இரண்டாம் பத்து இரண்டாம் திருமொழி



சாராம்சம்

கண்ணன் விளையாட்டிலும், சேஷ்டிதங்களிலும்
ஈடுபட்டிருந்ததால், முலைப்பால் உண்ணுவதையும்
மறந்தாவனாக இருக்க, அவன் அப்படி இருப்பதைப்
பொருக்காமல், யசோதை மிக்க தாய்ப்பாசத்துடன்
கண்ணனை தன்னுடைய முலைப் பாலை
வந்து அருந்துமாரு அழைக்கிறாள். கண்ணனின்
லீலைகளையையும், வீர சாகசங்களையையும்
நினைவு கூருகிறாள்.

(1)
அரவணையாய்! ஆயரேறே! அம்மமுண்ணத்
துயிலெழாயே இரவு முண்ணாதுறங்கி நீ போய்
இன்று முச்சி கொண்ட தாலோ! வருவுங் காணேன்
வயிறசைந்தாய் வன முலைகள் சோர்ந்து பாய
திருவுடைய வாய்மடுத்துத்
திளைத்துதைத்துப் பருகிடாயே

பாசுர அனுபவம்

பாம்பைப் படுக்கையாகக் கொண்டவனும்,
இடையர்களுக்குத் தலைவனுமான நீ இரவு
முழுவதும் முலைப்பால் அருந்தாமல் உறங்கி
விட்டாய். பகலாகியும் பாலுண்ண வரவில்லை.
கண்ணா! விழித்துக் கொள் !நீயே எழுந்து வந்து,
பால் நிரம்பிய என்னுடைய முலைகளில் உன்
அழகிய திருவாயைப் பொருத்தி, கால்களை
உதைத்தவாறே பாலை நன்றாகப் பருக வேண்டும்.

(2)
வைத்த நெய்யும் காய்ந்த பாலும் வடிதயிரும்
நறுவெண்ணையும்
இத்தனையும் பெற்றறியேன் எம்பிரான்!
நீ பிறந்த பின்னை
எத்தனையும் செய்யப் பெற்றாய் ஏதும்
செய்யேன் கதம் படாதே
முத்தனைய முறுவல் செய்து
மூக்குறிஞ்சி முலையுணாயே.

பாசுர அனுபவம்

எம்பெருமானே! நீ அவதரித்த பின், சேமித்து
வைத்திருந்த நல்ல காய்ச்சின பால், கட்டி தயிர்,
நறுமணமுள்ள வெண்ணை, உருக்கின நெய்
இவற்றையெல்லாம் நீ ஒன்று விடாமல் திருடி
உண்டு விடுவதால், நான் இவற்றைக் கண்டதில்லை.
கண்ணா! நீ என்ன வேண்டுமானாலும் செய்து
கொள்! உன்னை கோபிக்கமாட்டேன்! மோகனப்
புன்னைகையுடன், மூக்கை உறிஞ்சியவாறே
என் முலையின் பாலை உண்பாயாக!

(3)
தந்தம் மக்களழுது சென்றால்
தாய்மாராவார் தரிக்ககில்லார்
வந்து நின்மேல் பூசல் செய்ய வாழ
வல்ல வாசுதேவா!
உந்தை யாருன் திறத்தரல்லர் உன்னை
நானொன்றுரப்ப மாட்டேன்
நந்தகோபனணி சிறுவா!
நான்சுரந்தமுலையுணாயே.

பாசுர அனுபவம்

உன்னுடன் விளையாடும் பிள்ளைகளை
நீ அடித்து அழவிட்டு அதைக்கண்டு நீ
மகிழ்ந்திருக்கையில், அப்பிள்ளைகளின்
தாய்மார்கள் அழுகின்ற தங்கள் பிள்ளைகளோடு
வந்து என்னிடம் புகார் செய்ய, உன்னுடைய
குரும்பை கண்டிக்க இயலாதவளாகினேன்.
கண்ணா! உன் தகப்பனாரும் உன்னை
கவனிப்பாரில்லை! நானும் உன்னை
கோபிப்பதில்லை! இதெல்லாம் ஒருபுறமிருக்க,
நந்தகோபரின் அழகிய சிறு பிள்ளையான நீ,
என் பால்-சுரக்கும் முலையை உண்பாயாக!

(4)
கஞ்சன் தன்னால் புணர்க்கப்பட்ட
கள்ளச்சகடு கலக்கழிய
பஞ்சியன்ன மெல்லடியால்
பாய்ந்தபோது நொந்திடுமென்று
அஞ்சினேன்காண் அமரர்கோவே!
ஆயர்கூட்டத்தளவன்றாலோ
கஞ்சனையுன் வஞ்சனையால் வலைப்
படுத்தாய்! முலையுணாயே.

பாசுர அனுபவம்

தேவர்களின் தலைவனே! கம்சனால் ஏவப்பட்ட
சகடத்தை*உன்னுடைய பிஞ்சு கால்களால்
உதைத்து உரு குலையச் செய்தபோது, உன்
மிருதுவான கால்களுக்கு வலி ஏற்பட்டிருக்குமோ
என ஆயர்கூட்டமே அஞ்சியது, அதைக்காட்டிலும்
பெரிய அளவில் அஞ்சியவளாக நான் இருந்தபோது,
நய வஞ்சகனான கம்சனையும் சூழ்ச்சியால்
கொன்ற கண்ணா! என் முலையின்
பாலை உண்பாயாக.( *சக்கர வடிவில்
வந்த அசுரன் சகடாசுரன்).

(5)
தீயபுந்திக் கஞ்சன்மேல் சினமுடையன்
சோர்வு பார்த்து
மாயந்தன்னால் வலைப் படுக்கில்
வாழகில்லேன் வாசுதேவா!
தாயர் வாய்ச்சொல் கருமங் கண்டாய்
சாற்றிச்சொன்னேன் போகவேண்டா
ஆயர்பாடிக்கணிவிளக்கே!
அமர்ந்துவந்தென் முலையுணாயே.

பாசுர அனுபவம்

கெட்ட புத்தி கொண்ட கம்சன் உன் மேல்
கோபமாய் இருக்கிறான். நீ தனியாயிருக்கும்
சமயம் பார்த்து அவன் உன்னை வஞ்சனையால்
பிடித்து விட்டால், நான் பிழைத்திருக்க
சக்தியற்றவளாகிவிடுவேன். தாய் பேச்சைத்
தட்டாதவனாய், நீ கண்டிப்பாக வெளியே எங்கும்
போகவேண்டாம், ஆயர்பாடியின் நந்தா
விளக்கே! என் அருகில் வந்தமர்ந்து
என் முலையின் பாலை உண்பாயாக.

(6)
மின்னனைய நுண்ணிடையார்
விரிகுழல்மேல் நுழைந்தவண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர்
இனிதமர்ந்தாய்! உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ
இவனைப் பெற்ற வயிறுடையாள்!
என்னும் வார்த்தையெய்துவித்த
இருடீகேசா! முலையுணாயே.

பாசுர அனுபவம்

மின்னல் கொடி போன்ற இடையையுடைய
பெண்களின் விரிந்து பரந்த கூந்தலின் மேல்
தேனை குடிக்க நுழைந்த வண்டுகள்
இன்னிசை பாடி நிற்க, ஸ்ரீவில்லிபுத்தூரில்
அழகாகத் தோன்றியவனே! உன்னைப்
பார்த்தவர்கள் இவனைப் பெற்றெடுத்தவள்
என்ன தவம் செய்தாளோ! என்று சொல்லும்
புகழ்ச் சொல்லுக்கு உரியவளாக என்னை
ஆக்கின ஹ்ருஷீகேசனே! என்
முலையின் பாலை உண்பாயாக.

(7)
பெண்டிர் வாழ்வார் நின்னொப்பாரைப்
பெறுது மென்னுமாசையாலே
கண்டவர்கள் போக்கொழிந்தார்
கண்ணிணையால் கலக்க நோக்கி
வண்டுலாம் பூங்குழலினார்
உன்வாயமுத முண்ணவேண்டி
கொண்டு போவான் வந்துநின்றார்
கோவிந்தா! நீ முலையுணாயே.

பாசுர அனுபவம்

உன்னைப் பார்த்த பெண்கள் உன்னைப்
போல பிள்ளையைப் பெற்றெடுக்க வேண்டும்
என்ற பேராவலினாலே உன் திருமேனியைத்
தங்கள் கண்களினால் கண்டு களித்தவாறே
உன்னை விட்டு நீங்காமல் இருந்தார்கள்.
வண்டுகள் மொய்க்கும் புஷ்பங்களை அணிந்த
கூந்தலையுடைய பெண்கள் உன் பவள
வாயில் சுரக்கும் அம்ருதத்தைப் பருக விரும்பி
உன்னை எடுத்துக் கொண்டு போக
வந்து நிற்கிறார்கள். கோவிந்தா! என்
முலையின் பாலை உண்பாயாக.

(8)
இருமலை போலெதிர்ந்தமல்லர் இருவரங்க
மெரிசெய்தாய் உன்
திருமலிந்து திகழுமார்வு தேக்க
வந்தென்னல் குலேறி
ஒருமுலையை வாய்மடுத்து ஒருமுலையை
நெருடிக் கொண்டு
இருமுலையும் முறைமுறையா
ஏங்கியேங்கியிருந்துணாயே

பாசுர அனுபவம்

சாணூர முஷ்டிகரென்னும் மலைகளைப்போன்ற
இரண்டு மல் யுத்த வீரர்களை அஞ்சி நடுங்கி
எரிந்துபோகும்படி செய்தவனே! நீ வந்து என்
மடியிலமர்ந்து, உன் திருமார்பு நிரம்பும்
படியாக என் ஒரு முலையை வாயில் வைத்தும்,
மற்றொரு முலையை கையினால் நெருடிக்
கொண்டும், இப்படியாக மாறி மாறி
மூச்சுத்திணற என் இரண்டு
முலைகளிருந்தும் பாலை உண்பாயாக.

(9)
அங்கமலப் போதகத்தில் அணிகொள்
முத்தம் சிந்தினாற்போல்
செங்கமல முகம் வியர்ப்பத் தீமை
செய்திம் முற்றத்தூடே
அங்கமெல்லாம் புழுதியாக அளைய
வேண்டா அம்ம! விம்ம
அங்கமரர்க்கமுதளித்த
அமரர்கோவே! முலையுணாயே.

பாசுர அனுபவம்

ஒருசமயம், தேவர்கள் வயிறு நிரம்ப
அவர்களுக்கு அமுதத்தை அளித்த
தேவாதி ராஜனே, தலைவனே! தாமரைப்
பூவில் நீர்த்துளி முத்துக்கள் சிந்தியிருப்பது
போல், உன் செந்தாமரையையொத்த அழகான
முகத்தில் வியர்வைத் துளிகள் படர்ந்திருக்க,
உடம்பையெல்லாம் புழுதியாக்கிகொள்ளாமல்
என் முலையின் பாலை உண்பாயாக.

(10)
ஓடவோடக்கிண்கிணிகள் ஒலிக்கு
மோசைப் பாணியாலே
பாடிப் பாடி வருகின்றாயைப் பற்பநாப
னென்றிருந்தேன்
ஆடியாடியசைந்தசைந்திட்டு அதனுக்
கேற்ற கூத்தையாடி
ஓடியோடிப் போய்விடாதே உத்தமா!
நீ முலையுணாயே.

பாசுர அனுபவம்

ஓட ஓட நீ அணிந்திருக்கும் பாதச் சதங்கைகளின்
ஒலியே பாட்டாக ஒலிக்க, அதற்க்கு தகுந்தாற்ப்
போல் நீ ஆடி ஆடி அசைந்து நாட்டியமாடுவதைப்
போல் நடந்தது பத்மநாபனே* நடந்து வருவதைப்
போல் எண்ணியிருந்தேன்! என்னை விட்டு வெகு
தூரம் ஓடிச்சென்று விடாதே! கண்ணா!
என் முலையின் பாலை உண்பாயாக.
(*பத்ம கமலத்தை நாபியிலுடையவன்)

(11)
வாரணிந்த கொங்கையாய்ச்சி
மாதவாவுண்ணென்றமாற்றம்
நீரணிந்த குவளை வாசம் நிகழ
நாறும் வில்லிபுத்தூர்
பாரணிந்த தொல்புகழான் பட்டர்
பிரான் பாடல் வல்லார்
சீரணிந்த செங்கண் மால்மேல்
சென்ற சிந்தை பெறுவர் தாமே.

பாசுர அனுபவம்

மாதவனே! 'என் முலைப்பாலை உண்பாயாக',
என்று கச்சையணிந்த அழகிய முலைகளை
உடைய யசோதை சொன்ன வார்த்தைகளை,
நல்ல வாசனையுடன் திகழும் செங்கழுநீர்
நிலைகள் நிரம்பிய ஸ்ரீவில்லிபுத்தூரில்
அவதரித்து உலகப் புகழ் எய்திய
பெரியாழ்வார் அருளிச்செய்த
இப்பாசுரங்களை பாட வல்லவர்கள்,
குணங்களையே பூஷணமாக உள்ளவனும்,
சிவந்த அழகிய கண்களையுடையவனுமான
திருமாலிடம் பக்தி செலுத்தும்
மனதைப் பெறுவர்கள்.





No comments:

Post a Comment

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.