சாராம்சம்
யசோதை தன் மகன் கண்ணனிடம் வைத்திருக்கும்அளவு கடந்த அன்பு, பாசம்,பக்திக்கு இப்பாசுரங்கள்
ஒரு எடுத்துக்காட்டு. அவன் ஆயர்பாடியில் செய்யும்
தீமைச் செயல்களை தடுக்கவோ என்னவோ,
யசோதை கண்ணனை காட்டிற்குள் கன்றுகளை
மேய்த்துவர அனுப்புகிறாள். ஆனால் அப்படி
அவனை அனுப்பி விட்ட பிறகு, அவள் மனம்
படாத பாடு படுகிறது. கண்ணனை அவன்
போக்கில் விடாமல், அவன் திருப்பாதங்கள்
நோக, கொடிய காட்டில் அவனை கன்றின் பின்
போகவிட்டேனே, என்ன பாவம் செய்தேன், என
மிகவும் மனம் நொந்து போகிறாள் யசோதை.
அந்த சோகத்தை நாமும் பகிர்ந்து கொள்வோம்.
(1)
அஞ்சன வண்ணனை ஆயர்கோலக் கொழுந்தினை
மஞ்சன மாட்டி மனைகடோறுந்திரியாமே
கஞ்சனைக் காய்ந்த கழலடி நோவக்கன்றின்பின்
என்செய்யப் பிள்ளையைப் போக்கினேன் எல்லேபாவமே.
பாசுர அனுபவம்
என் பிள்ளை கண்ணன் மை நிறம் கொண்டவன்,இடையர்களின் தலைவன். கம்சனை தன் பிஞ்சு
கால்களால் எட்டி உடைத்தவன். அவனைக்
குளிப்பாட்டி சுதந்திரமாக வீடு வீடாகத் திரிய
விடாமல், சிலம்பு அணிந்த அவன் திருப்பாதங்கள்
வலிக்கும்படியாக நான் ஏன் அவனை
கன்றுகளின் பின் போகவிட்டேன்.
அய்யோ! என்ன பாவம் செய்துவிட்டேன்!
(2)
பற்று மஞ்சள் பூசிப் பாவைமாரொடு பாடியில்
சிற்றில் சிதைத்தெங்கும் தீமை செய்து திரியாமே
கற்றுத் தூளியுடை வேடர் கானிடைக் கன்றின்பின்
எற்றுக்கென் பிள்ளையைப் போக்கினேன் எல்லேபாவமே
பாசுர அனுபவம்
தாங்கள் அரைத்த மஞ்சள் சரியாகப் பற்றுகிறதாஎன திருவாய்பாடியிலுள்ள பெண்கள் கண்ணனின்
கரு நிற திருமேனியில் பூசிப்பார்க்கச் செய்வது,
அவர்கள் விளையாட்டாக செய்து வைத்திருக்கும்
மணல் வீடுகளை தன் திருக்கால்களால் உதைத்து
தகர்த்துவது, இவ்வாறு பல குறும்புகளை எங்கும்
செய்துகொண்டு அவ்விடைப்பெண்களோடு
கண்ணனை திரியவிடாமல், வேடர்கள்
வேட்டையாடும் காடுகளிலும், புழுதியைக்
கிளப்பும் கன்றுகளின் பின்னேயும் அவனை
நான் ஏன் போகவிட்டேன். அய்யோ!
என்ன பாவம் செய்துவிட்டேன்!
(3)
நன்மணி மேகலை நங்கைமாரொடு நாடொறும்
பொன்மணிமேனி புழுதியாடித் திரியாமே
கன்மணி நின்றதிர் கானதரிடைக் கன்றின்பின்
என்மணி வண்ணனைப் போக்கினேன் எல்லேபாவமே
பாசுர அனுபவம்
நல்ல நவ மணிகள் பொருந்திய ஆடைஆபரணங்களை தங்கள் இடைகளில் அணிந்துள்ள
இடைப்பெண்களோடு கூட, நீல மணி போன்ற
அழகிய திருமேனியில் புழுதி படிய கண்ணனைத்
தினந்தோறும் திரிய விடாமல், பயங்கரமான
ஒலியை பிரதிபலிக்கும் மலைகளால் சூழ்ந்த
கடும் காட்டுப் பாதையில் நான் ஏன் அவனை
கன்றுகளின் பின் போகவிட்டேன்.
அய்யோ! என்ன பாவம் செய்துவிட்டேன்!
(4)
வண்ணக் கருங்குழல் மாதர் வந்தலர் தூற்றிட
பண்ணிப் பல செய்து இப்பாடியெங்குந் திரியாமே
கண்ணுக்கினியானைக் கானதரிடைக் கன்றின்பின்
எண்ணற்கரியானைப் போக்கினேன் எல்லேபாவமே
பாசுர அனுபவம்
திருவாய்ப்பாடி முழுதும் தீமைச் செயல்களைசெய்துகொண்டு திரியும், கண்ணுக்கு விருந்தளிக்கும்
அழகிய திருமேனியைக் கொண்ட, கண்ணனைப்
பற்றி, கருங் கூந்தலழகுடைய இடைப்பெண்கள்
என்னிடம் வந்து குறை கூறும் பேறு பெறாமல்,
எண்ணத்தினால் புரிந்துகொள்ள முடியாதவனை
நான் ஏன் கடும் காட்டுப் பாதைகளிலும்,
கன்றுகளின் பின்னும் போகவிட்டேன்.
அய்யோ! என்ன பாவம் செய்துவிட்டேன்!
(5)
அவ்வவ்விடம்புக்கு அவ்வாயர் பெண்டிர்க் கணுக்கனாய்
கொவ்வைக் கனிவாய் கொடுத்துக் கூழமை செய்யாமே
எவ்வுஞ் சிலையுடை வேடர்கானிடைக் கன்றின்பின்
தெய்வத் தலைவனைப் போக்கினேன் எல்லேபாவமே
பாசுர அனுபவம்
இடைப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு அந்தரங்கமாய்சென்று தன்னுடைய கோவைப் பழம் போன்ற வாயை
அவர்களிடம் அனுபவிக்கத் தந்தும், அவர்களிடம்
இனிமையாகப் பேசிப் பழகியும், இப்படியாக இருக்க
வொட்டாமல், கண்ணனை, தேவர்களின் தலைவனை,
வில்லைக் கையில் ஏந்தி துன்பம் விளைவிக்கும்
வேடர்கள் உலாவும் காட்டிலே, கன்றுகளின்
பின்னே ஏன் போக விட்டேன்.
அய்யோ ! என்ன பாவம் செய்து விட்டேன்!
(6)
மிடறுமெழுமெழுத்தோட வெண்ணை விழுங்கிப்போய்
படிறு பலசெய்து இப்பாடியெங்குந்திரியாமே
கடிறு பலதிரி கான தரிடைக் கன்றின்பின்
இடற வென்பிள்ளையைப் போக்கினேன் எல்லேபாவமே
பாசுர அனுபவம்
வெண்ணையை தொண்டையில் வழுக்கி ஓடும்படிவிழுங்கி விட்டு, பிற வீடுகளுக்கு சென்று பல
திருட்டு வேலைகள் புரிந்து, இவ்விடைச்சேரி
எங்கும் கண்ணனைத் திரிய விடாமல்,
யானைகள் திரியும் காட்டுப் பாதையில் தடுமாறி
நடக்கும்படி என் மகனை கன்றுகளின்
பின்னே ஏன் போகவிட்டேன். அய்யோ !
என்ன பாவம் செய்துவிட்டேன்!
(7)
வள்ளி நுடங்கிடை மாதர் வந்தலர் தூற்றிட
துள்ளி விளையாடித் தோழரோடு திரியாமே
கள்ளியுணங்கு வெங் கான தரிடைக் கன்றிப்பின்
புள்ளின் தலைவனைப் போக்கினேன் எல்லேபாவமே
பாசுர அனுபவம்
கொடி போன்ற துவளா இடை கொண்டஇடைப்பெண்கள் கண்ணனைப் பற்றி என்னிடம்
பழி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே, அவன்
அதைப் பொருட்படுத்தாமல் தோழர்களோடு
துள்ளி விளையாடிக்கொண்டிருக்க, அவனை,
கருட பட்சியின் தலைவனை, இவ்வாறு இருக்க
வொட்டாமல், கள்ளிச்செடியும் வெப்பம் தாங்காமல்
பால் வற்றி உலர்ந்து போகும் காட்டுப்பாதையில்,
கன்றுகளின் பின்னே நான் ஏன் போகவிட்டேன்.
அய்யோ ! என்ன பாவம் செய்துவிட்டேன்!
(8)
பன்னிருதிங்கள் வயிற்றிற் கொண்டவப் பாங்கினால்
என்னிளங் கொங்கை அமுதமூட்டியெடுத்தியான்
பொன்னடிநோவப் புலரியேகானிற் கன்றின்பின்
என்னிளங் சிங்கத்தைப் போக்கினேன் எல்லேபாவமே
பாசுர அனுபவம்
பன்னிரண்டு மாதங்கள் என் வயிற்றில் அன்பாகச்சுமந்து, என் முலைப் பாலை உணவாக ஊட்டி
பாசத்தால் வளர்த்த பிள்ளையை, என் சிங்கக்
குட்டி கண்ணனை, இன்று அதிகாலையே எழுப்பி
காட்டில் கன்றின் பின் அவன் பொற்பாதங்கள்
வலிக்கும்படி போகவிட்டேன். அய்யோ !
என்ன பாவம் செய்துவிட்டேன் !
(9)
கொடையுஞ் செருப்புங் கொடாதே தாமோதரனை நான்
உடையுங் கடியன ஊன்று வெம்பரற்களுடை
கடியவெங்கானிடைக் காலடி நோவக் கன்றின்பின்
கொடியேனென் பிள்ளையைப் போக்கினேன் எல்லேபாவமே
பாசுர அனுபவம்
கொடியவளான நான், எம்பிரானான என்பிள்ளைக்குகொடையையும், செருப்பையும் கூடத்தராமல்,
கூரான உடைந்த பாறாங்கற்கள் காலில் குத்தும்படியும்,
அவன் திருப்பாதங்கள் நோகும்படியும், வெப்பம் மிகுந்த
காட்டில் கன்றின் பின் போகவிட்டேன்.
அய்யோ! என்ன பாவம் செய்துவிட்டேன்!
(10)
என்றுமெனக்கினியானை என்மணிவண்ணனை
கன்றின்பின் போக்கினேனென்று அசோதை கழறிய
பொன்திகழ்மாடப் புதுவையர் கோன் பட்டன்சொல்
இன்தமிழ் மாலைகள் வல்லவர்க்கு இடரில்லையே
பாசுர அனுபவம்
எப்போதும் எனக்கு இன்பமளிப்பவனாய்,என் நீல மணி போன்ற தோற்றமுடைய
கண்ணனை கன்றுகளின் பின்னே காட்டில்
போக விட்டேனே என மனம் உடைந்து
யசோதை பிராட்டி கூறிய சொற்களை,
பொன் மாடங்கள் சூழ் ஸ்ரீவில்லிபுத்தூர்
தலைவன் பெரியாழ்வார் இனிய தமிழ்
மாலைகளாக அருளிச் செய்த இப்பாசுரங்களை
படிப்பவர்களுக்கு துன்பமில்லையாம்.
No comments:
Post a Comment
Please feel free to leave your comments. I would love to see them. Thanks.