நான்காம் பத்து ஆறாம் திருமொழி



சாராம்சம்

எம்பெருமானின் பெயர்களையே பிள்ளைகளுக்கு
வைத்து அழைக்க வேண்டும் என பெற்றோர்களுக்கு
அறிவுருத்துகிறார் பெரியாழ்வார். அப்படி அழைப்பதால்
மோக்ஷ லாபமே பெறலாமென்றும், அப்படியல்லாமல்
மானிடப் பெயர்களை இட்டு அழைப்பதால்
ஒரு பிரயோஜனமுமில்லை என்கிறார்.

(1)
காசும் கறை உடைக் கூறைக்கும்* அங்குஓர் கற்றைக்கும்-
ஆசையினால்* அங்கு அவத்தப் பேர்இடும்* ஆதர்காள்!*
கேசவன் பேர்இட்டு* நீங்கள் தேனித்து இருமினோ*
நாயகன் நாரணன்* தம் அன்னை நரகம் புகாள்

பாசுர அனுபவம்

மூடர்களே! பணத்திற்கும், உடைக்கும், தான்யத்திற்கும்
ஆசைப்பட்டு, உங்கள் குழந்தைகளுக்கு ஆபத்து
விளைவிக்கும் பெயர்களை இடாதீர்கள். கேசவனின்
திருநாமங்களயே பிள்ளைகளுக்கு பெயர்களாக இட்டு
இன்புற்றிருங்கள். நாராயணனின் பெயரைச் சொல்லி
தமது பிள்ளைகளை அழைக்கும்
பெற்றோர்கள் நரகம் புகுவதில்லை.

(2)
அங்கு ஒரு கூறை* அரைக்கு உடுப்பதன் ஆசையால்*
மங்கிய மானிட சாதியின்* பேர்இடும் ஆதர்காள்!*
செங்கண் நெடுமால்!* சிரீதரா! என்று அழைத்தக்கால்*
நங்கைகாள்! நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.

பாசுர அனுபவம்

அங்கே ஒரு புடவையைப் பெற்று இடுப்பில் கட்ட
வேண்டும் என்னும் ஆசையால், அழிந்து கிடக்கும்
மனித ஜாதியின் பெயரை தமது மக்களுக்கு இடும்
குருடர்களே! பெண்களே! சிவந்த கண்களையுடைய
திருமால்! சிரீதரா! என்ற பெருமானின் பெயர்களை
பிள்ளைகளுக்கு வைத்து அழையுங்கள். நாராயணனின்
பெயரைச் சொல்லி தமது பிள்ளைகளை அழைக்கும்
பெற்றோர்கள் நரகம் புகுவதில்லை.

(3)
உச்சியில் எண்ணெயும்* சுட்டியும் வளையும் உகந்து*
எச்சம் பொலிந்தீர்காள்!* என் செய்வான் பிறர்பேர்இட்டீர்?*
பிச்சைபுக்குஆகிலும்* எம்பிரான் திருநாமமே-
நச்சுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.

பாசுர அனுபவம்

குழந்தையைப் பெற்ற பெண்களே! உங்கள் பிள்ளைகளுக்கு
அணிவிப்பதற்காக சுட்டி, வளை, தலைக்குத் தேய்க்க
எண்ணை போன்றவற்றை பிறரிடம் கேட்டு, அவர்களின்
பெயரையே குழந்தைகளுக்கு இடுகிறீர்களே! என்ன
அவலம் இது. பிச்சை எடுக்க நேரிடினும், நாராயணனின்
திருநாமங்களையே விரும்பி பிள்ளைகளுக்கு பெயராக
வைத்து அழைக்கும் பெற்றோர்கள் நரகம் புகுவதில்லை.

(4)
மானிட சாதியில் தோன்றிற்று* ஓர் மானிடசாதியை*
மானிட சாதியின் பேர்இட்டால்* மறுமைக்குஇல்லை*
வானுடை மாதவா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நானுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.

பாசுர அனுபவம்

மனித இனத்தில் பிறந்ததற்கு, மனித இனத்தின்
பெயரை வைத்து அழைப்பதால் மோக்ஷம் கிட்டுவதில்லை.
பரமபதத்தை இருப்பிடமாகக் கொண்ட என்னுடைய
நாராயணனின் திருநாமங்களான மாதவா, கோவிந்தா
என்ற பெயர்களை பிள்ளைகளுக்கு இட்டு அழைத்தால்,
அப்பெற்றோர்கள் நரகம் புகுவதில்லை.

(5)
மலமுடை ஊத்தையில் தோன்றிற்று* ஓர் மல ஊத்தையை*
மலமுடை ஊத்தையின் பேர்இட்டால்* மறுமைக்குஇல்லை*
குலமுடைக் கோவிந்தா!* கோவிந்தா! என்று அழைத்தக்கால்*
நலமுடை நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.

பாசுர அனுபவம்

மல, மூத்திர, அழுக்குடைய தேகத்திலிருந்து தோன்றிய
அதே போன்ற இன்னொரு தேகத்திற்கு, ஒரு அழுக்குடம்பின்
பெயரை வைத்தால் பின்பு ஒரு பிரயோஜனமும் இல்லை.
ஆனால் இடைக் குலத்தில் தோன்றிய நன்மை செய்யும்
நாராயணனின் திருநாமமான கோவிந்தா! கோவிந்தா!
என்ற பெயரை பிள்ளைகளுக்கு இட்டு அழைத்தால்,
அப்பெற்றோர்கள் நரகம் புகுவதில்லை.

(6)
நாடும் நகரும் அறிய* மானிடப் பேர்இட்டு*
கூடிஅழுங்கிக்* குழியில் வீழ்ந்து வழுக்காதே*
சாடிறப் பாய்ந்த தலைவா!* தாமோதரா! என்று-
நாடுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.

பாசுர அனுபவம்

ஊர் ஜனங்கள் எல்லோரும் அறியும் படி, அவர்களோடு
சேர்ந்து, ஒரு மனித வர்கத்தின் பெயரை பிள்ளைகளுக்கு
வைத்து புத்தி மழுங்கி நரகமென்ற குழியில் அவர்களைப்
போல் வீழ்ந்து அழியாதே!சகடாசுரனை உதைத்தவனே!
தலைவனே! தாமோதரனே! என்ற நாராயணனின்
திருநாமங்களையே விரும்பி பிள்ளைகளுக்கு பெயராக
வைத்து அழைக்கும் பெற்றோர்கள் நரகம் புகுவதில்லை

(7)
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடப் பேர்இட்டு அங்கு-
எண்ணம்ஒன்று எண்ணியிருக்கும்* ஏழை மனிசர்காள்!*
கண்ணுக்குஇனிய* கருமுகில் வண்ணன் நாமமே-
நண்ணுமின்* நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்

பாசுர அனுபவம்

பஞ்ச பூதங்களில் ஒன்றான மண்ணினால், மண்ணில்
தோன்றிய இந்த உடல் கடைசியில் மண்ணோடு மண்ணாகக்
கலந்து விடுகிறது. இந்த சூட்சுமத்தை புரிந்து கொள்ளாத
அறிவற்ற மனிதர்கள், பிள்ளைகளுக்கு மனுஷ்யப் பெயர்களை
இட்டு அழைக்கிறார்கள். கண்ணுக்கு தெவிட்டாத இன்பத்தை
அளிக்கும் அந்தக் கரு மேகம் போன்ற நிறமுடையவனின்
திருப்பெயர்களை பிள்ளைகளுக்கு வைத்தும், அழைத்தும்,
அவர்களோடு சேர்ந்து எம்பெருமானை வழிபடும்
பெற்றோர்கள் நரகம் புகுவதில்லை.

(8)
நம்பி பிம்பிஎன்று* நாட்டு மானிடப் பேர்இட்டால்*
நம்பும் பிம்பும்எல்லாம்* நாலுநாளில் அழுங்கிப்போம்*
செம்பெருந்தாமரைக்கண்ணன்*பேர்இட்டுஅழைத்தக்கால்*
நம்பிகாள் நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.

பாசுர அனுபவம்

நம்பி (பூரணன்), பிம்பி (பொருளில்லை) போன்ற இந்த
லோகத்து மானிடப் பெயர்களை பிள்ளைகளுக்கு இட்டு
அழைத்தால் அவை நான்கு நாட்களில் அர்த்தமற்றுப்
போய்விடும். பாகவதர்களே, பெரிய சிவப்புத் தாமரைக்
கண்களையுடைய கண்ணனின் பெயரை பிள்ளைகளுக்கு
வைத்து அழைக்கும் பெற்றோர்கள் நரகம் புகுவதில்லை.

(9)
ஊத்தைக்குழியில்* அமுதம் பாய்வதுபோல்* உங்கள்-
மூத்திரப்பிள்ளையை* என் முகில்வண்ணன் பேர் இட்டு*
கோத்துக் குழைத்துக்* குணாலம்ஆடித் திரிமினோ*
நாத்தகு நாரணன்* தம் அன்னை நரகம்புகாள்.

பாசுர அனுபவம்

அசுத்தமான வாய்க் குழியில் அம்ருதத்தை ஊற்றுவதைப்
போல், உங்களுடைய அழுக்குடைய பிள்ளைக்கு,
என்னுடைய மேக நிறம் கொண்டவனின் பெயரை வைத்து,
அவனுடன் கூடிக் கலந்து தலைகீழாக கூத்தாடி களித்து
திரியுங்கள். எம்பெருமானின் பெயரை பிள்ளைகளுக்கு
வைத்து அழைக்கும் பெற்றோர்கள் நரகம் புகுவதில்லை.

(10)
சீர்அணி மால்* திருநாமமே இடத்தேற்றிய*
வீர்அணி தொல்புகழ்* விட்டுசித்தன் விரித்த*
ஓரணியொண்தமிழ்* ஒன்பதோடுஒன்றும் வல்லவர்*
பேர்அணி வைகுந்தத்து* என்றும் பேணியிருப்பரே.

பாசுர அனுபவம்

கல்யாணகுணமுடைய திருமாலின் திருப் பெயர்களையே
தம்முடைய பிள்ளைகளுக்கும் வைத்து அழைக்கும்படி
சொல்லும், வீரமும் புகழுமுடைய பெரியாழ்வாரால்
தமிழ் மாலையாக இயற்றப்பட்ட, இப்பத்து பாசுரங்களை
ஓதவல்லவர்கள் நித்தியசூரிகளுடன் கூடிய வைகுந்தத்தை
அடைந்து என்றும் இன்புற்றிருப்பர்கள்.

No comments:

Post a Comment

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.