நான்காம் பத்து பத்தாம் திருமொழி



சாராம்சம்

உயிர் பிரியும் சமயத்தில், உடலும், மனமும் தளர்ந்து,
யம கிங்கரர்கள் ஒருபுறம் பயமுறுத்த, பகவான் நாமாவை
சொல்ல முடியாமல் போய்விடும். அதனால், எம்பெருமானே!
உன் திருநாமங்களை நான் நன்றாக உள்ள இப்போதே
சொல்லி வைக்கிறேன். தேவரீர் திருவுள்ளத்தில் என்னை
நினைவில் கொண்டு எப்போதும் என்னைக் காத்தருளவேணும்
என்று பெரியாழ்வார் மனமுருக பிரார்த்திக்கிறார்.
நாமும் அவ்வாறே பகவானைப் பிரார்த்திப்பதைத்
தவிர வேறு வழி இல்லை!

(1)
துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத்
துணையாவரென்றே ஒப்பிலேனாகிலும்நின்னடைந்தேன்
ஆனைக்குநீஅருள்செய்தமையால் எய்ப்புஎன்னைவந்து
நலியும்போது அங்குஏதும்நானுன்னைநினைக்கமாட்டேன்
அப்போதைக்குஇப்போதேசொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

பாசுர அனுபவம்

காக்கும் ஸாமர்த்தியம் படைத்த உன்னை அடைக்கலம்
புகுவது, நான் சோர்வடையும் பொழுது நீ துணை நிற்பாய்
என்ற காரணத்தால் அன்றோ? அப்படி காக்கப்படுவதற்கு
நான் தகுதி அற்றவனாக இருந்தாலும், அன்று நீ கஜேந்திரன்
என்ற யானையைக் காத்தபடியால், என்னையும்
காக்கவேண்டும். உன்னை சரணம் அடைகிறேன். கடைசி
காலத்தில் நோய் வந்து அடியேனை வருத்தும்பொழுது,
என்னால் உன்னை ஒரு நொடியேனும் நினைக்க இயலாது.
அதை மனதில் கொண்டு, நான் பிரக்ஞையுடன் இருக்கும்
இப்பொழுதே, உன்னிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
திருவரங்கத்தில் பாம்புப் படுக்கையில் சயனித்த்திருப்பவனே!
என்னைக் காத்தருளவேணும்!

(2)
சாமிடத்துஎன்னைக்குறிக்கொள்கண்டாய் சங்கொடு
சக்கரமேந்தினானே. நாமடித்துஎன்னைஅனேகதண்டம்
செய்வதாநிற்பர்நமன்தமர்கள் போமிடத்துஉன்திறத்து
எத்தனையும் புகாவண்ணம்நிற்பதோர்மாயைவல்லை
ஆமிடத்தேஉன்னைச்சொல்லிவைத்தேன்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

பாசுர அனுபவம்

சங்கு, சக்கரம் திருக்கையில் ஏந்தியவனே!
திருவரங்கத்தில் பாம்புப் படுக்கையில் படுத்திருப்பவனே!
என் உயிர் பிரியும் சமயம் யம படர்கள் நாக்கை மடித்து
என்னை பலவிதமாக தண்டிப்பதற்கு இழுத்துப் போகையில்,
மாயையின் காரணத்தால் நான் உன்னை சிறிதும் நினைக்க
மாட்டேன். நான் தெளிவுடன் இருக்கும் இப்பொழுதே உன்னிடம்
சொல்லி வைக்கிறேன்! என்னைக் காத்தருளவேண்டும்.

(3)
எல்லையில்வாசல்குறுகச்சென்றால் எற்றிநமன்தமர்
பற்றும்போது நில்லுமினென்னும்உபாயமில்லை
நேமியும்சங்கமும்ஏந்தினானே. சொல்லலாம்போதே
உன்நாமமெல்லாம் சொல்லினேன் என்னைக்
குறிக்கொண்டுஎன்றும் அல்லல்படாவண்ணம்
காக்கவேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே.

பாசுர அனுபவம்

திருச்சக்கரமும், திருச்சங்கும் திருக்கைகளில் பிடித்துக்
கொண்டிருப்பவனே! அடியேனுடைய மரணத்தருவாயில்,
யம பட்டிணத்திற்கு போகும் வழியில், யம தூதர்கள்
என்னைப் பிடித்து இழுத்துச்செல்ல வரும்பொழுது,
அவர்களை நில்லுங்கள் என்று சொல்லி தடுத்து நிறுத்த
என்னிடம் ஒரு உபாயமும் இல்லை. என்னால்
சொல்லமுடியும் காலத்திலேயே உன் திருநாமங்களை
எல்லாம் சொன்னேன்! திருவரங்கத்தில் பாம்புப்
படுக்கையில் சயனித்திருக்கும் எம்பெருமானே!
என்னை எப்போதும் உன் திருவுள்ளத்தில் நினைத்து
யமதூதர்களின் கையில் அகப்பட்டு
வருந்தாதபடி காத்தருளவேண்டும்.

(4)
ஒற்றைவிடையனும்நான்முகனும் உன்னையறியாப்
பெருமையோனே. முற்றஉலகெல்லாம்நீயேயாகி
மூன்றெழுத்தாயமுதல்வனேயோ! அற்றதுவாணாள்
இவற்கென்றெண்ணி அஞ்சநமன்தமர்பற்றலுற்ற
அற்றைக்கு, நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

பாசுர அனுபவம்

தன்னிகரற்ற ரிஷபவாகனனான சிவபெருமானும்,
ப்ரஹ்மாவும் அறிய முடியாத பெருமையை உடையவனே!
ஸகல உலகங்களும் நீயே ஆகியும், மூன்று எழுத்தாகிய
ஒம் என்ற பிரணவத்தின் ஸ்வரூபியாயும், எல்லாவற்றிற்கும்
மூல காரணமாய் இருப்பவனே! திருவரங்கத்தில் பாம்புப்
படுக்கையில் படுத்திருப்பவனே! இவனுக்கு ஆயுள் முடிந்தது
என்று நினைத்து என்னை, நான் நடுங்கும்படி, யமபடர்கள்
பிடிக்கப் போகும் அன்று, பக்த ரக்ஷகனான
நீ என்னை காத்தருளவேணும்.

(5)
பையரவினணைப் பாற்கடலுள் பள்ளிகொள்கின்ற
பரமமூர்த்தி. உய்யஉலகுபடைக்கவேண்டி உந்தியில்
தோற்றினாய்நான்முகனை வையமனிசரைப்பொய்
யென்றெண்ணிக் காலனையும்உடனேபடைத்தாய்
ஐய. இனிஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

பாசுர அனுபவம்

விரித்த படங்களையுடைய பாம்புப் படுக்கையில்,
திருப் பாற்கடலில் மிகச் சிறந்த திருவுருவுடன்
சயனித்திருப்பவனே! எல்லா உயிர்களும் உயர்ந்த
நிலையை அடையும் பொருட்டு உலகங்களை
படைப்பதற்காக நாபியில் பிரமனை தோற்றுவித்தவனே!
பூமியில் மனிதர்கள் தனது கட்டளைகளை புறக்கணிப்
பார்கள் என்றெண்ணி யமனையும் உடனுக்குடன்
படைத்தவனே! பெரியோனே! திருவரங்கத்தில் பாம்புப்
படுக்கையில் துயில் கொண்டிருப்பவனே! இனி என்னை
யம பயத்திலிருந்து காத்தருளவேணும்.

(6)
தண்ணெனவில்லைநமன்தமர்கள் சாலக்கொடுமைகள்
செய்யாநிற்பர் மண்ணொடுநீரும்எரியும்காலும் மற்றும்
ஆகாசமுமாகிநின்றாய். எண்ணலாம்போதேஉன்நாம
மெல்லாம் எண்ணினேன், என்னைக்குறிக்கொண்டுஎன்றும்
அண்ணலே. நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப் பள்ளியானே.

பாசுர அனுபவம்

கொஞ்சமும் தயையில்லாத யம தூதர்கள் மிகவும் கொடிய
தண்டனைகளை எனக்கு அளிப்பார்கள். பூமி, ஜலம், அக்நி,
வாயு, ஆகாசம் மற்றும் எல்லாமுமாக நின்றவனே!
எல்லோருக்கும் ஸ்வாமியானவனே! எனக்கு சக்தி
இருக்கும்போதே, உன் திருநாமங்களை எல்லாம் மனத்தாலும்,
வாயாலும் கூறிவைத்தேன். திருவரங்கத்தில் பாம்புப்
படுக்கையில் படுத்திருக்கும் எம்பெருமானே! என்னை
நீ எப்போதும் உன் திருவுள்ளத்தில் கொண்டு காத்தருளவேணும்!

(7)
செஞ்சொல்மறைப்பொருளாகிநின்ற தேவர்கள்நாயகனே.
எம்மானே. எஞ்சலிலென்னுடையின்னமுதே ஏழுலகுமுடையாய்.
என்னப்பா. வஞ்சவுருவின்நமன்தமர்கள் வலிந்துநலிந்து
என்னைப்பற்றும்போது அஞ்சலமென்றுஎன்னைக்காக்க
வேண்டும் அரங்கத்தரவணைப்பள்ளியானே.

பாசுர அனுபவம்

சிறந்த சொற்களைக் கொண்ட வேதத்தின் அர்த்தமாகவும்,
தேவர்களின் தலைவனாகவும் இருக்கும் எம்பெருமானே!
குறையேதுமில்லாத மிக இனிய அம்ருதம் போன்றவனே!
ஏழுலகங்களுக்கும் ஸ்வாமியானவனே! என்னுடைய தந்தையே!
திருவரங்கத்தில் பாம்புப் படுக்கையில் துயில்
கொண்டிருப்பவனே! வஞ்சனையே உருவான யம தூதர்கள்
என்னை பலத்துடன் கொடுமைபடுத்தி பிடிக்கும்போது,
'பயப்படாதே' என்று சொல்லி, என்னை வந்து காக்கவேணும்!

(8)
நான்ஏதும்உன்மாயமொன்றறியேன் நமன்தமர்பற்றி
நலிந்திட்டு இந்த ஊனேபுகேயென்றுமோதும்போது
அங்கேதும் நான்உன்னைநினைக்கமாட்டேன் வானேய்
வானவர்தங்களீசா மதுரைப்பிறந்தமாமாயனே. என்
ஆனாய். நீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

பாசுர அனுபவம்

எனக்கு உன் மாயைகளைப் பற்றி ஒன்றும் தெரியாது.
யம கிங்கரர்கள் என்னைப் பிடித்து, துன்புருத்தி, பிறகு
மற்றொரு கொடிய சரீரத்தில் புகுமாறு தள்ளும்போது, நான்
ஒன்றும் உன்னை நினைக்க மாட்டேன். பரம பதத்தில்
வசிக்கும் நித்யசூரிகளுக்குத் தலைவனே! ஸ்ரீ மதுராவில்
பிறந்த, மாயா சக்தி படைத்தவனே!என்னுடையோனே!
திருவரங்கத்தில் பாம்புப் படுக்கையில் படுத்திருப்பவனே!
நீ என்னைக் புறக்கணிக்காமல் காத்தருளவேணும்.

(9)
குன்றெடுத்துஆநிரைகாத்தஆயா கோநிரைமேய்த்தவனே.
எம்மானே. அன்றுமுதல் இன்றறுதியா ஆதியஞ்சோதி
மறந்தறியேன் நன்றும்கொடியநமன்தமர்கள் நலிந்துவலிந்து
என்னைப்பற்றும்போது அன்றங்குநீஎன்னைக்காக்கவேண்டும்
அரங்கத்தரவணைப்பள்ளியானே.

பாசுர அனுபவம்

கோவர்தன மலையை குடைபோல் பிடித்து பசுக்கூட்டங்களை
காத்தருளின ஆயர் குல மைந்தனே! மாடுகளின் கூட்டத்தை
மேய்த்தவனே! எம்பெருமானே! அன்றுமுதல் இன்றுவரை
ஜோதிஸ்வரூபனான உன்னை நான் மறந்திலேன்! மிகக் கொடிய
குணமுடைய யம தூதர்கள் என்னை துன்புருத்தி, பலாத்கரித்து
பிடிக்கும் அந்த சமயத்தில், .ஸ்ரீரங்கத்தில் பாம்புப்
படுக்கையில் படுத்திருக்கும் நீ, அப்பொழுது
என்னை காத்தருளவேணும்.

(10)
மாயவனைமதுசூதனனை மாதவனைமறையோர்களேத்தும்
ஆயர்களேற்றினைஅச்சுதனை அரங்கத்தரவணைப்
பள்ளியானை வேயர்புகழ்வில்லிபுத்தூர்மன் விட்டுசித்தன்
சொன்னமாலைபத்தும் தூயமனத்தனராகிவல்லார்
தூமணி வண்ணனுக்காளர்தாமே.

பாசுர அனுபவம்

மாய சக்தியுடையவனும், மது என்ற அரக்கனை அழித்தவனும்,
ஸ்ரீயின் கணவனும், வேதம் ஓதுபவர்களால் போற்றப்படுபவனும்,
இடையர்குலத் தலைவனும், பக்தர்களை என்றும் நழுவ விடாத
குணமுள்ளவனும், ஸ்ரீரங்கத்தில் பாம்பணையின் மேல் துயில்
கொண்டிருப்பவனையும் குறித்து, தன்னுடைய பிறந்த குடிக்கு
புகழைச் சேர்த்தவரான, ஸ்ரீவில்லிபுத்தூரின் பெரியாழ்வார்
மாலைபோல் தொகுத்தருளின இப்பத்து பாசுரங்களை தூய
மனதுடன் படிப்பவர்கள், அப்பழுக்கற்ற நீல மணி
நிற மேனியுடைய எம்பெருமானுக்கு தொண்டு
செய்யும் பாக்கியம் பெறுவர்கள்.


No comments:

Post a Comment

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.