இரண்டாம் பத்து நான்காம் திருமொழி



சாராம்சம்

யசோதை கண்ணனை நீராட அழைக்கும்
உரையாடலை சித்தரிக்கும் கீழ்கண்ட
பாசுரங்களை ஆழ்வார் அனுபவித்ததுபோல்
நாமும் அனுபவிக்கலாமே!
(1)
வெண்ணையளைந்த குணுங்கும்
விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனவில் விராவுன்னைத்
தேய்த்துக்கிடக்க நானொட்டேன்
எண்ணெய் புளிப்பழங் கொண்டு
இங்கெத்தனை போதுமிருந்தேன்
நண்ணலரிய பிரானே!
நாரணா! நீராடவாராய்.

பாசுர அனுபவம்

வெண்ணையை உனது பிஞ்சு கரங்களைக்
கொண்டு அளைந்து உடம்பெல்லாம் அவ்
வெண்ணை பட்டு உண்டான ஒருவித
நாற்றத்துடனும், விளையாடியதால்
உடம்பில் படிந்த புழுதியுடனும் நீ வந்து,
அப்படியே படுக்கையில் விழுந்து புரள
இன்று இரவு உன்னை நான் அனுமதிக்க
மாட்டேன்! உன்னைக் குளிப்பாட்ட
தேவையான சீயக்காயும், எண்ணையும்
வைத்துக்கொண்டு வெகு நேரமாக
காத்திருக்கிறேன். அனைவருக்கும்
கிடைப்பதற்கு மிக அரியவனே!
நாராயணனே! குளிக்க வரவேண்டும்!
(2)
கன்றுகளோடச் செவியில்
கட்டெறும்பு பிடித்திட்டால்
தென்றிக் கெடுமாகில் வெண்ணெய்
திரட்டி விழுங்கு மாகாண்பன்
நின்ற மராமரம் சாய்த்தாய்!
நீ பிறந்த திருவோணம்
இன்று, நீ நீராட வேண்டும்
எம்பிரான்! ஓடாதே வாராய்.

பாசுர அனுபவம்

கட்டெறும்பைப் பிடித்து கன்றுகளின் காதினுள்
ஊற விட்டால், அக்கன்றுகள் சிதறி ஓடிவிடுமே!
நீ அப்படிச் செய்வதால் உண்பதற்கு உனக்கு
வெண்ணை எப்படி கிடைக்கும் என்று
பார்க்கிறேன்! முன்பு ராமாவதாரத்தில் அம்பால்
ஏழு மரங்களை ஒரே சமயத்தில் துளைத்தவனே!
நீ பிறந்த திருவோண திருநக்ஷத்திரத்
திருநாள் இன்று! எம்பெருமானே! அங்குமிங்கும்
ஓடாமல் குளிக்க வரவேண்டும்.
(3)
பேய்ச்சி முலையுண்ணக் கண்டு
பின்னையும் நில்லா தென்னெஞ்சம்
ஆய்ச்சிய ரெல்லாங் கூடி
அழைக்கவும் நான்முலை தந்தேன்
காய்ச்சின நீரோடுநெல்லி
கடாரத்தில் பூரித்து வைத்தேன்
வாய்த்த புகழ் மணிவண்ணா!
மஞ்சனமாட நீவாராய்.

பாசுர அனுபவம்

பூதனையின் விஷ முலையுண்டு அவள்
உயிரையும் அதனோடு கூட உறிஞ்சியதைப்
பார்த்த போதே நான் பயந்து ஓடியிருக்க
வேண்டும். என் நலம் கருதி
இடைச்சியர்களெல்லாம் ஒன்று சேர்ந்து
என்னைத் தடுத்தும், நான் அதைப் பொருட்
படுத்தாமல் உன்மேல் வைத்த அன்பின்
காரணமாக உன்னை என் முலை தந்து
உண்ணச் செய்தேன். நெல்லி வேரைப்
போட்டு காய்ச்சின நீரை தடாவில் நிரப்பி
வைத்திருக்கிறேன். கீர்த்தி பொருந்திய நீல
மணி நிறமுடைய கண்ணனே! நீராட வா!
(4)
கஞ்சன் புணர்ப்பினில் வந்த
கடியசகட முதைத்து
வஞ்சகப் பேய்மகள் துஞ்ச
வாய்முலை வைத்த பிரானே!
மஞ்சளும் செங்கழு நீரின்
வாசிகையும் நாறு சாந்தும்
அஞ்சனமும் கொண்டு வைத்தேன்
அழகனே! நீராட வாராய்.

பாசுர அனுபவம்

கம்சனின் சூழ்ச்சியால் ஏவப்பட்டு சகட வடிவில்
வந்த க்ரூரமான அசுரனை உனது திருவடிகளை
கொண்டே உதைத்தழித்து, வஞ்சனையுடன் வந்த
பூதனையின் முலையில் வாயை வைத்து
அவளையும் முடித்த எம்பெருமானே! உன் மேனி
அழுகு பெற மஞ்சளையும், நீராடியபின்
சாத்திக்கொள்ள செங்கழுநீர் மாலையையும்,
உன் திருமேனியில் பூசுவதற்காக நறுமணமிக்க
சந்தனத்தையும், கண்களில் இட மையையும்
வைத்துக் காத்திருக்கிறேன்.
அழகானவனே! நீராட வா!
(5)
அப்பம்கலந்த சிற்றுண்டி
அக்காரம் பாலிற் கலந்து
சொப்பட நான் சுட்டு வைத்தேன்
தின்னலுறுதியேல் நம்பீ!
செப்பிள மென்முலையார்கள்
சிறுபுறம் பேசிச் சிரிப்பர்
சொப்பட நீராட வேண்டும்
சோத்தம்பிரான்! இங்கே வாராய்.

பாசுர அனுபவம்

பாலோடு வெல்லம் சேர்த்துக் கலந்த
அப்பத்தையும் அதனோடு கூட
பலகாரத்தையும் உனக்காக சுட்டு
வைத்திருக்கிறேன். பூரணனான நீ அதைத்
தின்ன விரும்பினால் முதலில் நீராட வேண்டும்.
நீ அப்படி வராமல் இருப்பதைப் பார்த்து
பொற்கலசங்களைப்போல் இளமையான
மெல்லிய முலையையுடைய பெண்கள்
உன்மேல் சிறு குற்றங்களைக் கூறி உன்னை
பரிகாசம் பண்ணிச் சிரிப்பார்கள்.
என் ஸ்வாமியே! உன்னைக் கைகூப்பி
அழைக்கிறேன். இங்கே வா!
(6)
எண்ணெய்க் குடத்தையுருட்டி இளம்
பிள்ளை கிள்ளியெழுப்பி
கண்ணைப் புரட்டி விழித்துக்
கழகண்டு செய்யும் பிரானே!
உண்ணக் கனிகள் தருவன்
ஒலிகடலோத நீர்போலே
வண்ணமழகிய நம்பீ!
மஞ்சனமாட நீவாராய்.

பாசுர அனுபவம்

எண்ணை நிரம்பிய குடத்தை கீழே உருட்டியும்,
படுத்துறங்கும் சிறு குழந்தைகளைக்
கிள்ளி அழவைத்தும், கண்களைப் பிதுக்கி
பயமுறுத்தியும் மற்றும் பலவித
குறும்புகளைச் செய்யும் எம்பெருமானே! நீ
தின்னப் பழங்கள் தருவேன். அலைமோதும்
கடல் நீரைப்போல் அழகிய நிறத்தையுடைய
உத்தம புருஷனே! நீராட வா!
(7)
கறந்த நற்பாலும் தயிரும் கடைந்துறி
மேல்வைத்த வெண்ணெய் பிறந்ததுவே
முதலாகப் பெற்றறியேன் எம்பிரானே!
சிறந்த நற்றாயலர் தூற்றும் என்பதனால்
பிறர் முன்னே மறந்து முரையாடமாட்டேன்
மஞ்சனமாட நீவாராய்.

பாசுர அனுபவம்

நீ பிறந்தது முதலாகவே, கறந்து வைத்த நல்ல
பாலையும், தயிரையும், உறியில் வைத்த
வெண்ணையையும் நான் கண்டதில்லை
எம்பெருமானே! சிறந்த தாயான நான்
உன்னுடைய குற்றங்களை பிறரிடம் (அவர்கள்
உன்னைத் தூற்றும் வண்ணம்) மறந்தும்
கூறமாட்டேன்! நீராட வா!
(8)
கன்றினை வாலோலை கட்டிக்
கனிகளு திரவெறிந்து
பின்தொடர்ந்தோடியோர்பாம்பைப்
பிடித்துக் கொண்டாட்டினாய்போலும்
நிந்திறத் தேனல்லேன் நம்பி!
நீ பிறந்த திருநன்னாள்
நன்றுநீ நீராடவேண்டும்
நாரணா! ஓடாதே வாராய்.

பாசுர அனுபவம்

கன்றின் வடிவில் வந்த அசுரனின் வாலைப்
பிடித்து பன மரத்தின் ஓலையை அதன் வாலில்
கட்டி , அக்கன்றைத் தூக்கி விளா மரத்தின்
மேலெறிந்து பழங்கள் விழும்படி செய்தும்,
அதன் பிறகு ஓடிச்சென்று காளியனென்ற
சர்ப்பத்தைப் பிடித்து அதன் தலையின் மேல்
நடனமாடியவன்தானே நீ! உன் சாமர்த்தியத்தை
நான் எப்படியறிவேன், பூரணனே! இன்று நீ
அவதரித்த திரு நக்ஷத்திரத் திருநாளன்றோ!
நாராயணா! நீ நன்கு நீராட வேண்டும்.
ஓடாமல் வந்துவிடு!
(9)
பூணித் தொழுவினில் புக்குப்
புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிது முகப்பன்
ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத் தனையுமிலாதாய்!
நப்பின்னை காணில் சிரிக்கும்
மாணிக்கமே! என்மணியே!
மஞ்சனமாட நீவாராய்.

பாசுர அனுபவம்

பசு மாட்டுக் கொட்டகையில் புகுந்து
மண்ணளைந்ததால் உன் திருமேனி
முழுதும் புழுதியேறி, பொன்னின் மேல்
தூசி படிந்தார்போலிருக்கும். அந்த
அழகான காட்சியை பார்த்து, மற்றவர்கள்
பழிப்பினும், நான் மிகவும் ஆனந்தப் படுவேன்.
சிறிதும் வெட்கமில்லாதவனே! நப்பின்னை
நீ இப்படி இருப்பதைப் பார்த்தால் சிரிப்பாளன்றோ.
மாணிக்கமே! மணியே! நீராட வா!
(10)
கார்மலிமேனி நிறத்துக்
கண்ணபிரானையுகந்து
வார்மலி கொங்கை யசோதை
மஞ்சனமாட்டிய வாற்றை
பார்மலி தொல் புதுவைக்கோன்
பட்டர்பிரான் சொன்ன பாடல்
சீர்மலி செந்தமிழ்
வல்லார் தீவினையாதுமிலரே.

பாசுர அனுபவம்

கருநிற மழை மேகத்தைவிட சிறந்த
மேனியழகுடைய கண்ணபிரானை விரும்பி,
கச்சைக்கடங்காத ஸ்தனங்களையுடைய யசோதை,
நீராட அழைத்ததை, பழமையான
ஸ்ரீவில்லிபுத்தூரின் நிர்வாஹகரும், உலகப் புகழ்
வாய்ந்தவருமான பெரியாழ்வார் செந்தமிழில்
அருளிச்செய்த இப்பாசுரங்களை ஓதுபவர்கள்
பாபங்கள் யாவும் நீங்கப் பெற்றவர்களாவர்கள்.