சாராம்சம்
கண்ணனின் சுருண்ட குழல்களை சீப்பால்வாரி அழகு படுத்தும் நோக்கத்துடன் யசோதை
அங்கிருக்கும் காக்கையை அழைக்கிறாள்.
காக்கையை அவன் கூந்தலை வாரிவிடுமாறு
விளையாட்டாக கூற, கண்ணனும்
அவ்விளையாட்டில் தன்னை மறந்தவனாய்
தன் கூந்தலை வாரி முடிய இசைவதுபோல்
அமைந்துள்ளது இப்பாசுரங்கள்
(1)
பின்னை மணாளனைப் பேரிற் கிடந்தானை
முன்னையமரர் முதல் தனிவித்தினை
என்னையும் எங்கள் குடிமுழுதாட்கொண்ட
மன்னனை வந்து குழல்வாராயக்காக்காய் !
மாதவன்தன் குழல்வாராயக்காக்காய்
பாசுர அனுபவம்
நப்பின்னை பிராட்டியின் நாயகன், திருப்பேர்என்ற திவ்ய தேசத்தில் சயனித்திருப்பவன்,
பகவதநுபவத்தில் முதன்மையாய் விளங்கும்
நித்யஸூரிகளின் தலைவன், தனிநிகரற்றவன்,
எல்லாவற்றிற்கும் காரணமானவன், எங்கள்
குடும்பங்களிலுள்ள அனைவரையும் அன்பினால்
கவர்ந்த தலைவனுமான கண்ணனின் கூந்தலை
வார வா, காகமே! மாதவனின்
கூந்தலை வார வா காகமே!
(2)
பேயின்முலையுண்ட பிள்ளையிவன் முன்னம்
மாயச்சகடும் மருதுமிறுத்தவன்
காயாமலர் வண்ணன் கண்ணன் கருங்குழல்
தூய்தாகவந்து குழல் வாராயக்காக்காய்!
தூமணிவண்ணன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
பூதனையிடம் பால் அருந்துவதுபோல் அவள்உயிரை குடித்தவனும், வஞ்சனையுடன் வந்த
சகடாசுரனை மாய்த்தவனும், யமளார்ஜுன
மரங்களை சாய்த்தவனும், காயாம்பூ மலர்
போன்ற திருமேனியை உடையவனுமான
கண்ணனின் கருநிற கூந்தலை நன்றாக
வாருவாயாக! காகமே! தூய நீல மணி போன்ற
நிறமுடைய இவனுடைய கூந்தலை சிக்கு
போக வார வா காகமே!
(3)
திண்ணக்கலத்தில் திரையுறி மேல்வைத்த
வெண்ணெய் விழுங்கி விரைய உறங்கிடும்
அண்ணல் அமரர் பெருமானை ஆயர்தம்
கண்ணனை வந்து குழல்வாராயக்காக்காய் !
கார்முகில் வண்ணன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
உயர்வான இடத்தில் பாதுகாப்பான பாத்திரத்தில்வைக்கப்பட்டிருந்த வெண்ணையை விழுங்கிவிட்டு,
விரைந்து வந்து ஒன்றும் அறியாத பிள்ளையைப்
போல் உறங்கும் இப்பெருமான் இமையோர்களின்
தலைவன், இடையர்களின் மெய்யன்பன்.
கண்ணனின் கூந்தலை வார வா காகமே!
இருண்ட மேகம் போல் திருமேனி கொண்டவனின்
கூந்தலை வார வா காகமே!
(4)
பள்ளத்தில் மேயும் பறவையுருக்கொண்டு
கள்ளவசுரன் வருவானைத் தான்கண்டு
புள்ளிதுவென்று பொதுக் கோவாய்கீண்டிட்ட
பிள்ளையைவந்து குழல்வாராயக்காக்காய்!
பேய்முலையுண்டான் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
நீர்த்தேக்கங்களில் இறையை தேடி வரும்கொக்குப்பறவையின் உருவம் எடுத்து வந்த
வஞ்சகனான பகாசுரனை வெறும் ஒரு சாதாரண
பறவையென எண்ணி அதன் வாயை தன்
இரு திருக்கரங்களினால் உடனே கிழித்துப்
போட்டவனும், ஒருசமயம் பூதனை என்ற
ராட்சசியின் விஷப்பாலை உண்டவனுமான
இக்கண்ணனின் கூந்தலை வார வா காகமே!
(5)
கற்றினம்மேய்த்துக் கனிக்கொருகன்றினை
பற்றியெறிந்த பரமன் திருமுடி
உற்றனபேசி நீஓடித்திரியாதே
அற்றைக்கும்வந்து குழல்வாராயக்காக்காய்!
ஆழியான் தன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
காகமே ! அங்குமிங்குமாய் பறந்தும் கத்தியும்திரியாமல் , அன்றொருநாள் கன்றுகளை
மேய்க்கையில் ஒரு அசுரக் கன்றைப் பிடித்து
அதனைக்கொண்டே விளாம்பழ உருவிலிருந்த
மற்றொரு அசுரனை நோக்கி வீசி எறிந்து இரு
அரக்கர்களையும் ஒரே சமையம் கொன்ற
சக்ராயுதம் ஏந்திய பரம புருஷனான கண்ணனின்
அழகிய கூந்தலை வார வா காகமே!
(6)
கிழக்கிற் குடிமன்னர் கேடிலாதாரை
அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்
விழிக்குமளவிலே வேரறுத்தானை
குழற்கணியாகக் குழல்வாராயக்காக்காய்!
கோவிந்தன் தன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
கிழக்கில் குடியிருந்த சில அசுரகுணம் படைத்தமன்னர்கள், விஷ்ணு பக்தர்களான பாவமறியா,
இந்திராதி தேவர்களை அழிக்க எண்ணிய பொழுது,
தன்னுடைய சக்ராயுதத்தால் கண் சிமிட்டும்
நேரத்தில் அவ்வரக்க மன்னர்களை வதம் செய்த
அந்த கோவிந்தனின் அழகிய கேசத்தை
வாரி மேலும் அழகு படுத்த வா காகமே!
(7)
பிண்டத்திரனையும் பேய்க்கிட்ட நீர்ச்சோறும்
உண்டற்கு வேண்டி நீ ஒடித்திரியாதே
அண்டத்தமரர் பெருமான் அழகமர்
வண்டொத்திருண்ட குழல்வாராயக்காக்காய்!
மாயவன்தன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
ஏ காகமே! பிண்டமாக வைத்த சோற்றையோ,பிசாசங்களுக்கு இடப்பட்ட நீர் கலந்த சோற்றையோ
விரும்பி பறந்தோடித் திரியாதே!
மேலுலங்களிலுள்ள தேவர்களின் தலைவனும்,
ஆச்சர்யமான செயல்களை கொண்டவனுமான
கண்ணபிரானுடைய, கரு வண்டின் நிறம் போன்ற,
அழகிய கேசத்தை வார வா!
(8)
உந்தியெழுந்த உருவமலர் தன்னில்
சந்தச் சதுமுகன் தன்னைப் படைத்தவன்
கொந்தக் குழலைக் குறந்து புளியட்டி
தந்தத்தின் சீப்பால் குழல்வாராயக்காக்காய்!
தாமோதரன் தன் குழல்வாராயக்காக்காய்.
பாசுர அனுபவம்
தனது நாபியிலிருந்து, தாமரைப்பூவில்உறையும்படி, நான்முக ப்ரஹ்மாவை சிருஷ்டித்த
தாமோதரனின் குழல்கள், புளிப்பழம் கொண்டு
எண்ணெய் தேய்த்துக் குளித்ததால், சிக்கு
பிடித்துள்ளது! காகமே! தந்தச்சீப்பை கொண்டு
குழலை நன்றாக வாரி சிக்கை நீக்குவாயாக!
(9)
மன்னன் தன் தேவிமார் கண்டு மகிழ்வெய்த
முன்னிவ்வுலகினை முற்றுமளந்தவன்
பொன்னின் முடியினைப் பூவணைமேல் வைத்து
பின்னேயிருந்து குழல்வாராயக்காக்காய்!
பேராயிரத்தான் குழல்வாராயக்காக்காய்,
பாசுர அனுபவம்
முன்பு வாமனாவதாரத்தில், அசுர குல ராஜாமஹாபலியிடத்தில் மூவடி மண் கேட்டு, பின்பு
மூவுலகத்தையும், த்ரிவிக்ரமனாய் அவதரித்து,
முழுவதுமாய் அளந்தபோது, மஹாபலியினுடைய
மனைவியர்கள் கண்ணனின் வடிவைக் கண்டு
மகிழ்ச்சியுற்றார்கள்! ஆயிரம் நாமம்
கொண்டவனின் அழகிய தலையை
புஷ்பப் படுக்கையிலிட்டு, பின்புறமாக இருந்து
கூந்தலை வார வா காகமே!
(10)
கண்டார்பழியாமே யக்காக்காய்! கார்வண்ணன்
வண்டார்குழல்வார வாவென்ற ஆய்ச்சிசொல்
விண்டோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்
கொண்டாடிப்பாடக் குருகாவினை தானே.
பாசுர அனுபவம்
காள மேகம் போன்ற கூந்தலுடைய கண்ணனைபிறர் பழிக்காமலிருக்க, அவன் கூந்தலை நன்றாக
வாரி விடுமாறு ஒரு காக்கையை யசோதை
அழைக்கும்படி அமைந்துள்ள, வானளாவிய
மதிள்களுடைய ஸ்ரீவில்லிபுத்தூர் நகர
நிர்வாஹகரான பெரியாழவார் இயற்றிய,
இப்பாடல்களை கொண்டாடிப் பாடுபவர்களின்
பாபங்கள் தொலையும்.
Hey Nice article
ReplyDeleteBook publishing in India
Hey Nice article
Book Publisher in india Hey Nice article
self publishing in India
Hey Nice article
self publishing in Bangalore
Hey Nice article
How tough is it to get a book published?