நான்காம் பத்து ஏழாம் திருமொழி



சாராம்சம்

வடக்கிலுள்ள கண்டம் (இப்பொழுதுள்ள தேவப்பிரயாக்)
என்னும் கங்கைக் கரையில் அமைந்த ஒரு அற்புத
நகரத்தின் விசேஷத்தையும், அங்கு எம்பெருமான்
எழுந்தருளி சேவை ஸாதிக்கும் ஆச்சர்யத்தையும்,
கங்கையின் பெருமையையும்,பெரியாழ்வார் வெகு
விமரிசையாக கீழ்கண்ட பாசுரங்களின் மூலம்
நமக்கு தெரிவிக்கிறார். வாருங்கள்! நாமும்
பாசுரங்களை அனுபவித்துப் பயனடையலாம்!

(1)
தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த
எம் தாசரதி போய் எங்கும் தன்புகழா விருந்து அரசாண்ட
எம்புருடோத்தமனிருக்கை கங்கை கங்கையென்ற
வாசகத் தாலே கடுவினை களைந்திட கிற்கும் கங்கையின்
கரைமேல் கைதொழ நின்ற கண்டமென்னும் கடி நகரே.

பாசுர அனுபவம்

ராவணனின் தலையையும், அவனுடைய தங்கை
சூர்ப்பணகையின் மூக்கையும் துண்டித்த தசரதனுடைய
புதல்வன் ராமன், எங்கும் புகழ் பெற்று அரசாளும்
என்னுடைய புருஷோத்தமன், எழுந்தருளியிருக்கும்
இடம் எதுவென்றால், கங்கை கங்கை என்ற பெயரைச்
சொல்வதனாலேயே கடும் பாவங்களைப் போக்கக்கூடிய
அந்த கங்கை நதிக் கரையின் மேல் பக்தர்கள் கைகூப்பி
வணங்கி நிற்கும் இடத்தில் அமைந்த கண்டம்
என்றழைக்கப்படும் அற்புத நகரமே!

(2)
சலம்பொதி யுடம்பின் தழலுமிழ் பேழ்வாய்ச் சந்திரன்
வெங்கதிர் அஞ்ச மலர்ந்தெழுந் தணவு மணிவண்ண
வுருவின் மால்புரு டோத்தமன் வாழ்வு நலம்திகழ்
சடையான் முடிக்கொன்றை மலரும் நாரணன் பாதத்
துழாயும் கலந்திழி புனலால் புகர்படு கங்கைக்
கண்டமென்னும் கடி நகரே.

பாசுர அனுபவம்

நீரின் தன்மையுடைய சந்திரனும், வெப்பக் கிரணங்களுடன்
கூடிய சூரியனும் அஞ்சும்படி வானளாவி உயர்ந்து நின்ற
நீலமணி நிறம் கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன்
வாழுமிடம் எதுவென்றால், கங்கையானது நாராயணனின்
திருவடியிலிருக்கும் துளசியைத் தழுவியும், தனக்கு நலம்
கருதி சிவபெருமான் கொன்றைப்பூ சூட்டிய தலையில்
தங்கியும், கீழே விழுந்து அலை புரண்டோடும்
இடமான கண்டம் என்றழைக்கப்படும் அற்புத நகரமே!

(3)
அதிர்முக முடைய வலம்புரி குமிழ்த்தி அழலுமிழ்
ஆழிகொண்டெறிந்து அங்கு எதிர்முக வசுரர் தலைகளை
யிடறும் எம்புருடோத்தமனிருக்கை சதுமுகன் கையில்
சதுப்புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி கதிர்முக
மணிகொண்டிழி புனல் கங்கைக் கண்டமென்னும் கடி நகரே.

பாசுர அனுபவம்

அன்று உலகமளந்த போது, அச்சமளிக்கும் ஒலியுடன்
திகழும் வலம்புரி சங்கை குவிந்த இதழில் வைத்து
ஊதியும், அனல் பொறி கக்கும் திருச்சக்கரத்தை எறிந்து
எதிர்த்து வந்த அசுரர்களின் தலைகளை அறுத்தும்,
பேராற்றல் படைத்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும்
இடம் எதுவெனில், நான்கு முகமுடைய ப்ரம்மாவின்
கையிலும், நான்கு தோள் கொண்ட பகவானின்
திருவடியிலும், சிவபெருமானின் முடியிலும் தங்கி
கீழே பாய்ந்த அந்த கங்கையின் கரையில்
அமைந்த கண்டம் என்னும் அற்புத நகரமே!

(4)
இமையவர் இறுமாந் திருந்தர சாள ஏற்றுவந்
தெதிர்பொரு சேனை நமபுரம் நணுக நாந்தகம்
விசிறும் நம் புருடோத்தமன் நகர்தான் இம வந்தம்
தொடங்கி இருங்கடலளவும் இருகரை உலகிரைத் தாட
கமையுடைப் பெருமைக் கங்கையின் கரைமேல்
கண்டமென்னும் கடி நகரே.

பாசுர அனுபவம்

தேவர்கள் கர்வத்துடன் ராஜ்ய பரிபாலனம் செய்கையில்,
அசுரப் படைகள் அவர்களை அவ்விதம் செய்யாத வண்ணம்
தடுத்து அவர்களை எதிர்த்துப் போர் தொடுக்கையில்,
அவ்வசுரர்களை நரக லோகத்திற்கு அனுப்பக் கருதி
'நாந்தகம்' என்ற வாளை வீசி எறிந்த எம்பெருமான்
புருஷோத்தமன் உறையும் இடம் எதுவெனில், இமய மலை
முதல் பெரிய கடல் வரை கரை காணமுடியாததாகவும்,
பெரும் சப்தத்துடன் கூட ஓடும் அதன் நீரில் ஸ்நானம்
செய்போரின் பாவங்களை போக்கும் பெருமையுடையத
தாகவும் உள்ள கங்கையின் கரையில் அமைந்த
கண்டம் என்னும் அற்புத நகரமே!

(5)
உழுவதோர் படையும் உலக்கையும் வில்லும் ஒண்சுட
ராழியும் சங்கும் மழுவொடு வாளும் படைக்கல
முடைய மால் புருடோத்தமன் வாழ்வு எழுமையும்
கூடி ஈண்டிய பாவம் இறைப் பொழு தளவினில்
எல்லாம் கழுவிடும் பெருமைக் கங்கையின்
கரைமேல் கண்டமென்னும் கடி நகரே.

பாசுர அனுபவம்

உழுவதற்கு ஏற்ற கலப்பை, உலக்கை, வில், ஒளி
பொருந்திய திருச்சக்கரம், சங்கு, கோடாரி, வாள் இவற்றை
ஆயுதமாக வைத்திருக்கும் புருஷோத்தம பெருமாள் சேவை
சாதிக்கும் இடம் எதுவெனில், ஏழு பிறவியில் சேமித்து
வைத்த பாவத்தையெல்லாம் ஒரு நொடியில் போக்கிவிடும்
பெருமையை உடைய கங்கையின் கரை மீதமைந்த
கண்டம் என்னும் உயர்ந்த நகரமே!

(6)
தலைப்பெய்து குமுறிச் சலம்பொதி மேகம் சலசல
பொழிந்திடக் கண்டு மலைப்பெருங் குடையால் மறைத்தவன்
மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு அலைப்புடைத் திரைவாய்
அருந்தவ முனிவர் அவபிரதம் குடைந் தாட கலப்பைகள்
கொழிக்கும் கங்கையின் கரைமேல் கண்டமென்னும் கடி நகரே

பாசுர அனுபவம்

ஜலம் நிரம்பிய மேகங்கள் இடிமுழங்கி பெரிய சப்தத்துடன்
சல சலவென்று கனத்த மழை பொழிய, அதை பொருக்காமல்
கோவர்தன மலையை ஒரு குடையாகத் தூக்கி திருவாய்ப்பாடி
ஜனங்களை காத்தருளினவனும், வடமதுரையின் தலைவனுமான
புருஷோத்தமன் அருள் பாலிக்குமிடம் எதுவெனில், சிறந்த
தவங்களைப் புரிந்த முனிவர்கள் அக்னி வேள்வியை முடித்து
ஸ்நானம் செய்த பின், கலப்பை முதலிய உப கரணங்கள் கரை
தள்ளியிருக்கும் அந்த அலைமோதும் கங்கைக் கரையில்
அமைந்த கண்டம் என்னும் அற்புத நகரமே!

(7)
விற்பிடித் திறுத்து வேழத்தை முருக்கி மேலிருந் தவன்
தலை சாடி மற்பொரு தெழப் பாய்ந்து அரையன யுதைத்த
மால் புருடோத்தமன் வாழ்வு அற்புத முடைய அயிராவத
மதமும் அவரிளம் படியரொண் சாந்தும் கற்பக மலரும்
கலந்திழி கங்கைக் கண்டமென்னும் கடி நகரே.

பாசுர அனுபவம்

வில்லை முறித்தும், யானையை அடக்கியும், அதன்
மேலிருந்தவனின் தலையை வீழ்த்தியும், மல் யுத்தர்களின்
மேல் போர் புரிந்தும், கட்டிலில் அமர்ந்திருந்த கம்ஸனின்
மேல் பாய்ந்து அவனைக் கீழே தள்ளி உதைத்தவனுமான
எம்பெருமான் புருஷோத்தமன் எழுந்தருளியிருக்கும்
இடம் எதுவெனில், அற்புதமுடைய ஐராவதம் என்ற
யானையின் மதநீரும், தேவர்களுக்கு ப்ரியமான
தேவமாதர்கள் பூசியிருந்த சந்தனமும், அப்பெண்கள்
தலையில் அணிந்திருந்த கற்பக மலர்களும் ஒன்றாக
கலந்து ஓடும் கங்கையின் கரையில் அமைந்த
கண்டம் என்னும் அற்புத நகரமே!

(8)
திரைபொருகடல்சூழ் திண்மதிள்துவரை வேந்துதன்
மைத்துனன்மார்க்காய் அரசினை யவிய அரசினை
யருளும் அரி புருடோத்தம னமர்வு நிரைநிரை யாக
நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்குவிட்டு இரண்டு
கரைபுரை வேள்விப் புகை கமழ் கங்கை
கண்டமென்னும் கடி நகரே.

பாசுர அனுபவம்

அலை புரளும் கடலால் சூழ்ந்த, உறுதியான
சுற்றுச் சுவர்களுடைய த்வாரகைக்கு அரசனும்,
பாண்டவர்களுக்குத் துணையாய் நின்று எதிரி அரசர்களைக்
கொன்று ராஜ்யத்தை தந்தருளினவனும், பாவங்களைப்
போக்குபவனுமான புருஷோத்தமனின் இருப்பிடம்
எதுவெனில், பசுக்களை கட்டுவதற்கு உதவும் நீளமான
கம்பங்கள் கட்டு கட்டாக அடித்துச் சென்றும், இரு
கரைகளில் ஒதுங்கியும், யாகத்தினால் உண்டாகும்
நல்ல வாசனையையுடைய புகை சூழ்ந்திருக்கும்
கங்கையின் கரையில் அமைந்திருக்கும்
கண்டம் என்னும் அற்புத நகரமே!

(9)
வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம்
துவரை அயோத்தி இடமுடை வதரி யிடவகை யுடைய
எம்புருடோத்தம னிருக்கை தடவரை யதிரத் தரணி
விண்டிடியத் தலைப்பற்றிக் கரைமரம் சாடி கடலினைக்
கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடி நகரே.

பாசுர அனுபவம்

வட திசையிலுள்ள மதுரை, சாளக்கிராமம், வைகுண்டம்,
த்வாரகை, அயோத்தி, பரந்த இடத்தில் இருக்கும்
பதரிகாச்ரம் இவற்றை இருப்பிடமாகக் கொண்ட
நம் புருஷோத்தமன் வாழுமிடம் எதுவெனில் மலைகளே
அதிர்ந்தும், பூமி பிளக்கும் படியாகவும், கரையிலுள்ள
மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டும், முறிவுற்றும், கடலே
கலங்கும்படியும் கடும் வேகத்துடன் பாய்ந்தோடும் கங்கையின்
கரையில் அமைந்த கண்டம் என்னும் அற்புத நகரமே!

(10)
மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி
மூன்றெழுத்தை ஏன்றுகொண் டிருப்பார்க்கு இரக்கம்நன்
குடைய எம்புருடோத்தமனிருக்கை மூன்றடி நிமிர்த்து
மூன்றினில் தோன்றி மூன்றினில் மூன்றுரு வானான்
கான்தடம் பொழில்சூழ் கங்கையின் கரைமேல்
கண்டமென்னும் கடி நகரே.

பாசுர அனுபவம்

ஒரே எழுத்தான ப்ரணவத்தை, அகார, உகார, மகார
என்ற மூன்று எழுத்துகளாகப் பிரித்து, அவற்றுள் 'அகாரம்'
பகவானுக்கு நாம் அடிமை என்பதைக் குறிப்பதாலும்,
'உகாரம்' நாராயணனுக்கே அடிமை செய்தல் என்பதையும்,
ஞானத்தைக் குறிக்கும் 'மகாரம்' இறைவன்
ஒருவனுக்கே உரிய ஆன்மா தேகத்தினின்றும் வேறுபட்டது
என்பதைப் புலப்படுத்துவதாக இருப்பதாலும்,
இம்மூன்றெழுத்துக்களே தமக்குத் தஞ்சம் என்று
கொண்டிருப்பவர்களின் பக்கம் தம் பேரருளைக் கிடைக்கச்
செய்பவனுமான நம் புருஷோத்தமன் எழுந்தருளியிருக்குமிடம்
எதுவெனில், நல்ல மணம் கமழும் பெரிய சோலைகளினால்
சூழப்பெற்ற கங்கையின் கரைமேல் உள்ள
கண்டம் என்னும் அற்புத நகரமே!

(11)
பொங்கொலி கங்கைக் கரைமலி கண்டத்து உறைபுரு
டோத்தமனடிமேல் வெங்கலி நலியா வில்லிபுத் தூர்க்கோன்
விட்டுசித் தன்விருப் புற்று தங்கிய அன்பால் செய்தமிழ்
மாலை தங்கிய நாவுடை யார்க்கு கங்கையில் திருமால்
கழலிணைக் கீழே குளித்திருந்த கணக்காமே.

பாசுர அனுபவம்

பொங்கி எழுந்தும், சீற்றத்துடனும் கூட ஓடும் கங்கையின்
நதிக்கரையில் உள்ள கண்டம் என்னும் உயர்ந்த மற்றும்
சிறப்புடைய நகரத்தை இருப்பிடமாகக் கொண்ட
புருஷோத்தமனுடைய திருவடிகளைப் போற்றி, ஆசையுடனும்,
அன்புடனும், நிலையான பக்தியுடனும் ஸ்ரீவில்லிபுத்தூரின்
தலைவரான பெரியாழ்வாரால் தமிழ் மாலையாக இயற்றப்பட்ட
இப்பாடல்களை ஒருமனதாக பாடும் நாக்கை உடையவர்கள்,
கங்கை நதியில் நீராடிய புண்ணியமும், எம்பெருமானின்
இரு திருவடிகளின் கீழ் அமர்ந்து எப்பொழுதும் கைங்கர்யம்
செய்யும் பாக்கியமும் கிடைக்கப் பெறுவர்கள்.

No comments:

Post a Comment

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.