சாராம்சம்
திருவரங்கத் திருப்பதியின் சிறப்பையும்,திருவரங்கனின் திருவவதாரப் பெருமைகளையும்
இக் கீழ்கண்ட பாசுரங்களின் மூலம், பெரியாழ்வார்
விரிவாக அருளிச்செய்ததை நாமும் சேவித்துப்
பயன் பெறுவோமாக.
(1)
மரவடியைத் தம்பிக்கு வான்பணையம்
வைத்துப்போய் வானோர் வாழ
செரு உடைய திசைக்கருமம் திருத்திவந்து
உலகாண்ட திருமால் கோயில்
திருவடிதன் திருஉருவும் திருமங்கை
மலர்க்கண்ணும் காட்டி நின்று
உரு உடைய மலர்நீலம் காற்று ஆட்ட
ஒலிசலிக்கும் ஒளி அரங்கமே
பாசுர அனுபவம்
தம்பி பரதனுக்கு மரத்திலான பாதுகையை அடமானமாய்தந்து விட்டு, வானவர்களைக் காத்து அவர்களை
வாழவைப்பதற்காக தென்திசை சென்று இராவணனைப்
போரில் வென்று தன்னுடைய கடமைகளை சரிவரச்
செய்துமுடித்து வந்த இராமன் உலகை ஆண்டான்.
அவன் இருந்த திருக்கோயில், எம்பெருமானின் திருவடியுடன்
கூடிய திருவுருவம் போலவும், தாயாரின் தாமரை மலர்
போன்ற கண்களைப் போலவும் இருக்கும் , காற்றில்
அசைந்தாடும் நல்ல அழகுடைய நீல மலர்களைக் கொண்ட,
ஒளியுடன் திகழும் திருவரங்கம் என்னும் திருக்கோயில் தான்.
(2)
தன் அடியார் திறத்தகத்துத் தாமரையாள்
ஆகிலும் சிதகு உரைக்குமேல்
என் அடியார் அது செய்யார் செய்தாரேல்
நன்று செய்தார் என்பர் போலும்
மன் உடைய விபீடணற்கா மதில் இலங்கைத்
திசைநோக்கி மலர்க்கண் வைத்த
என்னுடைய திருவரங்கற்கு அன்றியும் மற்று
ஒருவர்க்கு ஆள் ஆவரே?
பாசுர அனுபவம்
தன்னுடைய அடியார்களின் குற்றங்களைப் பற்றிதாமரை மலராள் லக்ஷ்மீயே எம்பெருமானுக்கு
எடுத்துரைத்தாலும், அவன் அதைப் பொருட்படுத்தாமல்,
என்னுடைய அடியார்கள் அப்படிச் செய்யமாட்டார்கள்,
அப்படியே செய்திருந்தாலும், அது நல்லதாகவே எனக்குத்
தோன்றுகிறது, எனக்கூறுவது போலிருக்கும்! நல்ல
மனமுடைய விபீஷணனின் நலனுக்காக, பெரும் மதில்களைக்
கொண்ட தென் திசையிலுள்ள இலங்கையை தன்னுடைய
மலர்க்கண்களால் பார்த்தபடியே படுத்திருக்கும் என்னுடைய
திருவரங்கனைத் தவிர வேறு ஒருவர்க்கு
அடிமை செய்வார்களோ?
(3)
கருள் உடைய பொழில் மருதும் கதக் களிறும்
பிலம்பனையும் கடிய மாவும்
உருள் உடைய சகடரையும் மல்லரையும்
உடைய விட்டு ஓசை கேட்டான்
இருள் அகற்றும் எறி கதிரோன் மண்டலத்தோடு
ஏற்றி வைத்து ஏணி வாங்கி
அருள் கொடுத்திட்டு அடியவரை
ஆட்கொள்வான் அமரும் ஊர் அணி அரங்கமே
பாசுர அனுபவம்
சீற்றத்துடனிருந்த அர்ஜுன மரங்களையும்,கோபத்துடனிருந்த குவலையாபீடமென்ற யானையையும்,
ப்ரலம்பெனென்ற அசுரனையும், கேசி என்ற குதிரை
வடிவுடனிருந்த கொடிய அரக்கனையும், உருண்டுவந்த
சகடாசுரனையும், மல் யுத்தர்களையும், பானையை
உடைத்து அதன் ஓசையைக் கேட்க ஆசை கொண்டவன்
போல், கொன்ற எம்பெருமான், இருளகற்றும் சூரிய
மண்டலத்துக்கே ஏற்ற வைக்கும் ஏணியைப் போன்று,
அடியவர்களுக்கு அருள் தந்து அவர்களை ஆட்கொண்டு
சேவை சாதிக்கும் ஊர் திருவரங்கமே!
(4)
பதினாறாம் ஆயிரவர் தேவிமார்
பணிசெய்யத் துவரை என்னும்
மதில் நாயகராகி வீற்றிருந்த
மணவாளர் மன்னு கோயில்
புது நாண்மலர்க் கமலம் எம்பெருமான்
பொன் வயிற்றிற் பூவே போல்வான்
பொதுநாயகம் பாவித்து இறுமாந்து
பொன் சாய்க்கும் புனல் அரங்கமே
பாசுர அனுபவம்
பதினாறாயிரம் தேவிமார்கள் சூழ்ந்துகொண்டுபணி செய்ய, அவர்களின் கணவனாகவும், நாயகனாகவும்
துவாரகையில் வீற்றிருந்தவனுக்கு ஏற்ற திருக்கோயிலானது,
காவேரி ஆற்றில் புதிதாக மலர்ந்த தாமரை மலர்கள்,
எம்பெருமானின் பொன் போன்ற நாபியில் உதித்த
தாமரைக்கு தாம் ஒப்பானவை என்று பெருமிதம்
கொள்வது போல் விளங்கும் திருவரங்கமே!
(5)
ஆமையாய்க் கங்கையாய் ஆழ் கடலாய்
அவனியாய் அரு வரைகளாய்
நான்முகனாய் நான்மறையாய் வேள்வியாய்த்
தக்கணையாய்த் தானும் ஆனான்
சேமம் உடை நாரதனார் சென்று சென்று
துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில்
பூ மருவிப் புள் இனங்கள் புள் அரையன்
புகழ் குழறும் புனல் அரங்கமே
பாசுர அனுபவம்
எம்பெருமானே ஆமையாகவும், அதனைத் தாங்கும்கங்கையாகவும், ஆழ்ந்த கடலாகவும், பூமியாகவும்,
பெரிய மலைகளாகவும், நான்முக பரம்மனாகவும்,
நான்கு வேதமாகவும், அனைத்து வேள்விகளாகவும்,
வேத பண்டிதர்களுக்கு அளிக்கப்படும் தக்ஷிணையாகவும்
தன்னை ஆக்கிக் கொள்கிறான். நலத்தை அருளும்
நாரதர் எப்பொழுதும் சென்று அன்புடன் எம்பெருமானை
வழிபடும் கோவில், பறவை இனங்கள் மலர்களைக்
கண்டு மயங்கி கருடவாகனின் பெருமைகளைப்
பாடும் நீர் சூழ்ந்த திருவரங்கமே!
(6)
மைத்துனன்மார் காதலியை மயிர் முடிப்பித்து
அவர்களையே மன்னர் ஆக்கி
உத்தரைதன் சிறுவனையும் உயக்கொண்ட
உயிராளன் உறையும் கோயில்
பத்தர்களும் பகவர்களும் பழமொழிவாய்
முனிவர்களும் பரந்த நாடும்
சித்தர்களும் தொழுது இறைஞ்சத்
திசை-விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே
பாசுர அனுபவம்
பாண்டவர்களின் மனைவியாகிய பாஞ்சாலியின்கூந்தலை முடியும் படி அருளியவனும், அவர்களையே
மன்னராக்கியவனும், அபிமன்யுவின் புத்திரன் பரிக்ஷித்தை
உயிர்ப்பித்தவனுமான எம்பெருமான் சேவை சாதிக்கும்
கோயில், பக்தர்களும், பெரியவர்களும், வேத
விற்பன்னர்களும், சாதுக்களும், சாமான்யர்களும்,
சித்தர்களும் எல்லா திக்குகளிலும் ப்ரகாசமாய் விளங்கும்
எம்பெருமானை தொழுது நிற்கும் திருவரங்கமே!
(7)
குறள் பிரமசாரியாய் மாவலியைக்
குறும்பு அதக்கி அரசுவாங்கி
இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை
கொடுத்து உகந்த எம்மான் கோயில்
எறிப்பு உடைய மணிவரைமேல் இளஞாயிறு
எழுந்தாற்போல் அரவு அணையின்
சிறப்பு உடைய பணங்கள்மிசைச்
செழுமணிகள் விட்டு எறிக்கும் திருவரங்கமே
பாசுர அனுபவம்
சிறிய ப்ரமசாரி வடிவம் கொண்டு மாவலியிடம் சென்றுமூன்றடி மண்ணை யாசித்து, அவனின் கர்வத்தை அடக்கி,
அவனுடைய ராஜ்யத்தைப் பெற்று, பின்பு நொடிப்பொழுதில்,
பாதாளத்தை அவனுக்கு ஏற்ற இருப்பிடமாகக் கொடுத்த
எம்பெருமானின் கோயில், ஜோதியுடன் விளங்கும் ஒரு நீல
ரத்ன மலையின் மேலே இளம் சூரியன் உதித்தாற்போல்,
சிவந்த ரத்தினங்கள் ஒளிரும் தலைகளை கொண்ட
பாம்பினைப் படுக்கையாக உடைய
எம்பெருமானின் திருவரங்கமே!
(8)
உரம் பற்றி இரணியனை உகிர்நுதியால்
ஒள்ளிய மார்வு உறைக்க ஊன்றிச்
சிரம் பற்றி முடி இடியக் கண் பிதுங்க
வாய் அலறத் தெழித்தான் கோயில்
உரம் பெற்ற மலர்க்கமலம் உலகு அளந்த
சேவடி போல் உயர்ந்து காட்ட
வரம்பு உற்ற கதிர்ச்செந்நெல் தாள்சாய்த்துத்
தலைவணக்கும் தண் அரங்கமே
பாசுர அனுபவம்
தேவர்கள் கொடுத்த வர பலத்தையுடையஹிரண்யகசிபுவை, தன்னுடைய நகக் கூர்மையால்
அவனது மார்பில் அழுத்தி ஊன்றி, தலையைப் பிடித்து,
கிரீடம் இடிந்து போகும்படியாகவும், கண்கள் பிதுங்கும்
படியாகவும், வாய் அலரும்படியாகவும் செய்து அவனைக்
கொன்றவனின் திருக்கோயில், செழிப்புடைய தாமரைப் பூ,
உலகளந்தவனின் திருவடிகளைப்போலே, ஓங்கி வளர்ந்தும்,
நெற்கதிர்கள் சாய்ந்து தலை வணங்கி
நிற்கும் குளிர்ந்த திருவரங்கமே!
(9)
தேவு உடைய மீனமாய் ஆமையாய்
ஏனமாய் அரியாய்க் குறளாய்
மூ உருவில் இராமனாய்க் கண்ணனாய்க்
கற்கியாய் முடிப்பான் கோயில்
சேவலொடு பெடை அன்னம்
செங்கமல மலர் ஏறி ஊசல் ஆடிப்
பூ அணைமேல் துதைந்து எழு செம்
பொடி ஆடி விளையாடும் புனல் அரங்கமே
பாசுர அனுபவம்
நல்ல தேஜஸ்ஸுடன் கூடிய மத்ஸ்யமாயும், கூர்மமாயும்,வராஹமாயும், நரசிம்மனாகவும், வாமனனாயும்,
பரசுராமனாகவும், இராமனாகவும், பலராமனாகவும்,
கண்ணனாகவும், கல்கியாகவும் அவதரித்து ராக்ஷசர்களை
அழித்த எம்பெருமான் கோயில் கொண்டுள்ள இடம்,
ஆண் ஹம்ஸத்துடன் பெண் ஹம்ஸம் செந்தாமரைப்
பூவின் மேலேறி அதை அசைத்து, ஒன்றுக்கொன்று
உரசிக் கொள்வதால் ஏற்பட்ட சிவந்த பொடியைப்
பூசிக் கொண்டு விளையாடும், நீர்
வளத்துடன் விளங்கும் திருவரங்கமே!
(10)
செரு ஆளும் புள்ளாளன் மண்ணாளன்
செருச்செயும் நாந்தகம் என்னும்
ஒரு வாளன் மறையாளன் ஓடாத
படையாளன் விழுக்கை யாளன்
இரவு ஆளன் பகலாளன் என்னையாளன்
ஏழு உலகப் பெரும் புரவாளன்
திருவாளன் இனிதாகத் திருக்கண்கள்
வளர்கின்ற திருவரங்கமே
பாசுர அனுபவம்
போர் செய்யும் திறம் படைத்த கருடாழ்வானைஆளுபவனாயும், இந்த பூமியை ஆளுபவனாயும்,
விரோதிகளைக் கொல்லும் நந்தகம் என்னும் ஒப்பற்ற
வாளை உடையவனாகவும், யுத்தத்தில் புறமுதுகு காட்டி
ஓடாத படையையுடையவனும், இரக்க குணமுள்ளவனும்,
இரவு பகலுக்கு தலைவனாகவும், என்னை ஆள்பவனாகவும்,
ஏழுலகங்களாகிற பெரிய க்ஷேத்திரங்களை ஆள்பவனாகவும்,
பெரிய பிராட்டியின் கணவனாகவும், மகிழ்வுடன்
திருக்கண்களால் அருள்பாலிக்கும் எம்பெருமானின்
கோயில் திருவரங்கமே!
(11)
கைந்நாகத்து இடர் கடிந்த கனல் ஆழிப்
படை உடையான் கருதும் கோயில்
தென்நாடும் வடநாடும் தொழநின்ற
திருவரங்கத் திருப்பதியின் மேல்
மெய்ந்நாவன் மெய் அடியான் விட்டுசித்தன்
விரித்த தமிழ் உரைக்க வல்லார்
எஞ்ஞான்றும் எம்பெருமான் இணையடிக்கீழ்
இணை பிரியாது இருப்பர் தாமே
பாசுர அனுபவம்
பெரிய துதிக்கையைக் கொண்ட யானையின் துயர்தீர்த்து அக்னி ஜ்வாலை போலிருந்த திருச்சக்கரத்தை
ஆயுதமாக உடையவன், தென்னாட்டவரும், வடநாட்டவரும்
துதிக்கும்படி எழுந்தருளியிருக்கும் திருவரங்கம் என்னும்
திவ்ய தேசத்தைப் பற்றி உண்மையையே பேசும்
நாக்கையுடையவரான பெரியாழ்வார் விரிவாக தமிழ்
மாலையாக இயற்றிய இப்பாசுரங்களை சொல்ல வல்லவர்கள்
என்னாளும் எம்பெருமானின் திருவடிக்கீழ் இணைபிரியாமல்
இருக்கும் பாக்கியம் பெறுவர்கள்.
No comments:
Post a Comment
Please feel free to leave your comments. I would love to see them. Thanks.