
பாசுர அனுபவம்
வெற்றிப் பதக்கங்களைச் சூடிய மன்னர்கள்,சூரியக் கதிர்கள் போல் துர்யோதனனை
சூழ்ந்திருக்க, கண்ணனே! நீ பாண்டவ
தூதனாய் அவன் சபைக்குச் சென்றபோது,
உன்னுடைய அபரிமிதமான தேஜஸ்ஸால்,
தன்னை அறியாமல், மரியாதை நிமித்தம்
சற்றே எழுந்து நின்று மீண்டும் அகந்தையால்
அமர்ந்த துர்யோதனன் உன்னை சூழ்ச்சியுடன்
நோக்க, நீயும் அவனை கண்களில் அனல்
பொறி பறக்க கோபமாய் பார்த்தாய்!
என்னை அணைத்துக்கொள்ள நீ ஓடி வர
வேண்டும், உன் அழகிய கையில்
சக்ராயுதம் ஏந்தியவனே! அணைத்துக்
கொள்ள வர வேண்டும்.
(6)
போரொக்கப்பண்ணி இப்பூமிப்பொறைதீர்ப்பான்
தேரொக்கவூர்ந்தாய் செழுந்தார் விசயற்காய்
காரொக்குமேனிக் கரும்பெருங் கண்ணனே!
ஆரத்தழுவாவந்து அச்சோவச்சோ
ஆயர்கள் போரேறே! அச்சோவச்சோ
பாசுர அனுபவம்
இந்த பூமியின் பாரத்தை தீர்ப்பதற்காக பலயுத்தங்களைப் புரிந்தவனும், சிறந்த மாலைகளை
அணிந்தவனான அர்ஜுநனுக்காக
தேரோட்டியவனும், மேகம் போன்ற
திருமேனியில் விசாலமான கரிய
கண்களை உடையவனுமான கண்ணனே!
என்னை கட்டியணைக்க ஓடி வர
வேண்டும். ஆயர்களின் காளையே !
அணைத்துக்கொள்ள வர வேண்டும்.
(7)
மிக்கபெரும்புகழ் மாவலிவேள்வியில்
தக்கதிதன்றென்று தானம்விலக்கிய
சுக்கிரன் கண்ணைத் துரும்பாற்கிளறிய
சக்கரக்கையனே! அச்சோவச்சோ
சங்கமிடத்தானே! அச்சோவச்சோ
பாசுர அனுபவம்
பெரும் புகழ் வாய்ந்த மஹாபலி சக்கிரவர்த்திசெய்த யாகத்தில் அன்று வாமனனாய் நீ
சென்று மூவடி மண் கேட்க, அவனும்
தானமாகக் கொடுக்க முன்வந்து ஜலத்தை
தாரை வார்க்கும் சமயம், அவனுடைய
ஆசார்யன் சுக்கிரன் இந்த தானம் தகுந்ததல்ல
எனக்கருதி ஜலபாத்திரத்தின் துவாரத்தில்
சூட்சுமமாய் நுழைந்து அதை அடைத்துவிட,
நீயோ கையில் அணிந்திருந்த தர்ப்பையால்,
அடைப்பை எடுப்பது போல், சுக்கிரனுடைய
கண்ணை குத்திக் கெடுத்தாய்.
சக்கராயுதத்தை வலக்கையில் ஏந்தியவனே!
என்னை அணைத்துக்கொள்ள ஓடி வர வேண்டும்.
இடக்கையில் பாஞ்சஜன்யத்தை ஏந்தியவனே!
அணைத்துக்கொள்ள வர வேண்டும்.
(8)
என்னிதுமாயம் யென்னப்பனறிந்திலன்
முன்னைய வண்ணமே கொண்டு அளவாயென்ன
மன்னு நமுசியை வானிற்சுழற்றிய
மின்னுமுடியனேஅச்சோவச்சோ
வேங்கடவாணனே! அச்சோவச்சோ
பாசுர அனுபவம்
எம்பெருமான் மஹாபலியிடன் பூமியையாசிக்கும் போது சிறிய உருவினனாய்
இருந்தவன், மூவடியை அளக்கும் போதோ
திரிவிக்ரமனாய் அளவிடமுடியாத
மிகப்பெரியவனாய் வளர்ந்தான். இது என்
தந்தை அறியாத மாயச் செயல்.
யாசித்தபோது இருந்த சிறிய உருவத்தைக்
கொண்டே அளக்கவேண்டும் என
மகாபலியின் மகன் நமுசி என்பவன் கண்ணனை
எதிர்த்து வற்புறுத்த, கண்ணன்
நமுசியை ஆகாசத்திலே சுழற்றி எறிந்தான்.
ஜ்வலிக்கும் கிரீடத்தை உடையோனே,
என்னை அணைத்துக்கொள்ள வர வேண்டும்.
திருமலையில் வசிப்பவனே! அணைத்துக்
கொள்ள வர வேண்டும்.
(9)
கண்டகடலும் மலையுமுலகேழும்
முண்டத்துக்காற்றா முகில்வண்ணா! ஓ என்று
இண்டைச்சடைமுடி ஈசனிரக்கொள்ள
மண்டைநிறைத்தானே! அச்சோவச்சோ
மார்வில் மறுவனே அச்சோவச்சோ
பாசுர அனுபவம்
பதினான்கு உலகங்கள், கண்கண்டசமுத்திரங்கள் மற்றும் மலைகள்
அனைத்தையும் வைத்து நிரப்பியும்,
சடைமுடியான் சிவனிடமிருந்த
கபாலம் நிரம்பாததால், சிவன் மிக்க
வருத்தத்துடன் எம்பெருமானை
வேண்ட, எம்பெருமானும் தன் திருமார்பிலிருந்து
உண்டான ரத்தத்தால் கபாலத்தை நிறைத்தான்.
இப்படியாக சிவன் துயர் தீர்த்தவனே! என்னை
அணைத்துக் கொள்ள வர வேண்டும்.
திருமார்பில் ஸ்ரீவத்ஸமென்னும் மச்சத்தை
உடையவனே,அணைத்துக்கொள்ள வர வேண்டும்.
(10)
துன்னிய பேரிருள் சூழ்ந்துவகை மூட
மன்னிய நான்மறை முற்றும் மறைந்திட
பின்னில்வுலகினில் பேரிருள் நீங்க அன்
றன்னமதானானே!அச்சோவச்சோ
அருமறைதந்தானே! அச்சோவச்சோ
பாசுர அனுபவம்
முன்பொருசமயம் பிரம்மாவிடமிருந்துவேதங்களனைத்தையும் சோமுகனென்னும்
அசுரன் அபகரித்து பெருங்கடலினுள் மறைய,
அதனால் உலகமுழுதும் அஞ்ஞானமாகிய
காரிருள் சூழ, பின்பு எம்பெருமான் ஹம்சமாய்
அவதரித்து அஞ்ஞானத்தை நீக்கினானே!
என்னை அணைத்துக்கொள்ள வர வேண்டும்,
வேதங்களை மீட்டுக் கொடுத்தவனே!அணைத்துக்
கொள்ள வர வேண்டும்.
(11)
நச்சுவார் முன்னிற்கும் நாராயணன் தன்னை
அச்சோ வருகவென்று ஆய்ச்சியுரைத்தன
மச்சணிமாடப் புதுவைக்கோன் பட்டன் சொல்
நிச்சலும் பாடுவார் நீள்விசும்பாள்வரே
பாசுர அனுபவம்
தன்னை துதிப்பவர் முன் வந்து நிற்கும்தன்மையுள்ள நாராயணனாகிய கண்ணனை
இடையர் குல யசோதை அணைத்துக்கொள்ள
விரும்பி அழைத்ததை, மாளிகைகளால்
சூழப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரின் தலைவனான
பெரியாழ்வார் இப்பத்து பாசுரங்களால்
விவரித்துரைத்தார். எப்போதும் இப்பாசுரங்களைப்
பாடுபவர்கள் வான் புகழ் அடைவர்.