இரண்டாம் பத்து மூன்றாம் திருமொழி



சாராம்சம்

மகர குண்டலங்களை* சிறுவன் கண்ணனின்
காதுகளில் பொறுத்த விரும்பி, அவன்
காதுகளைக் குத்தி, திரியிட்டு, நீளச்
செய்வதற்காக புகழ்ச் சொற்களால்**
யசோதை கண்ணனை அழைக்கிறாள்.
கண்ணனோ, அப்படிச் செய்வதால் அவனுக்கு
வலிக்கும் என்று கூறி தப்பிக்கப் பார்க்கிறான்.
இருவரின் சுவையான உரையாடலை, நாமும்
சுவைப்பதற்காக, பெரியாழ்வார் நமக்கு
இப்பாசுரங்களை அருளிச் செய்கிறார்!

குறிப்பு: *மீன் வடிவிலுள்ள காதணிகள்
**கண்ணனின் பன்னிரண்டு திருநாமங்கள்
( கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா,
விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா,
சிரீதரா, ஹ்ருஷீகேசா, பத்மநாபா, தாமோதரா)
பாசுரங்களில் வரிசையாக வருவதை கவனிக்கவும்.
(1)
போய்ப்பாடுடையநின் தந்தையும் தாழ்த்தான்
பொருதிறற் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல் வண்ணா! உன்னைத்
தனியே போயெங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே!
கேசவநம்பீ! உன்னைக் காதுகுத்த
ஆய்ப்பாலர் பெண்டுகளெல்லாரும் வந்தார்
அடைக்காய் திருத்தி நான்வைத்தேன்.

பாசுர அனுபவம்

புகழ் வாய்ந்த உன் தந்தையோ வெளியில்
போய் வர தாமதமாகிறது. போர் செய்யும்
திறனுடைய கம்சனும் உன் மேல் கோபமாய்
இருக்கிறான். கடல் நிறக் கண்ணா!
உன்னைப் பாதுகாக்க இங்கு யாருமில்லை.
ஆதலால் நீ தனியாக எங்கும் போய் திரியாதே.
பூதனையின் முலைப்பாலுண்ட மதி மயக்க
முள்ளவனே. கேசவனே, பரிபூரணனே!
உன் காதுகளைக் குத்த இடைச்சி குலப்
பெண்களெல்லாம் வந்து நிற்கிறார்கள்.
நானும் அவர்களுக்கு கொடுக்க
வெற்றிலை பாக்கு வைத்திருக்கிறேன்.

(2)
வண்ணப் பவளமருங்கினிற் சாத்தி
மலர்ப்பாதக் கிண்கிணியார்ப்ப
நண்ணித் தொழுமவர் சிந்தை பிரியாத
நாராயணா! இங்கேவாராய்
எண்ணற் கரிய பிரானே! திரியை
யெரியா மேகாதுக் கிடுவன்
கண்ணுக்குநன்று மழகுமுடைய
கனகக் கடிப்புமிவையா!

பாசுர அனுபவம்

வணங்குவோர் மனதை விட்டு அகலாமல்
அருள் புரியும் நாராயணனே! நீ பவழ வடத்தை
இடுப்பில் அணிந்தவாரும், தாமரையையொத்த
அழகிய திருப்பாதங்களில் கட்டியுள்ள
சதங்கைகள் எழுப்பும் இனிய நாதத்துடனும்
இங்கே வரவேண்டும். நினைப்பதற்கு மிக
அருமையான எம்பிரானே! உன் காதுகளுக்கு
எரிச்சலுண்டாகதபடி திரியை நுழைப்பேன்.
கண்களுக்கு மிகவும் அழகான
பொற் காதணிகளாம் இவை!

(3)
வைய்யமெல்லாம் பெறும்வார் கடல்வாழும்
மகரக் குழை கொண்டு வைத்தேன்
வெய்யவேகாதில் திரியையிடுவன்
நீவேண்டியதெல்லாம் தருவன்
உய்யவிவ்வாயர் குலத்தினில் தோன்றிய
ஒண்சுடராயர் கொழுந்தே!
மையன்மை செய்திள வாய்ச்சி யருள்ளத்து
மாதவனே! இங்கே வாராய்.

பாசுர அனுபவம்

எல்லோரும் உஜ்ஜீவிக்க இடையர் குலத்தில்
திருவவதரித்த மிக்க ஒளி பொருந்திய
இடையர்களின் கொழுந்து போன்றவனே!
உலகத்தையெல்லாம் தனக்கு விலையாகக்
கொள்ளக்கூடிய பெரிய கடல் வாழ் சுறா
மீனின் வடிவில் அமைத்த அழகான காதணிகளை
கொண்டு வந்துள்ளேன். உன் காதின் துளைகள்
அடைத்துக்கொள்ளாத வண்ணம் வெப்பமாகவே
உன் காதில் திரியை இடுவேன். நீ விரும்பிய
பொருள்களைக் கொடுப்பேன். மாதவனே
(ச்ரியபதியே)! இளமைப் பருவமுடைய
இடைப் பெண்களை மோஹமடையச்செய்து
கொண்டு கண்ணா, இங்கே வா!

(4)
வணநன்றுடையவயிரக் கடிப்பிட்டு
வார்காது தாழப் பெருக்கி
குண நன்றுடையரிக் கோபால பிள்ளைகள்
கோவிந்தா! நீ சொல்லுக் கொள்ளாய்
இணை நன்றழகிய விக்கடிப்பிட்டால்
இனிய பலாப்பழம் தந்து
சுண நண்றணி முலையுண்ணத் தருவன் நான்
சோத்தம்பிரான்! இங்கே வாராய்.

பாசுர அனுபவம்

வண்ணமுடைய வயிரக் கற்களைக் கொண்டு
செய்த நல்ல காதணிகளை அணிந்த இந்த
நல்ல குணமுடைய இடைபிள்ளைகள், தாய்
சொல்படி, தங்கள் காதுகளை தோள்வரை
தொங்குமாறு செய்துகொண்டு அழகாக
இருக்கிறார்கள். கோவிந்தனே! நீயோ என்
சொல் கேட்பதில்லை. இப்படியில்லாமல், மிக
அழகான இக்காதணிகளை அணிந்துகொண்டால்,
தித்திப்பான பலாப்பழமும் என்னுடைய பால்
நிரம்பிய முலையையும் உனக்குத் உண்ணத்
தருவேன், என்னுடைய ஸ்வாமியே, உன்னை
ஸ்தோத்திரம் செய்கிறேன்! இங்கே வா!

(5)
சோத்தம்பிரானென்றிரந்தாலும் கொள்ளாய்
கரிகுழலாரொடு நீ போய்
கோத்துக் குரவை பிணைந்திங்கு வந்தால்
குணங் கொண்டிடுவனோநம்பி!
பேர்த்தும் பெரியனவப்பம்தருவன்
பிரானே! திரியிட வொட்டில்
வேய்த்தடந்தோளார் விரும்புகருங்குழல்
விட்டுவே! நீயிங்கே வாராய்.

பாசுர அனுபவம்

என் தலைவனே! உன்னை கெஞ்சி அழைத்தாலும்
வருவதில்லை. பூரணனே! நீ சுருண்ட
கூந்தலுடைய பெண்களோடு சேர்ந்து கை
கோர்த்து குரவை கூத்தாடிய பின் இங்கு
வந்தால் நான் அதை குணமாக எப்படி
கொண்டாட முடியும்! உனக்கு வேண்டிய
அளவு பெரிய அப்பங்களைத் தருவேன்.
உன் காதில் திரியிட இசைந்து வா.
எல்லோராலும் விரும்பத்தக்கவனும்,
கருங் கூந்தலை உடையவனும் மூங்கில் போன்ற
தோள்களையுடைய விஷ்ணுவே, இங்கே வா!

(6)
விண்ணெல்லாம் கேட்க வழுதிட்டாய்
உன்வாயில் விரும்பியதனை நான் நோக்கி
மண்ணெல்லாம் கண்டென் மனத்துள்ளேயஞ்சி
மதுசூதனேயென்றிருந்தேன்
புண்ணேது மில்லையுன் காது மறியும்
பொறுத் திறைப் போதிருநம்பி!
கண்ணா! என்கார்முகிலே!
கடல்வண்ணா! காவலனே! முலையுணாயே

பாசுர அனுபவம்

உன் காதில் அணிகலன்களை பூட்டுவதற்கு
நான் உன்னை அழைத்த போது, நீ வராமல்
மண்ணை அள்ளித் தின்றாய். உன் வாயைத்
திறந்து பார்த்த எனக்கு வெகு ஆச்சர்யமாக
உலகனைத்தையும் .காட்டினாய். அதைக்
கண்ட என் மனதில் அச்சம் ஏற்ப்பட்டு, நீ
மதுசூதனனே என்று புரிந்து கொண்டேன்.
உன் காதில் புண் இல்லை. இப்பொழுது
காதணியைப் போடும்போது க்ஷணப்
பொழுது வலி ஏற்படுமாதலால்,
அதைப் நீ பொறுத்துக் கொள்ள வேண்டும்,
பூரணனே! கண்ணனே! காள மேகம்
போன்றவனே! கடல் நிறத்தவனே! ஜகத்
ரக்ஷகனே! என் முலை உண்ண இங்கே வா!

(7)
முலையேதும் வேண்டே னென்றோடி
நின் காதில் கடிப்பைப் பறித்தெறிந்திட்டு
மலையையெடுத்துமகிழ்ந்து கன்மாரி காத்துப்
பசுநிரை மேய்த்தாய்!
சிலையொன்றிறுத்தாய்! திரிவிக்கிரமா!
திருவாயர் பாடிப்பிரானே!
தலைநிலாப் போதேயுன் காதைப் பெருக்காதே
விட்டிட்டேன் குற்றமேயன்றே.

பாசுர அனுபவம்

கோவர்தன மலையை கையால் தூக்கி கல்
மழையிலிருந்து இடையர்களை ரக்ஷித்தவனே!
பசுக்களின் கூட்டங்களை மேய்த்தவனே!
திரிவிக்ரமனே! சிறந்த ருத்ர வில்லை
முறித்தவனே! திருவாய்பாடியின் தலைவனே!
காதணிகளை மாட்டி விட்டால் நீ கோபம்
கொண்டு அவற்றை காதிலிருந்து பிடுங்கி
எரிந்து விடுகிறாய். உன்னைச் சொல்லி
குற்றமில்லை, தலை நில்லாது இருந்த இளம்
குழந்தையாக நீ இருந்த போதே
உன் காதை திரியிட்டு பெருக்காமல்
விட்டது என்னுடைய தவறே.

(8)
என்குற்றமேயென்று சொல்லவும்
வேண்டா காண்
என்னை நான் மண்ணுண்டேனாக
அன்புற்று நோக்கியடித்தும் பிடித்தும்
அனைவர்க்கும் காட்டிற்றிலையே
வன்புற்றரவின் பகைக்கொடி
வாமன நம்பீ!
உன் காதுகள் தூரும்
துன்புற்றன வெல்லாம் தீர்ப்பாய் பிரானே!
திரியிட்டுச் சொல்லுகேன் மெய்யே.

பாசுர அனுபவம்

என்னுடைய குற்றம் என்று நீ சொல்ல
வேண்டியதில்லை, ஏனென்றால், நான்
மண்ணுண்டதாகச் சொல்லி என்னை
பிடித்துக் கொண்டும், அன்பின் மிகுதியால்
என்னை அடித்தும் எல்லார்க்கும் என்னைக்
காட்டிக் கொடுத்தாயே! என்று கண்ணன்
யசோதையை பார்த்துக் கேட்க, அவள்
கண்ணனை நோக்கி கூறியதாவது: புற்றில்
வசிக்கின்ற பாம்பின் விரோதியான கருடனை
கொடியாகக் கொண்ட வாமனோத்தமனே!
நாம் இப்படியே பேசிக்கொண்டிருந்தால்
உன்னுடைய குத்தின காதுகள் தூர்ந்து விடும்.
உன்னை ஆச்ரயிப்போரின் துன்பங்களைப்
போக்கும் தலைவனே! உன் காதில்
திரியை இட்டு, சத்தியமாகச் சொல்கிறேன்,
உன்னை அடிக்கமாட்டேன்!

(9)
மெய்யென்று சொல்லுவார் சொல்லைக் கருதித்
தொடுப் புண்டாய் வெண்ணையையென்று
கையைப் பிடித்துக் கரையுரலோடென்னைக்
காணவே கட்டிற்றிலையே
செய்தன சொல்லிச் சிரித்தங்கிருக்கில்
சிரீதரா! உன் காது தூரும்
கையில் திரியையிடுகிடாய் இந்நின்ற
காரிகையார்சிரியாமே.

பாசுர அனுபவம்

என் மீது அவதூறாக சொல்பவர்களின்
பேச்சை உண்மையென்றெண்ணி,
வெண்ணையை திருடி உண்டாய்
என்ற பழியை சுமத்தி, என் கையைப் பிடித்து,
எல்லோரும் பரிஹசிக்கும்படி என்னை உரலில்
கட்டவில்லையா? என கண்ணன் யசோதையை
கேட்க, அவளோ, சிரீதரா! முன்பு செய்ததை
இப்பொழுது சொல்லிவிட்டு நீ புன்சிரிப்புடன்
அங்கு நின்று கொண்டு இருந்தால், உன்
காதுகள் தூர்ந்துவிடும். இங்கே நிற்கும்
இப்பெண்கள் உன்னை பார்த்து
சிரிக்காமல் இருக்க, என் கையில் இருக்கும்
திரியை இட்டுக்கொள்வாயாக என்கிறாள்!

(10)
காரிகையார்க்கு முனக்குமிழுக்குற்றென்
காதுகள் வீங்கியெரியில்
தாரியாதாகில் தலைநொந்திடுமென்று
விட்டிட்டேன் குற்றமேயன்றே
சேரியில் பிள்ளைகளெல்லாரும் காது
பெருக்கித் திரியவும் காண்டி
ஏர்விடை செற்றிளங்கன்றெறிந்திட்ட
இருடீகேசா! என்தன்கண்ணே.

பாசுர அனுபவம்

என் காதுகளை குத்துவதால் அவை
வீங்கிப்போய் எரிச்சல் எடுக்கும் பட்சத்தில்,
பரிஹசித்து நிற்கும் அப்பெண்களுக்கும்,
உனக்கும் பழி வராதா? என்று கண்ணன்
சொல்ல, யசோதை பதில் சொல்லுகையில்,
கண்ணா! நீ சிறு குழந்தையாக உள்ள போதே
உன் காதுகளில் திரியை இட்டு பெருக்கியிருக்க
வேண்டும். ஆனால் உனக்கு தலை வலி வந்து
விடுமே என்ற அச்சத்தால் அப்படி செய்யாமல்
விட்டேன். அது என்னுடைய குற்றமல்லவா?
ரிஷப வடிவில் வந்த அரிஷ்டாஸுரனை
அழித்தும், சிறிய கன்று வடிவில் வந்த
வத்ஸாஸுரனை தூக்கி எறிந்தும் கொன்றவனே,
ஹ்ருஷீகேசா! என் கண் போன்றவனே! இந்தப்
பகுதியில் உள்ள எல்லா பிள்ளைகளும்
காதை பெருக்கிக் கொண்டு
திரிகிறதை நீ பார்க்கவில்லையா?

(11)
கண்ணைக் குளிரக் கலந்தெங்கும் நோக்கிக்
கடிகமழ் பூங்குழலார்கள்
எண்ணத்து ளென்றுமிருந்து தித்திக்கும்
பெருமானே! எங்களமுதே
உண்ணக்கனிகள் தருவான் கடிப்பொன்றும்
நோவாமே காதுக்கிடுவன்
பண்ணைக் கிழியச் சகட முதைத்திட்ட
பற்பநாபா! இங்கே வாராய்.

பாசுர அனுபவம்

இடையர் குலப் பெண்களின் அழகிய வடிவம்
முழுதும் நோக்கி, உன் கண்களை அவர்கள்
கண்களோடு சேர்த்து, வாசனைப் பூக்களை
கூந்தலில் அணிந்திருக்கும் அப்பெண்களின்
மனதில் எப்பொழுதும் இருந்துகொண்டு
ரசிக்கும் பெருமானே! அம்ருதம்
போன்றவனே, உண்ணப் பழங்கள் தருவேன்,
உனக்கு சிறிதும் வலிக்காமல் காதணியை
போட்டுவிடுவேன், சகடத்தை (சகடாஸுரனை)
நிலைகுலையச் செய்தவனே, பத்மநாபனே! வா!

(12)
வாவென்று சொல்லியென் கையைப்பிடித்து
வலியவே காதில் கடிப்பை
நோவத் திரிக்கிலுனக் கிங்கிழுக்குற்றென்
காதுகள் நொந்திடும் கில்லேன்
நாவற் பழங்கொண்டுவைத்தேன்
இவை காணாய் நம்பீ! முன்வஞ்ச மகளைச்
சாவப் பாலுண்டு சகடிறப் பாய்ந்திட்ட
தாமோதரா!இங்கே வாராய்

பாசுர அனுபவம்

இங்கே வா என்றென்னை அழைத்து, என்
கையைப் பிடித்து கட்டாயமாக என் காது
வலிக்கும்படி காதணிகளை அணிவித்தால்
உனக்கு என்ன நஷ்டம்! எனக்குத தான்
வலிக்கும். இப்படியாக கண்ணன் வர மறுக்க,
யசோதை கூறுவதாவது: பூரணனே!இங்கே
பார், உனக்குப் பிடித்த நாவல் பழங்களை
கொண்டு வைத்திருக்கிறேன். முன்பு
வஞ்சனையுடன் வந்த பூதனையின்
முலைப் பாலுண்டு அவளை கொன்றவனே,
சகட வடிவில் வந்த அசுரனை சகடம்
முறியும்படி காலால் எட்டி உதைத்தவனே,
தாமோதரா! இங்கே வா!

(13)
வார்காது தாழப் பெருக்கியமைத்து
மகரக் குழியிடவேண்டி
சீரால சோதை திருமாலைச் சொன்ன சொல்
சிந்தையுள் நின்று திகழ
பாரார் தொல்புகழான் புதுவை மன்னன்
பன்னிருநாமத்தாற் சொன்ன
ஆராத வந்தாதி பன்னிரண்டும் வல்லார்
அச்சுதனுக்கடியாரே

பாசுர அனுபவம்

அழகான காதுகளை தொங்கும்படி செய்து,
மீன் வடிவில் அமைந்த காதணிகளை கண்ணன்
காதுகளில் பொருத்த விரும்பி, சிறப்பான
சொற்களால் யசோதை கண்ணனை
அழைத்ததை, மனதில் நிறுத்தி,
பூமியில் புகழ் எய்தியவரும், ஸ்ரீவில்லிபுத்தூரின்
நிர்வாஹகருமான பெரியாழ்வார் அந்தாதி
வழியில் எம்பிரானின் பன்னிரண்டு
நாமங்களோடு சேர்த்துப் பாடிய
இப்பன்னிரண்டு பாசுரங்களையும் சொல்ல
வல்லவர்கள் அச்சுதனுக்கு என்றும்
அடிமை செய்யும் பேரு பெறுவர்.





No comments:

Post a Comment

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.